Saturday, September 25, 2010

மாரடைப்பு தடுப்பது உங்கள் கைகளில் - உலக இருதய தினம்

இன்று 26.09.2010 திகதி உலக இருதய தினமாகும். பத்தாவது தடவையாக இத் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஓவ்வொரு வருடமும் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறு தினத்தில் இது அனுஷ்டிக்கப்படுகிறது.

உங்கள் இருதயத்தைக் காப்பாற்றுங்கள்
உலக இருதய சங்கத்தின் தூண்டுதலினால் முதன் முதலாக 2000 வருடத்தின் செப்டம்பர் மாதத்தில் இத் தினம் கொண்டாடப்பட்டது.

இருதய நோய்களாலும் பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு இவ்வருடமும் முயலுமாறு அரசாங்கங்களையும் உடல்நலத்துறை சார்ந்த அறிஞர்களையும், சகல தொழில் வழங்குனர்களையும், தனிப்பட்ட மனிதர்களையும் உலக இருதய சங்கம்; அழைத்திருக்கிறது.

இருதயத்திற்காக வீட்டில் மட்டுமின்றி தொழில் புரியும் இடங்களிலும் முயற்சியுங்கள்

இருதயத்திற்கு நல்ல செய்தி

இருதயத்திற்கு நல்ல செய்தியை வழங்கும் இடமாக இவ் வருடம் தொழில் புரியும் இடங்களை முன்னிலைப்படுத்துகிறது உலக இருதய சங்கம். தொழில் வழங்குவோர், தொழில் புரிவோர் மற்றும் சமூகத்தினருக்கு நன்மை செய்யும் விதத்தில் நீண்ட கால அடிப்படையில் வாழ்க்கை முறை மாற்றங்களை தொழிலகங்களிலும் ஏற்படுத்துவதே இவ்வருடத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த உலக இருதய நாளிலே ஒவ்வொருவரும் தனது இருதயத்தின் நலனுக்கான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டு, ‘நான் எனது இருதயத்துடன் வேலை செய்வேன்’ என உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம்

வழமையான வைத்திய முறைகள் இன்று கேள்விக்குரியதாகிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். வைத்தியர் சிகிச்சை முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக் கேட்டு நடப்பதுமான வழமையான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளர் இறப்பு விகிதத்தை போதியளவு குறைக்கவில்லை.

  • நோய் வராமல் தடுப்பதும், 
  • நோயை நேர காலத்துடன் இனங்காண்பதும், 
  • ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும் அவசியமாகும். 
இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்பினோடுமே செயற்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை உணர்ந்து, ஏற்று மருத்துவ உதவியுடன் செயற்பட்டால் தமது ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும் என்பது இப்பொழுது நன்கு உணரப்படுகிறது.
எனவே உங்கள் ஒவ்வொருவரினதும் பங்களிப்பும் முக்கியமானது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோயையும் பக்க வாதத்தையும் தடுப்பதில் இத்தகைய அணுகுமுறையே நல்ல பலனை அளிக்க முடியும்.

மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான இடத்தைப் ஏன் பிடிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.  காரணங்கள் பல உள்ளன.


இருதய நோய்கள் ஏன் முக்கியமானது
  •  மனிதர்களின் மரணத்திற்கான முதற்காரணியாக இருக்கிறது
  • எதிர்பாராது திடிரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.
  • அதிகம் பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.
  • மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.

இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் முதலாவதாக இருப்பது இருதய நோயாகும். இலங்கையில் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் இன்று இதுவே முதற் காரணியாக இருக்கிறது.

வீட்டில்

நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை யாவை?

உணவு- உடல் நலத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 பரிமாறலுக்கு குறையாதளவு பழவகைகளையும் காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிரம்பிய கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். முக்கிய கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அத்தகையவையே.

உடல் உழைப்பு:- உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில் உங்கள் இருதயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுங்கள்.

எடை:- உங்கள் எடையைக் கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே நேரம் ஒருவர் தனது அதீத எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

புகைத்தல்:- புகைத்தலைக் கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட காலத்திற்குள்ளேயே மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு குறைந்துவிடும்.

