Saturday, June 25, 2011

வெயிலோடு போரடி வியர்குருவுடன் அல்லாடி .......


வெக்கை தாங்க முடியவில்லை. மேலெல்லாம் ஒரே கடியாக இருக்கு எனச் சொல்லிக் கொண்டு வருபவர்கள் அதிகம். கோடை காலம் வந்தாலே புழுக்கம், வியர்வை என ஒரே அரியண்டம்தான்.

கோடை கால நோய்களில் முக்கியமானது இந்த வியர்க்குரு. இதனை Miliaria,  Sweat Rash, prickly என்றெல்லாம் அழைப்பர்.


மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் சிறுமணல் போல மேலெல்லாம் பரவிக்கிடக்கும்.

கடுமையான அரிப்பு இருக்கும். சொறிந்து சொறிந்து விரல்கள் வலியெடுக்கும்.

சொறிவதால் கீறல் காயங்கள் ஏற்படாது விட்டால் பெரிய விடயம்தான்.

இருந்தபோதும் இது ஆபத்தான நோயல்ல.

மருத்துவம் எதுவும் தேவைப்படாது. தானாகவே சில நாட்களில் மாறிவிடும். ஆயினும் இந்நோயின் போது அவதானிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு பார்க்கலாம்.

எவ்வாறு ஏற்படுகிறது?

வழமைக்கு அதிகமாக வியர்வை ஏற்படும்போது தோன்றுகிறது. பொதுவாக கடுமையான வெயிலால் உஷ்ணமும், வளியின் ஈரலிப்புத் தன்மையும் (Humidity) அதிகமாக இருப்பதால் வியர்வை கடுமையாக் கொட்டுவதால் இக்காலத்தில் தோன்றும். அதீதமாக வியர்க்கும்போது வியர்வைச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்படும்.

இதனால் வியர்வை நீர் வெளியேற முடியாது சருமத்திற்கு கீழ் தடைப்படும். உதிர்ந்த சருமக் கலங்கள் அதற்குள் சேரும். பக்ரீரியா கிருமிகளும் அதில் தொற்றும். இதனால் அவ்விடத்தில் சிறிய திட்டி போன்று வியர்க்குரு தோன்றும். இது உடையும்போது அடைபட்ட வியர்வையும் ஏனையவையும் வெளியேறும். இவற்றால் தோலில் அழற்;சி ஏற்பட்டு அரிப்பு உண்டாகும். சற்று துர்நாற்றத்தையும் கொடுக்கும்.

இது உடலின் எப்பாகத்திலும் தோன்றலாம் பொதுவாக முதுகு, நெஞ்சு, கழுத்து, வயிறு, அக்குள், தொடை இடுக்கு போன்ற இடங்கள் பாதிப்படைவது அதிகம். இவை பெரும்பாலும் உடைகளால் மூடப்பட்ட இடங்களாகும். துணிகள் சருமத்தை உறுத்தி மேலும் வியர்க்கப் பண்ணுவதாலேயே அவ்விடங்களில் அதிகம் தோன்றுகிறது.

பருத்தித் துணிகள் வியர்வையை உறிஞ்சிவிடும் என்பதாலேயே அத்தகைய உடைகளை வியர்வை காலத்தில் அணிகிறோம். அணிய வேண்டும். செயற்கைத் துணிகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தவிர்க்க வேண்டும்.

யாருக்கு ஏற்படும்?

எவருக்குமே ஏற்படலாம். ஆயினும் குழந்தைகளில் ஏற்படுவது அதிகமாகும். இதற்குக் காரணம் அவர்களது வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி முழுமையடையாததுதான்.

கொழுத்த உடல்வாகு உடையவர்களுக்கும் அதிகம் தோன்றலாம். சிலருக்கு இயல்பாகவே வியர்ப்பது அதிகம். அவர்களுக்கும் அதிகம் தோன்றும்.

