Saturday, August 20, 2011

மாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல


மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி உட்கொள்வது என்பது பரவலான ஒருபழக்கமாக இருக்கிறது. ஆனால் இது நல்லதல்ல என அண்மைய ஒரு ஆய்வு கூறுகிறது.


நோயாளிகள் மட்டுமல்ல பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உடைத்துக் கொடுக்கிறார்கள். மருத்துவமனைகளில் கூட மாத்திரைகளை உடைத்துத் துண்டாக்கி கொடுப்பது வழக்கம்.

ஜேர்மனியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பரிகாரம் கொடுக்கப்படும் மருந்துகளில் சுமார் 25% உடைத்தே பாவிக்கப்படுகிறது என்பது தெரிய வந்தது.

ஏன் உடைக்கிறார்கள்.


பலரும் வெவ்வேறு காரணங்களுக்காக மாத்திரைகளை உடைத்து உபயோகிக்கிறார்கள்.
  • பெரும்பாலான குழந்தைகளும் சில பெரியவர்களும் மாத்திரை பெரிதாக இருப்பதாக எண்ணி அதை உடைத்தால் சுலபமாக விழுங்க முடியும் என்பதற்காக உடைத்து உட்கொள்கிறார்கள்.
  • சில மாத்திரைகள் நோயாளரின் தேவைக்கு ஏற்ற அளவில் விற்பனைக்குக் கிடைப்பதில்லை. அதனால் உடைத்து விழுங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணமாக உயர் இரத்த அழுத்தத்திற்கு உபயோகிக்கும் HCT என்ற மாத்திரை 50 mg அளவிலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆனால் இலங்கையில் பெரும்பாலும் 25 mg அளவே நோயாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் உட்பட எவருமே 50 mg மாத்திரையை இறக்குமதி செய்வதில்லை. இதனால் எல்லா நோயாளிகளும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதே போல கொலஸ்டரோலுகக்கு உபயோகிக்கும் Atrovastatin மாத்திரை 10 அல்லது 20 mg அளவிலேயே கிடைக்கிறது. 5 அல்லது 15 mg உபயோகிக்க வேண்டிய அனைவரும் அதை உடைத்தே உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
  • பொருளாதாரக் காரணங்களுக்காகவும் பலர் உடைத்து உட்கொள்கிறார்கள். ஒருவருக்கு 20 mg  Atrovastatin  தேவையெனில் அதை 5mg மாத்திரையாக வாங்கும் செலவை விட 10 mg மாத்திரையை பாதியாக உடைக்கும்போது குறைவாகவே இருக்கும். இக் காரணத்திற்காகவும் பலர் மாத்திரையை உடைத்து உபயோகிக்கிறார்கள்.

பாதிப்புகள் என்ன?

ஆனால் மாத்திரைகளை உடைக்கும்போது
  • அவை சரிபாதியாக உடைபடுவதில்லை.
  • அத்துடன் உடைக்கும் போது துகள்களாக சற்று உதிரவும் செய்கின்றன. 
  • உடைக்கவே கூடாத மருந்துகளும் உள்ளன. Slow release, Extended release போன்றவை படிப்படியாக அல்லது நீண்ட நேரம் எடுத்து உணவுக் கால்வாயில் கரைவதற்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டவை. இவற்றை உடைத்தால் அதன் நோக்கமே சிதறிவிடும்.
Slow release, Extended release போன்றவற்றை உடைக்கவே கூடாது

உடைக்கும் முறைகள்

மாத்திரைகளை உடைப்பதற்கு பலரும் வெவ்வேறு வேறான முறைகளை உபயோகிக்கின்றனர்.

இந்த ஆய்வின் போது மாத்திரையை
  • அதை உடைப்பதற்கான Pilomat device மூலம் உடைப்பது. சமையலறைக் கத்தி மூலம் உடைப்பது, 
  • கத்தரிக்கோலால் வெட்டுவது, 
  • மற்றும் உடைப்பதற்கான அடையாளம் இடப்பட்ட மாத்திரைகளை எதையும் பயன்படுத்தாது கையால் உடைப்பது ஆகியனவே அவையாகும். 
எல்லா முறைகளின்போதும் மருந்தின் அளவு குறைந்திருந்தபோதும் Pilomat device மூலம் உடைக்கும்போது சேதம் குறைவு எனத் தெரியவந்தது.
இவ்வாறு சேதம் உறுவதால், நோயாளி ஒரு வேளைக்கு உபயோகிக்கும் மருந்திற்கும் அடுத்த நேரம் உபயோகிக்கும் மருந்திற்கும் இடையே அளவில் மாற்றம் ஏற்படும். பெரும்பாலும் உபயோகிக்க வேண்டியதிலும் பார்க்கக் குறைந்த அளவு மருந்தே கிடைக்கும் என நம்பலாம்.

