Sunday, March 28, 2010

சின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?

பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது,
மெருகேறுகிறது.
தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது.

பருவமடைதல் செய்யும் அற்புதம் இது.

முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள்.

ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல.

ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள்.

ஆண் குழந்தை 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது?

இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அப்பொழுதா?

இல்லை!

ஆண்களைப் பொறுத்தவரையில் பருவமடைதல் என்பது ஒரு நாளில் திடீரென ஏற்படும் ஒரு நிகழ்வு அல்ல.
படிப்படியாக ஏற்படும் மாற்றமாகும்.
உடல் வளர்கிறது.
குரல் தடிப்படைகிறது.
மீசை அரும்புகிறது.
ஏனைய இடங்களிலும் முடி வளரச்சி ஏற்படுகிறது.

9 முதல் 14 வயதுவரையான காலத்தில் பொதுவாக ஏற்படுகிறது.

ஒவ்வொரு பையனும் தனது வளர்ச்சிக் கட்டத்தின் ஓரிடத்தில் பருவமடைகிறான்.


ஆயினும் பெரும்பாலும் ஆண்கள் பருவடைதல் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. தகப்பன் கூட மகனுடன் பேசுவதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களுடன் பேசுவதில்லை.

இதற்குக் காரணம் அவர்கள் மனத்தில் உள்ள தயக்கம் அல்லது வெட்க உணர்வு மட்டும்தான் என்பதில்லை. வளர்ந்த பல பெரியவர்களுக்கும் இவை பற்றிய தெளிவுகள் இல்லை.

பையனின் சில சந்தேகங்கள்

உடல் வளர்ச்சி

பல பையன்கள் தனது வயது ஒத்த பெண் பிள்ளைகள் தன்னை விடத் தோற்றம் உள்ளவர்களாக வளர்வது கண்டு மனம் வெதும்புவதுண்டு. சில வேளைகளில் அவனது தங்கையே அவனைவிட வளர்தியானவளாக இருப்பதுண்டு.

இதற்குக் காரணம் பெண்கள் சற்று முன்னராகவே பருவமடைவதுதான். பெண்கள் 8 முதல் 13 வயதில் பருவமடையும்போது பையன்களுக்கு அது 9 முதல் 14 வயதாகக் காலம் சுணங்குகிறது.

அதற்குப் பின்னர் பொதுவாக பையன்கள் விரைவாக வளர்ந்து பெண்களைவிட உயர்ந்து விடுவது உண்டு. இருந்த போதும் இதில் பரம்பரை அம்சமும் முக்கிய இடம் வகிக்கிறது. பொதுவாக உயரமுள்ள குடும்பத்து பிள்ளைகள் உயரமாக வளர்வர்.

எதிர் பாலினரின் வளரச்சி மட்டுமின்றி தனது நண்பர்களின் உடல் மாற்றங்கள் கூட சில பையன்களைக் கலவரப்படுத்துகின்றன.

தனது நண்பனைப் போல தனக்கு விரிந்த மார்பும், உயர்ந்த தோளும் இல்லையே என சில பையன்கள் கேட்பதுண்டு.


விளையாட்டு மைதானத்தில் நண்பனின் தொப்புளுக்கு கீழும் அரையிலும் முடி அரும்புவது கண்டு,

"எனக்கு அவ்வாறில்லையே எனது வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா"

என மனதிற்குள் கவலை கொள்ளும் பையன்கள் அதிகம்.

எல்லோரது வளர்ச்சியும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் உடல் இயல்புக்கு ஏற்ற விதத்தில் வளர்கிறார்கள். பருவமடைகிறார்கள்.

 உடற்பயிற்சிகள் உதவுமா?

எடை தூக்குவது போன்ற கடினமான உடற் பயிற்சிகள் செய்தால் விரைவில் மற்றவர்களை போல திடமாக வளரலாமா எனச் சிலர் முயற்சிப்பதுண்டு. உண்மையில் உங்களது உடலானது பருவமடைந்து அத்தகைய பயிற்சிகளுக்குத் தயாராகாத நிலையில் இருந்தால் அது நல்லதல்ல.

சற்றுப் பொறுங்கள். அது வரை சைக்கிள் ஓட்டம், நீச்சல், போன்ற சாதாரண பயிச்சிகளும் போஷாக்குள்ள உணவும் எடுத்து உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.

பாலுணர்வு

தினமும் பாடசாலையால் வரும்போது அல்லது போகும்போது ஒரு பெண் பிள்ளை உங்கள் கண்களில் படுகிறாள்.
உங்களுக்குள் ஏதோ ஆர்வம். தினமும் கவனிக்கிறீர்கள். ஒரு நாள் அவள் நிமிர்ந்து உங்கள் கண்ணுக்குள் ஊடுருவிப் பார்க்கிறாள்.
சற்று துடிப்பான பெண் என்றால் ஹாய் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று வைப்போம்.

உங்கள் உடல் சிலிர்க்கிறது.
முகத்தில் வியர்வை அரும்புகிறது.
உங்கள் நெஞ்சுக்குள் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கின்றன.
கனவுகளில் அவள் குட்டைப் பாவாடை எகிறிப் பறக்க, மலர்ந்து நடனமாடுகிறாள்.

இரவு படுக்கப் போகும்போதும் அவள் நினைவு அருட்டுகிறது.
அடுத்த சில நாட்களுக்கு அவளது நினைவு அடிக்கடி வருகிறது.

