Saturday, October 15, 2011

கண்ணருகே தோலில் தடிப்புகள் கொலஸ்டரோலா?



கொலஸ்டரோல் உங்களுக்கு இருக்கிறதா என அறிவது எப்படி? 12-14 மணிநேரம் வெறும் வயிற்றிலிருந்து இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என விடயம் அறிந்தவர்கள் கூறுவார்கள்.

ஆனால் உங்களுக்கு இருக்கக் கூடும் என்பதைக் காட்டும் வேறு அறிகுறிகள் உள்ளனவா?

சன்தலஸ்மா

கண் இமைகளின் மேல் மடல் அல்லது கீழ் மடலில் அல்லது அவற்றருகே மஞ்சள் நிறத்தில் தோற் தடிப்புகள் சிலரில் தென்படுவதுண்டு. சன்தலஸ்மா Xanthelasma என்பார்கள். உண்மையில் இவை தோலுக்கு அடியிலுள்ள கொலஸ்டரோல் படிவுகளாகும்.


ஆசிய மற்றும் மத்தியதரைக் கடற்பிரதேசத்தைச் சார்ந்தவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இவை வலியையோ அல்லது வேறெந்த சிரமத்தையோ கொடுப்பதில்லை.

ஆயினும் தமது அழகிய தோற்றத்தைக் கெடுப்பதான உணர்வை நோயாளிக்கு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.


இது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பதின் அறிகுறி என பலகாலமாக நம்பப்பட்டது. ஆயினும் அண்மைக் கால ஆய்வுகளின் படி, அத்தகைய தோற் தடிப்பு இருப்பவர்கள் அனைவருக்கும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்து இருப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இருந்தபோதும் பலருக்கு நல்ல கொலஸ்டரோலான HDL குறைந்திருக்கும், அல்லது கெட்ட கொலஸ்டரோலில் ஒன்றான ரைகிளிசரைட் (Triglyceride)  அதிகரித்திருக்கும்.

சன்தலஸ்மாவுடன் கொலஸ்டரோல் அதிகமாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பரம்பரையில் கொலஸ்டரோல் அதிகமுள்ளவர்களாக இருப்பர். அல்லது நீரிழிவு நோயாளிகளாகவும் இருப்பது தெரிகிறது.




கொலஸ்டரோல் அதிகரிக்காவிட்டாலும் பாதிப்புண்டு

அத்தகைய தடிப்புகள் உள்ளவர்கள் பலருக்கு கொலஸ்டரோல் அதிகரிப்பதில்லை என்பதால் எதுவிது அக்கறையும் எடுக்காது அசட்டை செய்யலாமா?

நிச்சயமாக இல்லை. குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிக்காவிட்டால் கூட இவர்களுக்கு
  • மாரடைப்பு 
  • பக்கவாதம் 
போன்ற பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட சற்று அதிகமாகும்.

அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, புகைத்தல் போன்ற மாரடைப்பு எற்படுவதற்கான ஏனைய காரணிகளைக் கணக்கில் எடுத்தபோதும் இந்த அதிகரிப்பு இருக்கவே செய்தது. 

எனவே அத்தகையவர்கள் தமக்கு எதிர்காலத்தில் இந்நோய்கள் வராமல் தடுப்பதற்காக
  • உணவு முறைகளில் கவனம், 
  • தினசரி உடற் பயிற்சி, 
போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்துடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதும் நல்லது.
அகற்ற முடியுமா?

பொதுவாக இவற்றை அகற்றுவதில்லை. அகற்றினாலும் 40 சதவிகிதமானவர்களுக்கு 1-3 வருடங்களுக்குள் திரும்பத் தோன்றலாம். சிலருக்கு மறுவும் தோன்ற வாய்ப்புண்டு.

ஆர்க்கஸ் சினலிஸ்

வேறு சிலருக்கு கண் கருவிழியில் வட்டமாக வெள்ளை நிறத்தில் படிவு ஏற்பட்டிருக்கும். இதனை ஆர்க்கஸ் சினலிஸ் (arcus senilis) என்பார்கள்.

இது வெள்ளையாக இருந்தபோதும் வெண்புரை எனும் கற்றரக்ட் அல்ல. அது லென்ஸ்சில் வெள்ளை படிவதாகும்.

மாறாக இது விழித் துவாரத்தைச் சுற்றி கருவிழியில் கொழுப்பு வட்டமாக படிவதாகும். இதனால் பார்வைக் குறைபாடு எதுவும் ஏற்படாது.



இதுவும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதைக் குறிப்பதாகவே நம்பப்படுகிறது. ஆயினும் எப்பொழும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்ல.

மேற் கூறிய ஆய்வின் பிரகாரம் வயது முதிர்வின் போது தோன்றினால் இதற்கும் மாரடைப்பிற்கும் தொடர்பில்லை. வயது அதிகரிப்போடு இது தொடர்புடையது.


பொதுவாக 50வயதிற்கு மேலேயே தோன்றும். ஆண் பெண் இருபாலானாரிலும் காணப்பட்டாலும் ஆண்களில் அதிகம் தோன்றும்.

இதருந்த போதும் 40 ற்கு உட்பட்ட வயதில் தோன்றினால் அது இருதய நோய்கள் வரக் கூடிய சாத்தியத்தை அதிகரி்கிறது.

ஒரு கண்ணில் மாத்திரம் இந்த வெள்ளை வளையம் தோன்றினால் இது மற்றக் கண்ணுக்கான குருதி சுற்றோட்டத்தில் பாதிப்பு இருப்பதாகக் கொள்ளலாம்.

எவ்வாறிருந்த போதும் இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0..0

Post Comment

4 comments:

Cpede News said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

எஸ் சக்திவேல் said...

ஒரு முறை கண் பரிசோதனைக்குப் போயிருந்தபோது, optician சர்வ சாதாரணமாக 'உங்களுக்குக் கொலஸ்திரோல் இருக்குமே' என்று சொல்ல ஆடிப்போய்விட்டேன், கண் வரை கொலஸ்திரோல் என்று. பிறகுதான் அவர் இது சாதாரணம் என்று கூறினார். நல்ல பதிவு :-)

kovaikkavi said...

ஆவ்! வாசிக்கவே பயங்கரமான உணர்வு வருகிறது. கடந்த வாரம் பரிசோதனையில் எங்களுக்கு கெட்ட கொலஸ்றோல் நல்ல அளவில் உள்ளது என வைத்தியர் மகிழ்வுடன் கூறினார். மிக நல்லது. நன்றியும் வாழ்த்துகளும்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

இராஜராஜேஸ்வரி said...

Thank you for sharing very use full post.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்