Sunday, March 27, 2011

கரப்பொத்தான் பூச்சியார் கவனம்


ஒரு தொடர் மாடி வீட்டிற்குச் சென்ற போது பல ஆண்கள் தும்புத்தடி, பிரஸ், பூச்சி மருந்து ஸ்பிரேகள் சகிதம் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“என்ன விசயம்?” என விசாரித்தேன்.

“சிரமதானம் செய்கிறோம். கரப்பத்தான் பூச்சிகளை ஒழிப்பதற்கு” என்றனர்.


சமூக அக்கறையுள்ள செயற்பாடு. கேட்பதற்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது.

எங்கும் உள்ளவர் எல்லாம் வல்லவர்.

எங்குமுள்ள எல்லாம் வல்ல ஆண்டவனோ என்று சொல்லுமளவிற்கு உலகெங்கும் பரந்துள்ளனர். அத்துடன் பலவிதமான நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக உள்ளனர். எனவே அவர்களை ஒழிக்க எடுக்கும் எந்த முயற்சியும் பாராட்டத்தக்கதே. உலகை ஆட்சி புரிந்து வருவது இவர்களது இனம்தான்.


சாதாரணமாக நாங்கள் கரப்பொத்தான் பூச்சி என்று சொன்னாலும் இவர்களுக்குள் 5000ற்கு மேற்பட்ட உப இனங்கள் உள்ளனவாம்.

இவைகளுள் மிகப் பெரியவரைக் கண்டால் குழந்தைகள் மட்டுமல்ல நீங்களும் பயந்துவிடுவீர்கள். 6 அங்குல நீளமும் சிறகு விரித்தால் ஒரு அடி வரையான அகலமும் உள்ள வகையானவர் தென் அமெரிக்காவில் வசிக்கிறார்களாம்.

கரப்பொத்தான் பூச்சியைக் கண்டாலே பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடும்.


அவற்றின் அசிங்கமான தோற்றமும், அதன் எச்சங்கள் விட்டுச் செல்லும் துர்நாற்றமும் எல்லோரையும் அருவருப்படையச் செய்துவிடும்.

கழிவறையில் களிநடனம் புரியும் அவர் கால் கை கழுவாமலே சமையலறையிலும், சாப்பாட்டு மேசையிலும் வாய்ப்புக் கிடைத்தால் உணவுகளின் மீதும் ஊர்ந்து செல்வதைக் கண்டால் யாருக்குத்தான் வாந்தி வராது.

திடீரென சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தால் எப்படித் தப்புவது எனப் புரியாது பதுங்கவே மனம் நாடும்.

பரப்பும் நோய்கள்

இவர்களிலிருந்து வரும் மருத்துவப் பிரச்சனைகளில் முக்கியமாக அலர்ஜியையும் ஆஸ்த்மாவையும் சொல்லலாம். இவற்றின் மலம், எச்சில், முட்டை, தோல் போன்ற யாவுமே ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன.


உங்களுக்கு அல்லது வேறு எவரை எடுத்துக் கொண்டாலும், முன் எப்போதும் ஒவ்வாமை இல்லாதவர்கள் கூட கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் ஒவ்வாமை தோன்றிவிட வாய்ப்பு அதிகமிருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் எடுத்துக் கூறுகின்றன.

அதே நேரம் ஏற்கனவே ஆஸ்த்மா உள்ள குழந்தை கரப்பொத்தான் பூச்சியின் எச்சங்களுக்கு அடிக்கடி முகம் கொடுக்க நேர்ந்தால் கடுமையான ஆஸ்த்மா வருவதற்கும், அதன் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைகளும் அதிகமாக எற்படுமாம்.

இவற்றின் எச்சங்கள் தோலில் அழற்ச்சி, அரிப்பு, எக்ஸிமா போன்ற நோய்களையும் ஏற்படத்துகின்றன.

அழுக்குகளில் உழலும் இவரது உடலிலும், உணவுக் கால்வாயிலும், மலத்திலும் கலந்திருக்கும் சல்மனலா Salmonella கிருமிகளால் உணவு நஞ்சடைதல் ஏற்படலாம். அதேபோல அவற்றிலிருந்து Staphylococcus, Streptococcus போன்ற கிருமிகளும் தொற்றுகிறது.
 