இது ஆய்வுபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் Journal of Advanced Nursing என்ற சஞ்சிகையின் ஜனவரி 2011 இதழில் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்கு உட்படுத்தியபோது உடைத்தவற்றில்
  • 31 சதவிகிதமானவை சரியாக உபயோகிக்க வேண்டிய மருந்தின் அளவை விட 15 சதவிகிதம் குறைந்திருந்தது காணப்பட்டது. 
  • மேலும் 14 சதவிகிதமானவை 25 சதவிகிதம் குறைந்திருந்தது. அதாவது மருந்தின் அளவு 1/6 -  மூ ¼ குறைந்திருந்தது. 
  • வேறொரு விதத்தில் சொன்னால் ஒருவருக்கு 100 மி.கி மருந்து சிபார்சு செய்திருந்தால் உடைத்து உபயோகிக்கும் போது 75 மிகி முதல் 85 மிகி மட்டுமே கிடைக்கும் எனலாம்.

இவ்வாறான மருந்து அளவுகளின் மாற்றம் நோயின் தாக்கத்தில் பாரிய மாற்றங்களை உண்டு பண்ணலாம் என்பதை விளக்க வேண்டியதில்லை. அத்துடன் பாவிக்கும் மருந்தானது பக்கவிளைவுகள் அதிகம் உள்ளதாயின் மருந்தின் அளவில் சிறுமாற்றம் கூட உடலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

எனவே முடிந்தவரை மருந்துகளை சரியான அளவுகளில் வாங்குங்கள்.
மாத்திரையாக வேண்டிய அளவில் கிடைக்காவிடின், திரவ வடிவில் மருந்து கிடைக்குமாயின் சரியான அளவை எடுக்க அது உதவலாம்.

சரியான அளவைப் பெறுவதற்கு இரண்டு மாத்திரைகளை சேர்த்து உபயோகிக்க முடியுமாயின் அவ்வாறு செய்யுங்கள். உதாரணமாக 75 மிகி மாத்திரை கிடைக்காவிட்டால் 50 மிகி மாத்திரையை உடைப்பதற்குப் பதிலாக 50 மிகி மாத்திரையுடன் 25 மிகி மாத்திரையைச் சேர்த்து உபயோகிக்கலாம்.

தினக்குரல் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0





Post Comment

Sunday, August 14, 2011

ஓஸ்ரியோபொரோசிஸ் விழுந்த பெண்ணும் உடைந்த இடுப்பும்


வெள்ளவத்த காலி வீதியை மேவிய நடை பாதையில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு பெண் திடீரென கால் தடக்கி விழுந்தாள். எழ முடியாது வேதைனையில் துடித்துக் கொண்டிருந்தாள். பாதையால் சென்று கொண்டிருந்த ஓரிருவர் ஓடி வந்து அவளைத் தூக்கிவிட முயன்ற போதும் அவளால் எழவே முடியவில்லை.

தெரிந்தவர் யாரோ தற்செயலாக வந்ததால் அம்பியுலன்சை அழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவளது இடுப்பு எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. சத்திரசிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று.

ஏன் அவ்வாறு நிகழ்ந்தது


  • முக்கியமாக அவளது வயது 70தை நெருங்கியிருந்தது. அத்துடன் அவளது நடுநிலை (Postural imbalance) சற்று தழும்பியிருந்தது. அதனால் சிறிது தடுக்கியதும் விழ நேர்ந்தது.
  • தடக்கியதற்குக் காரணம் மாநகரசபையின் அக்கறையீனம். மின்சார, குடிநீர் குழாய் அல்லது கழிவு நீர் அகற்றும் வேலைகளுக்காக கிண்டிய நடைபாதை சரியாகச் செப்பனிடவில்லை. ஏனோ தானோ எனத் திருத்தியதால் நடைபாதைகள் திட்டியும் பிட்டியுமாக கிடந்ததால் தடக்கியது.
  • தடக்கி விழும் எல்லோருக்கும் எலும்பு உடைவதில்லை. இவளது எலும்புகள் வலுவிழந்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் சிறிய விழுகையே அவளது இடுப்பு எலும்பை எடைத்துவிட்டது. 
  • பரிதாபம் என்னவென்றால் தனக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அதற்கான சிகிச்சையை எடுத்ததும் இல்லை. பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியாததால் பாதுகாப்பாக இருக்கவும் இல்லை.
மற்றொரு பெண் குளியறையில் செருப்பு இல்லாமல் சென்றபோது வழுக்கிவிட்டது. விழும்போது அடிபடாது இருப்பதற்காக கையைத் தரையில்  ஊன்றியபோது மணிக்கட்டு எலும்பு முறிந்துவிட்டது. இவருக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்தான்.

ஒஸ்ரியோபொரோசிஸ் என்றால் என்ன?

எமது எலும்பு எஃகு போலக் கடினமானது. ஆனால் அதன் உறுதித்தன்மை மிக உச்சமான கட்டத்தில் இருப்பது 25-30 வயதுகளில்தான். அதன் பின் என்ன நடக்கிறது.
கடினமான எலும்பும் அடர்த்தி குறைந்த ஒஸ்ரியோபொரோசிஸ் எலும்பும்

கடினமான இரும்பினுள் நுண்ணிய துவாரங்களை இட்டால் என்ன செய்யும்? அதன் உறுதித்தன்மை குறைந்தவிடும். மேலும் அதிகமாக துவாரம் இட்டால் கையால் முறித்து உடைக்கும் அளவிற்குக் குறைந்துவிடும். அதே போல இளம் வயதில் கடினமாக இருக்கும் எலும்பின் அடர்த்தி வயது ஏற ஏற குறையும். இது இயற்கையின் நியதி.

ஆனால் சிலருக்கு அதிகமாக அதன் உறுதித்தன்மை மிக அதிகமாகக் கெடுவதால் அவை மிகவும் பலவீனம் அடைந்து எளிதில் உடைந்து விடுகின்றன. இந்த நிலைதான் ஒஸ்ரியோபொரோசிஸ் என்பதாகும்.

ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள்?

பரம்பரை அம்சம்

இது மிக முக்கியமானதாகும். உங்களது எலும்புத் திணிவைத் தீர்மானிப்பதில் பரம்பரை அம்சமானது 60 முதல் 70 சதவிகிதமளவில் பங்களிக்கிறது.

உங்கள் அப்பா, அம்மா, சகோதரங்கள் அல்லது பாட்டன் பாட்டி. போன்ற நெருங்கிய உறவினர்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் அல்லது இடுப்பு எலும்பு உடைவு (Hip fracture) இருந்திருந்தால் உங்களுக்கும் எதிர்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

அவ்வாறெனில் இளவயதிலேயே உணவு முறைகளாலும் உடற் பயிற்சிகளாலம் எலும்பகளின் திடத்தை அதிகரிக்க முயல்வது அவசியமாகும்.

இனம்

நீங்கள் ஆசியப் மற்றும் Caucasian பகுதியைச் சார்ந்தவராயின் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். அமெரிக்க ஆபிரிக்கப் பெண்களுக்கு மிகக் குறைவாகும். Hispanic பெண்களுக்கு இடைநடுத்தர வாய்ப்பு உண்டு. எனவே ஆசியப் பெண்களான நீங்கள் உங்களுக்கு ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் வரக் கூடும் என்பதை மனதில் இருத்தி அதற்கேற்ற உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

மெலிவான உடல்வாகு

அதீத  எடைக்கும் பல நோய்களுக்கும் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மெலிந்த உடல் வாகை உள்ளவர்களை ஒஸ்ரியோபொரோசிஸ் நோய் தாக்குவது அதிகம். ஒருவரது எடை அவரது உயரத்திற்கு எற்ப சரியானதா, அதிகமா, குறைவா என்பதை உடற் திணிவு (Body mass Index) மூலமே அறிய முடியும். (உங்கள் உடற் திணிவை அறிய ஹாய் நலமா புளக்கின் இடது கொலமின் கீழ்ப் பகுதியில் பார்க்கவும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களது எலும்புகள் திடமற்று இருப்பதால் அதிகமாக நோயுறுகிறது.

மாறாக வயிற்றறைக் கொழுப்பும் காரணமாகலாம். இணைப்பில் படியுங்கள்


மாதவிடாயக் குழப்பங்கள்

மாதவிடாய் ஒழுங்காக இல்லாதவர்களுக்கு பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் குறைபாடு இருக்கக் கூடும். இதனால் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

15 வயதிற்கு மேல் பருவமடைதல் தாமதமாகும் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைவாக (Osteopenia) இருப்பதுடன் பிற்காலத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் ஏற்படுவதும் அதிகமாகும். அதேபோல காலத்திற்கு முந்தி (45வயது) மாதவிடாய் முற்றாக நின்ற (Menapause) பெண்களுக்கும், கர்ப்பம் தங்காத சாதாரண காலங்களிலும் மாதவிடாய் இடையிடையே நீண்ட நாட்களுக்கு வராது இருப்பவர்களுக்கும் ஒஸ்ரியோபொரோசிஸ் வரும் வாய்ப்பு அதிகமாகும்.

வாழ்க்கை முறைகள்

மனிதனின் உடல் உழைப்பிற்காக வடிவமைக்கப்பட்டது. அதனால் உழைப்பிற்கு ஏற்பவே உடல் திண்ணமமடையும். அதேபோல எலுப்புகளும் உங்கள் உடலைச் சுமப்பதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ப உறுதியாக மாறும். முக்கியமாக எலும்பு உருவாகும் காலமான இளமைப் பருவத்தல் உடல் உழைப்பு அவசியம்.

முக்கியமாக மாணவர்களுக்கு அவசியம். பாடசாலை ரியூசன். ரீவி, கம்பியூட்டர் என உடலுக்கு பயிற்சியற்ற வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களது எலும்புகள் திடம் பெறுவது எங்ஙனம். இப்பொழுது பெரும்பாலான பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிக்கு முந்திய ஒரு சில வாரங்களே உடற் பயிற்சி நடைபெறுகிறது. இந்நிலை மாற வேண்டும். தினமும் விளையாட்டிற்கு என அவர்களுக்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

நோயுற்று படுக்கையில் கிடந்தாலும், சக்கர நாற்காலியில் திரிந்தாலும் எலும்புகள் தேய்ந்து விடுகின்றன. அதைத் தடுக்கவே பிசியோதிரபி கொடுக்கப்படுகிறது.

மொத்தத்தில் அனைவருக்கும் அவர்களது வயதிற்கு ஏற்ற உடற் பயிற்சிகள் கட்டாயம் தேவை.

புகைத்தலும் மதுவும்

இந்த இரண்டு பழக்கங்களும் எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு வழி வகுக்கின்றன.


உணவு முறைகள்

உணவு முறைகளைப் பொறுத்த வரையில் கல்சியம் விற்றமின் டி செறிந்த உணவுகளை நீங்கள் உண்பது அவசியம். முக்கயமாகப் பழவகைகளை தினமும் சேர்க்க வேண்டும். பால், முட்டை, கருவாடு ஆகியனவும் நல்லது.


அதீதமாக கோப்பி இருந்துவதும் நல்லதல்ல. புரதங்களை மிதமிஞ்சி உண்பதும் ஒஸ்ரியோபொரோசிஸ் நோய்க்கு இட்டுச் செல்லும் என நம்பப்படுகிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்கள் இனத்தையோ பரம்பரையையோ உங்களால் மாற்ற முடியாது.

ஆயினும் உங்கள் வம்சத்தில் ஒஸ்ரியோபொரோசிஸ் இருந்தால் அது உங்களுக்கு எதிர்காலத்தில் வராதிருப்பதற்கான உணவு முறைகளையும், உடற் பயிற்சிகளையும் செய்வது அவசியம்.

சில மருந்துகளும் காரணமாகலாம்
  • கருத்தடைக்கு உபயோகிக்கும் டிப்போ புரொவிரா ஊசி, 
  • வயிற்றப் பொருமல் அல்சர் போன்றவற்றிற்கு உபயோகிக்கும் அலுமினியம் கலந்த மருந்துகள் (டைஜீன், பெல்சிட் போன்றவை), 
  • தைரொக்சின் (Thyroxine), 
  • வலிப்பு நோய் மருந்துகள் (Anticonvulsants) போன்ற பல மருந்துகள் ஒஸ்ரியோபொரோசிஸ் நோயை ஊக்குவிக்கும் என்பதால் மருத்தவருடன் கலந்து ஆலோசியுங்கள். 
  • நீண்டகாலம் அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
சில காரணங்கள்
 புகைத்தல். மதுபானம் அருந்தல் போன்ற பாதகமான பழக்கங்கள் இருந்தால் அவற்றைக் கைவிடுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0


Post Comment