Sunday, November 28, 2010

நீரிழிவு நோயாளர்கள் எத்தகைய எவ்வளவு பழங்கள் சாப்பிடலாம்?

"சீனி வருத்தம் வந்தாப் பிறகு நான் பழங்கள் சாப்பிடுறதை விட்டிட்டன்' என்று யாராவது சொன்னால் அதைவிட மோட்டுத்தனமான கருத்து வேறு எதுவும் இருக்கமாட்டாது.

"அதேபோல பழங்கள் இனிப்பு அல்லவா, எனவே நீரிழிவு நோய்க்கு கூடாதுதானே?" என யாராவது கேட்டால் அதைத் தவறு என்று சொல்லவும் முடியாது.
 
ஏனெனில் பழங்களில் பிரக்கோஸ் (Fructose) என்ற இனிப்பு இருக்கிறது. (சீனியில் இருப்பது சுக்கிறோஸ்- Sucrose). இனிப்புள்ள உணவு என்றால் அதில் கலோரிச் சத்து இருக்கும்தானே. அத்துடன் உணவில் சீனிச்சத்து அதிகரித்தால் நீரிழிவாளர்களின் இரத்தத்திலும் அதிகரிக்கும் என்பதும் உண்மைதான்.

ஆனால் அதே நேரம் பழங்களில் எமது ஆரோக்கியத்திற்கு உகந்த நல்ல போசனைப் பொருட்கள் பலவும் உண்டு. நிறைய விட்டமின் சி, விட்டமின் ஏ, அன்ரி ஒக்ஸசிடனட், நார்ப்பொருள் எனப் பல. 


தோடையினத்தைச் சேர்ந்த புளிப்புச் சுவையுள்ள பழங்களில் இருப்பது கரையக் கூடிய நார்ப் பொருள் (Digestible fiber)ஆகும். இந்தக் கரையக் கூடிய நார்ச் சத்துகள் எமது குருதியில் உள்ள கொலஸ்டரோலைக் குறைக்க உதவும். பெரும்பாலான நீரிழிவு நோயாளர்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாகவே இருக்கிறது. எனவே உணவுக் கட்டுப்பாடுகள், உடற் பயிற்சி ஆகியவற்றுடன் பழங்களை உண்பதும் அவர்களது கொலஸ்டரோல் அளவைக் குறைக்க உதவும்.

பழங்களைத் தவிர அரிசி, ஓட்ஸ், போன்ற தானியங்களில் உள்ள தவிட்டிலும், பயறு, பருப்பு, சோயா, கடலை போன்ற அவரையின உணவுகளிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் இருக்கிறது. எனவே அவையும் நீரிழிவு நோயாளருக்கு நல்லது.

ஏனைய பல பழங்களில் கரையாத நார்ப்பொருள் (non digestible fiber)உண்டு. இவை நாம் உண்ணும் உணவுகள் சமிபாடடையும் வேகத்தைக் குறைக்கின்றன. அதனால் ஊட்டச் சத்துகள் குடற் தொகுதியால் உறிஞ்சப்படுவதையும் தாமதப்படுத்துகின்றன. இதனால் நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் உணவின் பின் சீனியின் அளவு தீடீரென ஏறுவதையும் தடுக்கிறது.

"பழங்களில் நார்ப் பொருள் அதிகமாக இருப்பதால் அதை நான் நிறையச் சாப்பிடலாமா" எனக் கேட்டால் அதுவும் தவறுதான்.

நல்லது என்பதற்காக எந்த உணவையும் அளவுக்கு அதிகமாக உண்பது தவறு.


தினமும் இரண்டு பரிமாறல் அளவிற்குப் பழங்களை உண்பது நல்லது. ஒரு பாரிமாறல் என்பது சராசரியாக 15 கிறாம் மாப்பொருள் (Carbohydrate) கொண்டதாக இருக்கும். இதில் கிட்டத்தட்ட 60 கலோரிச் சத்து இருக்கும்;.

ஒரு பரிமாறலிலுள்ள பழங்கள் சிலவற்றின் அளவானது

ஆப்பிள் நடுத்தர சைஸ் ½
கதலி நடுத்தர சைஸ் 1 பழம்
ஆனைவாழை, கப்பல் ½ பழம்
பப்பாளி 3 துண்டுகள்
மாம்பழம் 1 ½  துண்டு
பேரிச்சம்பழம் 3
திராட்சை 15
ஆரஞ்சு 1
மாதுளை ½
பிளம்ஸ் 3
அன்னாசி 1 ½ துண்டுகள்
வோட்டர் மெலன் 1 ¼ கப்
கொய்யா நடுத்தரம் 1
அன்னாசி ¾ அங்குல தடிப்பான துண்டுகள் 1 ½

மேற் கூறியவற்றில் ஏதாவது ஒரு கூற்றை தினமும் இரண்டு தடவைகள் சாப்பிடலாம். ஏனைய பழங்களையும் அவற்றின் கலோரிப் பெறுமானத்தை அறிந்து அதற்கு ஏற்ப உண்ண வேண்டும்.

எனவே நீரிழிவு நேயாளர்கள் பழங்கள் சாப்பிடுவது அவசியம். மேற் கூறிய வழிகாட்டி உங்களுக்கு உதவும்.



தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா?' பத்தியில் 
நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, November 21, 2010

மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர்படன்ஸ் நோட் (Heberden's Node)

இந்தப் பெண்ணின் கையின் விரலின் நகத்திற்கு அண்டிய மொளியில் கட்டி போன்ற இறுக்கமான ஒரு வீக்கம் தென்படுகிறது. இதனை மருத்துவத்தில் ஹெர்படன்ஸ் நோட் Herbedens Node என்பர்.


எமது பெரு விரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே எமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும்.


இவற்றை Inter Phalangeal Joints என்பர். 

இதில் கடைசியாக உள்ள Distal Phalangeal Joints(DIP) மூட்டு எனப்படும். 
இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது.

ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.

பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம்.

ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒரு வகை மூட்டு நோயின் அறிகுறியாகும்.


ஒஸ்டியோஆர்த்திரைடிஸ்  வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது.

அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்

ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.
  • மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும். 
  • அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல, 
  • அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு.

எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.

நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும்.


முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும்.

ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.

மருத்துவம்
  • நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும். 
  • கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது. 
  • வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் எழுதி வார வீரகேசரியில் 17.10.2010 வெளிவந்த கட்டுரையின் மீள் பிரசுரம். 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Sunday, November 14, 2010

ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்.
ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.

முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.  
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.


விந்தணுக்கள் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.

'மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..' என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் 'மலடன் மலடன் என வையகத்தார் ஏசாமல்..' என தங்களது ஆரோக்கியத்தையும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆண்கள் இருக்கிறார்கள்.

விந்தணுக்களின் வீழ்ச்சி

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில்லியன் இருக்க வேண்டும். பொதுவாக ஆண் உறவின்போது வெளிப்படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறைந்து விட்டது.

ஆனால் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இன்றைய இளம் வயது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.

இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகிதமானவர்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருப்பது நல்ல செய்தியல்ல.

அத்துடன் அவர்கள் உற்பத்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.

5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதி யாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன.

இது இனவிருத்திக்குப் போதாது.

ஏனைய பாலூட்டிகள்

ஏனைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக எருதுகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லியன்களாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.

அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.

மலட்டுத்தன்மையை நோக்கி

இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.

இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணுக்குள் இல்லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம்.
  • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
  • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
  • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற்றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப்புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
  • கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்று, சலக்குழாயில் தொற்று போன்றவையும் காரணமாகலாம்.
  • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
  • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்


  1. இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங்காமை.
  2. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
  3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக மற்றொரு காரணம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக
  • அவனது தாயின் அல்லது 
  • பெற்றோரின் தவறான வாழ்க்கைமுறைதான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.
கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப்படுகிறது என்பதுதான்.

விந்தணு உற்பத்தி

விந்தணுக்ளின் உற்பத்தி Spermatogenesis பதின்ம வயதில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கான அத்திவாரம் அவன் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

அதாவது விதைகளின் விருத்தியானது கருவாக இருக்கும்போதே ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முற்றுப் பெறுகிறது.

எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழுவதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.

புகைத்தல்

விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகிதத்தால் குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் புகைத்தலை நிறுத்தினால் அது மீண்டும் வழமை நிலையை அடையும். ஆயினும் அவனது தாயானவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.

இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல்லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வேறு காரணங்கள் இருக்கலாமா?

  • உணவு முறை மாற்றங்கள், 
  • உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை,
  • இயற்கையோடு இசையாத வாழ்வு,
  • சூழல் மாசடைதல்,
  • காலநிலை மாற்றங்கள்
என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமா என்பதையிட்டும் ஆய்வுகள் அவசியம்.

பெண்களில்

அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.

எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.


ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த எனது கட்டுரையின் மீள் பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்


0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, November 7, 2010

கை கழுவுதல் எப்பொழுது, எப்படி?, யாருக்கு

அவருக்கு மூக்கை அரித்தது போலும். தனது வலது கையால் மூக்கை அழுதித் தேய்த்தார். பின் அதை ரவுசரில் தேய்த்துத் துடைத்தார்.

கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,

“குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது” என்றார்.

சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..

எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.
  • தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி, 
  • தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம். 

பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.

ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான
  • எச்சில், 
  • சளி, 
  • மூக்கிலிருந்து சிந்தும் நீர், 
  • சிறுநீர், 
  • மலம்
போன்றவற்றில் மிக அதிகம்.

கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.

சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்

எவ்வாறு கழுவுதல் வேண்டும்?

குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.

முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.

ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.

ஓடும் தண்ணீரில் கழுவுங்கள்

கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.

ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.

அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.

எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?


எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.
  • உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
  • மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
  • நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
  •  மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
  • தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
  • வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
  • வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
  • வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
  • கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.

இவற்றைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 15ம் திகதி உலக கை கழுவும் தினமாக அனுஸ்டிக்கப்படுகிறது.


 
நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா' பத்தியில் 24.09.2010 வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment