போலிக் அமிலம் என்பது என்ன? அது ஒரு வகை விட்டமின் ஆகும்.

எத்தகைய பாதிப்பு
இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.
எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.
இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.
அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.
ஏன் குறைபாடு ஏற்படகிறது
எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.
அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.
குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.
இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.
ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?
கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது. குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.
இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.
எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.
எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.
காணொளியில் காணுங்கள்
கீழே ஒரு வீடியோ. போலக் அமிலம் பற்றியும், கரப்பகாலத்தில் அதை உட்கொள்வதன் மூலம் தனது நலத்தையும் வளரும் கருவின் நலத்தையும் பேணுவது பற்றியது.
நன்றி:- March of dimes இன் Healthy Pregnancy, Healthy Baby: Folic Acid for Women
மேலதிக தகவல்களுக்கு
பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் 'போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?' என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.




