Wednesday, December 28, 2011

காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை


காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை

குட்டிப் பையனின் காது மடலின் பிற்புறத்தில் சில நாட்களாக ஒரு கட்டி தெரிந்தது. சீழ்க் கட்டி போல நீர்ப்பிடிப்புடன் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே இது காதுக் குருத்தெலும்புடன் (Cartilage) தொடர்புடைய கட்டி எனப் புரிந்தது.

மருத்துவத்தில் பெரிகொன்ரைடிஸ் (Perichondritis) என்பார்கள். தமிழில் எவ்வாறு சொல்வது என்பது தெரியவில்லை.


எமது காது, மூக்கு போன்றவை யாவும் எலும்பு இல்லாத  உறுப்புகள். ஆனால் அவை மடிந்து தளர்ந்து விடாமல் இருப்பதற்கும், அவற்றிற்கான உருவத்தைக் கொடுப்பதும் அவற்றினுள் இருக்கும் குருத்தெலும்பு ஆகும்.

குருத்தெலும்பு என்பது எலும்புகளை விட மென்மையானவை ஆனால் தசை சவ்வு போன்றவற்றை விடக் கடினமானவை.

குருத்தெலும்புகளை மென்மையான சவ்வு மூடியிருக்கும். அதனை பெரிகொன்ரியம் - perichondrium - என்பார்கள் இதன் ஊடாகத்தான் குருத்தெலும்புக்கான போசனைப் பொருட்கள் குருதியிலிருந்து கடத்தப்படுகின்றன.

பெரிகொன்ரியத்தில் கிருமி தொற்றினால் ஏற்படுகின்ற நோய்தான் பெரிகொன்ரைடிஸ்.

ஏன் ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஏதாவது காயங்கள் எற்படும்போதே தோன்ற வாய்ப்பிருக்கிறது. பெரிய காயங்கள் அல்ல. காது குத்துவது போன்ற சிறிய காயங்கள் போதுமானவை. விளையாட்டுகளின் போது எற்படும் காயங்கள், அக்யூபங்சர், சத்திரசிச்சை போன்றவற்றைத் தொடர்ந்தும் வரலாம்.

காது குத்துவதால் எனக் கூறியதால் கலங்க வேண்டாம். சாதாரணமான காது குத்தல் அபாயமானதல்ல. காது மடலின் அடிப்பாகத்திலேயே இது குத்தப்படுகிறது. இது வெறும் தசையுள்ள பகுதியே. இங்கு குருத்தெலும்பு கிடையாது.

ஆனால் இப்போதைய நாகரீகத்தில் காதுமடலின் மேற்புறங்களிலும் குத்தப்படுகிறது. அங்கு குருத்தெலும்பு உள்ளது. அங்கு காது குத்தும்போது குருத்தெலும்பில் காயம் பட்டு, அதில் கிருமித் தொற்றும் ஏற்பட்டால் மேற் கூறிய பிரச்சனை ஏற்படும்.

அக்யூபங்சர் சிகிச்சையின் போது ஊசி குத்துவதும் மற்றொரு காரணமாகும், சில சத்திரசிகிச்சைகள், நெருப்பு சுட்ட காயங்கள் போன்றவையும் காரணமாகலாம்.

இது ஒரு பையனின் காது மடலில் தோன்றியது. எனவே காது குத்தியதால் அல்ல என்பது தெளிவு. வேறு ஏதோ காயத்தைத் தொடர்ந்து  வலியுடன் வீங்கிச் சீழ் கட்டியிருந்தது. இதுவம் அத்தகைய பெரிகொன்ரைடிஸ் தான்.



அறிகுறிகள்

  • காது மடலில் திடீரென ஏற்படும் வலிதான் பெரும்பாலும் முதல் அறிகுறியாகும். தொட்டுப் பார்த்தால் வலி அதிகமாகும்.
  • காது வீங்கவும் கூடும்.
  • அவ்விடம் சற்று சினத்து செம்மை படர்ந்திருக்கும்.
  • தொட்டால் சற்று சூடாகவும் இருக்கலாம்.
  • காய்சலும் ஏற்படலாம்.
  • முதலில் ஏற்பட்ட காயம்  தென்படலாம்.
  • அதிலிருந்து நீர் அல்லது சீழ் கசியவும் கூடும்.

