Sunday, June 27, 2010

அந்திமகால மருத்துவப் பராமரிப்புக்கான முன்னேற்பாடுகளைச் செய்தல்

“இப்ப மனிசியும் இல்லை. கையிலை காசும் இல்லை. உள்ளதை எல்லாம் பிடுங்கிப் போட்டு பிணமாகத்தான் அனுப்பினாங்கள்.”

மனைவியை இழந்த அவர் புலம்பினார்.

தீடீரென மயங்கி விழுந்த அவளை கொழும்பில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதித்திருந்தார்.

கடுமையான ஸ்ரோக் (பக்கவாதம்).
நினைவில்லை.
வாயால் பேச முடியாது.
வேண்டியதைக் கேட்க முடியாது.
சாப்பிட முடியாது.
சலம் மலம் போவது தெரியாது.
செத்த பிணம்போலக் கிடந்தாள்.


நெஞ்சாங் கூடு அசைவதும், இருதயம் துடிப்பதும்தான் இன்னமும் உயிருடன் இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின.

நாளங்கள் வழியாக ஊசிகள், குழாய் மூலம் உணவு, மற்றொரு குழாய் மூலம் சிறுநீர் அகற்றல் என சுமார் இரண்டு மாதங்கள் கழிந்தன.

ஆனால் காப்பாற்ற முடியவில்லை.
காப்பாற்றக் கூடிய நோயாளியல்ல.
காப்பாற்றியிருந்தாலும் இன்னும் சிலகாலம்
அவ்வாறு மயக்கமாக கோமா நிலையிலேயே
கிடந்திருப்பாள்.

கணவர் இளைப்பாறிய அரச பணியாளர். உள்ள பணம் அனைத்தையும் மருத்துவனைக்கு தாரை வார்த்துவிட்டார். பிள்ளைகளும் இல்லை.

தனது எதிர்கால வாழ்வு என்னவாகப் போகிறதோ என்ற கவலையில் அவரும் கரைசேர்ந்து விடுவாரோ என எண்ணத் தோன்றியது.

இப்படிப் பலநோயாளிகள் சுய உணர்வின்றிக் கிடக்கின்றார்கள். தான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா எனத் தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பராமரிப்பவர்களால் ஈடு கொடுக்க முடிவதில்லை. பொருளாதார ரீதியாகவும் உள, உடல் ரீதியாகவும்.


அவ்வாறு இரண்டு வருடங்களுக்கு மேலாக நோயாளியை கோமா நிலையில் வைத்துப் பராமரித்தவர்களும் உள்ளனர்.

இவ்வாறு வைத்துப் பராமரிப்பது தங்கள் கடமை என்று பலரும் கருதுகிறார்கள்.
தங்களை வளர்த்து ஆளாக்கியவர்களை வைத்துப் பாராமரிப்பது தமது கடமை, மகிழ்ச்சி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆயினும் கூர்ந்து கவனித்தால் அவர்கள்
ஆழ்மனத்துள் படும் வேதனையும்,
உடல் உள நெருக்கீடுகளும்
அளப்பரியது என்பது தெரிய வரும்.

மருத்துவத்தின் வளர்ச்சியும் எதிர்கொள்ளும் சவால்களும்

அவ்வாறான நிலைக்குக் காரணம் என்ன?

மருத்துவ விஞ்ஞானம் அபரிதமாக வளர்ச்சியடைந்து விட்டது.
புதிய மருந்துகள் கிடைக்கின்றன.
உடல் இயக்கத்தை மிக நுணுக்கமாக கண்டறியக் கூடிய அறிவு வளர்ந்திருக்கிறது.
அதற்கு உதவக்கூடிய பரிசோதனை உபகரணங்கள் பாவனையிலுள்ளன. செயற்கையான முறையில் மரணத்தைத் தள்ளிப் போட்டு,
வாழ்வை நீடிக்கக் கூடிய உயிர்காப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.

நோயாளிக்கும் உறவினருக்கும் பயன் இல்லை

ஆனால் இவை யாவும் ஒரு இக்கட்டான நிலைக்கு எம்மைத் தள்ளிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சியின் அபத்தமான நிலை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய எவையுமே மரணத்தை நெருங்கிவிட்ட நோயாளிக்கு நன்மை பயப்பனவாக இல்லை.

அதேவேளை நோயாளியை உயிருடன் வைத்திருக்கிறோம் என்ற திருப்தியைவிட வேறேந்த நன்மை உறவினர்களுக்கும் கிடையாது.

நோயாளியின் விருப்பு

மரக்கட்டை போலக் கிடக்கும் நோயாளிக்கும் தனது விரும்பங்களை சொல்ல முடியாதுள்ள நிலை.

“என்னைத் தொந்தரவு செய்யாமல் நிம்மதியாகச் சாக விடுங்கள்.” எனப் பேச முடிந்தால் அவர் சொல்லக் கூடும்.

தானே தீர்மானிதல்

தனக்கு எத்தகைய சிகிச்சை அல்லது கவனிப்பத் தேவை எனத் தீர்மானிக்கும் உரிமை எந்த ஒரு நோயாளிக்கும் இருக்கவே செய்கிறது.

தற்போது செய்ய வேண்டியது என்ன, எதிர்காலத்தில் சிகிச்சை செய்ய வேண்டியவை எவை என்பது பற்றியும் அவரே தீர்மானிக்க வேண்டும்.

தெளிவுபடுத்தல்

ஆனால் அதற்கு முதல்
அவரது நோயென்ன,
அதற்கு எத்தகைய சிகிச்சைகள் செய்ய முடியும்,
சிகிச்சையின் பலன்கள் எவ்வாறு அமையும்,
நோய் எத்திசையில் பயணிக்கும் போன்ற விபரங்கள் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அவர் தெளிந்த மனநிலையில் இருக்கும்போது தெளிவுபடுத்த வேண்டும். அத்தகைய சூழலில் அவர் தனக்கு அளிக்கப்படும் சிகிச்சையை ஏற்கக் கூடும். அல்லது வேண்டாம் என மறுக்கவும் கூடும்.

பத்திர வடிவில்

எதிர்காலத்தில் நோய் தீவிரமாகி அவர் சுயநினைவிழந்தால், அல்லது காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கத் தள்ளப்பட்டால் அந்த நேரத்தில் எத்தகைய கவனிப்பு கொடுக்க வேண்டும் என்பதை இப்பொழுதே அவர் தனக்குத்தான் தீர்மானித்து அதை பத்திர வடிவில் கொடுக்கலாம்.


அதற்கு உதவ வேண்டியது சுற்றியிருப்பவர் கடமை.
முக்கியமாக, உயிரோடு இருக்கும் காலத்தை நீடிக்கும் எத்தகைய சிகிச்சைகள் எதிர்காலத்தில் தனக்கு வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைத் தானே இதன் மூலம் தெளிவுபடுத்த முடியும்.

சுருக்கமாகச் சொல்வதாயின் அந்திம கால மருத்துவ பராமரிப்புக்கான முன்னேற்பாடு (Advance Care Planning) என்பது பின்வரும் விடயங்களில் நோயாளிக்கு உதவுவதாகும்.

  • நோய் பற்றிய விபரங்களையும் அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்பதையும் தெளிவுபடுத்துவது.
  • இப்பொழுது உள்ள நோய்க்கு எதிர்காலத்தில் மருத்துவம் அளிக்கக் கூடிய சிகிச்சை முறைகள் பற்றிய விளக்கங்கள்.
  • தற்போதும் எதிர்காலத்திலும் அளிக்கப்படும் சிகிச்சைகள் மூலம் கிடைக்கக் கூடிய நல்விளைவுகளையும், மாறாக அதன் சுமைகளையும் தெரியப்படுத்தல்.
  • நோயாளி தனது விருப்பத்தையும் தெரிவுகளையும் குடும்ப அங்கத்தவர்களுடனும். மருத்துவருடனும் கலந்தாலோசித்து முடிவுகளை ஆவணப்படுத்தல்.
  • தன்னால் முடிவு எடுக்க முடியாத வேளையில் புதிய பிரச்சனைகள் வந்தால் அதற்கான முடிவை தனக்காக அந்நேரத்தில் எடுப்பதற்கான ஒரு பிரதிநிதியை நியமித்தல்.
உறவினருக்கும் மன அமைதி

“இவ்வாறான அந்திம கால மருத்துவச் சேவைகளுக்கான முன்னேற்பாடு செய்வதன் மூலம் நோயாளிகளை இறுதி காலத்தில் பராமரிப்பதில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், உறவினர்களிடையே
  1. உளநெருக்கீடு,
  2. மனப்பதகளிப்பு நோய்,
  3. மனச்சோர்வு நோய்
ஆகியன ஏற்படுவதைக் குறைக்கவும் முடிகின்றது”.

இவ்வாறு பிரபல மருத்துவ இதழான BMJ அண்மையில் வெளிவந்த கட்டுரை கூறுவதானது இதற்கு ஆய்வுரீதியான வலுவையும் கொடுக்கிறது.
இது அவுஸ்திரேலியாவில் செய்யப்பட்ட ஆய்வு. இது பற்றி மேலும் அறிய கீழே .சொடுக்கவும்

இது எமது நாட்டிற்கான ஆய்வு அல்ல எனக் கூறி இப்பிரச்சனையை மூடி மறைப்பதில் எவ்வித பிரயோசனமில்லை.

காலாசார செழுமைக்கு இழுக்கா?

கலாசார செழுமைமிக்க எமது வாழ்க்கை முறையில் இது அவசியமற்றது என்று எண்ண வேண்டாம்.

முதியோர் இல்லங்களின் அவசியம் பற்றி சுமார் 20-25 வருடங்களுக்கு முன் பேசியபோதும் இவ்வாறே பலரும் தட்டிக்கழித்தனர். ஆனால் அப்படிப் பேசிய சிலரே நல்ல முதியோர் இல்லம் எங்கே இருக்கிறது எனக் கேட்டு இப்பொழுது வருகின்றனர்.

எனவே பிரச்சனை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்வரை வாழாதிருக்க வேண்டாம்.

வீரகேசரி வாரவெளியீட்டில் ஏப்ரல் 18, 2010 அன்று வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Friday, June 25, 2010

கை கால் வாய்ப்புண் நோய் (Hand Foot and Mouth Disease)

கை கால் வாய்ப்புண் நோய் (Hand Foot and Mouth Disease)

பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளையும் அழைத்து வந்திருந்தார் தாய். ஒரே நோய் எல்லோரையும் தாக்கியிருந்தது.
இவர்களை மட்டுமின்றி வேறு பல பாடசாலைப் பிள்ளைகளையும் அண்மையில் பாதித்திருந்து. சில பாடசாலைகளில் நிறைய பிள்ளைகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.

வாய்க்குள் புண்கள். சாப்பிட முடியாது அவதிப்படுகிறார்கள்.போதாக்குறைக்கு கை கால்களில் கொப்பளங்கள்.

கொப்பளிப்பான் (Chicken pox) போல மெல்லிய நீர்க் கொப்பளங்கள் அல்ல. சற்று மஞ்சள் நிறமாக ஓரளவு தடித்தவை. ஆயினும் சீழ்ப் பிடித்த கொப்பளங்களும் அல்ல.

இது என்ன நோய்?

கை கால் வாய்ப்புண் நோய் எனலாமா?

Hand Foot and Mouth Disease (HFMD) என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.

தானாகவே மாறக் கூடிய ஒரு சாதாரண தொற்று நோய்தான். Coxsackievirus என்ற வைரசால் தொற்றுகிறது. இது போலியோ நோயை ஏற்படுத்தும் கிருமியை ஒத்தது. ஆனால் அத்தகைய பாரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவதில்லை. எனவே பயப்பட வேண்டியது இல்லை.

அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் பலவாறாக வெளிப்படலாம்.

உடம்பு அலுப்பு, தொண்டைநோய், சாதாரண காய்ச்சல் ஆகியவற்றுடன் ஆரம்பிக்கும். பசியின்மையும் சேர்ந்து இருக்கலாம். வாயினுள் சிவப்பாக கொப்பளங்கள் போல ஆரம்பிக்கும். பின் உடைந்து ஏற்படும்


வாய்ப்புண்கள்தான் இந்நோயின் மிக முக்கிய அறிகுறியாகும். சாதாரண சூட்டு வாய்ப் புண்கள் (Apthous Ulcer) போலவே தோற்றமளிக்கும்.

அவற்றில் வலியும் இருக்கும். பொதுவாக காய்ச்சல் தோன்றி ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றும். காய்ச்சல் கடுமையாக அடிப்பதில்லை.


இதே போன்ற கொப்பளங்களும் புண்களும் பாதங்களிலும் உள்ளங் கைகளிலும் தோன்றும்.

குண்டிப் பக்கமாகவும் தோன்றுவதுண்டு.

இவை அரிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது முக்கிய அம்சமாகும்.



பரவுவது எப்படி?

ஒருவரிலிருந்து மற்றவருக்கு வேகமாகத் தொற்றக் கூடியது.

மூக்கிலிருந்து சிந்தும் நீர், எச்சில் போன்றவற்றலிருந்து பரவும். நோயுள்ளவர் தும்மும் போதும் இருமும் போதும் தெறிக்கும் துளிகள் மூலமே முக்கியமாகப் பரவும்.

எனவே கை லேஞ்சியால் அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள வேண்டியது அவசியம். இது எந்த நோய்க்கும் பொருந்தும்.


குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இதனைப் பழக்க வேண்டும்.

கொப்பளங்களிலுள்ள நீரின் மூலமும் பரவலாம். பிள்ளைகள் அடிக்கடி வாயுக்குள் கைகளை வைப்பதால் கிருமியால் மாசடைந்த கைகளால் வேகமாகப் பரவுகிறது.

ஏச்சிலால் வாயுலிலுமுள்ள கிருமிகள் பரவுவதால் நோயுள்ள ஒருவர் உபயோகித்த பாத்திரங்களை நன்கு சுத்தம் செய்யாமல் உபயோகிகக் கூடாது. வீட்டில் ஒருவரிலிருந்து மற்றவருக்குப் பரவுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சுமார் ஒரு வார காலத்தில் மட்டும் பரவும் என்றில்லை. பின்னரும் பரவலாம். சிலரில் நோய் வெளிப்படையாகத் தெரியாது. ஆயினும் அவர்கள் நோய் காவிகளாக இருந்து மற்றவர்களுக்குப் பரப்புவதும் உண்டு.

ஆபத்தான பின் விளைவுகள் எதனையும் இது ஏற்படுத்தாது. ஆயினும் வாய்ப் புண்கள் கடுமையாக இருந்தால் சில பிள்ளைகள் உணவுகளை உண்ணவும், போதிய நீராகாரம் எடுக்கவும் மறுப்பார்கள். அவ்வாறான நிலையில் நீரிழப்பு ஏற்பட்டால் நாளங்கள் ஊடாக ஏற்ற (IV Fluid) நேரிடலாம்.

உணவு

இதைத் தவிர்க்க பிள்ளைகள் உண்ண விரும்பும் நீராகாரங்களைத் தாராளமாகக் கொடுங்கள். ஐஸ் வோட்டர். ஐஸ் கிறீம் போன்ற குளிர்மையான நீராகாரங்கள் இந்நேரத்தில் வாய்க்கு இதமாக இருக்கும். குளிர்ந்த பாலும் நல்லது.

ஆயினும் வாய்ப் புண்களை உறுத்தக் கூடிய புளிப்புத்தன்மையுள்ள பழச்சாறுகளையும் ஏனைய நீராகாரங்களையும் தவிருங்கள்.

அதேபோல அதிக காரம் மற்றும் உப்பு சேர்ந்த உணவுகளும் புண்களை வேதனைப்படுத்தும்.


மென்மையான அதிகமாக மெல்லத் தேவையற்ற உணவுகளை குழந்தைகள் அந்நேரத்தில் விரும்பி உண்பர்.

உண்ட பின் நகச்சுட்டு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது.

மருந்துகள்

மருந்துகள் எதுவும் தேவைப்படாது. காய்ச்சல், உடல் வலி ஆகியவற்றிற்கு பரசிட்டமோல் போதுமானது.

மருத்துவரின் ஆலோசனையுடன் வலியைத் தணிக்கும் இதந்தரும் ஓயின்மென்ட் பூசுவது வாய்ப்புண்களுக்கும் ஏனைய புண்களுக்கும் உதவும்.

அன்ரிபயடிக் எதுவும் தேவைப்படாது.

ஓரு வாரமளவில் தானாகவே குணமாவிடும்.

தடுப்பது எப்படி

சுத்தத்ததையும் சுகாதாரத்தையும் பேணுவதே அடிப்படை உத்தியாகும். முக்கியமாக மலம் கழித்தபின் சோப் போட்டுக் கைகளைச் சுத்தம் செய்வது அவசியம்.

என்னிடம் வந்த ஒரு தாயார் இந்நோயுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைகள் மலம் கழித்தால் கழுவுவது இவர்தான். ஆனால் அதன் பின் வெறுமனே கைகளை கழுவுவார்.
சோப் போட்டுக கழுவுவது முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறினேன்.

வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல்(டைபோயிட்), செங்கண்மாரி, பன்றிக் காய்ச்சல் H1N1   போன்ற பல நோய்களும் அவ்வாறுதான் பரவுகிறது என்பதையும் புரிய வைக்க வேண்டியிருந்தது.

வாய்க்குள் கை வைப்பது, நகங் கடிப்பது போன்ற பழக்கங்களாலும் அத்தகைய நோய்கள் பரவும் என்பதைச் சொல்ல வேண்டுமா?

குழந்தைகளுக்கு இவை பற்றிய அறிவை வளர்ப்பதில் ஆசிரியர்களது பங்களிப்பு அவசியமானது.

பெற்றோரின் முன் உதாரணமும் அறிவுறுத்தல்களும் அதைவிட மிக முக்கியமாகும்.

நோயுற்ற பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது. இல்லையேல் பாடசாலைப் பிள்ளைகளிடையே இப்பொழுது பரவுவது போல வேகமாகப் பரவுவதைத் தடுக்க முடியாது.



தினக்குரல் பத்திரிகையின் ஹாய்நலமா? பத்தியில் (23.06.2010) நான் எழுதிய கட்டுரையின் மீள்பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Post Comment

Friday, June 18, 2010

எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

தடிமன், சளி, தொடர்ச்சியான இருமல் என பலர் இந்த மார்கழி, தை மாதத்தில் மருந்திற்கு வந்திருந்தனர். பனிக்குளிர் நேரத்தில் இது வழமையானதுதான். ஆயினும் ஒரு காலமும் ஆஸ்த்மா நோய் வராத சிலருக்கு ஆஸ்த்மா இருப்பதாகக் கூறியவுடன், நான் சொல்வது சரிதானா என்ற சந்தேகம் அவர்களிடம் எழுந்ததை உணர முடிந்தது.


ஒவ்வாமை நோய்கள்

ஆஸ்த்மா மாத்திரமின்றி அதனுடன் தொடர்புடைய பிரச்சனையான அலர்ஜி (Allergy) எனப்படும் ஒவ்வாமையும் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நூற்றுக்கு 50 பேர் ஒவ்வாமை ஏற்படுவதற்கு பதமாக இருக்கிறார்கள் எனச் சில ஆய்வுகள் கூகின்றன. இவை காரணமாக பலரும் ஏடொபிக் (Atopic) நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

சளி, தும்மல், மூக்கால் ஓடுதல், கண்கடி, காதுகடி, ஆஸ்த்மா, எக்ஸிமா போன்ற பலவும் இத்தகைய ஏடொபிக் மனிதர்களுக்கே வருகிறது.

அதாவது அவர்கள் அத்தகைய நோய்கள் வருவதற்கு பதமாக இருக்கிறார்கள். இதைத்தான் எமது பாரம்பரிய மருத்துவ முறைகளில் 'கிரந்தி உடம்பு' என்று குறிப்பிடுகிறார்கள் என எண்ணுகிறேன்.

சுகாதாரமான சூழல் கோட்பாடு

அது சரி, இத்தகைய நோய்கள் இப்பொழுது அதிகரிப்பதற்குக் காரணம் என்ன?


(விளக்கப் படத்தை தெளிவாகப் பார்க்க அதன் மேல் கிளிக் பண்ணுங்கள்)

கிருமிகள் அற்ற  சுகாதாரமான சூழல்தான் (hygiene Hypothesis) காரணம் என்ற கோட்பாட்டை பல மருத்துவ ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்.

முன்னைய காலங்கள் போல இப்பொழுது மனித இனம் தொற்று நோய்களுக்கு ஆளாவதில்லை.
மண்ணிலும் புழுதியிலும், அழுக்கிலும் இன்றைய குழந்தைகள் உழல்வதில்லை.

அவர்களது உணவு, சுற்றாடல் யாவும் சுத்தமாக சுகாதாரமாக இருப்பதால் நோய்கள் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன.

இது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா?

இல்லை!

கிருமித் தொற்று ஏற்படும்போது எமது உடல் அதற்கு எதிராகப் போராடுகிறது. அதனால் உடலின் நோயெதிர்புச் சக்தி வளர்கிறது.

ஆனால் தொற்றுநோய்கள் குறைந்த தற்காலச் சூழலில் குறைந்தளவு நோயெதிர்புச் சக்தியே (Reduced Immune Stimulation) அவர்களில் ஏற்படுகிறது.

நோயெதிர்புச் சக்தி குறைந்ததாலேயே ஏடொபிக் (Atopic)  நோய்கள் அதிகமாகிவிட்டது என்கிறார்கள்.

ஆனால் மேற்கூறிய கோட்பாட்டை மட்டுமே அதிகரிக்கும் ஆஸ்த்மாவிற்குக் காரணமாகக் கூறமுடியாது. வேறு விடயங்களும் இருக்க வேண்டும்.

வைரஸ் தொற்று நோய் (Human Immunovirus Infections)

தற்காலத்தில் உலகெங்கும் அதிகமாகத் தொற்றும் கிருமியாக ஹியுமன் ரைனோ வைரசைக் (Human Immunovirus Infections) கூறுகிறார்கள்.
இதுவே தடிமனுக்குக் காரணமான வைரஸ் ஆகும். இதனை அழிக்கும் வைரஸ் கொல்லி மருந்துகள் கிடையாது.

தணிந்திருக்கும் ஆஸ்த்மா நோய் திடீரெனத் தீவிரமடைவதற்கு வைரஸ் தொற்று நோய்கள் காரணம் என்பது தெரிந்த விடயமே.

அத்துடன் சிறுவயதில் ரைனோ வைரஸ் தொற்றினால் மூச்சிழுப்பதில் சிரமம் ஏற்படும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஆஸ்த்மா வருவதற்கான வாய்ப்பும் அதிகம் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த ரைனோ வைரஸ் தொற்றானது சாதாரணமானவர்களிலும் ஏடொபிக் மனிதர்களிலும் வெவ்வேறு விதங்களில் செயற்படுகிறது.

ஏடொபிக் மனிதர்களில் ரைனோ வைரஸ் தொற்றினால் சுவாசத் தொகுதியின் கலங்கள் அழற்சியடைந்து, சேதமாவதுடன் சுவாசக் குழாய்களும் இறுக்கமடைகின்றன.

இதனால் அவர்களுக்கு வரும் ஆஸ்த்மா சற்று தீவிரமாக இருப்பதுடன் சிகிச்சைகள் பலனளிப்பதும் தாமதமாகிறது.

மார்கழி, தை ஆகியன குளிர் அதிகமான மாதங்கள். அத்துடன் சுற்றுச் சுழல் பாதிப்படைந்து பூமி வெப்பம் அடைவதால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகுவதால் இவ்வருடம் வழமையை விடக் குளிர் அதிகம் என்கிறார்கள்.

ஹியுமன் ரைனோ வைரசையால் தடிமன் தொற்றும் அதிகமாயிருந்தது. இதுதான் இவ்வருடம் சளிசம்பந்தமான நோய்கள் அதிகரித்ததற்கும் பலருக்கும் ஆஸ்த்மா இழுப்பு வந்ததற்கும் காரணமாக இருக்கலாம். அதைத் தடுக்க இன்ஹேலர்களை உபயோகிக்கவும் நேர்ந்திருக்கலாம்.

இத்தகவல்கள் நோயாளிகளான உங்களை நீங்களே பாதுகாக்க எந்தவிதத்தில் உதவும் என்று புரியவில்லை.

ஆயினும் எதிர்கால மருத்துவ ஆய்வுகள் அத்தகைய வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்தவும், அதை மீறித் தொற்றினால் அதைக் குணப்படுத்தவும் புதிய சிகிச்சைகளைக் கொண்டு ஆஸ்த்மா ஏற்படாமல் தடுக்கவும் ஆவன செய்யும் என நம்பலாம்.

ஒவ்வாமை,அலர்ஜி, ஆஸ்த்மா சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்






டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் மீள் பிரசுரம்.

Post Comment

Saturday, June 12, 2010

பற்கூச்சம் ஏன்? நீங்கள் செய்யக் கூடியது என்ன?

குளிராக எதுவும் சாப்பிட முடியுதில்லை என்று சொல்பவரா நீங்கள்? அல்லது காரம் புளிப்புச் சாப்பிட்டால் பல் கூசுகிறது என்கிறீர்களா? ஆம் நீங்கள் சொல்வது சரிதான் உங்களுக்குப் பற்கூச்சம் இருக்கிறது.

பற்கூச்சம் என்பது பாரதூரமற்றதாக அலட்சியம் பண்ணும்படி இருக்கலாம் அல்லது தாங்க முடியாத வேதனையாகவும் இருக்கலாம். சில நிமிடங்கள் முதல் பல மணிநேரம் நீடிப்பதாகவும் இருக்கலாம்.


பிரிட்சில் இருந்து எடுத்தது போன்ற குளிரான உணவுகளை (ஐஸ்கிறீம்) உண்ணும் போது அல்லது, குளிரவைத்த மென்பானங்களை அருந்தும்போது பற்கள் கூசும்.

அதேபோல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவுப் பண்டங்களை உண்ணும்போதும் கூசும். சிலருக்கு கடுமையான இனிப்பும் கூசவைக்கும்.

பொதுவாக எமது பற்களின் மேற்புறம் எனாமல் எனப்படுவது கடினமானது. எமது உடலின் மிகக் கடுமையான பகுதி இதுதான். உணர்வற்றது அதனால் வலி தெரிவதில்லை.


ஆனால் எனாமலுக்கு உள்ளே மென்மையான நரம்புச் செறிவுள்ள டென்ரீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டென்ரீன் வெளிப்பட்டால் அது வலியை உணரும்.

பற்களும் முரசும் சந்திக்கும் பகுதியில் எனாமலின் தடிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால் சிறிய சேதம் அதில் ஏற்பட்டாலும் பற்கூச்சம் ஏற்படும்.

காரணங்கள்

மிக முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை நீங்கள் உபயோகிக்கும் முறையும்தான்.
பிரஸ்சைப் பொறுத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸ்சை (Soft or Medium)மட்டுமே உபயோகியுங்கள்.

மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே தடிப்பமான (Hard) பிரஸ் தேவை.

 பல் துலக்கும் முறை

பல் துலக்கும் முறையும் முக்கியமானதாகும்.
அடுப்புக் கரி மண்டிய சமையல் பாத்திரத்தை அழுத்தித் தேய்த்துக் கழுவுவதுபோல பிரஸ்சால் கண்டபடி பற்களை உரச வேண்டாம். பற்களை மட்டுமில்லாது முரசுகளையும் புண்படுத்திவிடும்.


மேல்வாய்ப் பற்களை மேலிருந்து கீழ் நோக்கித் துலக்குங்கள். அதே போல கீழ்வாய்ப் பற்களை கீழிருந்து மேல் நோக்கித் துலக்குங்கள். இவ்வாறு துலக்கும்போது முரசு காயப்பட்டு தேயாது.

பல் அரிப்பு Dental Erosion என்பது பற்கூச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.


இது பல்லின் மேற்பரப்பான எனாமலில் ஏற்படும் நுண் அரிப்புகளாகும். அமிலத் தன்மையான உணவுகளாலும் பானங்களாலும் அவ்வாறு ஏற்படும். எனாமல் கரைந்தால் உள்ளே இருக்கும் டென்ரீன் வெளித் தெரியவரும்.

முரசு கரைதல் மற்றொரு காரணமாகும். முரசின் கன அளவு குறைந்து கொண்டு போகும். வயதாகும் போது இது தானாக நடக்கும் செயலாகும்.
முரசு கரைந்து செல்லும்போது பற்களின் வேர் வெளித் தெரிய ஆரம்பிக்கும். பல் வேரை எனாமல் மூடியிருப்பதில்லை.
அதனால்தான் முரசு கரைந்து அவை வெளியே வந்ததும் பற் கூச்சம் ஏற்படுகிறது.

முரசு நோய்கள் மற்றொரு காரணமாகும் வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாது விட்டால் பற்களின் மேல் அழுக்கு மென்படலமாகப் படிய ஆரம்பிக்கும். இது பிளாக் (Dental Plaque) எனப்படும். இதைக் கவனியாது விட்டால் அது இறுகி காரையாகப் (Tartar) படியும்.  இவ்வாறான காரை படர்தல் முரசு கரைதல் தீவிரமாகும். முரசு நோய்களுக்கு நீரிழிவு நோயும் முக்கிய காரணியாகும்.

பல்லுக் கடித்தல் பழக்கம் காரணமாக பற்களின் எனாமல் படிப்படியாகக் கரைந்து பற் கூச்சத்தை ஏற்படுத்தும்.
பற்சொத்தை பல் உடைதல் ஆகியவற்றால் ஆரம்பத்தில் பற் கூச்சம் ஏற்பட்டாலும், அதன் பின் பெரும்பாலும் பல்வலிதான் ஏற்படும். நித்திரையில் பல் கடித்தல் கடுமையாக இருந்தால் உங்கள் பற்களைப் பாதுகாக்க Tooth guard உதவும்.

பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் பற்பசைகள் பெரும்பாலும் பேக்கிங் பவுடர் மற்றும் பெரோட்சைட் போன்றவற்றைக் கொண்டிருக்கும். அவற்றை அதிகம் உபயோகித்தாலும் எனாமல் கரைந்து பற்கூச்சம் ஏற்படும்.

சில தருணங்களில் நீங்கள் பல் மருத்துவரிடம் சென்று வந்தாலும் பற்கூச்சம் ஏற்படுவதுண்டு, பல் சுத்தப்படுத்துதல் மற்றும் பல பற்சிகிச்சைகளின் பின் ஏற்படக் கூடிய பற்கூச்சம் தற்காலிகமானது. ஒரு சில வாரங்கள் செல்ல தானே குணமாகிவிடும்.

வாயைச் சுத்தமாக வைத்திருக்க உபயோகிக்கப்படும் சில மருந்துகளில் (Mouth Wash) அமிலத்தன்மை இருக்கிறது. ஏற்கனவே டென்ரின் சேதமுற்ற ஒருவர் தொடரந்து அத்தகைய வாய் கொப்பளிக்கும் மருந்துகளை நீண்ட காலம் உபயோகித்தால் சேதம் மோசமாகி பற்கூச்சத்தை கொண்டுவரும்.

ஆனால் புளோரின் கலந்த வாய் கொப்பளிக்கும் மருந்துகள் பற்கூச்சத்தை குறைக்கும். எனவே பல் மருத்துவரின் ஆலோசனையுடனேயே அவற்றை உபயோகிப்பது உசிதமானது.

பற்கூச்சம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்.

வாய்ச் சுத்தத்தை ஒழுங்காகப் பேணுங்கள். காலை மாலை பல்துலக்குவதுடன், உணவுகள் நீராகாரங்களின் பின் வாயை அலசிக் கொப்பளிப்பது அவசியம். கடும் இனிப்பான மற்றும் புளிப்பு அமிலத் தன்மையுள்ள உணவு நீராகாரங்களின் பின் மிக முக்கியமாகும்.

மென்மையான பற்தூரிகையை உபயோகிங்கள்.
முற்புறம் வளைந்த தூரிகைகள் பல்வரிசைகள் முழுவதையும் இலகுவாக அடைந்து சீர்மையாகத் துலக்க உதவும்.
தூரிகையால் கடுமையாக அழுத்தித் தேய்ப்பது கூடாது.

மென்மையாகவும், கவனமாகவும் சரியான முறையிலும் பல் துலக்க வேண்டும்.
முக்கியமாக முரசும் பல்லும் இணையும் இடங்களில் மிக அவதானமாகத் துலக்கவும்.

பற்கூச்சத்தைக் குறைப்பதற்கான விசேட பற்பசைகள் பரவலாகக் கிடைக்கின்றன. புளோரின் கலந்த பற்பசைகள் நல்லது. படுக்கப் போகும்போது அத்தகைய பசையில் சிறிது கூசும் பல்லின் மேல் தடவுவது உதவலாம். பற்களை வெண்மையாக்குவதற்கு உபயோகிக்கும் விசேட பற்பசைகள் பற்கூச்சத்திற்குக் கூடாது.

அமிலத்தன்மை, இனிப்பு, புளிப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிருங்கள். கடும் சூடு, கடும் குளிருள்ளவையும் கூடாது.

பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரல் பத்திரிகையின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய
கட்டுரையின் மீள் பிரசுரம்

Post Comment