மது:- மது அருந்துவராயின் அதைக் கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது உங்கள் எடையை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி என்பதுடன் மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.

மருத்துவரை சந்தியுங்கள்:- “எனக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லை” என எண்ணி வாழாதிருக்க வேண்டாம். மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு போன்றவை நோய் முற்றும் வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும் காட்டுவதில்லை.

எனவே ஒழுங்கு ரீதியில் உங்கள் மருத்துவரை அணுகி
  • பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து கொள்ளுங்கள். 
  • அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர் அளந்து பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவார். 
  • இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில் குறைப்பதற்கு முயல வேண்டும்.

தொழில் தளத்தில்

இருதய நலத்தைப் பேணும் நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள் வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்.

புகைக்காத வேலைத்தளம்:- உங்கள் வேலைத்தளம் புகைத்தலுக்கு தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள். இல்லையேல் அது புகைத்தில் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்குவதற்கு முழு முயற்சி எடுங்கள்.


உடலுக்கு வேலை:- உங்கள் தொழில் உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக்  கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.
  • லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள். 
  • மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள். 
  • வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.

உணவு:- உங்கள் உணவு உள்ளக கன்ரீனில் பெறப்படுகிறது என்றால் அங்கு ஆராக்கியமான உணவு கிடைக்க வழிசெய்ய வேண்டுங்கள். முடியாவிட்டால் நல்லாரோக்கிய உணவை கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன் மூலம் உடலாரோக்கியத்திற்கான நடையும், நல்ல காற்றும் கிடைக்கும் அல்லவா?

ஓய்வு:- தொடர்ந்து ஒரே விதமான வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5 நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள் அங்கங்களை நீட்டி நிமிர்த்தி அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.

உங்கள் இருதயம் உங்கள் பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட காலத்திற்கு செயற்பட வைப்பதோ, அன்றி அதன் செயற்பாட்டிற்கு ஊறு விழைவித்து நோயில் ஆழ்த்துவதோ உங்கள் கைகளில்தான் தங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.


 உளநெருக்கீடு
உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள். மனப்பதற்றத்திற்கும், நெருக்கீட்டிற்கும் (Stress) மாரடைப்புடன் தொடர்பு இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலைத்தளத்தில் நெருக்கீடுகள் இருக்குமாயின் நீக்க முயலுங்கள்.

மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு.. 

மனப்பதற்றமும் மாரடைப்பும்

மாரடைப்பும் மாரடைப்பலாத நெஞ்சு வரிகளும்
மாரடைப்பும் பெண்களும்
ஈ.சீ.ஜீ பரிசோதனை தேவையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, September 19, 2010

காதல் செய்வீர் உடல் நலம் பெறுவீர்

'...காதலிக்க நேரமுண்டு
காதலிக்க ஆளுமுண்டு..."

எனப் பாடித் திரிந்த காலங்கள் இனிமையானவை. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனத்துள் துள்ளிக் குதிக்கின்றன.

'காதலிக்க நேரமில்லை'  என்ற அந்தப் படம் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது பார்த்தது.

கஷ்மீர் அழகும், இளமையின் துள்ளலும், கமெடியும் இணைந்த வித்தியாசமான படம். ஸ்ரீதர் நெறியாள்கை. ரவிச்சந்திரன் ஆடிப்பாடுவார்.

சுற்றுலாக்கள் செல்லும்போது பஸ்சில் எங்கள் வாயில் அப் பாடல் ஓங்கி ஒலிக்கும். சகமாணவிகளும் இருப்பார்கள் அல்லவா? சேர்ந்து பாடும் துணிவும் அவர்களில் சிலருக்கு இருந்தது எம் அதிர்ஷ்டமே.

 பின்னோக்கிய பார்வை

அன்று அது கிளுப்பூட்டும் வெறும் காதல் பாடலாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மருத்துவனாக யோசிக்கும்போது காதலுக்கும் உடல்நலத்திற்கும் இடையே ஆன நெருங்கிய தொடர்பை நினைக்க வைக்கிறது.

ஈருடலும் ஓருயிரும் என்பது போல உண்மையான அல்லது ஆழமான காதல் உடல் நலத்துடன் பின்னிப் பிணைந்ததாகும்.

"காதல் இனிமையான உணர்வுகளைத் தருகிறது, காற்றில் மிதப்பது போன்ற அற்புதமாக உணர வைக்கிறது. மனக்கிளர்ச்சியைத் தருகிறது." என்றெல்லாம் காதலர்கள் சொல்லுவார்கள்.

'..அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதமும் குடித்து வந்தேன்..'

என்று பாடவும் செய்வார்கள். ஆம் காணாத புது உலகெல்லாம் காண வைப்பது அல்லவா காதல். மோட்சமும் இந்திரலேகமும் கிட்டவும் வராது.

ஆனால் எல்லாக் காதலும் உடல் நல மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்டதா?

எத்தகைய காதல்

கண்டவுடன் காதல் போன்ற திடீரென எழும் கவர்ச்சியும், காமமும் கலந்த உணர்வுகள் அத்தகைய ஆரோக்கிய நன்மைகள் தருவதாக ஆய்வுகள் சொல்லவில்லை.

புதிதாக ஏற்படும் திடீர்க் காதல் அற்புதமான அனுபவமாக தோன்றினாலும்,
  • சிக்கலானதாகவும், 
  • தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாகவும், 
  • தொல்லைப்படுத்துவதாகவும் சில வேளைகளில் இருப்பதுண்டு. 
இதனால் மனஅமைதியும் ஆரோக்கியமும் கெடவும் வாய்ப்புண்டு.
ஆனால்
  • ஒருவரை ஒருவர் புரிந்து 
  • மனதால் நெருங்கி 
  • படிப்படியாக வளர்த்து வரும் உறவுகள் மனதிற்கு மட்டுமின்றி உடலுக்கும் நிறைய நன்மைகளைச் செய்கின்றன. 
  • ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, மனத்திருப்தியுடன் கூடிய, நீண்ட நாள் தொடரும் காதல் உணர்வுகள் நிச்சயமாக நன்மை பயக்கின்றன என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது.

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.

மற்றவர்களுடன் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது,
  • நீங்கள் மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள்.    
  •  வேண்டப்பட்டவராக உணர்வீர்கள், 
  •  பாதுகாப்பு உணர்வு கிட்டும்.

இவை ஆண் பெண் காதலால் மட்டும் கிட்டுவதில்லை.
  • பெற்றோர் பிள்ளைகள், 
  • நண்பர்கள், 
  • நெருங்கிய உறவினர் மூலமும் கிடைக்கலாம். 
  • திருமண உறவின் பின் மனமொத்த தம்பதிகள் இடையே நிறையவே கிடைக்கிறது.

மருத்துவரிடம் ஓட்டம் குறையும்

காய்சல், தலையிடி, உழைவு இப்படி எத்தனையோ பிரச்சனைகளக்கு மருத்துவரிடம் பலரும் ஓட வேண்டியிருக்கிறது.
  • மருத்துவரிடம் ஓடுவதும், 
  • மருத்துவமனைகளில் அட்மிட் பண்ணி நிற்க நேருவதும் 
மணமுடித்து மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளிடையே குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது.

மனவிரக்தி


மனவிரக்திக்கு ஆளாவதும், உள நெருக்கடிகளால் துன்புறுவதும் காதல் சூழலில் வாழ்பவர்களிடையே குறைவாகும்.

மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.


மனப்பதற்றம்

அண்மையில் காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என நியூ யோர்க் ஸ்டோனி புறுக் பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் கண்டறிந்த முடிவு இது.

வலிகளைத் தாங்கும் தன்மை

127,000 தம்பதிகளைக் கொண்டு செய்த ஆய்வின் படி மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு நாரிவலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தல்

  • வேலை இழப்பு, 
  • வாழும் சமூகத்தில் ஏற்படும் நெருக்கடி, 
  • அல்லது வேறு ஏதாவது நெருக்குவாரங்கள் எற்படும்போது,
உங்களில் அன்பாக இருக்கும் ஒருவரது ஆதரவு கிடைக்குமாயின் அதற்கு முகம் கொடுத்து தாண்டி முன்நகர்வது சுலபமாக இருக்கும்.

இரத்த அழுத்தம்

  • மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. 
  • தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும், 
  • மணமுடித்து பிரச்சனைகளுடன் மகிழ்ச்சியற்று வாழ்பவர்களிடையே கூடுதலாகவும் இருந்ததாக 
Annals of Behavioral Medicine மருத்துவ இதழில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியிருக்கிறது.

அதன் முக்கியத்துவம் என்னவெனில் மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதைச் சுட்டுகிறது

சாதாரண காய்ச்சல் அதிகம் வராது

காதல் உணர்வினால் மனவிரக்தி, மனப்பதற்றம், நெருக்குவாரங்கள் போன்றவை அடிக்கடி ஏற்படாது என அறிந்தோம். அவ்வாறு நிகழும்போது எமது நோயெதிர்பு சக்தி ஆற்றல் பெறும். அதனால் வழமையாக ஏற்படும் தடிமன் காய்;சல் போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது ஒதுங்கிக் கொள்ளும்.

சாதாரண காயங்கள் விரைவில் குணமாகும்

காதலுணர்வுடன் வாழும் தம்பதிகளிரிடையே செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வானது சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்று சொல்கிறது.

நீண்ட ஆயுள்

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்ற தகவலை முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். திருமண உறவால்
  • பரஸ்பர ஆதரவும், 
  • பிள்ளைகளின் உதவியும், 
  • நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். 
ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

அதே நேரம் மணமுறிவுகள் ஏன் என்ற எனது முன்னைய கட்டுரை மணவாழ்வின் துயர்மிகு பக்கத்தை ஆராய்கிறது 

மகிழ்ச்சியான வாழ்வு
ராதையும்கிருஸ்ணனும் காதலுக்கு அடையாளம்

காதலின் மிகப் பெரிய கொடை
  • சந்தோசம், மகிழ்ச்சி, மனநிறைவு என்பது தெரிகிறது. 
  • குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. 
  • அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது. 
இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர்.

ஆழமான காதலினால் உடல்நலம் பெறுவீர்.

நான் எழுதி, 'இருக்கிறம்' சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு

எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0

Post Comment

Wednesday, September 15, 2010

தாய் புகைத்தலும் குழந்தையின் எதிர்கால உளநோய்களும்

எமது நாட்டில் பெண்கள் புகைப்பது குறைவு. ஆயினும் முற்றாக இல்லை என்று சொல்ல முடியாது.

சமூகத்தின் உயர்தட்டிலும் கீழ்மட்டத்திலும் பல பெண்கள் புகைக்கவே செய்கிறார்கள். மத்தியதர வர்க்கத்திலும் இலைமறைகாயாக இருக்கக் கூடும்.

வயதான பெண்கள் மட்டும் புகைப்பதில்லை
புகைத்தல் ஆபத்தானது. பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது என்பதை அறிவோம்.

பெண்கள் கரப்பமாயிருக்கம்போது புகைத்தால் பிறக்கும் குழந்தை எதிர்காலத்தில்
  • ஆஸ்த்மா, 
  • சுவாசநோய்கள், 
  • செவியில் கிருமித்தொற்று 
போன்ற பல பிரச்சனைகளுக்கு அதிகமாக முகம் கொடுக்க நேரிடும் என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.
அண்மையில் பின்லாந்து தேசத்தில் செய்யப்பட்ட ஆய்வானது கர்ப்பமாயிருக்கும் போது புகைத்த பெண்களின் குழந்தைகள் தமது குழந்தைப் பருவத்திலும் கட்டிளம் பருவத்திலும் உளநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆளாகலாம் என்கிறது.

அத்துடன் அவர்கள் வளரும் போது அதற்கான சிகிச்சையாக மருந்துகள் (Psychiatric Drugs) உட்கொள்ள வேண்டி நேரிடலாம் எனக் கூறுகிறது.

முக்கியமாக
  • மனச்சோர்வு (Depression) 
  • கவனக்குறைவு, 
  • அதீத துடியாட்டம் 
போன்ற பிரச்சனைகளுக்கும் சிகிச்சை செய்ய நேரலாம் என்கிறது.