வதிவிடம்

வடதுருவக் குளிரிலும் வாழக் கூடிய வலு உள்ள இவர் எங்கும் இருக்கலாம். இவர்களது வாழ்வுக்கு முக்கியமாக இருக்க வேண்டியவையாவன.
  • ஈரலிப்பு
  • சற்று வெப்பமான சூழல்
  • உணவு
  • ஒளிந்து உறைய சிறு வெடிப்புகள் துவாரங்கள் போன்ற இடங்கள்

உணவு

அவர் சொகுசு உணவுகளைத் தேடி அலைபவர் அல்ல. உங்கள் சமையறையில் சிந்திக் கிடக்கும் உணவுத் துகள்கள் போதுமானது. புத்தகம் கட்டும்போது இடப்பட்ட பசை, சுவரில் ஒட்டப்பட்ட படங்களுக்கு பின் இருக்கும் பசை கூட அவருக்கு உணவாகலாம். இதனால்தான் நீங்கள் எவ்வளவு சுத்தமாக உங்கள் இருப்பிடத்தை வைத்திருந்தாலும் அவருக்கான உணவு கிடைத்துவிடுகிறது.

இனப்பெருக்கம் பரம்பல்

அத்துடன் இனப் பெருக்கத்தில் மிக வேகம் கொண்டவர். நீங்கள் உங்கள் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் மளிகைக் கடையில் வாங்கி வந்த பொருட்களுடன் வந்துவிடுவார்.


அல்லது பக்கத்து வீட்டிலிருந்து கதவின் கீழாகவோ அல்லது கழிவுப் பைப்புகள் ஊடாகவோ ஒரு கரந்துறைப் படைவீரன் போலச் சிமிக்கிடாமல் உள் நுழைந்துவிடுவார். ஒரே ஒரு கர்ப்பணிக் கரப்பொத்தான் பூச்சி நுழைந்துவிடுகிறார் என வைத்துக் கொள்வோம். கவனியாது விட்டால் அவரது பரம்பரையினராக 100,000 பேர் உங்கள் வீட்டில் வாசம் செய்யக் கூடும்.

பெருகுவதைத் தடுப்பதும் நீங்கள் தப்புவதும்.

சுத்தம் மிக முக்கியம். அவருக்கு உண்ண எதுவும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்தங்கள்.

  • அரிசி, உழுந்து போன்ற தானியங்களையும் விதைகளையும் காற்றுப் புகாத போத்தல்கள் ஜாடிகள் பொன்றவற்றில் சேமித்து வையுங்கள்.
  • உணவு உண்ட கோப்பைகள், பானம் அருந்திய கிளாஸ் போன்ற எதனையும் இரவில் சுத்தம் செய்யாது வெளியே வைக்க வேண்டாம். 
  • உணவு உண்ட மேசை, வோஷ் பேசின், போன்ற யாவற்றையும் சுத்தம் செய்த பின்னரே படுக்கைக்குச் செல்லுங்கள். 
  • குப்பை வாளிகளை மூடி வையுங்கள். 
  • வளர்ப்புப் பிராணிகளுக்கு உணவு வைத்தால் இரவில் அது காலியாக சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள்.


  • சிந்தும் ஒழுகும் குழாய்களை உடனடியாகத் திருத்துங்கள். 
  • சுவரில் உள்ள வெடிப்புகள், குழாய் செல்லும் பாதைகள், வயரிங் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சிறு இடுக்குகள் வழியாக நுழைந்து விடுவார்கள். எனவே அவற்றை அடைத்து அவரது பாதைகளை மூடுங்கள்.

மிகச் சிறிய குஞ்சு 5 மிமி இடைவெளிக்கு ஊடாக புகுந்து வந்துவிடுவார். ஆண்களுக்கு 1.6 மிமி, வயிறு பருத்த கரப்பணிகளுக்கு 4.5 மிமி போதுமாம். சென்ரி மீற்றர் அல்ல மில்லி மீற்றர்.