"ஏன் இப்படி நினைவு வருகிறது. இது என்ன உணர்வு"

இது ஒரு ஈர்ப்பு. பாலியல் ரீதியானது.
ஆனால் பாலுணர்வு அல்ல.
தெளிவாகப் புரியச் சற்றுக் காலம் எடுக்கும்.

அதே நேரம் உங்கள் நண்பன் மற்றொரு பெண்ணின் அழகு பற்றி நாள் முழுக்கப் பேசுவான்.
அவளது குணங்களை மெச்சுவான்.
ஆனால் உங்களுக்கு அவை ஆர்வம் ஊட்டுவதாக இருக்காது.

காரணம் என்னவெனில் ஒவ்வொருவருக்கும் அவருக்கே உரிய விருப்பு வெறுப்புகள் உள்ளன. கவர்ச்சிகள் உள்ளன.

அதனால் அவனை அருட்டியவள் உங்களுக்கு துச்சமாகப் படலாம்.

விரும்பிய ஒருவரைப் பற்றி மீள மீள நினைப்பது அப் பருவ காலத்திற்கான உணர்வுதான்.

இதற்குக் காரணம் என்ன? உங்கள் உடலிலுள்ள சில ஹோர்மோன்கள் அதிகம் சுரக்க ஆரம்பித்துவிட்டன.

அதனால் உங்கள் உணர்வுகள் வலுப் பெறுகின்றன.
இதனால் குழப்பமடைய வேண்டியதில்லை.

வாழ்க்கையின் ஒரு புது வட்டத்திற்குள் நீங்கள் நுழைகிறீர்கள் எனலாம்.

முடி வளர்தல்

நீங்கள் பருவடைய ஆரம்பிக்கும்போது ஏற்படும் மற்றொரு மாற்றம் உடல் முடியாகும்.
முகத்தில் மீசை தாடி அரும்பும்,
நெஞ்சில் வளரும்.
அக்குளுக்குள் தடிப்பாக வளரும்.
கீழே உங்கள் உறுப்புக்கு மேலும் தோன்றும்.


இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. பயப்பட வேண்டியதும் இல்லை.

ஆனால் இது எவ்வாறு நிகழ்கிறது?

இதுவும் ஹோர்மோன சுரப்பிகளால் ஆவதுதான்.
ஆரம்பத்தில் உங்கள் அடரீனல் சுரபி சுரக்கத் தொடங்கும்.
பின் மூளையில் உள்ள பிற்றியுடரி சுரப்பி அதிகம் சுரக்கும்.

இதனால் உங்கள் விதைகள் வளரும்.
அதிலிருந்து பாலியல் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் சுரக்கும்.
முடி வளரும்.
ஏனைய மாற்றங்களும் தொடரும்.
எனவே இவை யாவும் இயற்கை நியதிதான்.


சற்று வளர்ந்து கறுத்தால் ஷேவ் எடுப்பது பற்றி அப்பாவுடன் கதைக்கலாம். அவ்வளவுதான்.

வியர்வை

"இவன்றை வேர்வை மணக்கிறது"

பல அம்மாக்கள் சொல்வார்கள்.
அவனது சேர்ட்டை துவைக்க எடுக்கும்போதுதான் சில அம்மாக்களுக்கு புரிய ஆரம்பிக்கிறது.

எல்லோருக்கும் தான் வியர்க்கிறது. ஆனால் பருவமடையும் காலத்தில் உங்கள் உடல் ஹோர்மோன்கள் முழு அளவில் வேலை செய்கின்றன. எனவே வியர்வை அதிகமாகவே சுரக்கச் செய்யும்.

வியர்வையில் நீர் மட்டுமே உள்ளது.
ஆனால் மிகச் சிறிதளவு அமோனியா, யூரியா, சீனி, உப்பு ஆகியவையும் இருக்கும்.

வியர்வை உண்மையில் மணமற்றது.

ஆயினும் உடலிலுள்ள பக்றீரியா கிருமிகள் சேரும்போது மணம் ஏற்படுகிறது.

இதை நீக்க என்ன செய்யலாம்? அடிக்கடி உடலைக் கழுவுங்கள். குளியுங்கள். முக்கியமாக விளையாடினால் அல்லது வேலை செய்தால் உடனடியாகக் குளியுங்கள்.

இப்பொழுது மணம் நீக்கிகள் (Deodorants) கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம்.

விறைப்படைதல்

முதன் முதலாக உங்கள் ஆண்குறி விறைப்பது ஆச்சரியமாகவும் புதினமாகவும் இருக்கும்.
சிறுநீர்கழிக்கும் போது ஏற்படுவது அல்ல.
விறைப்பு என்பது உங்கள் ஆண் உறுப்பிற்குள் இரத்தம் நிரம்பி இறுக்குவதாகும்.
அந்நேரத்தில் ஆண்குறி பெருத்து விறைத்து நிமிர்ந்து நிற்கும்.
பருவமடையும் காலத்தில் இது காரணம் இன்றியும் அடிக்கடி நடக்கும். இதுவும் இயற்கையான செயற்பாடுதான்.

இது எந்த நேரத்திலும் நிகழலாம். ஒரு நாளுக்கு ஒரு தடவையோ பல தடவைகளோ நிகழலாம். வயது, பாலியில் ரீதியான உங்கள் வளர்ச்சி, செயற்பாடு, தூக்கத்தின் அளவு போன்ற பல விடயங்கள் இதற்குக் காரணமாகலாம். பகலில் மட்டுமல்ல, தூக்கத்திலும் நிகழலாம்.

தூக்கத்தில் விந்து வெளியேறல்

அந்நேரம் நீங்கள் விழித்து எழுந்து உங்கள் உள்ளாடை நனைந்திருப்பதைக் காணக் கூடும். இதனை ஆங்கிலத்தில் (Nocturnal emisions) என்போம். வெளியேறிய திரவம்தான் விந்து Semen எனப்படுகிறது. இப்பொழுது உங்கள் உடல் அதிகளவு டெஸ்டஸ்டரோன் ஹோர்மோனை உற்பத்தி செய்வதே இதற்குக் காரணம்.

பெண்களுக்கு மாதவிடாய் வருவதோடு இதனை ஒப்பிடலாம். ஆனால் இரண்டுமே வித்தியாசமானவை. ஆண்களின் விந்தில் அவனின் உயிர் அணுக்கள் உள்ளன. இவை பெண்ணின் கருமுட்டையுடன் இணைந்தால் கரு உற்பத்தியாகிப் பிள்ளையாக பிறக்கும்.


ஆனால் பெண்களின் மாதவிடாய் இரத்தத்தில் அவளது கரு முட்டை இருப்பதில்லை. கரு முட்டையானது மாதவிடாய் வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரே சூலகத்திலிருந்து வெளியேறிவிடும்.

அந்நேரத்தில் ஆணின் விந்துடன் இணைந்தால் கரு உற்பத்தியாகும். கரு உண்டாகாத கருப்பையின் உட்புறம் தன்னைப் புத்துயிர்புச் செய்து அடுத்த மாதத்திற்குத் தயாராவதே பீரியட் எனலாம்.

தூக்கத்தில் இவ்வாறு விந்து வெளியேறுவதை ஸ்கலிதமாதல் என்றும் சொல்வதுண்டு.
இவ்வாறு நிகழும்போது பல பையன்கள் இதையிட்டு வெட்கப்படுவதுண்டு. வேறு பலர் குற்ற உணர்வு கொள்வதும் உண்டு.
இதனால் உடல் நலத்தில் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

ஆற்றலுள்ள ஆண்மையின் வெளிப்பாடு இது எனலாம்.
இது இயற்கையான செயற்பாடு.
பருவமடையும் காலத்தில் மட்டுமல்ல வயதான பின்னரும் பலருக்கு ஏற்படுகிறது.

ஆண் பெரிய பிள்ளையாகும் விடயத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளக்குவது அவசியம்.


தாயினால் இவை பற்றி தனது மகனுடன் பேசுவதில் தயக்கம் இருக்கலாம்.

ஆனால் தந்தையர் மறக்காமல் சொல்ல வேண்டியதாகும்.

தாங்கள் பருவமடையும் வயதில் பட்ட மன அவஸ்தைகள் தங்கள் மகனுக்கும் ஏற்படாமலிருக்கச் செய்வது அவர்களது கடமையாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம்
0.0.0.0.0.0.

Post Comment

Wednesday, March 24, 2010

காசநோய் - தெளிவும் தடுப்பும்

அவன் ஒரு பாடசாலை மாணவன். உயர்தர வகுப்பில் படிக்கிறான்.
அவனுக்கு அடிக்கடி காய்ச்சல் வந்து கொண்டிருந்தது.
அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி மருந்தெடுக்க மாறிவிடும்.

விரைவில் உயர்தர வகுப்புப் பரீட்சை வர இருக்கிறது.
இந்த நேரத்தில் அடிக்கடி காய்ச்சல் வருவதால் படிப்பு கெடுகிறதே எனக் கவலையடைந்த தாயாருடன் வந்திருந்தான்.
விசாரித்த போது முன்பு போல உணவுகளை ஆசையோடு சாப்பிடுவதில்லை என்பது தெரியவந்தது.
சற்று எடையும் குறைந்திருந்தது.


இரத்தம் பரிசோதனை, சளிப் பரிசோதனை எடுத்த போது அவை வித்தியாசம் காட்டவில்லை. சாதாரணமாக இருந்தன.

எக்ஸ்ரே எடுத்த போது நுரையீரல் பாதிப்பின்றி இருந்தது. ஆனால் நுரையீரலுக்கு வெளியே நெஞ்சறையில் நீர் தேங்கியிருந்தது.


காசநோய் காரணமாக சுரந்த நீர்.

காசநோய் என்பது பெரும்பாலும் நுரையீரலைத் தாக்கும் நோய் (Pulmonary Tuberculosis) ஆகும்.

ஆனால் நுரையீரலில் மட்டும் வருவதில்லை. இவனுக்கு வந்தது
Tuberculus Pleural effusion


இவற்றைத் தவிர சிறுநீரகம், எலும்பு, மூளை எனப் பல உறுப்புகளையும் தாக்க வல்லது.

இப்பொழுது நல்ல சிகிச்சை கிடைக்கிறது. பொதுவாக 6 மாதங்கள் வரை தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட முற்றாகக் குணமடைந்துவிடும்.

காசநோய், சயரோகம், ரீ.பீ எனப் பலவாறு அழைக்கப்படும் இந் நோய் தடிமன் போல காற்றினால் பரவும் நோயாகும். அதாவது ஒருவர் தும்மும் போதும் இருமும் போதும் வெளிப்படும் கிருமிகள் காற்றின் ஊடாக மற்றவருக்கும் பரவுகின்றன.


இன்று உலக காசநோய் தினமாகும்.

இந் நோய் பற்றிப் பூரணமாகத் தெரிந்து கொள்ள இதோ ஒரு இணைப்பைத் தருகிறேன்.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம். வட இலங்கை காசநோய் தடுப்புச் சங்கத்தின் இணையத்தளமாகும்.

டொக்டர்.சி.யமுனானந்தாவின் தலைமைத்துவத்தில் இது இயங்குகிறது.
  • காசநோய் என்றால் என்ன?
  • காசநோயின் அறிகுறிகள்
  • பரவும் விதம்
  • காசநோய் வராதிருக்க
  • காசநோய் வந்தால்
  • காசநோயும் கர்ப்பிணிகளும்
  • காசநோயும் போசாக்கும்
  • டொட் என்றால்
போன்ற தலைப்புகளில் தெளிவான விளக்கங்கள் கிடைக்கின்றன.
வடமாகாண காசநோய் விழிப்புணர்வுக்கான இணையதளம் சென்று விபரமாகப் படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

இலங்கையில் இந்நோய் பற்றிய தரவுகள் உலக சுகாதார இணையத் தளத்தில் கிடைக்கிறது. கிளிக் பண்ணுங்கள்

2007ல்இலங்கை சனத்தொகை 19 மில்லியனாகும். 100,000 பேரில் 79 பேருக்கு என்ற விகிதத்தில் இந்நோய் பரவியிருக்கிறது. இது ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்ததாகும் என்றும் சொல்கிறது.

இந்நோய் பற்றி விளக்கமாக அறிந்து அது பராவாமலிருக்கும் முயற்சிக்குக் கைகொடுப்போம்.

Post Comment

Sunday, March 21, 2010

வேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்

வேப்பமரத்து நிழல் குளிர்மையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்து 80-90 வயதுகள் வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எமது மூதாதையர்களை நினைக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியிருக்கிறது.


இயற்கையோடு இசைந்த 
வாழ்வின் சுகங்களை எண்ணும்போது,
தொலைத்த எமது வாழ்வின் வசந்தங்களை
ஏக்கப் பெரு மூச்சுகளாக
வெளியேற்றவே முடிகிறது.


வேம்பு எமது வாழ்வோடு ஒன்றியது.

வேப்பம் இலை கிருமி நீக்கியாக,
வேப்பம் பூ வடகமாக,

வேப்பம் கொட்டை நுளம்புத் திரி இல்லாத காலங்களில் புகை போடுவதற்காக,
வேப்பம் பிசின் ஒட்டும் பசையாக,
வேப்பம் பலகை கதவு, நிலை, தளபாடங்கள் செய்யவென
நினைந்து ஏங்கவே முடிகிறது.

வேப்பெண்ணையை மறந்து விட்டேன் என எண்ணாதீர்கள்.
தொண்டை நோ வந்தால் வீட்டுச் சிகிச்சையாக வெளிப்பக்கமாகப் பூசுவதாக பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுகம் கிடைக்காவிட்டால் கூட அடுத்த முறையும் அதைப் பூசுவதில் அவர்களுக்குத் தயக்கமில்லை.

'குடித்துப் பார்க்கவில்லையா?' என கிண்டல் வெளித் தெரியாமல் கேட்டால் 'குடிக்கிறது கஷ்டம்' என அப்பாவித்தனமாச் சொல்லுவார்களே ஒழிய அதன் சாதக பாதகங்களைப் புரிந்த சிலமன் இருக்காது.


இன்றைய நவீன காலத்தில் அதுவும் நான் மருத்துவம் செய்யும் பெருநகரில் குடிப்பவர் எவருமில்லாது இருக்கலாம்.

ஆயினும் கிராமப்புறங்களில் குடிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

தொண்டை நோவுக்காக அல்லாவிடினும் குடற் பூச்சிகளுக்காக வேப்பெண்ணைய் குடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

1982ல் வெளியான மருத்துவ ஏட்டில் (Lancet Feb 1981 28:1 (8218):487-9)

"இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லந்து, மலேசியா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதனை வெளிப் பூச்சு மருந்தாகப் பாவிப்பதாகவும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முதல் சிறு பிள்ளைகளுக்கு குறைந்த அளவில் குடிக்கக் கொடுப்பார்கள்"
என்றும் சொல்கிறது.

தொடர்ந்து அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் விபரித்திருகிறது.

ஆனால் இது பழம் கதையல்ல.
இன்றும் தொடர்கிறது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாத Ceylon Medical Journal சஞ்சிகையில்
இது பற்றிய புதிய விபரம் வெளியாகி இருக்கிறது.

பூச்சி மருந்தாக வீட்டார், 14 மாதக் குழந்தைக்கு
வேப்பெண்ணெயைக் கொடுத்த போது
மூளை மண்டலம் பாதிப்புற்று
வாந்தி,
மயக்கம்,
முழுமையான வலிப்பு (Generalized Seizures)

ஆகிய ஆபத்தான அறிகுறிகளுடன் குழந்தைகளுக்கான கொழும்பு லேடி றிட்ஸ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ஈரல் வீக்கம்,
ஈரல் பாதிப்பு,
Metabolic Acidosis போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டது.