மனநோய்களுக்கான மருந்துகளை உட்கொள்ளும் இளவயதினரின் மருத்துவக் கோவைகளை ஆராய்ந்து பார்த்தபோது அவர்களில் 19.2 சதவிகிதத்தினர் தாயின் கருவில் இருக்கும்போது புகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது. அதாவது தாய் கர்ப்பமாயிருக்கும்போது புகைத்திருக்கிறாள் என்பதாகும்.

அந்த ஆய்வின் பிரகாரம் தினமும் பத்து சிகரட்டுக்கு மேல் புகைத்தவர்களின் குழந்தைகள் கூடியளவு பாதிப்புக்கு ஆளாயினராம்.

இதன் அர்த்தம் என்ன? கர்ப்பமாயிருக்கும்போது பத்து சிகரட்டுக்கு குறைவாகப் புகைக்க வேண்டும் என்பதா?

இல்லை. புகைக்காது இருப்பதே நல்லது.

கர்ப்பமாயிருக்கும் தாய் புகைக்கும்போது அதன் நச்சுப் பொருட்கள் தாயின் இரத்தத்தில் சேர்ந்து தொப்புள் கொடி ஊடாக கருவிற்குப் பரவி அதன் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதனால்தான் அத்தகைய குழந்தைகள் உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாவது அதிகமாகிறது.


எனவே கர்ப்பாயிருக்கும் பெண்கள் தமது குழந்தையின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு புகைக்காது இருப்பது அவசியம்.

அத்துடன் தனது ஆரோக்கியத்திற்காகவும் புகைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

கணவனும் வீட்டில் உள்ள ஏனையவர்களும் தன்செயலின்றிப் புகைத்தலால் மனைவிக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து என்பதால் தவிர்க்க வேண்டும். அத்துடன் தனது நலனுக்காகவும் புகைக்காதிருப்பது அவசியம்.

தன்செயலின்றிப் புகைத்தலால் பற்றிய எனது முன்னைய பதிவுக்கு கீழே கிளிக் பண்ணவும்.

தன்செயலின்றிப் புகைத்தல்

ஒட்டு மொத்தத்தில் எல்லோரும் எக்காலத்திலும் புகைத்தலைத் தவிர்ப்பதே ஆரோக்கியமான செயலாகும்.

Sourse:- Presented at the Pediatric Academic Societies (PAS) annual meeting, Vancouver, British Columbia, Canada. May4, 2010.


தினக்குரல் பத்திரிகையின் 'ஹாய் நலமா' பத்தியில் நான் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Saturday, September 11, 2010

மொலஸ்கம் Molluscum Contagiosum - படமும் நோயும்

இந்தப் படம் எனது இளம் நோயாளி ஒருவரது.

பள்ளிச் சிறுவனான அவனது காலில் சிறிய தடிப்புகளாக இருப்பதைக் காணலாம்.


தனித்தனியாக அங்கொன்று இங்கொன்றாகவும் காணப்பட்டது. சிலரில் கூட்டம் கூட்டமாகவும் காணப்படுவது உண்டு. 1-3 மல்லி மீற்றர் வரையான அளவுகளில் இருக்கும்.

இதனை மொலஸ்கம் (Molluscum Contagiosum) என்பர் மருத்துவத்தில்.

நெஞ்சு, முதுகு, முகம், கழுத்து போன்ற இடங்களில் அதிகமாகத் தோன்றும்.
முத்துப் போலப் பளபளப்பாகவும், சற்று பிங்க் கலர்ச் சாயலில் இருக்கும்.


ஒவ்வொரு தடிப்பின் மத்தியிலும் சிறிய புள்ளி போன்ற பள்ளம் இருப்பது அதனைச் சுலபமாக அடையாளம் காண உதவும். அதனை அழுத்தினால் சீஸ் போன்ற ஒரு பதார்த்தம் வெளியேறும்.

உண்மையில் இது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.

ஒருவரிலிருந்து மற்றவருக்கு படுகை மூலம் தொற்றும். உடைகள், டவல் மூலமும் பரவும். தனது உடலில் உள்ளதைத் தொட்டு விட்டு வேறு இடத்தில் தொட்டால் ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்கும் பரவும்.

ஆயினும் வேகமாத் தொற்றும் நோயல்ல. உள்ளங்கை பாதங்களில் தோன்றுவது குறைவு.

