Sunday, September 25, 2011

நீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்


கழுத்தில் கறுத்த வெல்வெட் தோல் நீரிழிவிற்கு கட்டியம் கூறுகிறதா? (Acanthosis Nigricans)

அழகான இளம் பெண்ணான அவள் சற்றுக் குண்டாவனவளும் கூட. கழுத்து, கைகள், நெஞ்சு, வயிறு எங்கும் தாராளமான கொழுப்பு விளைச்சல் கண்டிருந்தது. எனது பார்வை அவளது முகத்தை விட்டு விலகி கழுத்தில் மேய்ந்தது.
அழகான கழுத்தில் கறுத்த வெல்வெட்

எனது பார்வையின் பொருளை அவள் புரிந்து கொண்டதை அவள் வாய் திறந்து பேச ஆரம்பித்ததும் நோயை உறுதிபடுத்த முடிந்தது.

'ஓம் டொக்டர்... இது கொஞ்சம் அசிங்கமாகக் கிடக்குத்தான். இதைப் பற்றியும் உங்களிட்டை கேக்க வேண்டும் என்றுதான் வந்தனான். ஆரம்பத்தில் சாதுவாகத்தான் தெரிந்தது இப்பொழுது கொஞ்சம் கறுத்துத் தடித்துக் கொண்டு வருகிறது.' என்றாள்.

இளைஞனின் கழுத்திலும்- நீரிழிவா?

அதுதான் அக்கன்தோசிஸ் நிஹிரிகான். இது ஓரு தோல் வருத்தம். வருத்தம், நோய் என்று கூடச் சொல்ல முடியாது. தோலில் ஏற்படும் மாற்றம் என்ற சொல்லாம்.  கறுப்பாத் தடிப்பாக பள்ளங்களும் திட்டிகளுமாக வெல்வெட் போன்ற தோற்றத்தை பாதிப்புள்ள சருமத்தின் பகுதிக்குக் கொடுக்கும்.

பெரும்பாலும் கழுத்து அக்குள், முழங்கால், இடுப்புப் பகுதியில் வருவதுண்டு.

அக்குளில்

நோயாளியைப் பொறுத்த வரையில் அதன் அசிங்கமான தோற்றம்தான் அக்கறையை ஏற்படுத்தும். ஆனால் மருத்துவர்களைப் பொறுத்த வரையில் இது தோன்றுவதற்கான அடிப்படைப் காரணம் என்ன என்பதையே ஆராயத் தோன்றும்.

காரணங்கள் என்ன?

எந்த நோயுமற்ற ஆரோக்கியமானவர்களில் இது ஏற்படக் கூடுமாயினும் வேறு சில நோய்களுடன் இதற்குத் தொடர்பு இருக்கக் கூடும்.

•    சிலருக்கு இது பிறப்பிலேயே தோன்றுகிறது.
•    வெள்ளைத் தோல் உள்ளவர்களைவிட கருமையான சருமம் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
•    நீரிழிவு நோயாளர்கள் மற்றும் அதீத எடையுள்ளவர்களின் குருதியில் இன்சுலின் அதிக அளவிலிருப்பதுதான் அவர்களிடையே அதிகம் தோன்றுவதற்குக் காரணமாகும்;.
•    தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்பவர்கள் (Hypothyroidism)
•    குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை உபயோகிக்கும் சிலரிடையே தோன்றலாம்.
•    அட்ரீனல் சுரப்பி (Adrenal gland ), பிட்டியுடரி சுரப்பி (pituitary gland ) ஆகியவற்றின் செயற்பாடுகளில் குறைபாடு இருந்தாலும் தோன்றலாம்.
•    கொலஸ்டரேலைக் கட்டுப்படுத்த உபயோகிக்கும் நிக்கடனிக் அமிலம் (Nicotinic acid ) போன்ற மருந்துகளாலும் ஏற்பட வாய்ப்புண்டு.

