Saturday, May 29, 2010

தாய்ப்பால் நீர்த்தன்மையானதா?

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. 


ஆனால் சில அம்மாக்களும், அம்மம்மாக்களும் 'தாய் சாப்பிடுகிறாள் இல்லை, களைச்சுப் போனாள். மாவைக் கரைச்சுக் கொடு' என்று தூண்டாமலும் இல்லை. 

தன் அழகு கெட்டுவிடும் எனப் பால் கொடுப்பதில்லை எனச் சிலர் தாய்மாரை நக்கல் அடிப்பதும் உண்டு.

எவ்வாறாயினும் இவை யாவும் தவறான கருத்துக்களாகும். குழந்தைக்கு ஏற்றது தாய்ப் பால் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது.

தாயின் பிற்கால ஆரோக்கியத்திற்கும் பாலூட்டுதல் அவசியமானதே.

எல்லாத் தாய்மாரும் போலவே நீங்களும்! 
உங்கள் குழந்தை பிறந்த உடனேயே அதற்கான உணவு உங்களிடம் தயாராக இருக்கிறது. 

இயற்கை தந்த வரம் அது. தாய்ப்பால். 
அதைக் குழந்தைக்குக் கொடுக்கத் தவறாதீர்கள்.

நீடித்த உறவு

இருந்தபோதும் தாய்ப்பால் ஊட்டுவதன் முழு வெற்றியும் பலனும் உடனடியாக எல்லோருக்கும் இயல்பாகக் கிட்டிவிடுவதில்லை. 

முதல் சின தினங்களில் நீங்களும் உங்கள் குழந்தையும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளது எனலாம். 

எல்லா முயற்சிகளும் போலவே பயிற்சிக்கப் பயிற்சிக்க பாலூட்டும் உங்கள் வினைத்திறனும் பெருகும். 



தொடுகையும் அணைத்தலும் அற்புதங்களை நிகழ்த்தும். 
சருமத்துடன் சருமம் படுவதினால் உறவு நெருக்கமடையும். 
குழந்தையுடன் நீங்கள் செலவளிக்கும் நேரம் முக்கியமானது. 
குழந்தையுடன் உறவுறும் நேரம் அதிகரிக்க உறவின் நெருக்கமும் அதிகரிக்கும். 
பாலும் சொரியும்.
கடும்புப் பால்

முதற்பால் அல்லது கடும்புப் பால் பற்றி நீங்கள் அறிவீர்கள். 
நிறம் சற்று மஞ்சளாக இருப்பதுடன் சற்று தடிப்பாகவும் இருக்கிறது. 
குறைந்த அளவிற்குள் நிறையப் போஷாக்குகள் செறிந்துள்ளன. 

எனவே குறைந்த அளவையே குழந்தை குடித்தாலும் அதுவே குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.

தொற்று நோய்களைத் தடுக்கும்

நோய்களுக்கு எதிரான பிறபொருள் எதிரிகள் (Antibodies) இக் கடும்புப் பாலில் செறிந்திருந்து குழந்தை தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் பாதுகாக்கின்றது. 

இவை உங்கள் வாழ்நாள் முழுவதுமாக நீங்கள் நோய்களுக்கு எதிராகப் போராடிப் பெற்ற நோய் எதிர்ப்புக் கவசமாகும். 
உங்களுக்குக் கிடைத்த கவசம் இப்பொழுது உங்கள் குழந்தையையும் பாதுகாக்கிறது.

உடனடியாக பாலூட்ட ஆரம்பிக்கும்போது இந்த நோயெதிருப்புப் பொருட்கள் முக்கியமாக உங்கள் குழந்தையின் உணவுக் கால்வாயில் படர்ந்து பரவி கிருமிகள் தொற்றாமல் பாதுகாக்கின்றன. 

ஒவ்வாமையைத் தடுக்கும்
அத்துடன் ஒவ்வாமைகள் (Allergies)  ஏற்படாமலும் தடுப்பதாக நம்பப்படுகிறது.
அது என்ன ஒவ்வாமை எனக் கேட்கிறீர்களா? 