குளியலறை, சமையலறை ஆகியன அவர்களுக்கான உணவும் ஈரலிப்பும் கிடைக்கக் கூடிய இடங்கள் ஆதலால் அதிக கவனம் எடுக்க வேண்டிய இடங்களாகும். அத்துடன் குழாய்கள் வரும் பாதைகள் அவர்கள் உள் நுழைய மிக வசதியான வழிகளாகும்.

தேவையற்ற பொருட்களை அகற்றி விடுங்கள். பழைய துணிகள் கால்மிதிகள், ஸ்பொன்ஞ் போன்ற எதையும் அகற்றாது விட வேண்டாம்.

சிலிக்கா ஜெல், போரிக் அசிட் பவுடர் ஆகியன அவரை விரட்டக் கூடிய ஆபத்தற்ற பொருட்களாகும். கிருமி கொல்லி மருந்துகள் நஞ்சாதலால் மிகுந்த அவதானத்துடன் உபயோகிக்க வேண்டியவையாகும்.

தொடர் மாடிவீடுகள் அவர்களுக்கு மிக வசதியானவை. இடமாற்றம் பெற்று புது வீட்டிற்கு மாறிவிடுவார்கள்.

எனவே ஒரு வீட்டிலிருந்தோ அல்லது கீழே உள்ள கழிவு நீர்ப் பாதைகள் பொது வழிகள் ஆகியவற்றை ஒழித்துவிடுவது மட்டும் போதுமானதல்ல.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அழிக்கப்பட வேண்டும். அதுவும் ஒரே நேரத்தில்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வீரகேசரி வாரவெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, March 20, 2011

நெஞ்சு நிறையப் பாடுங்கள் சுவாச நோய்கள் பறந்தோடும்.


பாடுங்கள் பாடுங்கள் நெஞ்சு நிறையப் பாடுங்கள். சுவாச நோய்கள் பறந்தோடும்.

இசையின் நோய் தீர்க்கும் ஆற்றல் பற்றி நிறையவே பேசப்பட்டிருக்கின்றன. பல திரைப் படங்களில் மயங்கிக் கிட்ககும் நோயாளி மனக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டவுடன் விழித்தெழுவதைக் கண்டிருக்கிறோம். அது உண்மையாக இருக்க முடியாது என்பதை மூளை சொன்னாலும் மனங் கேட்பதில்லை. இசை எங்கள் உணர்வுகளோடு ஒன்றியது.

பாடுவதானது, மூச்செடுப்பதில் சிரமப்படும் நோயாளிகளது துன்பத்தைக் குறைத்து சுவாசத்தை இலகுவாக்கும் என அண்மையில் ஒரு ஆய்வு கூறுகிறது.

மூச்செடுப்பதில் சிரமம் என்பது நோயாளியின் நாளந்த வாழ்வைப் பாழடிக்கக் கூடிய சிரமமான நோயாகும். நாம் எந்த நேரமும் சுவாசித்துக் கொண்டே இருக்கிறோம். அனால் அதை உணர்வதில்லை. அது இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரும்போதுதான் சுவாசிப்பது சிரமம் என்பதை உணர்கிறோம். ஆனால் ஆஸ்த்மா தணிந்ததும் சுவாசம் இலகுவாகிறது.

ஆனால் நாட்பட்ட சுவாசத் தடை நோய் Chronic obstructive pulmonary disease (COPD), என்பது வெறுமனே மூச்செடுப்பதில் சிரமம் அல்ல. அது வர வர மோசமாகிக் கொண்டு போகும் ஒரு நோயாகும். அத்துடன் ஆஸ்த்மாவின் வரட்சியான இருமல் போல்லல்லாது இருமம்போது நிறையச் சளி கொட்டும். ஆனால் ஆஸ்த்மா போலவே நெஞ்சை அடைப்பது அல்லது இறுக்குவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்.
 

இது பொதுவாக புகைப்பவர்களிடையே தோன்றும் ஒரு நோயாகும்.


புகைத்தலைத் தவிர சுவாசப்பையை உறுத்தக் கூடிய பலவும் இந்நோய் வருவதற்குக் காரணமாகலாம். உதாரணமாக சூழல் மாசடைதல், வேறு புகைகள், இராசாயன மணங்கள், தூசி போன்றவையும் COPD ஏற்படுவதற்குக் காரணமாகலாம்.

இந் நோயுள்ளவர்களுக்கு சுவாசிப்பது என்பது பெரும்பாடாக இருக்கும். நாம் சுவாசிக்கும்போது மூக்கு வழியாக உள்ளே செல்லும் காற்றானது மூச்சுக்குழல் வழியாகச் சென்று அதன் கிளைக்குழாய்கள் ஊடாகப் பயணித்து இறுதியாக மூச்சுச் சிற்றறைகளை அடையும். திராட்சைப் பழக் கொத்துகள் போல சுவாசப்பையை நிறைத்திருக்கும் இந்த மூச்சுச் சிற்றறைகள் ஊடாகவே நாம் சூழலிருந்து பெறும் காற்றில் உள்ள ஒட்சிசன் வாய்வு எமது உடலுடன் இணைகிறது.


இரத்தக் குழாய்களின் மிக நுண்ணிய பகுதியான மயிரிழைக் குழாய்கள் மேற் கூறிய மூச்சுச் சிற்றறைகளின் சுவரில் இணைந்திருக்கின்றன. நாம் சுவாசக்கும் காற்று மூச்சுச் சிற்றறைகளை அடைந்ததும் காற்றில் உள்ள ஒட்சிசானது மயிரிழைக் குழாய்களில் நிறைந்திருக்கும் குருதியால் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. அதே நேரம் கழிவுக் காற்றான காபனீர் ஒட்சைட் குருதியிலிருந்து மூச்சறைச் சிற்றறைகளுக்குள் கடத்தப்பட்டு சுவாசக் குழாய்கள் ஊடாக வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு நடைபெறுவதற்கு எமது மூச்சுச் சிற்றறைகள் நெகிழ்வுத் தன்மையுடையவையாக இருக்க வேண்டும். அதாவது காற்றை ஊதினால் பலூன் விரிவடைவது போல விரிவடைந்து காற்று வெளியேறியதும் சுருங்க வேண்டும்.

ஆனால் மேலே கூறிய நாட்பட்ட சுவாசத் தடை நோயின் போது மிகக் குறைந்தளவு காற்று மாத்திரம் சுவாச தொகுதியூடாக பயணிக்க முடிகிறது. இதனால் குறைந்தளவு ஓட்சிசன் மட்டுமே எமது உடலுக்குக் கிடைக்கிறது. மூச்சுத் திணறலுக்கு இதுவே காரணமாகிறது. படிப்படியாக மோசமாகிக் கொண்டு செல்லும் இந்நோயிலிருந்து மீட்டு எடுப்பது முடியாத காரியமாகவே இருந்தது.

இந்தகைய சூழலில், நாட்பட்ட சுவாசத் தடையுள்வர்கள் மூச்சு எடுப்பதில் சிரமப்படுவதை பாடுவதானது குறைக்கும் என அண்மையில் நடந்த மருத்துவர்கள் American College of Chest Physicians) கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டதானது நம்பிக்கை ஊட்டும் செய்தியாகும்.
பாடுவது எவ்வாறு சுவாசத்தை இலகுவாக்குகிறது?


பாடுவதானது ஒரு நுணுக்கமான கலையாகும். இதனைச் செய்வதற்கு எமது சுவாசத் தொகுதியில் உள்ள தசைகளின் இயக்கத்தை, துல்லியமாக நாம் எமது கட்டுப்பாடிற்குள் கொண்டு வருகிறோம். எம்மையறியாமலே இது நிகழ்கிறது. தன்னிச்சையாக இயங்கும் எமது சுவாசத் தொகுதியானது இதன் மூலம் எமது மனதின் கட்டுப்பாற்றிற்குள் வருகிறது. இயங்க மறுக்கும் அல்லது இறுகிப் போயிருக்கும் எமது சுவாசத் தொகுதித் தசை நார்கள் இப்பொழுது இசைவாக இயங்குகின்றன.

31 பேரைக் கொண்ட சிறிய ஆய்வுதான் இது. 12 வாரப் பாடற் பயிற்சியின் பின் அத்தகைய நோயாளர்களின் சுவாசத்தில் முன்னேற்றம் காணப்பட்டதாம். 84 சதவிகிதமான நோயாளர்கள் இது ஆறதல் அளிப்பதாகக் கூறினர். 64 சதவிகிதமானவர்கள் இது அசௌகரியமான பயிற்சியாக இல்லை என்றனர். மிகவும் முக்கியமான விடயம் 64 சதவிகிதமானவர்கள் தாம் இதனைத் தொடர்ந்து செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.