ஆபத்தான நோயல்ல. எந்தவித மருத்தவமும் இன்றித் தானாகவே குணமாகும். ஆனால் பல மாதங்கள் எடுக்கக் கூடும்.

சிலர் சுரண்டி எடுப்பது(Curretage) , மினசக்தியால் சுட்டு எரிப்பது (Cautery) போன்ற
சிகிச்சைகளையும் செய்வர்.

Podophyllotoxin,  மற்றும்  Trichloro Acetic acid போன்ற சில கிறீம் வகைகளும் உதவும்.

Post Comment

Sunday, September 5, 2010

உணவு நஞ்சாதல்


  • வயிற்றோட்டம், 
  • வாந்தி, 
  • வயிற்று வலி 
போன்ற பிரச்னைகளுடன் அண்மைக் காலங்களில் தினமும் பலர் வருகிறார்கள். சிலர் செமியாப்பாடு என்று சொல்லிவிடுவதுமுண்டு.

பெரும்பாலானவர்கள் பள்ளி செல்லும் பிள்ளைகள். இன்னும் சிலர் வேலை செய்பவர்கள். வெளிநாடுகளிலிருந்து வந்து இங்கு சுற்றுலாச் செல்லும் பலர் இப் பிரச்சைனையில் அகட்டுப்படுக் கொள்வது மிக அதிகம்.
ஒரு சிலரே வீட்டுப் பெண்கள்.
இவர்களில் பலருக்கு காய்ச்சலும் இருப்பதுண்டு.


வயிற்றோட்டம், வயிற்றுளைவு, வயிற்றுக்கடுப்பு, வாந்திபேதி என ஒவ்வொருவரும் வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் இவற்றிற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது உணவு நஞ்சடைதல்தான்.

ஆங்கிலத்தில் Food Poisoning என்பதை நேரடியாகத் தமிழாக்கிய சொல் அது. உண்மையில் உணவில் நஞ்சு எதுவும் கலந்துவிடுவதில்லை.

நோயை ஏற்படுத்தும் கிருமிகளால் உணவு மாசடைவதாகக் கொள்ளலாம். உணவு என்று சொல்லும்போது அது கெட்டியான உணவாக இருக்க வேண்டும் என்பதில்லை. நீராகாரமாகவும் இருக்கலாம்.


மாசடைந்த உணவை உண்டபின் அதிலுள்ள கிருமிகள், உணவுக் குழாயினுள் உள்ள இரைப்பை, சிறுகுடல் பெருங்குடல் ஆகியவற்றின் சுவர்களில் ஒட்டி, பின் அங்கு பல்கிப் பெருகுகின்றன.

இதற்கு ஒரு சில மணிநேரத்திலோ ஒரு சில நாட்களோ எடுக்கலாம்.

எவ்வளவு எண்ணிக்கையான கிருமிகள் உட்புகுந்தன என்பதைப் பொறுத்தது நோயின் தன்மை. வாந்தி, வயிற்றோட்டம், வயிற்று முறுக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

அவை சாதாரணமாகவோ அன்றி கடுமையாக நீரிழப்பு நிலைஏற்படும் அளவிற்கு கடுமையாகவோ இருக்கலாம்.

இந்த நோய் திடீரென அதிகரித்தமைக்கு
  • சில காலத்திற்கு முன் பெய்த கடுமையான மழையும் அதன் காரணமாக அசுத்தமான நீரும் காரணமாக இருக்கலாம். 
  • ஆயினும் இப்பொழுது பலரும் வீட்டுச் சமையலைக் கைவிட்டு கடை உணவுகளை அதிகம் நாடுவது காரணம் என்பதை பல நோயாளிகள் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததில் புரிந்தது. 
ஹோட்டல் உணவு

சாதாரண வீதியோரக் கடைகள் முதல் நல்ல தரமானது என நாம் கருதும் உணவுச் சாலைகளில் சாப்பிட்டவர்கள் வரை எல்லோருக்கும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

சோப் போட்டுச் சுத்தம் செய்யாத கரங்களினால் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதுமே முக்கிய காரணமாகும்.