எமது பாரம்பரியத்தில் கிரந்தி என்று சொல்வோம். 
தோற் தடிப்பு, அரிப்பு, தலை அவிச்சல், சளி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற பலவும் இவற்றில் அடங்கும்.

உடனடியாகத் தாய்ப்பால் அதாவது கடும்புப் பால் கொடுக்காது புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்தால் மேற் கூறிய பாதுகாப்பு குழந்தைக்குக் கிட்டாமல் கிரந்திநோய்கள் (Atopic) தோன்றலாம். 

அத்துடன் வயிற்றோட்டம், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கும் ஆளாகலாம். 

எனவே பிறந்த உங்கள் குழந்தைக்கு தாய்பாலைத் தவிர வேறெதுவும் கொடுக்காதீர்கள்.

நீங்கள் நோயுற்றால்

பாலூட்டும்போது உங்களுக்கு தடிமன், சளி போன்ற தொற்று நோய்கள் வந்தால் நீங்கள் தொடர்ந்து பாலூட்டலாமா? 
நிச்சயம் ஊட்ட வேண்டும். 

தொற்று நோய்கள் உங்களுக்கு வரும்போது உங்கள் உடல் அதை எதிர்த்துப் போராடுவதால் அதற்கு எதிரான பிறபொருள் எதிரிகள் உங்கள் உடலில் தோன்றும். 
இவை உங்களது நோயைத் தணிப்பது மட்டுமின்றி குழந்தைக்கும் அதனை தாய்பால் ஊடாக கடத்துகின்றன. 
அவர்களும் நோயெதிர்ப்பைப் பெறுவார்கள்.

பிறந்த உடன்

குழந்தைக்கும் உங்களுக்கும் இரத்த உறவு என்றும் இருக்கவே இருக்கிறது.
ஆனால் பிறந்த உடன் குழந்தையுடனான சரும உறவும் நெருக்கமும் அதன் நீட்சிக்கு மிகவும் முக்கியமாகும். 

பிறந்த உடன் உங்கள் குழந்தையை உங்கள் சருமத்தில் பட வைப்பதால் குழந்தைக்கு உங்கள் சரும வெப்பம் கிட்டும். 
அமைதிப்படுத்தும், அதன் சுவாசத்தையும் ஒழுங்காக்கும்.

பெரும்பாலான குழந்தைகள் பிறந்த உடனேயே விழிப்புணர்வுடன் இருக்கும். தாய்ப்பாலை நாடவும் கூடும். 
மருத்துவத் தாதியின் உதவியுடன் பாலூட்டலாம். 

குழந்தை தாய்ப்பால் அருந்தியதும் உங்கள் உடலானது குழந்தையின் தேவைக்கு ஏற்ப சுரக்கத் தயாராகும். 
எனவே எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகப் பாலூட்டலை ஆரம்பியுங்கள்.

ஊட்டுவது அல்ல தானே குடிப்பது

இரண்டு மூன்று நாட்கள் கழிய உங்கள் மார்புகள் கூடுதலாக பருத்து வெப்பமடைவதை உணர்வீர்கள். கடும்புப் பால் கழிந்து பால் அதிகமாகச் சுரக்கத் தொடங்குவதை இது குறிக்கும். 

எனவே குழந்தை வேண்டுமளவிற்கு அதிகம் பாலூட்ட முயலுங்கள். குழந்தையின் தேவைக்கு ஏற்பவே உங்களுக்குப் பால் சுரக்கும். 
குழந்தை தனக்குத் தேவையான அளவு தானே உறிஞ்சட்டும். 

அதிகம் ஊட்ட வேண்டும் என நீங்கள் தெண்டிப்பது அவசியமற்றது. 
முதல் ஓரிரு நாட்களுக்கு நீங்கள் குழந்தைக்கு ஊட்டுவதாக இருக்கும். 
அதன் பின்னர் குழந்தைக்கு பழக்கமாகிவிடும். 
அது தானே தனது தேவைக்கு ஏற்பக் குடிக்க ஆரம்பிக்கும்.

பாலின் தரம்

உங்கள் பாலின் தடிப்பு ஆரம்பத்தில் கடும்புப் பாலாக இருந்தது போலன்றி பின் சில நாட்களில் நீர்த்தன்மையாக மாறும். 

உங்கள் குழந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பாலின் அடர்த்தியும் உள்ளடக்கமும் மாறும். முதல் ஓரிரு நாட்கள் போலன்றி அதன் நீர்த்தேவை அதிகரிப்பதால் அவ்வாறு இருந்தாலும் அதற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் யாவும் அதில் அடங்கியிருக்கும். 

எந்த விலையுர்ந்த மாப்பாலிலும் இல்லாத அளவு போஷனைப் பொருட்களும், நோய்த் தடுப்புக் கூறுகளும் தாய்ப்பாலில் மட்டுமே இருக்கிறது.

குழந்தை பசித்து அழும்போது உங்கள் மார்பைக் கொடுங்கள். 
தனது தேவைக்கு ஏற்ற அளவில் அருந்த அது பழகிக் கொள்ளும். 
மாறாக உங்கள் மற்ற வேலைகள் காரணமாக அதற்கு ஏற்ப பாலூட்டும் நேரங்களைத் தீர்மானிப்பது நல்ல முறையல்ல.


தாய்ப்பால் ஊட்டுவது ஒரு அற்புதமான அனுபவம். 
உங்களுக்கும் குழந்தைக்கும் அது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொடுக்கும்.

முழுக் குடும்பத்தையும் ஆனந்தமடைய வைக்கும்.

இன்று மட்டுமல்ல!

குழந்தை வளர்ந்த பின்னும் அதற்கு தாய்பால் உண்டதால் நல் ஆரோக்கியம் தொடர்ந்து கிட்டும்.
ஊட்டியவருக்கும்தான்.

வெற்றிகரமாகத் தாய்ப்பால் ஊட்டல் பற்றிய அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.




இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.

Post Comment

Sunday, May 16, 2010

தன்செயலின்றிப் புகைத்தலின் (Passive Smoking) ஆபத்துக்கள்

புகைத்தல் ஆபத்தானது என அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

புகைத்தலும் புற்றுநோய்களும்

அதனால் ஏற்படும் மிக முக்கிய பாதிப்பு நுரையீரல் புற்றுநோயாகும். புகைப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கும், அதனால் மரணமடைவதற்குமான சாத்தியம் புகைக்காதவர்களை விட 10 முதல் 20 மடங்கு அதிகமாகும்.


அமெரிக்க புள்ளிவிபரங்கள் படி அங்கு நுரையீரல் புற்றுநோயால் மரணமடையும் ஆண்களில் 90 சதவிகிதமும், பெண்களில் 80 சதவிகிதமும் புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

நுரையீரல் புற்றுநோயைத் தவிர, குரல்வளை, களம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சதையம், இரைப்பை, கருப்பைக் கழுத்து, குருதிப் புற்றுநோய் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களுக்கும் புகைத்தலே முக்கிய காரணமாகிறது. 

தன்செயலின்றிப் புகைத்தல்

நீங்கள் புகைக்காதவராக இருந்தபோதும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் புகைப்பதாலும் உங்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.


மற்றவர்கள் புகைத்து வெளிவரும் புகையில் 4000 ற்கு அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் குறைந்தது 50 புற்றுநோயை ஏற்படுத்துவையாகும்.

அவ்வாறான தன்செயலின்றிப் புகைத்தல் காரணமாக வருடாந்தம் 3000 பேர் அமெரிக்காவில் மரணமடைகிறார்கள்.

தன்செயலின்றிப் புகைத்தல் என்பது ஒருவரது சுற்றாடலிலுள்ள புகையிலையின் புகையால் Enviromental tobacoo smoke (ETS)  ஏற்படுகிறது.

இது இரண்டு வழிகளில் நேர்கிறது.
  • புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டின் எரியும் முனையிலிருந்து வெளிவரும் புகை. 
  • இரண்டாவது புகைப்பவர் வெளிவிடும் சுவாசக் காற்றோடு கலந்து வரும் புகையாகும். 
          புற்றுநோயைக் கொண்டு வருவது மாத்திரமின்றி வேறும் பல உடல் நலக் கேடுகளை இது ஏற்படுத்துகிறது.


          • மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
          •   தன்செயலின்றிப் புகைத்தல் காரணமான நெஞ்சில் சளி, இருமல், நெஞ்சு இறுக்கம், நுரையீரலின் செயற்பாடு குறைந்து இளைப்பு ஏற்படுதல் ஆகியனவும் ஏற்படும்.
          •  நுரையீரலில் கிருமி தொற்றி நியுமோனியா, புரங்கைட்டிஸ் ஆகியவை அதிகம் ஏற்படும்.
          • ஆஸ்த்மா வருவதற்கும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு மோசமடைவதற்கும் தன்செயலின்றிப் புகைத்தல் முக்கிய காரணமாகும்.
          • குழந்தைகளில் உட்காதில் கிருமித்தொற்று (Middle Ear Infections) அதிகளவு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
          • தன்செயலின்றிப் புகைத்தலால் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் ஆபத்துண்டு. அவர்கள் நிறை குறைந்த குழந்தைகளாகப் பிறப்பர்.
          • ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் திடீர் மரணம் அடைவதற்கு (Sudden Infant death Syndrome -SIDS அத்தகைய தன்செயலின்றிப் புகைத்தல் மற்றொரு காரணமாகும்.
          • குழந்தைகளிலும் வளர்ந்தவர்களிலும் காலத்திற்கு முந்திய மரணம் ஏற்படுவதற்கு தன்செயலின்றிப் புகைத்தலும் ஒரு காரணமாகும்.
          எவ்வாறு

          எவ்வாறு நீங்கள் தன்செயலின்றிப்  புகைத்தலுக்கு ஆளாகிறீர்கள்.

          • வேலைத்தளம், 
          • பொது இடங்கள், 
          • வீடு ஆகியனவே அதற்கான சாத்தியமுள்ள இடங்களாகும். 

          இலங்கையில் சினிமா அரங்கு, பஸ் போக்குவரத்து ஆகியவற்றில் புகைத்தலைத் தடை செய்திருப்பது முன்னேற்ரகரமான செயலாகும்.

          ஆயினும் வியாபார ஸ்தலங்களில் தடை செய்யப்படவில்லை.

          வீட்டினுள் புகைக்காதிருப்பது மிக முக்கியமாகும். வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் காற்றில் புகையின் செறிவு அதிகமாகும். இதனால் ஒருவரது மனைவி, குழந்தைகள், வீட்டில் உள்ள முதியவர்கள் என எல்லோரையும் பாதிக்கும்.

          தப்புவதற்கு வழி

          இதிலிருந்து நீங்கள் தப்புவதற்கு வழி என்ன?


          • வீட்டினுள் புகைப்பதைத் தவிருங்கள். 
          • நீங்கள் புகைக்காவிட்டாலும் வரும் விருந்தினர்கள் புகைப்பதை ஊக்குவிக்க வேண்டாம். 
          • வரவேற்பறையில் சாம்பல் கிண்ணம் வைக்காதீர்கள். 
          • காரில் பயணம் செய்யும்போது புகைக்கவே வேண்டாம்.
          நீங்கள் முன்மாதிரியாக இருந்து உங்கள் குடும்பத்தினர் புகைக்காதிருக்க வழி காட்டுங்கள். அது புகைக்காத சமூகத்தை நோக்கி முன்நகர்வதற்கான முதல் படியாகும்.

          புகைத்தல் பற்றிய எனது மற்றொரு கட்டுரையான   'வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? - புகைத்தல்' பற்றிப் படிக்க கிளிக் செய்யுங்கள்


          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

          தினக்குரல் பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்

          Post Comment

          Sunday, May 9, 2010

          சா.முன், சா.பின் - நீரிழிவு மாத்திரைகளை முன்நிறுத்தி

          நண்பன் எழுத்தாள நண்பர் தெணியான் ஒரு பகிடி சொல்லுவார்.


          இவர் ஒரு மருத்துவரிடம் சென்றபோது மருந்துகள் உறையில் போட்டுக் கொடுக்கப்பட்டன.

          அதில் மருந்துகள் தினமும் எத்தனை தடவை போட வேண்டும், ஒரு வேளைக்கு எத்தனை மாத்திரைகள் போன்ற குறிப்புகள் காணப்பட்டன.

          அதற்கு மேலதிகமாக காணப்பட்ட குறிப்புத்தான் இவரை அசர வைத்தன.

          "சாமுன் மருந்துகளைச் சாப்பிடலாம், ஆனால் சாவின் பின் எப்படிச் சாப்பிடுவது" என்று மருத்துவரைக் கேட்டாராம்.


          இதைக் கேட்ட டொக்டர் மயங்காத குறை என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

          சாப்பாட்டிற்கு முன், சாப்பாட்டிற்கு பின் என்பதை மருத்துவமனை உதவியாளர் சுருக்கமாக சா.முன், சா.பின் என எழுதியதால் வந்த வினை.

          இப்பொழுது எங்கு பார்த்தாலும் நீரிழிவு நோயாளிகள்.
          எல்லோருமே மருந்துகள் சாப்பிடுகிறார்கள்.
          பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள்.

          அவற்றைச் சா.முன், சா.பின் !!!  சாப்பாட்டுவதா என்ற சந்தேகம்.
          பல மருத்துவர்கள் இது பற்றி எதுவுமே தங்கள் நோயாளிகளுக்குத் தெளிவாகச் சொல்லாததால் பலரும் சாப்பாட்டிற்கு பின்தான் எடுக்கிறார்கள்.

          சா பின் அல்ல!!

          நீரிழிவு மாத்திரைகள் இரண்டு முக்கியமான முறைகளில் செயற்படுகின்றன.

          1.    சதையியைத் தூண்டி அதிக அளவு இன்சுலினைச் சுரக்கச் செய்து அதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கொஸ் அளவைக் கட்டுப்படுத்துவன.
          2.    மேலதிக இன்சுலினை சுரக்கச் செய்யாது, ஏற்கனவே உள்ளதை கூடிய வினைத்திறனுடன் செயற்படச் செய்வது.

          சாப்பாடிற்கு முன்

          முதலாவது வகையான, இன்சுலினைக் கூடியளவு சுரக்கச் செய்யும் நீரிழிவு மாத்திரைகளை சாப்பாட்டிற்கு முன்னர் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் உணவானது உண்டதும் சமிபாடடைந்து, உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன.

          அவ்வாறு அதிகரிக்கும்போது அதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இன்சுலின் அதிகளவில் தேவை. எனவே இன்சுலினைக் கூடுதலாகச் சுரக்கச் செய்யும் மாத்திரைகளை உணவுக்கு சுமார் 15 நிமிடங்கள் முன்னராகவே உட்கொண்டால், உணவின் பின் அதிகரிக்கும் இரத்த குளுக்கோஸ் அளவைச் சரிசெய்யத் தயார் நிலையில் இருக்கும்.

          ஆயினும் இவற்றை உணவுக்கு நீண்ட நேரம் (சுமார் 1 மணி நேரம்) முன்னபதாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்தால் இரத்தில் குளுக்கோஸ் குறைந்து களைப்பு, தலைச் சுற்று, வியர்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். எனவே 15 முதல் 30 நிமிடங்களுக்கு முன் எடுப்பதே நல்லது. சல்பனையில்யூரியா (Sulphanylureas) வகை Glibenclamide, Glipizide, Glimepride, Gliclazide போன்ற மருந்துகள் இந்த ரகத்தில் அடங்கும்.

          சாப்பாடிற்கு பின்

          இரண்டாவது வகையானவை இன்சுலின் சுரக்கச் செய்வதை அதிகரிக்காது அதன் செயற்திறனை அதிகரிப்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துபவை. இதில் மெட்போமின் மற்றும் தயசொலினிடயோன்ஸ் என இருவகை மருந்துகள் அடங்கும்.


          பெரும்பாலான நோயாளிகள் உபயோகிப்பது மெட்போமின் மாத்திரை (Metformin) ஆகும். இது குருதியில் உள்ள குளுக்கோசை கலங்களுக்கள் கூடிய திறனுடன் உட்செலுத்துவதன் மூலம் குரதியின் குளுக்கோஸ் அளவைக் குறைத்பதன் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது.

          அதேபோல தயசொலினிடயோன்ஸ் (Thiazolidinediones) நோயாளிகளின் உடலின் இன்சுலின் எதிர்ப்பை (Insulin Rsistance) முறியடித்து, இன்சுலினை கூடிய வினைத்திறனுடன் செயற்பட வைக்கும். அத்துடன் ஈரலில் இருந்து குளுக்கோஸ் வெளியேறுவதையும் தடுக்கிறது.

          தயசொலினிடயோன்ஸ் ரகத்தைச் சேர்ந்த   பயோகிளிடசோன் (Pioglitazone) மருந்து இங்கு இலங்கையில் Pioglit, Pionorm, Glizone, போன்ற பல வியாபாரப் பெயர்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

          இந்த இரண்டு வகை மருந்துகளும், இன்சுலினை அதிகமாகச் சுரக்கச் செய்யாது. இதனால் இரத்தில் குளுக்கோஸ் அளவை சரியான அளவிற்குக் கீழ் குறைக்கமாட்டாது. எனவே இவற்றை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு போன்ற விளைவுகள் வராமல் தடுக்கும் வண்ணம் உணவுக்கப் பின்னர் எடுப்பது நல்லது.

          சாப்பாடுடன்

          இதனைத் தவிர அக்கரபொஸ் Acarbose மற்றொரு வகை நீரிழிவு மாத்திரை உண்டு. இது நாம் உண்ணும் உணவில் உள்ள காபோஹைரேட் அதாவது மாப்பொருள் பதார்த்தங்கள் சமிபாடு அடைவதைக் குறைத்து அதன் மூலம் இரத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் தடுக்கும்.

          உணவுச் சமிபாட்டுடன் தொடர்புடைய மருந்து ஆதலால் இதனை உணவு உட்கொள்ளும் அதே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். முதல் வாய் உணவுடன் சப்பிச் சாப்பிடுவது சிறந்தது. சப்பிச் சாப்பிடப் பிரியமில்லாவிட்டால் சாப்பிட ஆரம்பிக்கும்போது சிறிதளவு நீருடன் விழுங்க வேண்டும்.

          சா.முன், சா.பின் விடயம் இப்பொழுது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும் என நம்புகிறேன். சா.முன், சா.பின் என்பதை உ.முன், உ.பின் (உணவின் முன், உணவின் பின்) என எழுதினால் பிரச்சனை ஏற்படாது என நீங்கள் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

          ஆனால் கீழே இருப்பவரின் கவலையிலும் நியாயம் இருக்கலாம்.


          இவ்வளவு காலமும் அவளின் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு  சாப்பாடே வெறுத்துப் போனவர் அவர் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

          நான் எழுதி 'தினக்குரல்' பத்திரிகையிலும் 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளிவந்த கட்டுரையின் மீள்பிரசுரம்.

          Post Comment

          Saturday, May 1, 2010

          டபுள் அக்ஷன் கருத்தடைச் சாதனம்

          டபுள் அக்ஷன் கருத்தடைச் சாதனம்
          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

          'இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை..' என்று சொல்லிக் கொண்டு வந்தவர் கையில் மருத்துவ ஆய்வு கூட ரிப்போர்ட் இருந்தது.

          அவரது முகத்தில் ஆச்சரியமும் எரிச்சலும்.
          அவள் முகத்திலோ கவலையும் இயலாமையும்.

          அவர் கையில் இருந்தது சிறுநீர்ப் பரிசோதனை முடிவு.
          கர்ப்பம் தங்கியிருப்பதாக ரிப்போர்ட் உறுதி செய்தது.

          அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள்.
          கடைசிக்கு இன்னமும் ஒரு வயது கூட ஆகவில்லை.


          'கருத்தடை முறைகள் எதையும் உபயோகிக்கவில்லையா?' என்று கேட்ட போது 'உறை பாவித்தேன்' என்று சொன்னார்.

          'பாவித்தும் எப்படித் தங்கியது எனத் தெரியவில்லை' என ஆச்சரியப்பட்டார்.


          தீர விசாரித்த போது 'இவருக்கு போடுவதில் விருப்பமில்லை. கடைசி நேரத்தில்தான் அவசர அவசரமாகப் போடுவார்' என்பதை மனைவி மிகுந்த சங்கோசத்துடன் தெளிவுபடுத்தினார்.

          ஆச்சரியப்படுவதுடனும் எரிச்சலுறுவதுடனும் அவருக்குப் பிரச்சனை முடிந்துவிடும். சுமக்கவும், பெறவும், வளர்க்கவும் சிரமப்படப் போவது அவள்தானே!

          ஆணுறை என்பது மிகவும் உபயோகமான ஒரு கருத்தடை முறையாகும். மிகவும் சரியான முறையில் உபயோகித்தால் 98% சதவிகிதம் வரை நிச்சயமானது.

          அதற்கு மேலாக 'தெரு மேயப் போவபவர்களுக்கு' எயிட்ஸ், கொனரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்கள் தொற்றாமலும் பாது காக்கிறது.

          ஆணுறை என்பது விறைத்திருக்கும் உறுப்பை மூடும்படி போடப்படும் ஒரு மென்மையான உறையாகும். விந்து வெளியேறியதும்  பெண் உறுப்பினுள் சென்று கருத்தரித்தலை அது தடுக்கும்.

          அத்துடன் பாலியல் நோய் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றாமலும் பாதுகாக்கிறது.

          ஆயினும் பூரண பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின் அதனைச் சரியான முறையில் அணிந்து கொள்வது முக்கியமாகும்.

          அணியும்போது அவதானிக்க வேண்டியவை

          • உறையிலிருந்து ஆணுறையை கவனமாக வெளியே எடுங்கள். நகம், பிளேட், கத்தரிக்கோல் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். அதில் சிறுசேதம் கூட ஏற்பட்டால் கூட வரப்போகும் துன்பம் உங்களுக்கும் மனைவிக்கும்தான்.
          • சுன்னத்து செய்யப்படாதவராயின் உறையை அணிவதற்கு முன்னர் உறுப்பின் முற்புறத் தோலை பின்னுக்கு இழுத்துவிடுங்கள்.
          •  உறையின் மூடிய பகுதி முற்புறம் இருக்குமாறு, வளையப் பகுதியை விறைத்த உறுப்பின் மீது உருட்டி விரித்து அணியுங்கள்.
          • அவ்வாறு அணியும்போது உறையின் நுனிப் பகுதியில் உள்ள குமிழ்ப் பகுதியில் காற்று இருந்தால் அதனை அழுத்தி வெளியேற்றி விடுங்கள். இல்லையேல் விந்து வெளியேறியதும் காற்றின் அழுத்தம் அதிகமாகி அது வெடித்து விந்து சிந்திவிடும் அபாயம் உள்ளது.

          • உறவின் ஆரம்ப நிலையிலேயே அணிந்து கொள்வது புத்திசாலித்தனமானது. ஆணுறையை உறுப்பு விறைப்பு அடைந்தவுடன் அணிந்து கொள்ள வேண்டுமெயன்றி, இறுதியாக விந்து வெளியேறும் தருணத்தில் அல்ல. கடைசி நேரத்தில் அணிந்து கொள்ளலாம் என நினைத்திருந்து, தற்செயலாக ஒரு சிறு துளி விந்து உள்ளே போவதினாலேயே பெரும்பாலான கர்ப்பங்கள் தங்கிவிடுகின்றன.
          • விந்து வெளியேறியதும் உடனடியாக குறியை வெளியே எடுத்துவிடுங்கள். ஆணுறை வழுகிவிடாது இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு அதன் வளையப் பகுதியை கைவிரல்களால் பற்றியபடி வெளியே எடுப்பது நல்லது. ஏனெனில் விந்து வெளியேறியதும் குறி சோர்வடைந்தவுடன் ஆணுறை கழன்றுவிடும்.
          • ஆணுறை வாங்கும்போதே அதன் பயன்பாடு காலாவதியாகும் திகதியைப் பார்த்து வாங்குங்கள்.
          • அதனை உபயோகிக்கும் முன்னர் அது மொரமெரப்பாக வெடிக்கும் தன்மையில் இருந்தால், அல்லது அதில் சிறு துவாரங்களோ வெடிப்புகளோ இருந்தால் அதனை ஒரு போதும் உபயோகிக்க வேண்டாம்.
          • ஒருபோதும் அவற்றை மீள உபயோக்கிக்க வேண்டாம். இவை ஒரு முறை பாவித்து கழித்துவிட வேண்டியதற்கு ஏற்பவே தயாரிக்கப்பட்டுள்ளன.
          • பாலியல் நோய்கள் தொற்றாதிருக்க வேண்டுமாயின் வழமையான பாலுறவு முறையின் போது மட்டுமின்றி, வாய்ப் புணர்ச்சி, குதப்புணர்ச்சி ஆகியவற்றின் போதும் அணிவது அவசியமாகும்.

          ஓவ்வொரு பாலுறவின் போதும் ஆணுறைiயை சரியான முறையில் உபயோகித்தால் 98% கர்ப்பம் தங்குவதைத் தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

          அதேபோல HIV நோய் தொற்றுவதை 80%-95% தடுக்கும் எனவும் தெரிகிறது. உறவின்போது சராசரியாக 2% ஆணுறைகள் வழுகிவிட அல்லது வெடித்துவிடக் கூடும்.

          ஆயினும் இது அதனை சரியான முறையால் அணியாததால்தான் நிகழ்வதாகத் தெரிகிறது. எனவே அதனை சரியான முறையில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

          தவறான கருத்துக்கள்

          • ஆணுறையானது உறுப்பை இறுகப் பற்றி விந்து முந்தி வெளியேறுவதற்குக் காரணமாகிறது எனச் சிலர் தவறாகக் கருதுவதுண்டு. உண்மையில் ஆணுறையை ஆரம்ப கட்டத்திலேயே (Foreplay) அணிந்து கொண்டால் உறுப்பு வழமையை விட அதிக நேரம் விறைப்புற்று இருப்பதுடன் விந்து முந்துவதையும் தடுக்கும்.

          • சிலர் தமது ஆணுறுப்பு பெரிதாக அல்லது சிறியதாக இருப்பதால் தமக்கு அவை பொருந்தாது என எண்ணுவதுண்டு.

          இதுவும் தவறான கருத்து. பெரும்பாலும் அவை ஒரே சைசில் கிடைத்தாலும் Latex என்ற பொருளால் செய்யப்பட்டிருப்பதால் உறுப்பின் அளவிற்கு ஏற்ப விரிந்து அல்லது சுருங்கிக் கொடுக்கும்.

          ஆரம்பித்தில் குறிப்பிட்ட தம்பதிகளுக்கு ஏன் கர்ப்பம் தங்கியது என்பது கட்டுரையை அவதானமாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

          ஏற்கனவே சொன்னது போல ஒவ்வொரு உறவின் போதும் ஆரம்பத்திலேயே சரியான முறையில் அணிந்தால் கர்ப்பம் தங்குவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

          அத்துடன் புற மேச்சலுக்குப் போனாலும் எயிட்ஸ் வராமல் தப்புவதற்கான சாத்தியமும் உண்டு. அதனால்தான் டபுள் அக்சன் எனச் சொல்லப்படுகிறது.

          முன்பு தமிழ் நாட்டில் புள்ளிராஜா விளம்பரங்கள் வெளிவந்தன.   கிளிக் பண்ணவும் இப்பொழுது தில்லிதுர கலக்குகின்றனவாம். இது சென்னை ஒன்லைன் செய்தி.

          ஆனால் கொண்டோமுக்கு வேறு பல பயன்களும் உண்டு.அதிலொன்று இது. உங்களுக்கும் அவ்வாறு பயன்படலாமே!



          இருந்தபோதும் இப்படிப் பாவிப்பதைவிட உண்மையான தேவைக்கு பயனபடுத்துவது முக்கியமாகும்.

          இருக்கிறம் சஞ்சிகையில் நான் எழுதிய கட்டுரை சிறு மாற்றங்களுடன் மீள்பிரசுரமாகிறது.

          Post Comment