அவர்களது உடல் நலமும், சிரமமான சுவாசமும் தேறியதற்கு உளவியல் காரணங்களும் இருக்கக் கூடும். இசை கொடுக்கும் இதமான உணர்வுகளுக்கு அப்பால் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ததும் காரணமாக இருக்கலாம்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாடுவது நல்லது. அது மன நிறைவைக் கொடுக்கும், மனச்சிறைகளிலிருந்து விடுபட உதவுகிறது. நோயைத் தணிக்கும் ஆற்றலும் இருக்கிறது.

பிறகென்ன பாடுங்கள். தினசரி பாடுங்கள். இறைவனைத் துதிக்கையில் பாடுங்கள். குளிக்கும்போது குளியலறையிலும் பாடுங்கள். வானொலியில் தொலைக்காட்சியில் பாட்டுகள் வரும்போது சேர்ந்து பாடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பாடிக்கொண்டே இருங்கள்.


வீட்டிலுள்ளோர்களும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் காட்டிலுள்ள நரிகள் எல்லாம் வீட்டிற்குள் வந்திடப்போகுதுகள் என கதவையும் யன்னல்களையும் அடைத்து வைத்தால் நான் பொறுப்பாளி அல்ல.

பாடுவதில் பிரச்சனையில்லை, ஆனால் தான் அறியாப் பாசையில் சொல்லப் போவதின் சிக்கல்கள் பற்றி சற்று சிரிப்போடு படிக்க எனது அனுபவப் பதிவான


கிளிக் பண்ணுங்கள்.

தமி்ழ் நாடெங்கும் எலக்சன் கீதம் ஒலிக்கிறது. கவிதை பாடிக்கொண்டே அரசியல் வாதிகளிடையே பிழைத்து வாழ தேட ஒரு கவிதை

கற்பனைச் சொர்க்கங்களும் கையிருக்கும் வாழ்வும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா' பத்தியில் வெளியான கட்டுரை

Post Comment

Sunday, March 13, 2011

நகச்சுற்று (Paronychia)


இவரின் நகக் கண் வீங்கி மஞ்சளாகிச் சினத்து வீங்கியிருப்பதை படத்தில் காண்கிறீர்கள். அவ்விடத்தில் சீழ் பற்றியிருக்கிறது. நகச்சுற்று எனத் தமிழில் சொல்வோம். ஆங்கிலத்தில் Paronychia என்பர். திடீரென ஏற்பட்டதால் Acute Paraonychia எனப்படும்.
 


நகத்தின் வெளி ஓரமாகவோ அன்றி நகத்தைச் பக்கங்களிலும் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித் தொற்றுத்தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படலாம்.


இது ஒரு வகையில் சிறிய கட்டுப் (Abscess) போன்றதுதான். 

பின்னர் பழுத்து வரும்போது சற்று மஞ்சள் நிறமாக மாறும்.

பக்றிரியா, பங்கஸ், மற்றும் ஈஸ்ட் போன்ற கிருமிகள் தொற்றுவதால் ஏற்படுகிறது.

எவ்வாறு ஏற்படுகிறது?
  • நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடையே ஏற்படுவது மிக அதிகம்.
  • கை சூப்பும் பழக்கம் உள்ள குழந்தைகளிடமும் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.
  •  நகத்தை வெட்டும்போது சற்று ஆழமாக வெட்டி நகமடலைச் சேதமாக்குவதாலும் ஏற்படலாம். அவ்வாறான செய்கைகளின் போது ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றிச் சீழ் பிடிப்பதால் இது ஏற்படுகிறது.
  • சமையல் வேலை, தோட்ட வேலை, தச்சு வேலை போன்ற காயம் ஏற்படக் கூடிய எந்த வேலைகளின் போதும் தற்செயலாக அவ்விடத்தில் ஏற்படும் சிறுகாயங்களில் கிருமி தொற்றி நகச்சுற்றை ஏற்படுத்தும்.
  • சில சருமநோய்களால் ஏற்படலாம். பெம்பிகஸ் (Pemphigus Vulgaris) போன்ற நோய்களால் சருமத்தின் மிருதுத்தன்மை பாதிப்படையும்போது அதில் கிருமித் தொற்று ஏற்பட்டும் வரலாம்.