மருத்துவம்

வீங்கி சினத்திருப்பது கிருமித்தொற்றைக் குறிக்கிறது. எனவே குணமாக்குவதற்கு நுண்ணுயிர் மருந்துகள் அவசியம்.
  • பொதுவாக மாத்திரைகளாகக் கொடுக்கக் குணமாகும். 
  • கடுமையான கிருமித்தொற்றாக இருந்தால் நாளங்கள் ஊடாகச் செலுத்தவும் நேரும்.
மேலே படத்தில் காட்டியது சற்று நாள்பட்டது. உள்ளே நீரும் சீழும் இருந்தது.
  • மரக்க வைத்துச் சீழை அகற்றியதன் சிகிச்சை மூலம் வீக்கமும் வலியும் குணமாகின. நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கக் குணமாகியது.
கடுமையான கிருமித் தொற்றிருந்தால் வாயினால் உட்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் போதுமானவையாக இருக்காது. நாளங்கள் ஊடாக ஊசி மருந்துகளாக அவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும்.

வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை

காதைப் பாதுகாப்பது பற்றிய எனது பதிவு
காதை குடையிறதுதான் வேலை



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, December 17, 2011

கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma


பிரஸர் என்பது உயர்இரத்த அழுத்தம். இது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஐ(கண்) பிரஸர் பற்றி அப்படியல்ல.

ஐ(கண்) பிரஸர் என்று பலரும் சொல்லுவது குளுக்கோமா (Glucoma) என்ற நோயைத்தான். பொதுவாக கண்ணினுள்ள திரவத்தின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.


கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி தனது பார்வை பறிபோகின்னறது என்பதை நோயாளி உணராமலே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான நோயாகும்.

பார்வை நரம்பு பாதிப்புறவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.


பார்வை நரம்பு என்பது நாம் பார்க்கும்போது எமது விழித்திரையில் விழுகின்ற விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்டதாகும்.

குளுக்கோமாவில் பல வகைகள் இருந்தாலும் மிக அதிகமானது திறந்த கோண குளுக்கோமா (Open angle Glucoma) தான்.

யாருக்கு வரும்

  • நெருங்கிய குடும்பத்திரிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
  • அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
  • வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
  • நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
  • ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
  •  கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் படிப்படியாக நீண்ட காலத்தில் ஏற்படுவதால் நோயாளி அதை உணர்ந்து கொள்ள மாட்டார். அதுவும் இப்பார்வை இழப்பானது வெளிப்புறத்தில் (Side Vision) ஏற்படுவதால் உணர்ந்து கொள்வது கடினம்.

பக்கப் பார்வை இழப்பு எனச் சொல்லாம்.


அதாவது நீங்கள் நேரே கணனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் ஏதாவது அசைந்தால் கூட அந்த அசைவை உங்களால் காண முடியும்.

ஆனால் குளுக்கோமா நோயளிகளுக்கு அவரது பார்வையின் பரப்பானது வெளிப்புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால் நேர் பார்வை வழமைபோல தெளிவாக இருக்கும்.

இதனால்தான் அவருக்கு தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது.


இதனைக் கவனிக்காது விட்டால் பார்வை மேலும் குறைந்து வரும். சிலகாலத்தின் பின்னர் ஒரு குழாயினூடாகப் பார்ப்பது போல நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில் முழுப் பார்வையும் பறிபோகும் அவலம் நேரும்

தடுப்பது எப்படி?

நோயின் தாக்கம் பார்வைiயில் சேதத்தை ஏற்படுவதற்கு முன்னரே நோயைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் ஒரே வழி.