வேகமான மூச்சிளைப்பும் ஏற்படுவதுண்டு.

இது Toxic Encephalopathy எனும் நோயாகும். ஆயினும் தீவிர சிகிச்சையின் பின் காப்பாற்றப்பட்டது.

வேப்பெண்ணெயில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கொழுப்பு அமிலங்களான (Nimbin, Nibinin. Nimbidin,Nimbidilol)  மற்றும் சல்பர் (Sulphur)சார்ந்த வேதியல் பொருட்களே வேப்பெண்ணெயின் ஆபத்தான விளைவுகளுக்குக் காரணமாகும்.

மருத்துவ சஞ்சிகைகளை ஆராய்ந்தால் இவ்வாறான பல சம்பவங்களைக் காண முடிகிறது.

வேப்பெண்ணெய் குடித்து இந்நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் காப்பாற்றப்பட்ட போதும்
பல மரணங்களும் நிகழ்ந்தமை ஆவணப் படுத்தப்படுள்ளன.

ஆயினும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய
ஆனால் மருத்துவ குணமுள்ளதாக நம்பப்படும்
எண்ணெயானது
எத்தகைய கட்டுப்பாடுகளும் இன்றி
எங்கும் கட்டுப்பாடின்றி
விற்பனையாகிறது.

'வெளிப் பூச்சுக்கு மட்டும் பாவகிக்கவும், குடிக்கக் கூடாது'
என்ற எச்சரிக்கையையாவது லேபளில் ஒட்டியிருக்கலாம்.

ஆனால் அப்படிச் செய்ய வேண்டும் என்ற சட்டவிதிகள் எதுவும் இதுவரை கிடையாது.

பாரம்பரிய மருத்துவ முறைகளில் எமது சமுதாயத்தினர் பலருக்கும் உள்ள நம்பிக்கை அளப்பரியது.


தாய் மண் மீது பற்றுக் கொண்ட எம்மவர்கள் நாம்.

எமது ஏனைய பாரம்பரிய முறைகளையும் பேணிப் பாதுகாத்து ஊக்குவிக்க முயல்வதில் தப்பேதும் இல்லை.

அது அவசியமும் கூட.

ஆயினும் பகுத்தறிந்து பார்க்காது ஆதரவும் ஊக்குவிப்பும் செய்வது அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை வரலாறு புகட்டியிருக்கிறது.


வேப்பெண்ணெய் கசத்தாலும்
அதன் மருத்துவ குணங்கள் பற்றி இனிமையான எண்ணங்களைச் சுமக்கும் எம்மவர்கள்
அதன் ஆபத்தான அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Post Comment

Sunday, March 14, 2010

எடை குறைப்பு - மருந்துகள் உதவுமா?

அதீத எடை என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. மேற்கத்தைய நாடுகளில் மட்டும் பேசப்பட்ட இவ்விடயம் இப்பொழுது ஆசிய நாடுகளிலும் தனது அழுக்கு முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

அதீத எடையின் விளைவுகளும் குறைக்கும் வழிகளும்

எடை அதிகரிப்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதயநோய்கள், எலும்பு மூட்டுத் தேய்வுகள், போன்ற பல நோய்கள் வரும் என்பதை இப்பொழுது பலரும் உணர்கிறார்கள்.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவசியம் என்ற உணர்வு மேலாங்கி வருகிறது.

காலையில் வீதிகளிலும் கடற்கரை ஓரங்களிலும் நடைப் பயிற்சி செய்பவர் எண்ணிக்கை அதிகரிப்பிலிருந்து இதனை அறிய முடிகிறது.
இளவயதினர் பெரும்பாலும் உடற்பயிற்சி நிலையங்களை நாடுகிறார்கள்.

ஆனால் மிகப் பெரும்பாலானவர்கள் இது பற்றிய எவ்வித உணர்வும் இன்றி சதா காலமும் வாய்க்குள் எதையாவது போட்டு மென்று கொண்டே இருக்கிறார்கள்.

இதனால் அவர்களது எடை அதிகரிக்கிறது. மேற் கூறிய நோய்கள் வந்து சேர்வதை தடுக்க முடியாது போய்விடுகிறது. நோயினால் ஏற்படும் உபாதைகள் தாக்கத் தொடங்கிய பின்னரே அதைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

ஆயினும் இத்தனை காலமும் சோம்பிக் கிடந்த உடலும், மென்று கொண்டெ இருந்த வாயும் சொல்வழி கேட்கின்றனவா?

எடையைக் குறைக்க வேறுவழிகள்

எடையைக் குறைக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என அப்படிப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

நிச்சயம் மருந்துகள் இருக்கவே செய்கின்றன.

மிகத் தீவிரமாகக் குறைக்க வேண்டியவர்களுக்கு சத்திரசிகிச்சையும் உண்டு.

சத்திரசிகிச்சை

Gastroplasty என்ற சிகிச்சை முறை உண்டு. இரைபையை வெட்டிச் சிறியதாக்குவதால் கொஞ்சமாக உணவை உட்கொண்டதுமே வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.


ஆயினும் இது முற்றிலும் பாதுகாப்பான சத்திரசிகிச்சை என்று சொல்ல முடியாது. இச் சத்திரசிகிச்சைக்குப் பின் இலங்கையில் ஒரு பெண் இறந்த செய்தி பத்திரிகைகளில் பரவலாக அடிபட்டது ஞாபகம் இருக்கலாம்.

மருந்துகள்

தமது எடையைக் குறைக்க, சுய முயற்சி இன்றி, மருந்துகளின் உதவியை நாடுகிறார்கள்.

எடை குறைப்பு மருந்துகளை உபயோகிக்கும் வரைதான் எடை குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் சேர்ந்தால்தான் அம் மருந்துகள் பலன் கொடுக்கும்.
எடை குறைப்பு மருந்துகள் விலை அதிகமானவை.

வெறுமனே மருந்தை மட்டும் போட்டுக் கொண்டிருந்தால் எடை குறையாமல் போவது மாத்திரமின்றி அம் மருந்துகளின் பக்கவிளைவுகளையும் எதிர் நோக்க நேரிடும்.

சிபியுட்ரமின் (Sibutramine) 

எடை குறைப்பு மருந்துகளில் பிரபலமானது சிபியுட்ரமின் (Sibutramine) என்பதாகும். அதனால் வரக் கூடிய பக்கவிளைவுகளைப் பட்டியலிட்டால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என நோயாளி வேகமாக விட்டு ஓடுவார். அவ்வாறு ஓடினால் நிறை குறையும் என்பதை மட்டும் நல்ல விளைவாகக் கொள்ளலாம்.

மருந்தின் பக்க விளைவுகள்


மலச்சிக்கல், வாய் உலருதல். ஓங்காளம்,
உணவுகளின் சுவை கெடுதல், வயிற்றோட்டம்,
மூலநோய் தீவிரமடைதல்,
இருதயத் துடிப்பு வேகமாதல்,
இருதயத் துடிப்பின் ஒழுங்கு லயம் மாற்றமுறல்,
உயர்இரத்த அழுத்தம்,
தலைப்பாரம், தூக்கக் குறைபாடு,
தலையிடி,
மனப்பதற்றம், மனச்சோர்வு நோய்,
வலிப்பு, திடீரென வந்துபோகும் மறதி,
பாலியல் செயற்பாட்டில் குறைபாடு,
ஒழுங்கற்ற மாதவிடாய்,
சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,
பார்வை குறைவடைதல் ஏற்படலாம்.

அத்துடன் குருதியில் வெண்துளி சிறுதுணிக்கைகளின் (Platelet) எண்ணிக்கை குறைவடைதல்,
இவ்வாறு குறைந்தால் குருதியின் உறையும் தன்மை குறையும்,
அவ்வாறு குருதியின் உறையும்தன்மை குறைந்தால் சிறிய காயங்களிலிருந்து கூட அதிக இரத்தம் பெருக்கெடுக்கலாம்,
தானாகவே சருமத்தின் கீழ் இரத்தம் கசியலாம்.

மேலும் மருந்தின் ஒவ்வாமை விளைவு காரணமாக
தோல் அரிப்பு, தோற்தடிப்பு,
சரும அழற்சி போன்றவையும் ஏற்படலாம்.

அமெரிக்காவில் இருதய நோயாளர் உபயோகிக்கத் தடை

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆணையம் (FDA) இம் மருந்து பாவனை பற்றி இருதய நோயாளருக்கு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளமை கவனிக்கத்தக்கது.

இதுவரை காலமும் இருதய நோயாளர்கள் இம் மருந்தை அவதானத்துடன் உபயோகிக்கலாம் எனக் கூறினார்கள்.

ஆனால் தற்போதைய அறிக்கைப்படி இம் மருந்தை இருதய நோயாளர்கள் பாவிக்கக் கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமின்றி நோயாளருக்கு வழங்கும் மருந்துப் பெட்டியில் இந்த எச்சரிக்கையை தெளிவாக அச்சிடவும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தகைய நோயாளிகளுக்கு எச்சரிக்கை

  1.  மாரடைப்பு, அஞ்சைனா போன்ற இருதய நோய்கள்
  2. இருதய வழுவல் (Heart failure) 
  3. இருதய துடிப்பின் லயக்குறைபாடுகள் (Arrhythmia )
  4. பக்கவாதம் மற்றும் திடீரென வந்து மறையும் பக்கவாதம்
  5. கடுமையான உயர் இரத்த அழுத்தம்
  6. கால் கை போன்ற பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய் நோய்கள் (Peripheral arterial disease) 

வேறு மருந்துகள்

எடையைக் குறைக்க வேறு மருந்துகளும் உள்ளன. ஓலிஸ்டட் (Orlistat) என்பது மற்றொரு பிரபல மருந்தாகும்.

இது உணவுக்கால்வாயில் செயற்பட்டு கொழுப்புகள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மருந்தாகும்.

கொழுப்புப் பொருட்கள் உறிஞ்சப்படாததால் இவை மலவாயிலால் தானே ஒழுகக் கூடியது மிக முக்கிய பிரச்சனையாகும்.
அவசரமாக மலம் கழிக்க நேருதல்,
கட்டுப்படுத்த முடியாமல் திடீரென மலம் வெளியேறுதல்,
வயிற்றுப் பொருமல்,
வயிற்று வலி போன்றவை இம் மருந்தின் பக்க விளைவுகளாகும்.

