Saturday, October 22, 2011

விமர்சனங்களை எதிர்கொள்வது நாளாந்த வாழ்விலும் படைப்புலகிலும்



உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். 'அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.' அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. "எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?" என கிளர்ந்தெழுகிறிர்கள்.

எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே 'நீ இப்படிச் செய்து போட்டியே' எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது.....
மல்லுக்கட்டல்தான்

பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக 'இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்' என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.
மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் .....

ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.


இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு
  • படைப்பாளியாக இருக்கலாம், 
  • ஒவியனாகவோ, 
  • பாடகனாகவோ அல்லது 
  • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம். 
படைப்புலகம் சாராது
  • ஆசிரியனாகவோ, 
  • தொழிலதிபராகவோ, அல்லது 
  • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம். 
விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.


நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.
  • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள். 
  • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன. 
  • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. 
  • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

இழப்பும் கிடைப்பும்

இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

மாறாக பொதுமையானதாகக் கருதும்போது
  • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும். 
  • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும். 
  • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும். 
 

விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.
  • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது. 
  • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான். 
  • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா? 
இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம். 
  • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள். 
  • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.
 2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.
  • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள். 
  • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள். 
  • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம். 
வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
  •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். 
             நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்   
  • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம். 
 இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.
  1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும். 
  2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும். 
இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.
ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக .........

இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

எம்.கே.முருகானந்தன்

ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை
0.0.0.0.0.0.0

Post Comment

13 comments:

kovaikkavi said...

விமரிசனம் பற்றிய உங்கள் ஆக்கம் பார்த்தேன் மிக மிக நல்லது. எத்தனை பேர் வாசித்துப் பயனடைவார் எனக் காத்திருக்கலாம் பாராட்டுகள் ஐயா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

DrPKandaswamyPhD said...

அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமானதுமான பதிவு. வாழ்க டாக்டர் முருகானந்தன்.

நிரூபன் said...

வணக்கம் ஐயா,
நலமா?
வெற்றிகளையும், பாராட்டுக்களையும் ஒருவன் எவ்வாறு திறந்த மனதோடு வரவேற்ற்று மகிழ்கிறானோ, அதே போல விமர்சனங்களை உணர்ச்சிவசப்பாடாது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை அழுத்தமாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி kovaikkavi. யாருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சிதான்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

DrPKandaswamyPhD நன்றி ஐயா. உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது.

ஹேமா said...

மிகவும் மிகவும் தேவையான உங்களின் பதிவிலொன்று இது.விமர்சனங்கள் ஆளுக்கொன்றாய் மாறும்.ஆனால் சில விமர்சனங்கள் மனிதனை உயர்த்தும்.பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் மனநிலைதான் அவசியம் !

வைரை சதிஷ் said...

நல்ல அருமையான பதிவு

Advocate P.R.Jayarajan said...

விமர்சனங்களை எப்படி ஏணிப்படிகளாக ஏற்றுக் கொள்வது எனும் மனப்பக்குவத்தை தந்துள்ளது தங்கள் பதிவு... வாழ்த்துகள் !

Advocate P.R.Jayarajan said...

விமர்சனங்களை எப்படி ஏணிப்படிகளாக ஏற்றுக் கொள்வது எனும் மனப்பக்குவத்தை தந்துள்ளது தங்கள் பதிவு... வாழ்த்துகள் !

Muruganandan M.K. said...

விமர்சனம் பற்றிய பதிவுக்கு
உங்கள் ஆக்கபூர்வமான
கருத்துரைக்கு நன்றி @ ஹேமா

Muruganandan M.K. said...

கருத்துரைக்கு மிக்க நன்றி
@ Advocate P.R.Jayarajan and
@ வைரை சதிஷ்

V.Radhakrishnan said...

இந்த பதிவு அவசியமானது தானா அப்படி எழுதினா கூட ஒருவகை விமர்சனம் தான்.

மனநிலையை அழகாக படம் பிடித்து, விமர்சனம் குறித்த நல்ல கருத்துகள் எழுதி இருக்கீங்க. வாழ்த்துகள்.

Muruganandan M.K. said...

மிக்க நன்றி @V.Radhakrishnan
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்