சென்ற 7ம் திகதி பெப்ருவரி 2011 ல் ஒரே நாளில் இரு சிறுவர்களை கடுமையான டெங்கு நோயென இனங்கண்டு விசேட சிகிச்சைகளுக்காக சிறுவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. கடுமையான மழையின் பின்னான வெயில் பல இடங்களில் டெங்கு நோய் அதிகரித்திருக்கிறது.
![]() |
| டெங்கு நோயின் அறிகுறிகள் |
இப்பொழுது புதிய அணுகுமுறையில் சிகிச்சை அளிப்பதால் பலரையும் காப்பாற்ற முடிகிறது.
மேற் கூறிய இரு சிறுவர்களும் நலமாக வீட திரும்பிய செய்தியை இன்று (11.02.2011)பெற்றோர்கள் எனக்குத் தெரிவித்தனர்.
நோயை நேர காலத்துடன் நிர்ணயம் செய்வதும், அவசியம் ஏற்படுமிடத்து தாமதிக்காது அதற்கான மருத்துவ வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் உள்ள வைத்தியசாலையில் அனுமதிப்பதும் அவசியமாகும்.
டெங்கு நோய்க்கு பப்பாசி இலைச் சாறு சிறந்த பலன் அளிக்கும் என்ற செய்தி அண்மைக் காலமாக பத்திரிகை ரீவீ ஆகியவற்றில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இது தவறான செய்தி என அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.
தவறான செய்திகளால் பயனற்ற மருத்து முறைகளில் காலத்தைக் கடத்தாது சரியான மருத்துவம் செய்வது அவசியம்.
வெண்குருதி சிறுதுணிக்கை (Platelet)
டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்களுக்கு வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platelet) குறைதலும் அதனால் ஏற்படும் குருதி பெருக்கமுமே காரணம் என இதுவரை நம்பப்பட்டது.
புதிய சிகிச்சை முறையின் அடிப்படை
இதன் காரணமாக அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதே மருத்துவ சிகிச்சையின் நோக்கமாக முன்னர் கொள்ளப்பட்டது. மருத்துவமனைகளில் வெண்குருதி சிறுதுணிக்கை எனப்படும் (Platlet) மாற்றீடு செய்யப்படுவது உயிர்காக்கும் மருத்துவம் என எண்ணப்பட்டது.
டெங்குவின் அறிகுறிகள் இருக்கும் போது வெண்குருதி சிறுதுணிக்கை (Platlet)அளவு 100,000 லுக்குக் கீழ் குறைந்தால் உடனடியாக மருத்துவ கனையில் அனுமதிப்பது அவசியம்.
ஆயினும் நவீன சிகிச்சை முறையில் இதனை மாற்றீடு செய்யப்படுவதில்லை. உள்ளெடுக்கும் நீரின் அளவையும் வெளியேறும் நீரின் அளவையும் நுணுக்கமாகக் கணித்து அதற்கேற்ற அளவில் கொடுப்பதன் மூலம் ஆபத்தான விளைவுகளைத் தடுப்பதே இன்றைய சிகிச்சையின் அடிப்படையாகும்.
இலங்கையில் இறப்பு விகிதம் மிக அதிகம்
ஆயினும் இத்தகைய சிகிச்சையால் போதிய பலன் கிடைக்கவில்லை.
உதாரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு வீதம்
- மலேசியாவில் 0.34 சதவிகிதமாகவும்,
- தாய்லாந்தில் 0.1 சதவிகிதமாகவும் இருக்கும்போது,
- இலங்கையில் இது 1 சதவிகிதமாக மிக அதிகமாக இருக்கிறது.
இது ஏன்? இதை நிவர்த்திப்பது எப்படி என்பது ஆராயப்பட்டு எமது மருத்துவ நிபுணர்கள் சிலர் தாய்லாந்து நாட்டிற்கு பயிற்ச்சிக்காக அனுபப்பட்டபோதே எமது சிகிச்சை முறையின் போதாமை உணரப்பட்டதாகத் தெரிகிறது.
இறப்புகளுக்கான காரணங்கள்
- உண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மரணங்களுக்குக் காரணம் வெளித் தெரியாமல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் குருதிப் பெருக்கைக் (Concealed bleeding) கண்டறிவதில் ஏற்பட்ட தாமதமும்,
- உடற் திரவங்களின் (Body Fluids) அளவை சரியான முறையில் பராமரிக்காமையும் ஆகும்.
எமது நாட்டில் நோயாளியின் வெண்குருதி சிறுதுணிக்கை குறையும்போது அவசரப்பட்டு அதனை மாற்றீடு செய்ததால் உடல் திரவங்களின் நிலையில் தேவையற்ற அதிகரிப்பு ஏற்பட்டு அதனாலும் மரணங்கள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது.
பப்பாசிச்சாறு நோயைக் குணமாக்கவில்லை
பப்பாசி இலைச் சாறு பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் யாவும் அதனை சிகிச்சைக்காக கொடுத்ததன் பலனாக நோயாளியின் குருதியில் வெண்குருதி சிறுதுணிக்கை அதிகரித்ததாகக் கூறின.
இது பப்பாசிச் சாறினால் நோய் குணமானதற்கான அடையாளமல்ல.
எந்தவித சிகிச்சையும் கொடுக்காவிட்டால் கூட நோய் சுயமாகக் குணமாகும்போது அந்த எண்ணிக்கையும் தானாகவே அதிகரிக்கச் செய்யும்.
அத்துடன் டெங்கு நோயின் மிக ஆபத்தான கட்டமான டெங்கு அதிர்ச்சி நிலையை பப்பாசிச் சாறு (Dengue Shock Syndrome) குணமாக்கியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அல்லாது நோயாளிகளின் இறப்பு விகிதத்தை குறைத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை.