இவற்றைத் தவிர 

அடிக்கடி சளி பிடித்தல்,
முரசு கரைதல்,
களைப்பு,
தலையிடி, மனப்பதற்றம்,
மாதவிடாய்க் குளப்படிகள்,
சிறுநீரகத் தொற்று நோய்கள்,
குருதியில் சீனியின் அளவு திடீரெனக் குறைதல்,
மூலத்தால் இரத்தம் வடிதல், ஈரல் பாதிப்பு

போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படலாம்.

பக்க விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை.

சில பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம்.
சிலருக்குப் பல பக்கவிளைவுகள் சேர்ந்தே தோன்றலாம்.
வேறு சிலருக்கு எதுவுமே ஏற்படாமலும் போகலாம்.

அது அவரவர் அதிர்ஷ்டம்.

இருந்தபோதும் அத்தனை பக்கவிளைவுகள் வரக் கூடிய சாத்தியத்துடன் மருந்தைப் பாவித்துத்தான் எடையைக் குறைக்க வேண்டுமா உங்கள் முன் உள்ள தேர்வாகும்.


மருந்துகளை உபயோகித்து எடையைக் குறைத்தாலும்
  • உணவுக் கட்டுப்பாடு, 
  • உடற் பயிற்சி
  • வாழ்க்கை முறை மாற்றங்கள் 
  • இல்லையேல் மருந்தை நிறுத்தியதும் மீண்டும் எடை அதிகரிக்கும் என்பது நிச்சயம்.

உங்கள் எடைக் குறைப்பு முயற்சியை எங்கு ஆரம்பிக்கப் போகிறீர்கள்?

தொடர்ந்து நிலைக்கப் போகிற வாழ்க்கை முறை மாற்றங்களிலா
அல்லது
கடுமையான பக்கவிளைவுகளுடன் குறுகிய காலம் மட்டும் நிற்கப் போகும் மருந்துகளிலா?

நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0
நன்றி:- இருக்கிறம்

Post Comment

Sunday, March 7, 2010

வாய்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? - Halitosis

அந்த முதியவர் வந்து உட்கார்ந்து தனது நோயைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.


நான் எனது சுழலும் கதிரையைச் சற்றுப் பின் நகர்த்திக் கொண்டேன்.

இப்பொழுது என்னால் சலனமின்றி அவர் சொல்வதைக் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வாய்நாற்றம் என்பது பொதுவாக அப்பிரச்சனை உள்ளவரை விட அவரோடு தொடர்பாடல் செய்ய வேண்டியவர்களையே முதலில் உணரச் செய்கிறது.

அவரைச் சுற்றியுள்ளவர்கள் இவரது வாய்நாற்றத்தை உணர்ந்தும் நாகரீகம் கருதி நேரடியாகச் சொல்வதைத் தவிர்ப்பர்.

அந்த மணம் இவருக்கு பழக்கப்பட்டுப் போவதால் இவரது நாசி அதை உணர்ந்து அச் செய்தியை மூளைக்கக் கடத்தத் தவறிவிடுவதால் இவ்வாறு நேர்கிறது.

அதே நேரம் வாய்நாற்றம் உள்ளவர்களையே அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது என்பதும் உண்மையே.

மற்றவர்கள் இவரோடு உரையாடுவதை விரைவில் வெட்டிவிடவே முயல்வர். இதனால் தொழில் ரீதியாகவும்,
நட்பு உறவு ரீதிகளாகவும் பாதிப்புகள் ஏற்படுவதுடன்,
தாழ்வு மனப்பான்மைக்கும் இட்டுச் செல்லும்.

பொதுவாக எவருக்குமே காலையில் நித்திரைவிட்டு எழும்போது வாய் நாற்றம் சற்று இருக்கவே செய்யும். இது இயற்கையானது. தூக்கத்தின்போது உமிழ் நீர் சுரப்பது குறைவாக இருப்பதால் வாய் வரண்டு கிருமிகள் அதிகரிப்பதால் இது நேர்கிறது.

நாம் பல்விளக்கி, வாய் கொப்பளிக்க அது நீங்கும். அத்தகைய உதயகால வாய்நாற்றமானது வாயைத் திறந்து கொண்டு தூங்குபவர்களில் அதிகமாகும்.

பல்லுகள் மிதப்பாக இருப்பவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள் குறட்டை விடுபவர்களில் அதிகம் இருக்கக் கூடும்.

இதைத் தவிர காய்ச்சல், வயிற்றோட்டம், டொன்சிலைடிஸ், போன்ற பல்வேறு நோய்களின் போதும் ஏற்படலாம். ஆயினும் நோய் குணமாக இவை மாறிவிடும்.


உள்ளி, வெங்காயம், சீஸ் போன்ற உணவுச் சுவையூட்டிகளும், மது, புகைத்தல் போன்ற பழக்கங்களும் காரணமாகின்றன.

இவற்றிற்கு மணத்தைக் கொடுக்கும் இராசாயனப் பதார்த்தங்கள் உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து மீண்டும் சுவாசக் காற்றில் வெளிப்படுவதாலேயே வாய் மணம் ஏற்படுகின்றது.

ஆயினும் நாட்பட்ட அல்லது நீண்ட காலம் தொடரும் வாய்நாற்றம் மிகவும் பிரச்சனைக்கு உரியது.

வாயை ஒழுங்காகச் சுத்தம் செய்யாததால் பற்களுக்கிடையே உணவுத் துகள்கள் தங்கி நிற்கும்போது அதில் பக்டீரியா தொற்று ஏற்படுவதாலேயே இது நேர்கிறது. பக்றீரியா தொற்றுள்ள சீழ் நாறுவதை ஒத்தது இது.

பற்களிடையே இடைவெளி இருப்பவர்களும், ஒழுங்கான அமைப்பின்றி பல்வரிசை தாறுமாறக இருப்பவர்களும் கூடிய அவதானம் எடுப்பது அவசியம்.


ஏனெனில் அத்தகையவர்கள் அதிக அக்கறையோடு சுத்தம் செய்தால் மாத்திரமே பற்களுக்கு இடையே சிக்கியுள்ள உணவுத் துகள்களை முற்றாக அகற்ற முடியும்.

பற்சொத்தை உள்ளவர்கள் முரசு கரைதல் போன்ற முரசு நோயுள்ளவர்களிலும் வாய்நாற்றம் அதிகம் ஏற்படுகிறது.

நீரிழிவு கட்டுப்பாடில் இல்லாதவர்களில் முரசு நோய்கள் அதிகம். அதனால் வாய்நாற்றமும் அதிகம்.

மூக்கில் உள்ளபிரச்சனைகளும் வாய் நாற்றத்திற்குக் காரணமாகலாம்.


மூக்கடைப்பு உள்ளவர்கள், மூக்கில் நீர்க்கட்டி (Nasal Polyp) உள்ளவர்களிலும் ஏற்படுகிறது.

சிறு பிள்ளைகளில் இவ்வாறான மணம் இருந்தால் அது ஏதாவது மூக்கினுள் வைக்கப்பட்ட அந்நியப் பொருள் காரணமாகலாம்.

மூக்கினுள் குண்டுமணி, ரப்பர் துண்டுகள், அழிரப்பர் போன்ற பல பொருட்களை பிள்ளைகளின் மூக்கினுள் இருந்து அகற்றி துர்நாற்றத்தை ஒழித்த அனுபவம் எனக்கு நிறையவே உண்டு.

உணவுகளால் வாய் நாற்றம் ஏற்படுவது போலவே உணவு உண்ணமால் பட்டினி கிடப்பதும், விரதம் அனுஷ்டிப்பதும் கூட வாய் நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அதற்குக் காரணம் பட்டினியிருக்கும் நேரங்களில் எமது உடலின் சக்தித் தேவைகளுக்காக கொழுப்பு கரைக்கப்படுகிறது. இதன்போது 'கீட்டோன்' என்ற இரசாயனப் பொருள் உற்பத்தியாகிறது. இது சுவாசத்தோடு வெளிவரும்போது வாய்நாற்றமாகத் தோன்றும்.

இவ்வாறு பல காரணங்களைச் சொன்னாலும் பெரும்பாலும் வாயிலிருந்தே இது ஏற்படுகிறது.

  • ஏற்கனவே குறிப்பிட்டது போல சரியாகச் சுத்தம் செய்யாததால் பல் இடுக்குகளுக்குள்ளும், முரசுகளிலும ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுத்துகள் முக்கிய காரணமாகும். 
  • ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் பக்டிரீயா கிருமிகள் சேர்ந்து அழுகிச் சேதமடையும். அதன்போது வெளியேறும் வாயுக்கள்தான் துர்நாற்றத்திற்குக் காரணமாகும்.
  • பற்களின் மேல் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்களில் உமிழ் நீரும், பக்டீரியா கிருமிகளும் சேரும்போது பிளாக் (Dental Plaque) எனப்படும் மென் படலமாகப் படியும். இதில் கல்சியமும் சேர்ந்து இறுகிக் காரையாகப் (Tartar)படியும். 
  • அத்தகைய காரையை அகற்றாவிட்டால் பற்கள் ஆட்டம் கண்டு விரைவில் விழுந்துவிடும். ஆதலால் பல்மருத்துவரிடம் காட்டி அவற்றைச் சுத்தம் செய்வது அவசியம். காரை இறுக்கமாக பற்களின் மேல் ஒட்டிக்கொள்ளும். பற்களுக்கும் முரசுக்கும் இடையேயும் பரவி முரசு நோய்களுக்கும் இட்டுச் செல்லும். இதனால் முரசுகள் அழற்சியடைந்து வீங்கும். பற்களை துலக்கும் போது இரத்;தம் வடிவதற்குக் காரணம் இத்தகைய (Gingivitis) முரசு நோய்தான். இவை யாவுமே வாய் நாற்றத்தைக் கொண்டுவரும்.
  • சிலருக்கு நாக்கின் பிற்பகுதியில் வெள்ளையாக அழுக்குப் படர்வதுண்டு. இது பொதுவாக மூக்கின் மேற்பாகத்திலிருந்து சளி உட்புறமாகக் கசிவதால் (Post Nasal Drip) ஏற்படலாம். இதுவும் வாய்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.

இவ்வாறு வாய்நாற்றத்திற்குக் காரணங்கள் பல. அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவரத்தி செய்ய வாய்நாற்றம் முற்றாக நீங்கும்.

வாய்நாற்றத்தை நீக்க நீங்கள் அவதானிக்க வேண்டிய விடயங்களை மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி :- தினக்குரல்

Post Comment