கண் மருத்துவரிடம்

இந்நோய் வரக் கூடிய சாத்திய உள்ளவர்கள்
  • கண் மருத்துவரை அணுகி தமது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 
  • இப்பொழுது பாதிப்பு இல்லாவிட்டாலும் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஓரு முறையாவது கண் மருத்துவரிடம் போவது அவசியம்.

கண்ணில் பார்வைக் குறைவு ஏற்பட்டால் நீங்களாக கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தை கண் மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். அவர் உங்கள் கண்களின் உட்பகுதியை விசேடமான கருவிகள் மூலம் பரிசோதிக்கும்போது குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

1.    ரோனோ மீற்றர் (Tonometer) என்ற கருவி உங்களது கண்ணினுள் இருக்கும் அழுதத்தை அளவிட உதவும்.
2.    கண் பார்வையின் பரப்பை அளவிடும் (Visual field test) பரிசோதனை இது உங்கள் பார்வையின் பரப்பளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவும்.
3.    (Dilated eye Exam) இது கண்ணின் ஒளி புகும் பாதையை விரிவித்து அதனூடாக விழித்தரையையும், பார்வை சரம்பையும் பிம்பம் பெருக்குவிக்கும் கண்ணாடி ஊடாகப் பார்த்து அவற்றில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிவதாகும்.


சிகிச்சை

நோயின் நிலக்கு ஏற்ப சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படலாம்.

1.  துளி மருந்துகள்
அதிகமானோருக்கு இவை மட்டுமே கண்ணின் பிரசரைக் குறைத்து, பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குப் போதுமானது. பிரஸர் சரியான நிலைக்கு வந்தாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். தினமும் ஒரு முறை உபயோகிக்கும் மருந்துகள் உள்ளன. பலமுறை விட வேண்டியவையும் உண்டு. இது அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்தது. அவற்றை மருத்துவர் கூறுவதுபோல சரியான முறையில் கண்ணில் சரியான நேர இடைவெளிகளில் விட வேண்டும்.
2.    மாத்திரைகள்
தனியாக துளி மருந்துகளை உபயோகித்து கண் பிரசரைக் குறைக்க முடியாவிட்டால் மாத்திரைகளும் தேவைப்படலாம்.
3.    சத்திர சிகிச்சை
இப்பொழுது லேசர் முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படுகிறது. கண்ணில் மேலதிகமாக நீர் தேங்காது தடுத்து கண் பிரசரைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, December 11, 2011

களைப்பாயிருக்கிறதா? காரணங்களும் காரியங்களும்..

உங்களுக்கு களைப்பாயிருக்கா? உங்களுக்கு மட்டுல்ல.....

மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் அது உண்மையா?

காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற  நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.


  • 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு', 
  • 'உடம்புக்கு ஏலாதாம்', 
  • 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை' 
இப்படி எத்தனையோ வாசகங்கள் உதிர்த்தப்படும்.
  • வழமைபோல இயங்க முடியாதிருத்தல்,
  • ஊக்கக் கேடு, 
  • உற்சாகமின்மை, 
  • சோம்பலாக இருத்தல் 
போன்ற யாவும் இந்தக் களைப்பிற்குள் அடங்கும். ஆங்கிலத்தில் Fatigue என்பார்கள். ஆனால் இது நித்திரை கொள்ள வேண்டும் என்ற நிலை எனப்படும் தியக்கம் (Drowsiness) அல்ல.

பெரும்பாலும் இக் களைப்பு என்பது உடலின் ஒருவித தற்காப்பு முயற்சியாகும்..
  • கடுமையான உழைப்பு, 
  • உளநெருக்கீடு, 
  • போதிய ஓய்வின்மை, 
  • உற்சாகமற்ற சூழல் 
போன்ற வேண்டாத தொல்லையிலிருந்து மீள்வதற்கு எமது உடலும் உள்ளமும் எடுக்கும் எதிர்வினைதான்.


  • போதிய ஓய்வு எடுத்ததும், 
  • நன்கு தூங்கி எழுந்ததும் அல்லது 
  • மகிழ்ச்சியான சூழல் கிட்டியதும் 
அது தானே மறைந்துவிடும்.

பெரும்பாலும் களைப்பு என்பது கடுமையான நிலை அல்ல. ஆபத்தாக இருக்காது. பயப்பட வேண்டியதும் இல்லை.

மருத்துவரிடம் தெளிவாகச் சொல்லுங்கள்

ஆனால் அவ்வாறு செய்தும் (போதிய ஓய்வு, நிம்மதியாக தூக்கம், மகிழ்ச்சியான சூழல்)  அது மாறவில்லை எனில் மருத்துவரை நாட வேண்டிய தேவை ஏற்படும்.

மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் களைப்பு எத்தகைய வேலைகளின் போது ஏற்படுகிறது. வேலைகளுடன் தொடர்பில்லை எனின் எந்த நேரத்தில் ஏற்படுகிறது போன்றவற்றைக் கவனித்துச் சொல்லுங்கள்.

  • காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும்போதே சோர்வாக இருந்து அது நாள் முழுவதும் தொடர்ந்தால் மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கக் கூடும். 
  • மாறாக காலையில் மிக உற்சாகமாக இருந்து நேரம் செல்லச்செல்ல களைப்பு அதிகரித்துச் சென்றால் அது தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்வதாக இருக்கலாம். 
  • அல்லது காலையில் நலமாக இருந்து சற்று நேரம் செல்ல சோர்வும் தலைவலியும் சேர்ந்து வந்தால் அது சைனஸ் நோயாக இருக்கலாம். 
இவ்வாறு பல நோய்களை அறிகுறிகளிலிருந்தே மருத்துவர் ஓரளவு ஊகிக்க முடியும் என்பதால் உங்கள் அறிகுறிகளை இயன்றளவு தெளிவாகச் சொல்லப் பழகுங்கள்.

காரணங்கள் என்ன?

இரத்தசோகை

எமது நாட்டிலும் மேலும் பல கீழைத்தேச நாடுகளிலும் இரத்தசோகை பரவலாக இருக்கிறது. பொதுவாக ஹீமோகுளோபிலின் அளவு
  1. ஆண்களில் 13 கிராம் (Hb 13gm) ஆகவும் 
  2. பெண்களில் 12கிராம் ;(Hb 12gm) ஆகவும் இருக்க வேண்டும். 

இது குறைவாக இருந்தால் மூளை உட்பட உடல் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சோர்வும் களைப்பும் மந்தநிலையும் ஏற்படலாம். பிள்ளைகள் மனமூன்றிப் படிக்க முடியாது சோர்வு தடுக்கும். சுறுசுறுப்பு குறையும்.

இது படிப்படியாக ஏற்படும் நிலை என்பதால் நோயாளியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். உடல், முகம், கண், நாக்கு போன்றவை வெளிறலாக இருப்பதை வைத்து மருத்துவரால் அறிய முடியும். சுலபமான இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயமாக அறிய முடியம்.

சளி, பீனிசம்

தூசி, காலநிலை மாற்றங்கள். கடுமையான மணங்கள், மகரந்தம், போன்றவற்றிற்கு ஓவ்வாமை உள்வர்களுக்கு அடிக்கடி சளி, தும்மல், முக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அது சைனஸ் தொல்லையாக மாறிவிடுவதும் உண்டு.


சைனசைடிஸ் என்பது மண்டை ஒட்டில் நாசிக்கு அண்மையாக இருக்கும் காற்றறைகளில் அழற்சியும் கிருமித்தொற்றம் ஏற்படுவதாகும். இவை யாவும் தலைப்பாரம், களைப்பு, சோர்வுத்தன்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆஸ்த்மாவும் இத்தகைய ஒரு ஒவ்வாமைச் சளி நோயே.

மேலைநாடுகளில் வசந்த காலங்களில் பெரும்பாலும் காணப்படும் Hay Fever இத்தகையதே. இங்கு காலவேறுபாடுகள் தெளிவாக இல்லாத நிலையில் பலருக்கும் நாளாந்தம் தொல்லை கொடுக்கிறது.

நீடித்து தொல்லை கொடுக்கும் வலிகள்

மனிதர்களுக்கு பலவிதமான உடல் வலிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வீழ்ந்துவிட்டால் அடிபட்ட வலி தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் இது தற்காலிகமானது.சில நாட்களில் குணமாகிவிடும்.

ஆனால் வேறுபல வலிகள் வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வாழ்நாள் பூராவும் தொல்லை கொடுக்கலாம்.
  • மூட்டுவாதங்கள்,
  • முள்எலும்பு நோய்கள் 
  • புற்று நோய்களால் ஏற்படுவது
போன்றவை  அத்தகையவை. நீண்டநாள் நீடிக்கும்போது வலிகள் மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தும்.

மது மற்றும் போதைப் பொருட்கள்

இன்று எமது சமுதாயத்தில்
  • மதுப்பாவனை அதிகரித்து வருகிறது. 
  • போதைப் பொருட்களும் பலரை வசீகரிக்கின்றன. 
  • சிகரட்டும் இதில் அடங்கும். 
இவை மன உற்சாகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் அது போலியானது. அதாவது அதை உபயோகிக்கும்போது மட்டுமே. உபயோகிக்காதபோது சோர்வும் களைப்பும் தோன்றும். உடனேயே மீள எடுக்கச் சொல்லும். ஆனால் நாட் செல்லச் செல்ல மேலும் அதிகளவு பாவித்தாலே பழைய உற்சாகம் கிடைக்கும்.


நீங்கள் அவ்வாறு உபயோகிப்பவராயின்
  • அதனை உடனே நிறுத்துங்கள். 
  • குறைத்துக் குறைத்து நிறுத்தலாம் என எண்ணினால் நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாகவே இருக்கும். 
  • நீங்களாக நிறுத்துவது கடினமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்களது கணவன் அல்லது மகனது நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் அவதானியுங்கள். சில நேரங்களில் சோர்வும் வேறு நேரங்களில் அதிக உற்சாகமும் காணப்பட்டால் இதுவும் மது அல்லது போதைப் பொருள் காரணமாக இருக்கலாம். இப்பொழுது பல பெண்களும் இதில் அடங்குகிறார்கள்.

தூக்கக் குறைபாடு

பொதுவாக ஒருவருக்கு தினமும் 6-7 மணிநேரத் தூக்கம் தேவை. இல்லாவிடின் மூளையால் சமாளிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் தூங்கும் போதுதான் மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்திச் சேமிக்கின்றது. போதிய தூக்கம் இல்லாவிடில் அதைச் செய்ய முடியாது சோர்வுறும்.


தூக்கக் குறைபாடு ஏற்படுவதற்கு உங்கள் வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். அல்லது நோய்களும் காரணமாக இருக்கலாம். உடல் நோய்கள் மட்டுமின்றி மன உளைச்சல்களும் தூக்கத்தைக் கெடுக்கும்.

போதிய தூக்கம் என்பது படுக்கையில் கிடக்கும் நேரமல்ல.
அமைதியாகத் தூங்கும் நேரம் என்பதாகும்.

தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதை நீங்கள் உணர மாட்டீர்கள். கூடத் தூங்குபவர் நீங்கள் அமைதியாகத் தூங்குவதையும் திடீரென திணறுவதையும் அவதானிக்கக் கூடும். அவ்வாறெனில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Delighful drowsiness Thanks:- http://www.paintinghere.com


தைரொயிட் சுரப்பி நோய்கள்.

தைரொயிட் சுரப்பி என்பது எமது கழுத்தில் குரல்வளையை அண்டியிருக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொஸ்சின் என்ற ஹோர்மோனைச் சுரக்கிறது. இது குறைவாகவோ அன்றி அதீதமாகவோ சுரந்தால்
  • களைப்புச் சோர்வு, 
  • வியர்வை, 
  • குளிர் தாங்க முடியாமை, 
  • படபடப்பு, 
  • எடை குறைதல் அல்லது அதிகரித்தல் 
போன்ற பல்வேறு அறிகுறிகள் நோயின் நிலைக்கு ஏற்பத் தோன்றும்.
TSH, FT4 போன்ற இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம்.

இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரப்பியில் வீக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதே நேரம் கழுத்தில் களலை இருக்கும் அனைவருக்கும் இந்நோய் இருக்கிறது எனவும் கருத வேண்டாம்.

மனச்சோர்வு

பெரும்பாலானவர்களுக்கு களைப்பு என்பது மனத்தோடு சேர்ந்தது.
  • மனச்சோர்வு (Depression)
  • உள நெருக்கீடு (Stress)
  • மனப் பதகளிப்பு (Anxiety)
போன்ற பல்வேறு உளம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களில் முக்கிய அறிகுறி களைப்பாகத்தான் இருக்கிறது.

இதை நோயுள்ளவர்கள் உணர்வதில்லை. உடலில் உள்ள பிரச்சனைக்கு மனம் காரணமாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறினாலும் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.

'எனக்கு ஒரு கவலையும் இல்லை. யோசனையும் இல்லை' என மறுப்பவர்கள் ஏராளம்.

காரணம் மனநோய்கள் பற்றி எமது சமூகத்தில் இருக்கும் தப்பான அபிப்பிராயம்தான். விசர், பைத்தியம், அங்கொடை எனப் பல பிம்பங்கள் மனநோய்கள் பற்றி அவர்களுக்கு உண்டு.


வேலைத் தளத்தில் உள்ள நெருக்கீடு, பரீட்சையில் உச்ச மார்க் பெற வேண்டும் என்ற துடிப்பு, வீட்டிலும் சமூகத்திலும் நிதம் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் கூட உளநெருக்கீட்டிற்கு காரணமாகலாம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

எனவே நெருக்கீடுகள் உங்கள் களைப்புக் காரணமாக இருக்கலாம் என்றால் அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். அல்லது மருத்துவர் அவை பற்றி தானாக விசாரித்தால் தயங்காமல் வெளிப்படையாகப் பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்.

 வேறு தீவிர காரணங்கள்

அவை தவிர பல தீவிர நோய்களும் களைப்புக்கு காரணமாக இருக்கலாம்.


  • நீரிழிவு, 
  • இருதயச் செயலிழப்பு, 
  • சிறுநீரகச் செயலிழப்பு, 
  • ஈரல் செயலிழப்பு, 
  • சயரோகம். 
  • புற்றுநோய்கள், 
  • எயிட்ஸ் கூட காரணமாகலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது

எனவே போதியளவு தூக்கம், போஷாக்கான உணவு, தினசரி உடற்பயிச்சி, அளவான வேலை, போதிய ஓய்வு, மகிழ்ச்சியான சூழலுக்கு மாறுதல், மன அடக்கப் பயிற்சி (யோகா,தியானப் பயிற்சி), போதைப் பொருள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.


அவ்வாறு செய்தும் உங்கள் களைப்புக் குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும்அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, December 3, 2011

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?




திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?


  • பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
  • படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
  • யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
  • சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.

திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?


  • பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
  • சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.



  இவற்றுக்குக் காரணங்கள் என்ன? 


மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.

பல காரணங்களினால் இது ஏற்படலாம்.

மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.

உதாரணமாக * கடுமையான காய்ச்சல்,
                               * கடுமையான வயிற்றோட்டம்,
                               * சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல் போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக * காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
                             *கடுமையான மாதவிடாய் பெருக்கு,
                             *மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல். 
                             * வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்   
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
                            
உதாரணமாக-
  • குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பல.
கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது. 

நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.         
உதாரணமாக
  • தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.                 
  • விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
  • வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.
 
நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம். 
 
  • பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக, 
  • இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
 சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.

மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம். 
சில மருந்துகளும் காரணமாகலாம்.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.

மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.

மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0

Post Comment