வேறு காரணங்கள்

பொதுவாக வெக்கை அதிகமான காலங்களில் ஏற்படுகிறதாயினும் வியர்க்குரு வேறு காரணங்களாலும் ஏற்படலாம்.
  • நீண்டகாலம் படுக்கையில் கிடக்க நேர்ந்தாலும் ஏற்படலாம். நோய்கள் காரணமாகவே அவ்வாறு படுக்கையில் கிடக்க நேரிடும். அத் தருணங்களில் வியர்ப்பது அதிகம். அத்துடன் தடிப்பான படுக்கை விரிப்புகளும் உடைகளும் வியர்க்க வைப்பதுடன் அது வெளியேறாமல் தடுப்பதாலும் ஏற்படும்.
  • குளிர் காலங்களில் குளிரைத் தாங்குவதற்காக அணியும் அதிகமான உடைகள் மற்றொரு காரணமாகும்.
  • அடுப்பு, நெருப்பு போன்றவை இருக்கும் சூடான இடங்களில் வேலை செய்வோருக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

என்ன செய்யலாம்.


  • வெக்கை அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள். குளிர்ச்சியான இடங்களை நாடுங்கள். மரநிழல்கள், காற்றோட்டான இடங்கள், குளிருட்டப்பட்ட அறைகள் போன்றவை வெக்கையைக் குறைத்து வியர்வையைத் தடுக்கும்.
  • வெயில் காலத்திற்கு ஏற்றவை பருத்தி ஆடைகளே. நைலோன், பொலியெஸ்டர் போன்றவை வெப்பத்தை உள்வாங்கி தேக்கி வைத்திருப்பதால் வியர்வையை அதிகமாக்கும்.
  • இறுக்கமாக அணிவதைத் தவிர்த்து தளதளப்பாக இருந்தால் காற்றை உள்வாங்கி வெக்கையைத் தணிக்கும்.
  • வெயில் காலத்தில் இரண்டு மூன்று முறைகள் குளிப்பது நல்லது. குளிப்பது சாத்தியமில்லாவிடில் உடலைக் குளிர்நீரால் கழுவுவது அல்லது நனைப்பது நல்லது.

லோஷன்,பவுடர்
  • கலமின் (Calamine lotion) லோஷன் நல்லது. அழற்சியடைந்த சருமத்தைக் குளிர்மையாக்கி சுகமளிக்கும். எண்ணெய் வஸ்லின் கலந்தவை நல்லதல்ல. 
  • வியர்க்குருப் பவுடர்களும் நல்லதல்ல. ஏனெனில் அவை அரிப்பைக் குறைக்கக் கூடுமாயினும், வியர்வைச் சுரப்பியின் துவாரங்களை அடைத்து நோயை மேலும் மோசமாக்கலாம்.
வெயில் கால ஆபத்தான நோய் டெங்கு. அது பற்றி  

டெங்கு நோய் சிகிச்சையில் புதிய அணுகுமுறை பப்பாசி உதவுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Saturday, June 18, 2011

உன் கண்ணில் நீர் வழிந்தால் Excessive Tearing (Epiphora)


கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சிலவேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமாக வழிகிறது. இது ஏன்?


கண்ணீரின் கடமைகள்

காரணம் என்னவென்றால், கவலையை வெளிக்காட்டுவதை விட கண்களுக்கு மேலும் பல கடமைகள் உள.
  • கண்களை ஈரலிப்பாக வைத்திருப்பது முக்கிய கடமையாகும். கண்கள் ஈரலிப்பாக இருப்பதால்தான் கண்களை நாம் மூடித் திறக்கும்போதும், பார்வையைத் திருப்புதற்காக கண்களை ஆட்டும் பொழுதும் உராய்வு இன்றி வழுவழுப்புடன் அதனால் இயங்க முடிகிறது.
  • கண்களுக்கு தேவையான போசணையில் ஓரளவு அதனூடகவும் கிடைக்கிறது. 
  • தூசி மற்றும் உறுத்தக் கூடிய பொருள்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
  • கண்கள் மாசு மறுவின்றி பளிங்கு போல கண்ணீரினால் பேணப்படுவதால்தான் எமது பார்வை தெளிவாக இருக்கிறது.
  • கண்ணில் தொற்று நோய்கள் ஏற்படாமல் காப்பதும் கண்ணீர்தான்.