நீரிழிவும் அக்கன்தோசிஸ் நிஹிரிகானும்

முழங்காலின் பிற்புறத்தே கருப்பான பட்டையாக

இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் அண்மைக் காலங்களில் இது நீரிழிவு வருவதற்கான முன் அறிகுறியாக இது இருக்கிறது என்பதே முக்கிய செய்தியாக இருக்கிறது.

கொழுத்த உடம்பு வாகையுடைய பல இளம் பிள்ளைகளிலும், இளைஞர்களிடையேயும் இது அதிகமாக காணப்படுகிறது. இதைக் கண்டவுடன் எனக்கு நீரிழிவு வரப்போகிறதே எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நீரிழிவு வருவதற்கு முன்னர் இதைக் கண்டுகொண்டது அதிஸ்டம் என எண்ண வேண்டும்.


உடனடியாகவே உணவு முறைகளை மாற்றுவது, அதிகளவு உடல் உழைப்பில் ஈடுபடுவது, எடையைக் குறைப்பது போன்ற முயற்சிகளில் இறங்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அக்கன்தோசிஸ் நிஹிரிகானஸ்சின் அடர்த்தி குறையும். இது குருதியில் இன்சுலின் அளவினைக் குறைக்கும். இது எதிர்காலத்தில் நீரிழிவு ஏற்படாமல் தடுக்க உதவும்.

மருத்துவம் 

இந்தத் தோல் மாற்றத்தை குணமாக்குவதற்கென விசேடமான சிகிச்சைகள் எதுவும் கிடையாது. அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்குவதிலேயே சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது.
  • அதீத எடையுள்ளவராயின் மேலதிக எடையைக் குறைப்பதையே முதல் இலக்காகக் கொள்ள வேண்டும். 
  • அதற்கு உடற் பயிற்சி அவசியம். 
  • அத்துடன் இனிப்பு, மாப்பொருள், எண்ணெய் போன்றவற்றைக் குறைத்து 
  • பழவகைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ண வேணடும்.

அவ்விடத்து சருமத்தின் தடிப்பைக் குறைத்து மெருகூட்டுவதற்கு கிறீம். மற்றும் லோசன்கள் உதவலாம். ரேடின் ஏ (Retin-A ) கலந்தவை சற்று அதிகம் உதவலாம். சுலிசிலிக் அமில கிறீம், யூறியா கிறீம் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. ஒமேகா மீன் எண்எணய்க் மாத்திரைகளும் உதவக் கூடும்.

விரல் மொளிகளில்

அவ்விடத்தில் சற்று துர்நாற்றம் ஏற்பட்டால் அன்ரிபயோடிக் கிறீம் சில் காலத்திற்குப் பூச நேரும்.

நோய்க்குக் காரணம் ஒருவர் உபயோகிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை அல்லது வேறு மருந்துகளாக இருந்தால், அல்லது முற் கூறிய நோய்களில் ஒன்று எனில் அதற்கான சிகிச்சை முறைகளை உங்கள் மருத்துவர் விளக்குவார்.



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, September 17, 2011

மூட்டு நோய்களோடு வாழ்தல்


“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது….

...... இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறன் என நக்கல் அடிக்குதுகள்”


இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthiritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்.

வாழ்க்கைத் தரம்

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றெல்ல உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான்.

அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதே நேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு.

ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாதிப்புகள் அதிகம்
  • சாதாரண பிரஜைகளில் 12 சதவிகிதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவிகிதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாககக் கூறினர்.
  • மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள்  கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐற்து நாட்கள் பாதிப்புற்று இருந்தனர்.
  • ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆன இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
  • நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.
சமூக ரீதியாக 

சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள்
  • கல்வி ரீதியாகி, 
  • தொழில் ரீதியாக, 
  • மற்றும் வருமான ரீதியாகவும் 
மற்றவர்களை விட அதிகம் பாதிப்புற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அதீத எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்படது.

செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்து உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.

பொருளாதார ரீதியாக
  • வேலை செய்ய முடியாமை, 
  • போதிய வருமானமின்மை, 
  • மருத்துவத்திற்கு போதிய செலவழிக்க முடியாத நிலை, 
  • அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால்
அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது.  இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.


ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

செய்ய வேண்டியவை

எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?
  • “என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.
  • தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது.
  • நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றிக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.
  • அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி,  மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பினை பெறலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் நான் எழுதிய கட்டுரை.

0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, September 10, 2011

நேர் சிந்தனையும் உடல் நலமும்


“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது”

மூக்கால் சளி சிந்தவில்லை.

வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குiறாயாகச் சொன்னார் அந்த அம்மணி.

இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது,

“வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார்.

தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை.

போதுமென்ற மனசு

போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம்.



“எனது கோப்பையில் தண்ணீர் அரைவாசி நிறைந்திருக்கிறது” 

எனச் நிறைவோடு சொல்பவர்கள் இருப்பார்கள், அல்லது

“அரைக் கோப்பை காலியாக இருக்கிறது”

எனக் கவலைப்படுபவர்களும் இருப்பார்கள்.

இதற்கான மறுமொழியிலிருந்து ஒருவரது வாழ்க்கை பற்றிய எண்ணத்தை அறிந்து கொள்ளலாம் என்பார்கள்.

இவற்றைத்தான் நேர் சிந்தனை (Positive thinking)> எதிர்மறை சிந்தனை (Negative thinking) என்றெல்லாம் சொல்கிறார்கள். நம்பிக்கையுள்ள மனது, அவநம்பிக்கையுள்ள மனது என்று புரியும்படி சொல்லலாமா? 


இது வாழ்க்கை பற்றிய பார்வை மட்டுமல்ல. உங்கள் நலத்தோடும் தொடர்புடையனவாகும். 

மறுவார்த்தையில் சொன்னால் 
  • நேர் சிந்தனையுள்ள மனது உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. 
  • எதிர்மறை சிந்தனையுள்ள மனது நலக்கேட்டுடன் தொடர்புடையது எனலாம்.
 
 
நேர் சிந்தனையும் உடல் நலமும்


நேர் சிந்தனையாது உடல் நலம் பல வழிகளில் முன்னேற்றமடைய உதவுகிறது.
  • வாழ்நாள் அதிகரிக்கும்.  
  • மனச் சோர்வு நோய்க்கான (Depression) சாத்தியம் குறைவாகும்.
  • நாளாந்த வாழ்க்கை நெருக்கீடுகளின் தாக்கம் குறைவாகும்.
  • உடல் உள ஆரோக்கியங்கள் மேம்படும்
  • சாதாரண தடிமன் காய்ச்சல் அணுகுவது குறையும். 
  • மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் இறப்பதற்கான சாத்தியம் குறைவாகும்.

இவற்றுக்கான காரணங்கள் என்ன?

நேர்சிந்தனை உள்ளவர்களது உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணங்கள் என்ன?
  • நேர் சிந்தனையானது, வாழ்வின் நெருக்கீடு நிறைந்த தருணங்களில் மனம் தளர விடாது நம்பிக்கையுடன் செயலாற்ற உதவும். இதனால் நெருக்கீட்டின் தீய விளைவுகளால் உடல்நலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது என நம்பப்படுகிறது.
  • நேர் சிந்தனை உள்ளவர்களுக்கு பொதுவாக வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான நிலைப்பாடு உள்ளது. இதனால் அவர்கள் பொதுவாக நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். 
உதாரணமாக
  1. நல்ல உணவுகளை உண்கிறார்கள். 
  2. உடற் பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். 
  3. புகைத்தல், மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதில்லை. இதனால் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டுகின்றது.

மனதோடு பேசல்

நாங்கள் சதா காலமும் எமது மனதோடு பேசிக்கொண்டே இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. ஆற்று நீர்போல எமது மூளையினுள் சதா காலமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கினறன.

தன்னிச்சையாகத் தோன்றி வற்றாத நீருற்றுப் போல பாய்ந்தோடுபவை நேர் சிந்தனைகளாக அல்லது எதிர்மறை சிந்தனைகளாக இருக்கலாம்.

இந்தச் சிந்தனைகள் பலவும் தர்க்க ரீதியானதாக உண்மையின் அடிப்படையில் தோன்றி இருக்கலாம். அல்லது எமது தவறான நம்பிக்கைகள் காரணமாகவும், போதிய தகவல்கள் கிட்டாததாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

இவ்வாறு எழுபவை எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் வாழ்க்கை அவநம்பிக்கை சூழ்ந்ததாக மாறிவிடும். மாறாக நேர் சிந்தனைகளாக இருந்தால் ஒளிமயமான எதிர் காலம் சித்திக்கும். உங்கள் சிந்தனையின் போக்கு எத்தகையது என்பதை அடையாளம் காண முயலுங்கள்.

உங்கள் எதிர்மறை சிந்தனைகளை அடையாளம் காண்பது எப்படி?
  • நாள் முழுவதும் பல நல்ல காரியங்களைச் செய்கிறீர்கள். சாதனைகளைப் புரிகிறீர்கள். மற்றவர்களது பாராட்டுகளையும் பெறுகிறீர்கள். ஆனால் ஒரு தவறு நடந்து விடுகிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள் மிகுதி எல்லாவற்றையும் மறந்து விட்டு அந்த ஒரு தவற்றை மட்டும் தூக்கிப் பிடித்துக் கவலை கொள்கிறீர்களேயானால் நீங்கள் எதிர்மறை சிந்தனை கொண்டவர் எனச் சொல்லலாம்.
  • ஏதாவது தவறுகள் நேரும் போது அல்லது நடக்க வேண்டிய கருமம் நிறைவேறாத தருணங்களில் அதற்குக் காரணம் நீங்கள்தான் என மனங்கோணுவதும் எதிர்மறை சிந்தனைதான்.
  • எதிலும் நன்மையை எதிர்பார்க்காது இருத்தல். உதாரணமாக காதலியுடன் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அங்கு போய் ஏதாவது மடைத்தனமாகப் பேசி, நடந்து அவளது உறவையே முறித்துவிடக் கூடும் எனத் தயங்கினால் அதற்கு வாழ்க்கை பற்றிய அவரது நம்பிக்கையீனம் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.
 

மாற்ற முடியுமா?

மனதோடு பேசும் உங்கள் உரையாடல்கள் அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாக இருந்தால் உங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனிச் செய்வதற்கு எதுவும் இல்லை என மனங்கலங்க வேண்டியது இல்லை.

உங்கள் சிந்தனைகளினது பாதையை நீங்கள் முயற்ச்சித்தால் மாற்றிக் கொள்ளலாம்.
  • நாளாந்த செயற்பாடுகளின் இடையே உங்களை நீங்களே சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் சிந்தனைகள் சரியான வழியில் செல்கின்றனவா அல்லது கவலைக்குரிய பாதையில் செல்கிறதா? எதிர்மறை சிந்தனை வழி சென்றால் அதனை இடை மறித்துச் சரியான சிந்தனைக்கு இட்டுச் செல்லுங்கள்.
  • புன்னகைக்கும் சிரிப்பிற்கும் இடம் ஒதுக்கி வையுங்கள். நகைச்சுவை உணர்வு வாழ்வை மலர்ச்சிக்கு உள்ளாக்கும். எத்தகைய நிகழ்வுக்கும் நகைச்சுவை, கிண்டல், முசுப்பாத்தி என இனிமையான பக்கம் இருக்கவே செய்யும். அதைக் கண்டு பிடித்து வாழ்வை நம்பிக்கையாக்குவது அவரவர் கைகளில்தான் தங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக துன்பமான நிகழ்விலும் கூட சிரிப்பை உண்டாக்கக் கூடிய பக்கத்தைத் தேடிக் கொள்ளலாம்.

மனைவியின் இறப்பு

எனது நண்பரின் மனைவி மறைந்தபோது அவரது மறைவிற்கு அனுதாபம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.

“இப்பத்தான் அவளுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. எனது சுடுசொற்களிலிருந்து” என்றார்.

ஆழ்மனத்தில் சோகம் மூடியிருந்தபோதும் அதனை மறைக்க அவரது நகைச்சுவை உணர்வு கை கொடுத்தது.

உங்கள் வாழ்வைப் பார்த்து நீங்களே சிரிக்கக் கற்றுக் கொண்டால் அதைவிட பெரிய பேறு எதுவும் இருக்க முடியாது.
  • வாழ்க்கை முறை:- ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும் உதவும். தினசரி உடற் பயிற்சி அல்லது நடை உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் முக்கியமானது. அத்துடன் நொறுக்குத் தீனிகளைத் தவரித்த சத்துள்ள உணவு முறையும் நெருக்கீடுகளை துணிவோடு எதிர் கொள்ள உதவும்.
  • நம்பிக்கையூட்டும் சூழல்:- நீங்கள் நேர் சிந்தனையுள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களாக மட்டுமின்றி வாழ்வில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் உங்களது நேர்சிந்தனைகளை அவர்கள் மாற்றிவிடக் கூடும் என்ற அபாயம் உண்டு. சந்தேகமும், நம்பிக்கையீனமும், செயற்திறனும் அற்றவர்கள் சூழலில் இருந்தால் உங்கள் வாழ்வில் நெருக்கீடுகள் அதிகரிக்கக் காரணமாகிவிடுவார்கள்.
  • மனதோடு மகிழ்ச்சியாகப் பேசுங்கள்:- உங்களை நீங்களே உற்சாகப்படுத்துங்கள். உங்கள் உணர்வுகளை மென் மனத்தோடு அணுகுங்கள். அதை நோகடிக்கும் வகையில் உங்கள் மனத்தோடு பேசாதீர்கள். மற்றவர்கள் முகத்துக்கு நேரே சொல்ல முடியாத கடுமையான வார்த்தைகளை உங்கள் மனத்திற்குள் பேசி அதைக் காயப்படுத்தாதீர்கள். இவை உங்கள் சிந்தனைகளை நேர்வழியில் செல்ல வழிவகுக்கும்.
மாற்றங்களுக்கு தயாராகுங்கள்

  1. இது முன்பு நான் ஒருபோதும் செய்யாதது. இப்பொழுது எப்படிச் செய்யப் போகிறேன் எனத் தயங்க வேண்டாம். இதைச் செய்து பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இதை என்னால் செய்ய முடியும் எனச் சவாலாக எடுங்கள்.
  2. இது சிக்கலானது என எதையும் செய்யத் தயங்காதீர்கள். மாற்று வழியிலாவது இதைச் செய்ய முடியும் என சிந்தியுங்கள்.
  3. இது தீவிரமான மாற்றம். இதில் ஈடுபடுவது ஆபத்தை விலைக்கு வாங்குவது போல என புதிய முயற்சிகளில் இறங்கும்போது சிந்திக்காது, முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை என எண்ண வேண்டும்.

இவற்றைச் செய்தால் ஒரே நாளில் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். தொடர்ந்து முயற்சியுங்கள், தொடர்ந்து பயிற்சி  செய்யுங்கள். படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும்.

நேர்சிந்தனை கொண்ட மனது உங்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், சுபிட்சங்களையும் உடல் ஆரோக்கியத்தையும் கொண்டு வரும்.

நம்புங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0

Post Comment