அசுத்த நீரில் நீராடும் இலையான்களும் கரப்பத்தான் பூச்சிகளும் நிறைந்த சுகாதாரக் கேடான சமையலறை,
சிந்தும் மூக்கை சட்டையில் துடைத்துவிட்டு உணவு பரிமாறும் சிப்பந்திகள்.

இவைகளை நீங்களும் கண்டிருப்பீர்களே?

தயாரித்த உணவுகளை
  • ஈ மொய்க்குமாறு திறந்து வைப்பதும், 
  • அசுத்தமான கைகளினால் அளைவதும், 
  • பழைய உணவுகளை சற்று சூடுகாட்டிவிட்டு எமது தலையில் கட்டுவதும் பல உணவகங்களில் சர்வ சாதாரணம். 
நல்ல உணவகங்களும் இல்லாமல் இல்லை.
விருந்து நிகழ்வுகள்.

திருமணம், பிறந்தநாள், அந்தியட்டி போன்ற பல நிகழ்வு விருந்துகளில் உண்டவர்களும் இப்பிரச்சனைக்கு ஆளாவதுண்டு. கோவில் அன்னதானம், பிரசாதம் ஆகியவையும் பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது.

உணவு தயாரிப்பதில் ஏதாவது பிசகு நடந்திருக்கலாம். ஆனால் உணவு பரிமாறலில் பல கைகள் ஈடுபடுவதால் யாராவது ஒருவர் சுகாதார முறைகளில் கவலையீனமாக இருந்தாலும் பலரும் பாதிக்கப்படுவார்கள்.

வீட்டு உணவு

வீட்டு உணவும் சில வேளைகளில் ஆபத்தைக் கொண்டு வருகிறது. முக்கியமாக மண்ணிலும் மண்ணை ஒட்டி பகுதியிலிருந்து வரும் கிழங்கு, கரட்; கீரை, வல்லாரை போன்றவற்றை சமைக்காமல் பச்சையாக சலட் போன்று உண்டால் கிருமி தொற்றலாம்.

அவற்றை ஓடும் குழாய் நீரிலும் பின் உப்புத் தண்ணீரிலும் கழுவுவது அவசியம். வேகவைத்து உண்பது அதனிலும் சிறந்தது.

சமைத்த உணவைச் சேமித்தல்

சுகாதாரமாகச் சமைத்த போதும் வீட்டில் இந்நோய் ஏற்படுவதற்கு காரணம் பாதுகாப்பற்ற சேமிப்பு முறை எனலாம்.

சமைத்த உணவுகளைத் திறந்து வைப்பதும்,
அசுத்தமான கரண்டிகள் மற்றும் கோப்பைகளை உபயோகிப்பதும் காரணமாகும்.

ஒரு வேளைக்கு எனச் சமைத்த உணவை அடுத்த நேரத்திற்கும் உபயோகிக்க வேண்டுமாயின் சமைத்த உடனேயே அடுத்த நேரத்திற்கானதை வேறாக எடுத்து வைத்துவிடுங்கள்.

பாவித்த உணவின் மீதியை அடுத்த வேளைக்கும் உபயோகிக்க நேர்ந்தால் மீண்டும் சமைப்பது போல நன்கு கொதிக்க வைத்தே உண்ண வேண்டும். அவ்வாறு செய்யும் போது கிருமிகள் யாவும் அழிந்துவிடும்.

மாறாக வாய் இதத்திற்கு ஏற்ப சிறிதளவு சூடு காட்டினால் அதிலுள்ள கிருமிகள் பெருகி நோயை ஏற்படுத்தலாம்.


இவை பிரிஜ்சில் வைக்கும் உணவுக்கும் பொருந்தும். குளிருட்டும்போது உணவில் உள்ள கிருமிகள் அழிவதில்லை. அவ்வாறே உறைநிலையில் இருக்கும்.

வெளியே எடுத்ததும் அல்லது சிறிது சூடு காட்டியதும் அவை பெருகி நோயை ஏற்படுத்தலாம்.

இதைத் தடுக்க முன்னர் கூறியது போல சமைத்த உடனேயே அடுத்த வேளைக்கான உணவை வேறாக எடுத்துச் சேமிக்க வெண்டும். இல்லையேல் மீண்டும் கொதிக்க வைத்த உபயோகிக்க வேண்டும்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா பத்தியில் 28.08.2010  நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment