Sunday, February 28, 2010

நெறிக்கட்டியுடன் காய்ச்சல்

நோயாளியை விட கூட வந்த தாய் அதிக பதற்றத்தில் இருந்தாள். வேகமாக வந்ததில் அவளுக்குத்தான் மூச்சு இளைத்தது.

"ஒரு கிழமையாக பஞ்சிப்பட்டுக் கொண்டிருந்தான். தலையிடி,         சாப்பிடுறான் இல்லை.                                                                                                      வயிறும் நோகுது என்றான்.                                                                                                  இப்ப பார்த்தால் காச்சல் 101 லை அடிக்கிது.                                             தொண்டையும் நோகுதாம்.                                                                                         திரும்பிக் காட்டடா தம்பி. கழுத்திலை கட்டி கட்டியா வீக்கம்.                 பாருங்கோ டொக்டர். என்ன வருத்தமோ தெரியவில்லை"

அவளைப் பொறுத்த வரையில் காச்சலும் கட்டிகளும் மிகுந்த அபாயமான அறிகுறிகள்தான். ஏதாவது புற்றுநோயாக இருக்குமோ எனப் பயம்.

பதினைந்தே ஆன சின்ன வயதில் இப்படி ஒரு நோயா மகனுக்கு என்ற தனது ஏக்கத்தை மகனுக்கு முன் வைத்துச் சொல்ல முடியாது வார்த்தைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தாள்.

நெறிக்கட்டிக் காச்சல்

ஆனால் அவனுக்கு வந்திருப்பது ஆபத்தான நோயல்ல. சாதாரண ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். ஆங்கிலத்தில் Glandular Fever அல்லது Infectious Mononucleosis என்பார்கள்.                              

நெறிக்கட்டிக் காச்சல் அல்லது நிணநீர்க்கட்டிக் காய்ச்சல் என நாம் சொல்லலாம்.

பெரும்பாலான பிள்ளைகளுக்கு மிகச் சிறுவயதிலேயே வந்து தானே மாறிவிடுவதுண்டு.                                                                                                                       


2-3 வயதிற்கு இடையில் அவ்வாறு வரும்போது வழமையான அறிகுறிகள் இருப்பதில்லை. 

வேறு சாதாரண காய்ச்சல் போல வந்து கரைச்சல் கொடுக்காது குணமாகிவிடும்.                                                                                                               அதனால் கவனத்தில் எடுக்கப்படாது போய்விடும்.                                                      

இந் நோய் இருப்பதை உறுதி செய்ய மொனோ ஸ்பொட் (Mono spot) என்ற இரத்தப் பரிசோதனை உதவும்.

அறிகுறிகள்

குழந்தைப் பருவத்தில் வராதவர்களுக்கு பெரும்பாலும் அவர்களது பதின்ம வயதில் வருவதுண்டு.

ஆரம்பத்தில் உடலுழைவு, தலையிடி, களைப்பு, பசியின்மை போன்ற சாதாரண அறிகுறிகளே இருக்கும். சிலருக்கு வயிற்றுநோ இருக்கக் கூடும்.

சுமார் ஓரிரு வாரம் செல்ல தொண்டை நோவுடன் காச்சல் தோன்றும். 



ரொன்சில்கள் சிவந்து வீங்கியிருக்கும்.                                                                

அத்துடன் கழுத்துப் பகுதியில் நெறிகள் தோன்றும். அக்குள், அரைப் பகுதிகளிலும் நெறிகள் வருவதுண்டு.

மண்ணீரல், ஈரல் ஆகியவையும் இந்நேரத்தில் வீங்குவதுண்டு.                   அதுவே வயிற்றுநோவிற்குக் காரணமாகும்.                                                     அத்தோடு பசியின்மை, ஓங்காளம் போன்றவற்றிற்கும் இவையே காரணமாகும்.

தொண்டை நோவைக் கண்டவுடன் தமக்குத்தாமே சுயவைத்தியம் செய்யும் சிலர் அமொக்சிசிலின் என்ற நுண்ணுயிர் கொல்லி மருந்தை வாங்கிப் போடுவதுண்டு. அப்படியானவர்களுக்கு தோல் சிவந்து அரிப்பு எடுப்பது போன்ற பக்கவிளைவு ஏற்படலாம்.

இது ஒரு வைரஸ் நோயாதலால் எந்த நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் உதவாது.                                                                                                              உபயோகிக்கவும் கூடாது.                                                                                                


காய்ச்சல் தானே விரைவில் குணமாகிவிடும். ஆயினும் களைப்புத்தன்மை சில வாரங்களுக்கு நீடிக்கக் கூடும்.                                                                                                     
ஒரு முறை இக்காச்சல் வந்தால் உடலுக்கு பூரண எதிர்புச் சக்தி கிடைத்துவிடுவதால் மீண்டும் வருவதில்லை.

எப்படித் தொற்றும்

நோயுற்று இருப்பவரின் எச்சிலில் இந்நோயைத் தோற்றுவிக்கும் வைரஸ் கிருமிகள் Epstein-Barr (EB) virus) நிறைய இருக்கும்.
 


இதனால் வாயினால் முத்தமிட்டால் உடனடியாகத் தொற்றும்.
 

நோயுற்றவர் உபயோகித்த கப், கிளாஸ் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிப்பதாலும் தொற்றும்.

நோய் முற்றாகக் குணமாகிய பின்னரும் பலரது உமிழ்நீரில் தொடர்ந்து இருக்கும். அவர்களிலிருந்து நோய் பின்னரும் தொற்றலாம்.                   


இவர்களை நோய் காவிகள் என்பர்.

அடிக்கடி கை கழுவுவது, மற்றவர்கள் கோப்பை, கிளாஸ், பிளேட் போன்றவற்றை உபயோகிக்காது இருத்தல் போன்ற அடிப்படைச் சுகாதார முறைகளைக் கடைப்பிடித்தால் இந்நோயை மட்டுமல்ல மேலும் பல நோய்கள் தொற்றாமல் எம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

கிருமி தொற்றினாலும் அது நோயாக வெளிப்பட 4-6 வாரங்கள் செல்லலாம். நோயுற்றவரை வாயில் முத்தமிட்டாலும், முன்பு ஒருமுறை நோய் வந்தவருக்கு மீண்டும் வர வாய்ப்பில்லை.

எப்படியாயினும் வேகமாகப் பரவும் தொற்றுநோய் அல்ல. இக்காரணங்களால் நோயுற்றவரை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியதில்லை. காய்ச்சல் மாறி உடம்பு திடமானால் பாடசாலைக்குச் செல்லலாம். தொழிலும் செய்யலாம். இதற்கு எதிரான தடுப்பு ஊசி கிடையாது.

மருத்துவம்

காய்ச்சல், உடல் அலுப்பு இருந்தால் பரசிட்டமோல் மருந்து உபயோகிக்கலாம். ஆயினும் ஏற்கனவெ குறிப்பட்டது போல நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உபயோகிப்பது கூடாது.                                                                                            


காச்சலுக்கு அஸ்பிரின் டிஸ்பிரின் உபயோகிக்க வேண்டாம். வைரஸ் காச்சலுக்கு அவற்றை உபயொகித்தால் ரெயிஸ் சின்ரோம் என்ற ஆபத்தான விளைவு ஏற்படலாம்.

போதிய ஓய்வு எடுப்பதுதான் முக்கியமானது.                                                   அதற்காக படுக்கையில் கிடக்க வேண்டும் என்றில்லை.                          களைப்பைக் கொடுக்கும் கடுமையான வேலைகளையும், கடும் உடற் பயிற்சிகளையும் நோயுள்ள போது தவிர்க்க வேண்டும். 


தனது உடல் சொல்வதைக் கேட்டால் போதுமானது. அது போதும் என்று சொன்னால் அதற்கு மேலாக உடலை வருத்த வேண்டாம்.

விரும்பியதை உண்ணலாம். பத்தியம் எதுவும் கிடையாது. ஆயினும் பசியின்மை, வயிற்றுப் பிரட்டு காரணமாக உண்ண முடியவில்லை எனில் போசாக்குள்ள பானங்களாக அடிக்கடி அருந்த வேண்டும்.

உப்பு நீரால் அலசிக் கொப்பளித்தால் தொண்டை வலி தீரும்.