![]() |
| சருமத்தில் செம்மை பூத்தது போல புள்ளி புள்ளியாக இரத்தக் கசிவு |
டெங்குவின் வகைகள்
சாதாரண டெங்குக் காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சற்றுக் கடுமையானதான டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் ஆபத்தானது என்ற போதும் உயிரிழப்புகளுக்குக் காரணம் அதுவல்ல. ஆனால் அது மோசமாகி அதிர்ச்சி நிலைக்குப் போனால் மிக மிக ஆபத்தானது.
டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
- அது தொற்றிய பலருக்கும் வெளிப்படையான எந்த அறிகுறியும் இருக்காது.
- டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து தானாகவே மாறிவிடும்.
- மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும்.
- 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
![]() |
| டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சலில் கண்ணில் குருதிக் கசிவு |
குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட
- 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள். குணமாகிவிடுவார்கள்.
- மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.
நீங்கள் செய்யக் கூடியது
காய்ச்சல் வந்த உடனேயே இது டெங்குவாக இருக்குமோ எனப் பயந்து மற்றவர்களையும் கலங்கியழ வைத்து உடனடியாக மருத்துவரிம் ஓட வேண்டியதில்லை.
முதல் மூன்று நாட்களுக்கு பரசிற்றமோல் மாத்திரையை வயதுக்கு ஏற்ற அளவில் கொடுங்கள். 6 மணி நேரத்திற்கு ஒரு தடவையே கொடுங்கள். அதற்கு மேலாக அளவைக் கூட்டிக் கொடுக்கக் கூடாது.
புரூபன், பொன்ஸ்டன் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது.
போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். ஆனால் தேவைக்கு அதிகமாக லீட்டர் கணக்கில் கொடுப்பதும் கூடாது.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும்.
கீழ்க் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை தாமதிக்காது நாடுங்கள்
- கடுமையான தலையிடி
- கடுமையான வயிற்று வலி
- வயிற்றுப் புரட்டும் சத்தியும். இவை அதிகமாகி நீராகாரம் எதனையும் உட்கொள்ள முடியாதிருத்தல்
- கடுமையான தாகம்
- தோல் செந்நிறம் பூத்தது போல இருத்தல் அல்லது சிவத்தப் புள்ளிகள்
- கடுமையான உடல் உழைவு, மூட்டு வலிகள்
- உள்ளங்கால் உள்ளங்கை போன்றவை குளிர்ந்து ஈரலிப்பாக இருத்தல்
- கடுமையான களைப்பு, இயங்க முடியாமை, சினப்படுதல், அமைதியின்மை
- சிறுநீர் மிகக் குறைவாக வெளியேறல். உதாரணமாக 6மணிநேரம் சிறுநீர் கழியாதிருத்தல்
இவற்றில் சில அறிகுறிகள் வேறு சாதாரண காய்சல்களின் போதும் ஏற்படக் கூடும். ஆயினும் டெங்கு பரவி வரும் காலங்களில் அவற்றை உசாதீனம் செய்யக் கூடாது.
அதிக கவனம் எடுக்க வேண்டியவர்கள்
மேற் கூறிய அறிகுறிகள் யாருக்கு இருந்தாலும் உதாசீனம் செய்யக் கூடாது. ஆயினும் கீழ்க் கண்டவர்கள் டெங்குக் காச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் கூடிய கவனம் எடுப்பது அவசியம்
- ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்
- வயதானவர்கள் - 65 வயதிற்கு மேல்
- கொழுப்பான உடல் வாகை உடையவர்கள்
- கர்ப்பணிகள்
எனவே பப்பாசி இலை, வீட்டு மருத்துவம் போன்றவற்றில் காலத்தைக் கடத்தாது டெங்கு நோயெனச் சந்தேகத்துக்கு உரியவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
![]() |
| உலகளாவிய ரீதியில் டெங்கு நோயும் அதனைப் பரப்பும் நுளம்பும் காணப்படும் பிரதேசங்கள். |
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் அடைப்படை உண்மைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்
டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?
டெங்குநோயைப் பரப்பும் Aedes aegyptiநுளம்பின் வாழ்க்கை முறை அதனை அழிக்கும் வழிமுறைகள் பற்றி அறிய எனது முன்னைய பதிவைப் பாருங்கள்.
டெங்கு நுளம்பார் பெருகின் வீட்டார் அழிவர்
அழுக்கு, கழிப்பறை, குப்பை கூளங்கள் யாவும் நுளம்மைபைப் பெருக்கும் இடங்களாகும். ஆனால் பொதுக் கழிப்பறையில் நடந்த இந்த சம்பவம்சுவார்ஸமானது.
கலங்கவைக்கும் டெங்கு பற்றிய தொடரைப் படித்த உங்களை மறந்து சிரிக்க வைக்கும் பதிவு இது.
கழிப்பறையில் அழைப்பு
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0






6 comments:
பயனுள்ள் பதிவு . .சற்று பயமாகவும் இருந்தது தீவிரமானவர்களின் நிலை .
Very Good Info Shared...! I thank you for that.!
நல்ல பயனுள்ள பதிவு.
நல்லதொரு மாற்றம் வந்தால் சரி ஐயா... சென்ற வருட நடுப்பகுதியில் நானும் மாட்டுப்பட்டேன் 3 மாதம் பட்டபாடு சொல்லி மாளாது...
நிலாமதி பயப்படுத்த அல்ல பதிவு. ஆனால் கவனியாதுவிட்டால் ஏற்படக் கூடிய ஆபத்தைக் சுறினேன்.
கருத்துரைகளுக்கு நன்றி
@ Pranavam Ravikumar
@ இளம் தூயவன்
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்