நகத்தின் ஓரமாகச் சிலருக்கு தோல் வளர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். இதனை ஆங்கிலத்தில் Hang Nail என்பார்கள். இதைப் பிய்த்து எடுக்க முயலும்போது அல்லது கத்தரியால் வெட்டும்போதும் காயம் பட்டுச் சீழ்பிடிக்கலாம்.


பொதுவாகக் காயம் ஏற்பட்டு 2 முதல் 5 நாட்களில் அவ்விடத்தில் வலி தோன்றும் பின்னர் முன் கூறியதுபோல சீழ்ப்பிடித்து வீங்கும்.

மருத்துவம்

வீட்டு மருத்துவமாக ஆரம்ப நிiலையில் வெந்நீரில் 10-15 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைப்பதன் மூலம் சுகம் கிட்டலாம். தினமும் 3-4 தடவைகள் அவ்வாறு செய்யலாம்.

மருத்துவரிடம் சென்றால், கிருமியெதிர் மருந்துகளை (antibiotics) உபயோகிப்பதன் மூலம் ஆரம்பத்தில் குணப்படுத்த முடியும். சற்று அதிகமானால் அவ்விடத்தை மரக்கச் செய்வதற்கு ஊசி மருந்து போட்ட பின் கீறி சீழை அகற்றுவதன் மூலம் சுகப்படுத்தலாம்.

ஏற்படாமல் தடுத்தல்

நகத்திற்கு அருகாமையில் உள்ள மென்மையான இடங்கள் காயப்படாது தடுப்பதே இதைத் தவிர்க்க ஒரே வழியாகும்.
  • நகம் கடிப்பதை முற்றாகத் தவிருங்கள்.
  • நகத்தையும் அதைச் சுற்றியுள்ள சருமத்தையும் அக்கறையுடன் பேண வேண்டும்.
  • நகம் வெட்டும் போது அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாதவாறு கவனமாக வெட்டுங்கள்.
  • குளித்த பின் நகங்கள் மென்மையாக இருக்கும்போது வெட்டுவதால் அருகில் உள்ள சருமம் பாதிக்கப்படாது.
  • நல்ல கூரான கத்தரிக்கை அல்லது நகவெட்டியை மட்டுமே உபயோகியுங்கள்.
  • கை நகங்களின் முனைப்பகுதி சற்று வளைவாகவும் கால் நகங்களினது நேராகவும் இருக்குமாறு வெட்டவும். 
  • நகங்களை ஒட்ட வெட்டுவது கூடாது.

 வீரகேசரி வெளியீடுவில் 23.03.2011 வெளிவந்த எனது மருத்துவக் கட்டுரை இது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Saturday, March 5, 2011

வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் - நடைப்பயிற்சி


உடற் பயிற்சி உடல் நலத்திற்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்த போதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.


அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.
  •  முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.
  • புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.
  • “எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதம் ஆகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக் சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.

உடற் பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப் பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
இந்த நடைப் பயிற்சியானது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.


ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.

65 வயதிற்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுதப்படனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter)   கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது. 

எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.


ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.

வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறளை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்த பந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுப்பாது இருப்பதற்காகவாவது தினசரி நடைப் பயிற்சி செய்யுங்கள்.

அறளை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில் நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும்

முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றை வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்தததை நினைவுபடுத்தலாம்.

கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.

தினமும் எவ்வளவு உடற் பயிற்சி, எத்தகைய உடற் பயிற்சி தேவை என்பவை பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.

எவ்வளவு உடற் பயிற்சி

அதீத எடைக்கும் புற்று நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றி அறிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்.


எடை குறைப்புப் பற்றிய எனது நகைச்சுவைப் பதிவு


நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா?' பத்தியில் 10.11.2010 வெளியான கட்டுரையின் மீள் பதிவு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment