Sunday, February 20, 2011

வாயினுள் நீர்க்கட்டிஆபத்தானதல்ல (Mucous Cyst )


வாயினுள் கட்டி வளர்ந்தால் எவருக்குமே மனக்கிலேசமாகத்தான் இருக்கும். ஏனெனில் இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மிக அதிகமாகக் காணப்படும் ஒரு நோய் என்பதால்தான்.

இந்த நோயாளியும் அவ்வாறு திகிலுடன் வந்திருந்தார்.

அவரது வாயின் உட்புறத்தில் வழவழப்பான மேற்பரப்புடன், நீள்வட்ட தோற்றத்தில் ஒரு கட்டி தென்பட்டது.


சற்று மினுமினுப்பாகவும் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே அது புற்றுநோயல்ல என்பது தெளிவாகியது. அது ஒரு நீர்க்கட்டி அதை Mucous Cyst என மருத்துவத்தில் கூறுவார்கள். அவை எச்சில் சுரப்பிகளுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

எவ்வாறு ஏற்படுகின்றன?

இந்த கட்டிகள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆயினும் ஏதாவது சிறுகாயம் காரணமாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

கடைவாய்ப் பக்கமாக அதிலும் முக்கியமாக கீழ் உதடுகளை அண்டிய பகுதிகளிலேயே இவை அதிகமாகத் தோன்றுகின்றன என்பது காயங்கள் காரணமாகத் தோன்றலாம் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன.

வாயினுள் தோன்றும் இத்தகைய நீர்க்கட்டிகள் மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆயிரம் பேரில் 2.5 எண்ணிக்கையளவில் தோன்றுவதாக கூறப்படகிறது.

ஆண் பெண் என்ற வேறுபாடின்றி இருபாலாரிடமும் ஒரேவிதமாகத் தோன்றுகிறது. ஆயினும் வெள்ளையர்களில் கறுப்பு இனத்தவரைவிட அதிகமாகத் தோன்றுவதுண்டாம்.

எந்த வயதினரிடையேயும் தோன்றலாம் என்ற போதும் வயதானவர்களை விட இளவயதில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும் 30 வயதிற்குக் குறைந்தவர்களிடையே அதிகம் காணக் கூடியதாக இருக்கிறது.

இதில் இரண்டு வகைகள் உண்டு.

முதலாவது வகை ஆழமற்று மிகவும் மேலாக இருக்கும். தெளிவான நீருள்ள சிறிய கொப்பளங்கள் போலத் தோன்றித் தானாகவே விரைவில் உடைந்துவிடும். உடையும்போது ஏற்படும் சிறு புண்கள் விரைவில் தானாகவே ஆறிவிடும். அதே இடத்திலோ அருகிலோ மீண்டும் தோன்றலாம். இவை பெரும்பாலும் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பது குறைவு.

வாய்த் தோலின் ஆழமான பகுதியில் தோன்றும் நீர்க்கட்டிகளின் வளர்ச்சி வேகம் மிகக் குறைவானதாகும். தெளிவான ஓரங்களுடன் தொட்டால் வழுகுவது போன்ற இறுக்கமான நீள்வட்ட வடிவானதாக தோற்றமளிக்கும். வலிக்காது. பல செ.மீ வரை வளரக் கூடும் ஆயினும் 75 சதவிகிதமானவை ஒரு செ.மீ வரை மட்டுமே வளரும்.

உற்றுப் பார்த்தால் வெளிர் நீல நிறமாகத் தோன்றலாம். நாட்பட்டால் சற்று சொரசொரப்பாக இருக்கும். கீழ் உதடு, வாயின் அடிப்புறம், கன்னங்களின் உட்புறம், அண்ணம், கடைவாய்ப் பல்லை அண்டிய பகுதி போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும். மேலுதட்டில் தோன்றுவது குறைவு.

சிகிச்சை

வாயில் தோன்றும் நீர்க்கட்டிகளுக்கு பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. தானாகவே உடைந்து மறைந்துவிடும்.

ரனுயுலா (Ranula)

வாயின் அடிப்பகுதியில் நாக்குக் கீழே சற்றுப் பெரிய கட்டிகள் தோன்றுவதுண்டு. 2-3 செ.மீ வரை வளரும் இவை நாக்கிற்குக் கீழ் உள்ள எச்சில் சுரப்பியுடன் தொடர்புடையது.


வெளிர் நீலநிறமுடைய இவை வலியை ஏற்படுத்தாது. நன்கு வளர்ந்தால் சப்புவது, பேசுவது, உண்பது போன்ற செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் விளைவிக்கலாம். இவை தவளைகளின் தொண்டையில் உள்ள வீக்கம் போலத் தோற்றமளிப்பதாலேயே சயரெடய என அழைப்பார்கள்.

இவை சில வேளைகளில் வளர்ந்து தொண்டைப் பகுதிக்கும் சென்றுவிடுவதுண்டு. அதனைச் சத்திர சிகிச்சை மூலமே அகற்ற முடியும்.

வாயில் தோன்றிய புற்றுநோய்க்கட்டி பற்றிய Stethஇன் குரல் வலைப்பூ பதிவிற்கு...

வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைக் ......

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Sunday, February 13, 2011

டெங்கு நோய் சிகிச்சையில் புதிய அணுகுமுறை பப்பாசி உதவுமா?


சென்ற 7ம் திகதி பெப்ருவரி 2011 ல் ஒரே நாளில் இரு சிறுவர்களை கடுமையான டெங்கு நோயென இனங்கண்டு விசேட சிகிச்சைகளுக்காக சிறுவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான மழையின் பின்னான வெயில் பல இடங்களில் டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது.
டெங்கு நோயின் அறிகுறிகள்

இப்பொழுது புதிய அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பதால் பலரையும் காப்பாற்ற முடிகிறது.

மேற் கூறிய இரு சிறுவர்களும் நலமாக வீட திரும்பிய செய்தியை இன்று (11.02.2011)பெற்றோர்கள் எனக்குத் தெரிவித்தனர்.

நோயை நேர காலத்துடன் நிர்ணயம் செய்வதும், அவசியம் ஏற்படுமிடத்து தாமதிக்காது அதற்கான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதும் அவசியமாகும்.

டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச் சாறு சிறந்த பலன் அளிக்கும் என்ற செய்தி அண்மைக் காலமாக பத்திரிகை ரீவீ ஆகியவற்றில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.


தவறான செய்திகளால் பயனற்ற மருத்து முறைகளில் காலத்தைக் கடத்தாது சரியான மருத்துவம் செய்வது அவசியம்.

வெண்குருதி சிறுதுணிக்கை (Platelet)

டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்களுக்கு வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platelet) குறைதலும் அதனால் ஏற்படும் குருதி பெருக்கமுமே காரணம் என இதுவரை நம்பப்பட்டது.

புதிய சிகிச்சை முறையின் அடிப்படை

இதன் காரணமாக அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மருத்துவ சிகிச்சையின் நோக்கமாக முன்னர் கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platlet) மாற்றீடு செய்யப்படுவது உயிர்காக்கும் மருத்துவம் என எண்ணப்பட்டது.

டெங்குவின் அறிகுறிகள் இருக்கும் போது வெண்குருதி சிறுதுணிக்கை (Platlet)அளவு 100,000 லுக்குக் கீழ் குறைந்தால்  உடனடியாக மருத்துவ கனையில் அனுமதிப்பது அவசியம்.

ஆயினும் நவீன சிகிச்சை முறையில் இதனை மாற்றீடு செய்யப்படுவதில்லை. உள்ளெடுக்கும் நீரின் அளவையும் வெளியேறும் நீரின் அளவையும் நுணுக்கமாகக் கணித்து அதற்கேற்ற அளவில் கொடுப்பதன் மூலம் ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதே இன்றைய சிகிச்சையின் அடிப்படையாகும்.

இலங்கையில் இறப்பு விகிதம் மிக அதிகம்

ஆயினும் இத்தகைய சிகிச்சையால் போதிய பலன் கிடைக்கவில்லை.

உதாரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு வீதம்
  • மலேசியாவில் 0.34 சதவிகிதமாகவும், 
  • தாய்லாந்தில் 0.1 சதவிகிதமாகவும் இருக்கும்போது, 
  • இலங்கையில் இது 1 சதவிகிதமாக மிக அதிகமாக இருக்கிறது. 
டெங்கு நோயைப் பொறுத்தவரையில் இலங்கையானது டெங்குவின் தாக்கம் அதிகமுள்ள A வகை நாடுகளில் ஒன்றாக பகுக்கப்பட்டது.
இது ஏன்? இதை நிவர்த்திப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு எமது மருத்துவ நிபுணர்கள் சிலர் தாய்லாந்து நாட்டிற்கு பயிற்ச்சிக்காக அனுபப்பட்டபோதே எமது சிகிச்சை முறையின் போதாமை உணரப்பட்டதாகத் தெரிகிறது.

இறப்புகளுக்கான காரணங்கள்

  • உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணம் வெளித் தெரியாமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குருதிப் பெருக்கைக் (Concealed bleeding) கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமும்,
  • உடற் திரவங்களின் (Body Fluids) அளவை சரியான முறையில் பராமரிக்காமையும் ஆகும்.

எமது நாட்டில் நோயாளியின் வெண்குருதி சிறுதுணிக்கை குறையும்போது அவசரப்பட்டு அதனை மாற்றீடு செய்ததால் உடல் திரவங்களின் நிலையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டு அதனாலும் மரணங்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.

பப்பாசிச்சாறு நோயைக் குணமாக்கவில்லை

பப்பாசி இலைச் சாறு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் யாவும் அதனை சிகிச்சைக்காக கொடுத்ததன் பலனாக நோயாளியின் குருதியில் வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரித்ததாகக் கூறின.

இது பப்பாசிச் சாறினால் நோய் குணமானதற்கான அடையாளமல்ல.

எந்தவித சிகிச்சையும் கொடுக்காவிட்டால் கூட நோய் சுயமாகக் குணமாகும்போது அந்த எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன் டெங்கு நோயின் மிக ஆபத்தான கட்டமான டெங்கு அதிர்ச்சி நிலையை பப்பாசிச் சாறு (Dengue Shock Syndrome) குணமாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அல்லாது நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

சருமத்தில் செம்மை பூத்தது போல புள்ளி புள்ளியாக இரத்தக் கசிவு

டெங்குவின் வகைகள்

சாதாரண டெங்குக் காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சற்றுக் கடுமையானதான டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஆபத்தானது என்ற போதும் உயிரிழப்புகளுக்குக் காரணம் அதுவல்ல. ஆனால் அது மோசமாகி அதிர்ச்சி நிலைக்குப் போனால் மிக மிக ஆபத்தானது. 

டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
  • அது தொற்றிய பலருக்கும் வெளிப்படையான எந்த அறிகுறியும் இருக்காது. 
  • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து தானாகவே மாறிவிடும். 
  • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும். 
  • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
டெங்கு  குருதிப் பெருக்குக் காய்ச்சலில் கண்ணில் குருதிக் கசிவு

குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட
  • 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள். 
  • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.
 மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.


நீங்கள் செய்யக் கூடியது

காய்ச்சல் வந்த உடனேயே இது டெங்குவாக இருக்குமோ எனப் பயந்து மற்றவர்களையும் கலங்கியழ வைத்து உடனடியாக மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை.

முதல் மூன்று நாட்களுக்கு பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது.

புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.

போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.

கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தாமதிக்காது நாடுங்கள்
  • கடுமையான தலையிடி
  • கடுமையான வயிற்று வலி
  • வயிற்றுப் புரட்டும் சத்தியும். இவை அதிகமாகி நீராகாரம் எதனையும் உட்கொள்ள முடியாதிருத்தல்
  • கடுமையான தாகம்
  • தோல் செந்நிறம் பூத்தது போல இருத்தல் அல்லது சிவத்தப் புள்ளிகள்
  • கடுமையான உடல் உழைவு, மூட்டு வலிகள்
  • உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல்
  • கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை
  • சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல். உதாரணமாக 6மணிநேரம் சிறுநீர் கழியாதிருத்தல்

இவற்றில் சில அறிகுறிகள் வேறு சாதாரண காய்சல்களின் போதும் ஏற்படக் கூடும். ஆயினும் டெங்கு பரவி வரும் காலங்களில் அவற்றை உசாதீனம் செய்யக் கூடாது.

அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள்

மேற் கூறிய அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆயினும் கீழ்க் கண்டவர்கள் டெங்குக் காச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் கூடிய கவனம் எடுப்பது அவசியம்
  • ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்
  • வயதானவர்கள் - 65 வயதிற்கு மேல்
  • கொழுப்பான உடல் வாகை உடையவர்கள்
  • கர்ப்பணிகள்

எனவே பப்பாசி இலை, வீட்டு மருத்துவம் போன்றவற்றில் காலத்தைக் கடத்தாது டெங்கு நோயெனச் சந்தேகத்துக்கு உரியவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

உலகளாவிய ரீதியில் டெங்கு நோயும் அதனைப் பரப்பும் நுளம்பும் காணப்படும் பிரதேசங்கள்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அடைப்படை உண்மைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

 டெங்குநோயைப் பரப்பும் Aedes aegyptiநுளம்பின் வாழ்க்கை முறை அதனை அழிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பாருங்கள்.

டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்

அழுக்கு, கழிப்பறை, குப்பை கூளங்கள் யாவும் நுளம்மைபைப் பெருக்கும் இடங்களாகும். ஆனால் பொதுக் கழிப்பறையில் நடந்த இந்த சம்பவம்சுவார்ஸமானது.

கலங்கவைக்கும் டெங்கு பற்றிய தொடரைப் படித்த உங்களை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு இது.

கழிப்பறையில் அழைப்பு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, February 6, 2011

கொலஸ்டரோல் பிரச்சனையை முன்னிறுத்தி - நிறைவேற்று ஜனாதிபதியாலும் முடியாதது


அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நான் சொன்னதைக் கேட்டு. ஆனால் நானாக எதுவும் சொல்லவில்லை. அவர் தந்த இரத்தப் பரிசோதனை ரிப்போட்டுகளை வைத்துத்தான் கருத்துச் சொன்னேன்.

“உங்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாக இருக்கு” இதுதான் நான் சொன்னது.

அவர் ஆச்சரியப்பட்டதிலும் நியாயம் இருக்கிறது.

அவர் தனது உணவு முறைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர். அத்துடன் ஒரு வெஜிடேரியன். கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுபவர். தினசரி நடைப்பயிற்சி செய்வதாகவும் சொன்னார்.

“அம்மாவிற்கு கொலஸ்டரோல் இருந்து, ஹார்ட் அட்டக் வந்து இறந்தபடியால் நான் வலு கவனமாக இருந்தனான். இருந்தும் எனக்குக் கொலஸ்டரோல் வந்து விட்டதே” எனக் கவலைப்பட்டார்.


“நீங்கள் இவ்வளவு கவனமாக இருந்தபடியால்தான் உங்களுக்கு 45 வயதுவரை கொலஸ்டரோல் பிரச்சனை வராமல் தப்பியிருக்கிறீர்கள்.” என்றேன் நான்.


உண்மையில் மாரடைப்பிலிருந்தும் தப்பியிருக்கிறார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தால் எதிர்காலத்திலும் தப்பிவிடுவார்.

உணவுமுறை மட்டுமே காரணமல்ல


ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.
  • இவை அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன. 
  • ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.

ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.
  1. பரம்பரை அம்சங்கள் 15 சதவிகிதம்,
  2. அதிகரித்த எடை 12 சதவிகிதம்,
  3. ஹோர்மோன்களும் நொதியங்களும் 8 சதவிகிதம்,
  4. உயர் இரத்த அழுத்தம் 8 சதவிகிதம்,
  5. அதிக மது பாவனை 2 சதவிகிதம்,
  6. மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 சதவிகிதம்,
  7. நீரிழிவு 7 சதவிகிதம்,
  8. உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6 சதவிகிதம்,
  9. புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6 சதவிகிதம்,
  10. ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5 சதவிகிதம்
எனச் சொல்லப்படுகிறது.

பரம்பரை அம்சத்தின் பங்கு

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25 சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே. எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.


ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15 சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

மேற் கூறிய நோயாளி எவ்வளவு கவனமாக இருந்தும் கொலஸ்டரோல் அதிகரித்ததற்குக் காரணம் அவரது தாயாருக்கும் கொலஸ்டரோல் இருந்ததாகக் கொள்ளலாம்.

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு மாத்திரமின்றி நீரழிவு, பிரஸர், மாரடைப்பு, ஒஸ்டியோபொரோசிஸ், சில வகை புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் பரம்பரை அம்சங்கள் காரணமாகின்றன.

ஒருவரது தாய், தகப்பன், சகோதரங்கள் போன்ற நெருங்கிய உறவினர்களில் அவ்வாறான நோய்கள் இருந்தால் இவர்களுக்கும் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். 

மருந்துகளை நிறுத்தல்

மற்றொருவருக்கும் கொலஸ்டரோல் இருந்தது. மருந்துகள் சாப்பிட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் கொலஸ்டரோல் ரிப்போட்டுடன் வந்தார்.

“உங்கள் கொலஸ்டரோல் அளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டது” என்றேன்.

முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. “அப்ப மருந்தை நிப்பாட்டலாம்தானே” எனக் கேட்டார்.

  • “உணவு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்துடன், உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய ஏனைய வாழ்க்கை முறைகளான 
  • தினசரி உடற் பயிற்சி, 
  • நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலன்றி உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை, 
  • மது புகைத்தல் ஆகியவற்றை நிறுத்தல், 
  • நீரிழிவு பிரஸர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தல், 
  • மனஅமைதியான வாழ்க்கை முறை 
என வாழ்ந்தால் கொலஸ்டரோல் தானே குறைவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அது முக்கியமாக ஆரம்ப நிலையில் மாத்திரமே சாத்தியமாகும்.

ஆனால் உங்கள் வயதையோ, நீங்கள் ஆணா பெண்ணா என்பதையோ மாற்ற முடியுமா? அதேபோல உடலிலுள்ள ஹோர்மோன்களையும் நொதியங்களையும் உங்களால் மாற்ற முடியாது.

வேறு நோய்களுக்கான எல்லா மருந்துகளையும் நிறுத்த முடியுமா? அவ்வாறு செய்தால் கொலஸ்டரோலை மருந்துகள் இன்றிக் குறைக்க வாய்ப்பு உள்ளது.” என்ற விளக்கத்தை அளித்தேன்.

“ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடிய அதிகாரம் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு கூறியவர் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா.

ஆனால் அவராலும் அவரது வயதையோ, முதுமையையோ, மரணத்தையோ மாற்ற முடியவில்லை. இவற்றுடன் பரம்பரை அம்சங்களையும், குடும்பக் குணாதிசியங்களையும், கொலஸ்டரோலையும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்த இரத்தப் பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனையும்

இவை முடியாது என்பதால் கொலஸ்டரோல் மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ஆனால் மருத்துவர் ஒரு முறை எழுதித் தந்த மாத்திரைகளை தொடர்ந்து பாவிக்க முடியாது.


மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து அதிலுள்ள மாற்றங்களுக்கு எற்ப மருந்துகளின் அளவுகளிலும், வகையிலும் மாற்றங்கள் செய்ய நேரலாம்.

அவ்வாறு காலக்கிரமத்தில் இரத்தப் பரிசோதனைகள் செய்வது கொலஸ்டரோல் குறைந்திருக்கிறதா என்பதைக் கணிக்க மாத்திரமல்ல, தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு வேறு கேடுகள் இருக்கிறதா என்பதை அறியவும்தான். இதனால் தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் சாத்தியமும் இல்லை.

எனவே கொலஸ்டரோல் பிரச்சனைக்கு
  • மருந்துகள் தேவையா இல்லையா, 
  • எந்த மருந்து தேவை, 
  • எவ்வளவு காலத்திற்கு தேவை 
என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்கள் மருத்துவரிடம் விட்டுவிடுங்கள்.

ஆனால் அவை பற்றிய உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் உள்ளவர்களும் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டியுள்ளது அல்லவா? அது போலத்தான்.

கொலஸ்டரோல் மற்றும் மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்.


'இருக்கிறம்' சஞ்சிகையில் வெளியான எனது மருத்துவக் கட்டுரை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0

Post Comment