'பயந்தாங்கொள்ளி மனுசி. சின்னக் காய்சலுக்கு டொக்டரட்டை ஓடுது' என்று ஆரம்பத்தில் குறிப்பட்ட பெண்ணை நக்கலடித்து அலட்சியப்படுத்தினால் தவறு செய்வது நீங்கள்தான்.

ஏனெனில் லிம்போமா, ஹொட்ச்கின்ஸ் போன்ற ஆபத்தான நோய்களின் முதல் அறிகுறிகளும் நிணநீர்க்கட்டி வீக்கம்தான். கசநோய்(TB) சிபிலிஸ் போன்ற தொற்று நோய்களிலும் ஏற்படும். எனவே எத்தகைய நிணநீர்க்கட்டி வீக்கம் (நெறிக்கட்டி) ஏற்பட்டாலும் மருத்துவ ஆலோசனை அவசியம்.
 

எம்.கே.முருகானந்தன்.


நன்றி:- தினக்குரல்

Post Comment

Sunday, February 21, 2010

அவசரகால கருத்தடை Emergency Contraception

பதற்றத்தோடு எனது அறைக்குள் நுழைந்தார்கள்.

அவள் முகத்தில் ஆழ்ந்த சோகம்.

அவன் முகத்திலும் இனம் புரியாத உணரச்சிப் பெருகளிப்பு. சஞ்சலமா, பதற்றமா, என்ன செய்வதென்று தெரியாத திகைப்பா?


இருவருக்குமே பேச முடியவில்லை. ஊமைகள் அல்ல.

சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் கூடவில்லை.

எங்கே ஆரம்பிப்பது?
எப்படிச் சொல்வது.
டொக்டர் என்ன நினைப்பாரோ, ஏசுவாரோ?

அவர்கள் காதலர்கள்.
திருமணம் செய்ய இருக்கிறார்கள்.
ஆனால் உடனடியாக அல்ல.
தமது கல்வியை முடித்த பின்னர்.

ஆனால் திடீரென எதிர்பாராத சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. பெற்றோர்களுக்குச் சொல்ல முடியாது. நண்பர்களுடனும் ஆலோசனை பெற முடியாது.

அவர்கள் கேடு கெட்டவர்கள் அல்ல.
மிகவும் கண்ணியமான காதல்.
ஆனாலும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு தனிமையான நேரத்தில் அது எதிர்பாராத விதமாக நடந்து விட்டது.

அவளுக்கு வழமையாக வர வேண்டிய பீரியட் பிந்தி விடவில்லை.

அந்தளவுக்கு அவர்கள் காலம் தாழ்த்தவில்லை.

சம்பவம் நடந்த மறு நாள் காலையே என்னிடம் வந்துவிட்டார்கள்.

என்ன சொல்ல வருகிறேன் என்பது அனுபவப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல சற்றுப் பொது அறிவுள்ளவர்களுக்கும் புரிந்திருக்கும்.

ஆம்! அவசர கருத்தடை பற்றியே சொல்கிறேன்.

அவசர கருத்தடை என்றால் என்ன?

கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகிக்காத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கான முறையாகும்.

இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரக் கருத்தடை


அதில் இரண்டு வகைகள் உண்டு.

1. அவசர கருத்தடை மாத்திரைகள் ஆகும். மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான்.

இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன progesterone இருக்கிறது. 

இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது POSTINOR-2 என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். 
மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். 

ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும்.

2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. 

உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம் (copper IUD) ஆகும்

இக் கட்டுரையில் நாம் அவசர கருத்தடை மாத்திரைகள் பற்றியே பேசுகிறோம்.
எவ்வாறு செயற்படுகிறது

மூன்று வழிகளில் இது நடைபெறலாம். 


  • சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். 
  • அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். 
  • அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.

எவ்வாறு உபயோகிப்பது

எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். 

ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது. 
இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். 
ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது.

ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். 


அவ்வாறெனில் முதல் மாத்திரையை மீண்டும் எடுப்பது அவசியம்.

அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே. வழமையான கருத்தடை முறை அல்ல. 

இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும். 

வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு.

யாருக்கு உதவும்

எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். எத்தகைய தருணங்களில் கை கொடுக்கும்.

  1. வேறு கருத்தடை முறைகள் எதனையும் உபயோகிக்காதிருந்தால்
  2.  நீங்கள் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோராலும் ஏனையோராலும் பல பெண்கள் இவ்வாறான வன் புணர்வுகளுக்கு ஆளாகியிருப்பது தெரிந்ததே. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவும். அது சுலபமாகப் கிடைகக் கூடிய வசதியும் இருந்திருந்தால் பல பெண்களின் சோகக் கண்ணீரை துடைத்திருக்கலாம்.
  3. வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால்
  4. ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து உள்ளே சென்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்பட்டால் 
  5. நீங்கள் கருத்தடை மாத்திரை பாவிப்பவராயின் மூன்று தினங்கள் அடுத்தடுத்து அதை எடுக்க மறந்திருந்தால். 
  6. கருத்தடை ஊசி போடுபவராயின் அதனை சரியான திகதியில் போடத் தவறியிருந்தால். 
  7. நீங்கள் பயன்படுத்தும் எந்தக் கருத்தடை முறையாயினும் அது தவறியிருக்கும் என எண்ணினால்

மேலும் தகவல்கள் பெற இங்கே கிளிக் பண்ணுங்கள்
 

மற்றொரு கதை

இன்னொரு பெண் தனக்கு அடிக்கடி தீட்டு வருவதாக சொல்லி அதை நிறுத்தும்படி கேட்டு மருத்துவத்திற்கு வந்திருந்தாள். 


அதற்கான காரணம் புரியவில்லை. பலகேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை. 

கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா என்று வினவிய போது அவசர கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.
 

'எத்தனை நாளுக்கு ஒரு முறை உபயோகிக்க நேரிடும் என நாகரீகமாகக் கேட்கப்பட்டது.
 

'வாரத்திற்கு இரண்டு மூன்று தடைவவைகள் பாவிப்பேன் என்றாள்.'
 

அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும்?
 

எமது நாட்டில் அவ்வாறே. 

அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் ஒவ்வொரு ஜனதிபதிகளினதும் அரசாட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவதால் நாடு படும் பாடு உங்களுக்கு ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்



நன்றி்- இருக்கிறம்

0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, February 14, 2010

அதீத எடையும் புற்றுநோய்களும்



அவர் வந்து உட்கார்ந்ததுபோது கதிரை வேதனையில் கிரீச்சிட்டு அனுங்கியது!

தனது வருத்தம் பற்றிக் கூறுவதற்கிடையில் அவரது கண்கள் நகர்ந்து கட்டிலின் கீழ் இருந்த எடைகாட்டியில் தங்கி நிலைத்தன.

இவரது நடவடிக்கைகள் எனக்குப் புதினமானவை அல்ல.

பல வருடங்களானப் பார்த்துப் பழக்கம்.

அப் பெண்ணுக்கு தனது எடை பற்றி அக்கறை எப்பொழுதும் உண்டு.

எப்பொழுது வந்தாலும் தனது எடையைப் பார்க்காமல் விட மாட்டாள். எடையை எப்படிக் குறைப்பது என்று ஆலோசனையும் தவறாது கேட்பாள்.

ஐந்து அடி மூன்று அங்குல உயரமுள்ள அவரது தற்போதைய எடை 110 கிலோ ஆகும்.

அடுத்த முறை வரும்போது நிச்சயம் ஒரு கிலோ ஆவது கூடியிருக்கும் என்பது நிச்சயம்.

ஒவ்வொரு தடவையும் எடையைக் குறைப்பது பற்றிய ஆலோசனையைக் கேட்பதுடன் சரி.

அடுத்த முறை வரும்போதுதான் மீண்டும் இப்பிரச்சனை பற்றி சிந்திப்பார் போலும்.

வயது நாற்பது ஏற்கனவே நீரிழிவும் பிரஸரும் வந்து விட்டன.

அதீத எடை என்பது உலகளாவிய ரீதியில் சவாலான ஆரோக்கியப் பிரச்சனையாக உருவாகிவருகிறது. அதீத எடையை எப்படிக் கண்டறிவது?