எமது கண்களின் மேல் மடலுக்கு கீழே பல சிறிய கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவற்றிலிருந்து நாசிக்கு அருகே கண்களில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் ஊடாகவே கண்ணீர் வருகின்றது.



இந்தக் கண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி மறைந்துவிட, மீகுதி கண்ணீர்க் குழாய்களுடாக நாசியினுள் வழிந்து விடும். இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழமையான செயற்பாடு. இக் குழாய் அடைபடுவதாலும் கண்ணீர் அதிகமாக வழியலாம்.


திடீரென அதிகமாக கண்ணீர் வடிதல்

ஆனால் நாம் உணர்ச்சி வசப்படும்போதும், கண்களுக்குள் ஏதாவது விழுந்து உறுத்துப்படும்போதும் அதிகமாகக் கண்ணீர் வடிகிறது. இது வித்தியாசமான செயற்பாடு. இது கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து வெளியேறுகிறது. இது தற்காலிகமாக நடைபெறுவதாகும்.

தொடர்ந்து ரீ.வீ பார்க்கும்போது அல்லது கணனியில் வேலை செய்யும்போது கண்ணீர் வடிகிறது எனப் பலர் சொல்வதைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

வழமையாக எமது கண்கள் அடிக்கடி இமைக்கிறது. அதாவது தானாகவே வெட்டி மூடுகிறது. இச் செயற்பாட்டின்போது மேலதிக கண்ணீர் கண்ணீர்குழாய் ஊடாக வெளியேறிவிடுகிறது.

ஆனால் தொடர்ந்து உற்றுப் பார்க்கும்போது கண்களை  வெட்டி மூடும் செயற்பாடு குறைகிறது. இதனால் கண்ணீர் குழாய் ஊடாக வடிவது குறைந்து தேங்குவதாலேயே கண்ணீராக வடிகிறது.

கண்ணில் கிருமித்தொற்று (Conjuntivitis) ஏற்படும்போதும் கண்களிலிருந்து நீர் போல வடிவதுண்டு.


  கண்களின் பாதுகாப்பு சில தவறான நம்பிக்கைகள்    பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள் 


தொடர்ச்சியாக கண்களிலிருந்து நீர் வழிதல்

ஆனால் இதைத் தவிர நீண்டகாலத்திற்கு தொடரும் அதிக கண்ணீர் சுரப்பதை chronic epiphora என்பார்கள்.

இவ்வாறான நீண்டகாலம் தொடரும் கண்ணீர் சுரப்பதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

தொடர்ந்து கண்ணீர் வழிதலின் காரணங்கள்.
  • சூழல் காரணமாகலாம். இரசாயனப் பொருட்கள், புகை, வெங்காய மணம் போன்ற கண்களை உறுத்தக் கூடிய ஏதாவது ஒன்று காரணமாகலாம்.
  • ஓவ்வாமை காரணமாகலாம். சுழலிலுள்ள தூசி, மகரந்தம் போன்றவற்றால் ஏற்படும் ஒல்வாமை (Kernal Conjunctivitis) காரணமாகலாம். குளுக்கோமா போன்ற ஏதாவது கண் நோய்களுக்கு தொடர்ந்து கண்களுக்கு ஊற்றும் துளி மருந்துகள் கூட சிலருக்குக் காரணமாகலாம்.
  • கண்நோய் எனப்படும் கண்களில் ஏற்படும் கிருமித் தொற்று infective conjunctivitis மற்றொரு காரணமாகும். வைரஸ் கிருமித் தொற்று எனில் நீர்போலவும், பக்றீரியா தொற்று எனில் சற்றுத் தடிப்பாக பூளையாகவும் வரும். காலையில் கண் விழிக்கும்போது அதனால் கண்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்ரிபயடிக் கண்துளிகளை மருத்துவர் தருவார்.
  • ஓரிரு இமை முடிகள் உட்பக்கமாக சிலருக்கு வளர்வதுண்டு. Entropion என்பார்கள். இதுவும் மற்றறொரு காரணமாகும். 


  • வரட்சியான கண்கள் முக்கிய காரணமாகும். வயதாகும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை இதுவாகும். அடிக்கடி கண்களை வெட்டி மூடுதல், கடுமையாக காற்று வீசுமிடங்களைத் தவிர்த்தல், புகைத்தலை நிறுத்தல் போன்றவை உதவும். செயற்கைக் (Artificial tears) கண்ணீரை உபயோகிப்பதும் உதவும்.
  • கண்ணீர்க் குழாய் ஏற்படும் அடைப்புகளால் வழமையாக நாசிக்குள் வழிவது தடைப்படுவதால் கண்ணீராக ஓடக் கூடும். இதற்கு சிறிய சத்திரசிகிச்சை உதவும். மாறாக நுண்துவாரங்களில் ஏற்படும் அடைப்பு மருத்துவர் நீரினால் கழுவுவதன் மூலம் அகற்றுவார். சில குழந்தைகள் பிறக்கும்போது அக்குழாய் முழுமையாக வளர்ச்சியடையாததால் கண்ணீர் தொடர்ந்து வரும். சில வாரங்களில் அக் குழாய் முழுமையாக வளர்ந்ததும் கண்ணீர் பெருகுவது குறைந்துவிடும்.

கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை  பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள்

தினக்குரல ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, June 11, 2011

விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா?


விற்றமின் E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபல்யமாக வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில் அமோகமாக சிபார்சு செய்தார்கள்.
 


ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது.

இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறை டொக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக் காலத்திற்கும் பொருந்தும் உறுதி போன்றதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம். அமெரிக்காவில் கூட 13 சதவிகிதமானவர்கள் விற்றமின் E மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிப்பதாகத் தெரிகிறது.

முடி வளரும், தோல் மிருதுவாகும், முகப் பரு நீங்கும், நகம் அழகாகும் என்பது போன்ற விளம்பரங்களை அச்சு மற்றும்  இலக்ரோனிக் மீடியாக்களில் பார்த்து விற்றமின் E மாத்திரைகளை கண்டபடி உபயோகிக்கும் அப்பாவிக் கூட்டங்களுக்கு குறைவில்லை. விளம்பரங்களுக்கு செலவழிக்கும் பணம் இலகுவாக மீளக் கிடைத்துவிடுகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல இது ஒரு ஒட்சிசன் எதிரி (Antioxidant) ஆகும். பிறீ றடிக்கலஸ் என்று சொல்லப்படும் நச்சுப் பொருள்களால் உடல் கலங்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்களை இது தடுக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படக் கூடிய சில மாற்றங்களை இது தடுக்கலாம் என நம்பப்பட்டது. செங்குருதி உற்பத்திக்கும் இது அவசியமானது. இருதய நலத்திற்கு உதவக் கூடும்.

இருதயநோய்கள், புற்றுநோய்கள், ஈரல்நோய்கள், மூளை மங்குதல், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது எனச் சிலர் சொன்னபோதும் அதற்கான திடமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எதிர்மாறாக அதிகளவில் விற்றமின் E உட்கொள்வது ஆபத்தாக முடியக் கூடும். உதாரணமாக பக்கவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு மூளையினுள் குருதி பெருகுவதால் (Haemorrhagic strokes) ஏற்படுவது ஒரு வகை. 

மற்றது இரத்தக் குழாய் அடைபட்டு மூளையின் சில பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் (Ischaemic strokes) ஏற்படுவதாகும். 


அதில் முதலாவதான குருதிப் பெருக்கு பக்கவாதமானது ஏனையவர்களை விட விற்றமின் E மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு சற்று அதிகமாகும் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே நேரம் இம் மாத்திரைகள் இரத்தக் குழாய் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதத்தை மிகக் குறைந்தளவில் தடுக்கும் என்றும் கூறுகிறது.

பக்கவாதத்தைத் தடுப்பதை விட அது வருவதற்குக் காரணமாக இருப்பது அதிகம் என்பதால் தான்தோன்றித்தனமாக விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

அத்துடன் கொலஸ்டரோலைக் கட்டுப்படுத்தும் சிம்வஸ்ரரின், நியாசின், குருதி உறைதலைத் தடுக்கும் வோரபரின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் மருந்துகளிடையே தாக்கம் ஏற்பட்டு பாதகவிளைவுகள் ஏற்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு கதிர்ச்சிகிச்சை, மருந்துச் சிகிச்சை அளிக்கும்போதும் விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும் எனத் தெரிகிறது. எனவே விற்றமின் E மாத்திரை பாவனையில் அவதானம் தேவைப்படுகிறது.

கர்ப்பணிகள் அதிக விற்றமின் E யை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு இருதயததில் குறைபாடுகள் ஏற்படலாம் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள்

Babies at risk from vitamin E?

எமது உடலின் இயக்கத்திற்கு தினசரி மிகக் குறைந்தளவு விற்றமின் E மட்டுமே தேவை. வளர்ந்தவர்களுக்கு 15 மிகி, பாலகர்களுக்கு சுமார் 5மிகி என்ற அளவில் மட்டுமே. ஆயினும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை 4மிகி மட்டுமெ போதுமென இப்பொழு அறிவித்துள்ளது.


இதனை எமது நாளாந்த உணவிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வழமையான சமபல வலுவுள்ள உணவுகள் போதுமானதாகும்.


விற்றமின் E அதிகமுள்ள உணவுகள் என எவற்றைச் சொல்லலாம்?

சோளம், விதைகள், கீரை வகைகள், மற்றும் சோளம், சோயா, சூரியகாந்தி, பருத்தி ஆகிய எண்ணெய் வகைகள், மாம்பழம், தக்காளி, ஸ்பினச் போன்ற பல பழவகைகளிலும் இருக்கிறது.

பொதுவாக ஆசியநாட்டவர்களாகிய நாம் தினசரி காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை உட்கொள்வது வழக்கம். இதனால் விற்றமின் E குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு. எனவே மேலதிக விற்றமின் E மாத்திரைகள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆயினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலருக்கு விற்றமின் E குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் மல்ரிவிற்றமின் மாத்திரைகளில் சுமார் 30மிகி விற்றமின் E சேர்க்கிறார்கள். அது தாராளமாகப் போதும்.

இங்கு கிடைக்கும் பல மல்ரிவிற்றமின் மாத்திரைகளிலும் கிட்டத்தட்ட அதேபோல குறைந்தளவு விற்றமின் E இருக்கிறது. இது ஆபத்தானது அல்ல.

ஆனால் விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளும் பலர் 400 -600 மிகி அல்லது அதற்கு அதிகமான வலுவிலும் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது பக்கவிளைவுகளைக் கொண்டு வரலாம்.

எனவே விற்றமின் E மாத்திரைகளை
  • மருத்துவரின் சிபார்சு இன்றி எடுக்க வேண்டாம். 
  • மருத்துவர் ஏதாவது காரணத்திற்காகச் சிபார்சு செய்திருந்தால் அந்த அளவை மட்டுமே உட்கொள்ளுங்கள். 
  • உங்கள் விருப்பத்தின்படி தேவையற்று உட்கொள்ளாதீர்கள்.
  • விளம்பரங்களைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Post Comment