கண்ணால் காண்பதும் பொய் என்பார்கள்.

அதீத எடை என்பது உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ கண்ணால் பார்த்துச் சொல்லும் கருத்து அல்ல.

உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு எடை இருக்கிறதா என்பதைக் விஞ்ஞான ரீதியில் கணிக்கிறார்கள்.

அவ்வாறு கணிப்பதை உடற்திணிவு (Body Mass Index) என்பதாகக் குறிக்கிறார்கள். இது எடையை கிலோகிராமில் அளந்து அதனை, மீட்டறில் எடையின் வர்க்கத்தால் பிரிக்க வருவதாகும் (BMI=Kg/m2).

உடற்திணிவு
30க்க மேலிருந்தால் அது (body-mass index >30 kg/m2) அதீத எடை எனச் சொல்லப்படுகிறது.
25 முதல் 30ற்குள் இருந்தால் அதிக எடை (Over Weight) எனலாம்.

ஆயினும் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில்
ஆரோக்கியமான எடை என்பது
உடற்திணிவில் 23ற்குள் இருக்க வேண்டும்.

அதீத எடையே பல்வேறு விதமான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

அத்துடன் இருதய நோய்கள், நீரிழிவு, எலும்புத் தேய்வு நோய் போன்றவற்றுடன் நேரடியாகவும் தொடர்புள்ளதாக இருக்கிறது.

இப்பொழுது ஒரு ஆய்வு அதீத எடைக்கும் புற்று நோய்க்கும் தொடர்புள்ளது என்கிறது. இது ஏதோ ஒரு சிலரில் செய்யப்பட்ட ஆய்வு அல்ல. ஐம்பதிற்கும் அறுபத்து நான்கு வயதிற்கும் இடைப்பட்ட 1.2 மில்லியன் பெண்களில் 5 முதல் 7 வருடங்களுக்குச் செய்யப்பட்டது.

அதீத எடையுள்ளவர்கள் ஏனையவர்களைவிட 10 முதல் 17 சதவிகிதம் சிலவகைப் புற்றுநோய்களுக்கு ஆளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை, சிறுநீரகம், சதையம், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களிடையேயான மார்புப் புற்று நோய்,
மாதவிடாய் நிற்காத பெண்களிடையேயான மலக்குடல் புற்றுநோய், களப்புற்று நோய்,
லியூக்கிமியா எனப்படும் குருதிப் புற்றுநோய்,
மல்ரிப்பிள் மையலோமா,
நொன் ஹொட்ஸகின் லிம்போமா

ஆகியன அவ்வாறு எடையுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்ட புற்று நோய்களாகும்.

கலவரமடையாதீர்கள்.

இதன் அர்த்தம் என்ன?

எடை அதிகரித்தால் புற்றுநோய் கட்டாயம் வரும் என்பதா?

அப்படியல்ல!

புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம், அதிலும் முக்கியமாக முன்பு சொல்லப்பட்ட புற்றுநோய்கள் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்பதாகும்.

இது பெண்களில் செய்யப்பட்டது.

ஆண்களிலும் 25 வயதிற்கு மேற்பட்ட இள வயதுள்ளவர்களிலும் செய்யப்பட்ட இன்னுமொரு ஆய்வும் அதீத எடைக்கும் சிலவகைப் புற்றுநோய்களுக்கும் இடையே தொடர்புள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே எடையை அவதானியுங்கள்.

பிற்காலத்தில் வரக் கூடிய புற்றுநோய்க்காக மட்டுமல்ல மிகவிரைவில் வந்து உங்கள் வாழ்வின் எல்லையைக் குறுக்கப்போகிற நீரிழிவு, பிரஸர், மாரடைப்பு போன்றவற்றைத் தடுப்பதற்காகவுமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Journal Watch General Medicine December 6, 2007

நன்றி:- தினக்குரல்

Post Comment

Sunday, February 7, 2010

வாழ்வை எரிப்பதில் நாட்டமோ? – புகைத்தல் - Smoking

அண்மையில் மரணச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள நேர்ந்தது.


மனைவி பேயடித்தவள் போல விச்ராந்தியாக நின்றாள்.

பட்டப் படிப்பின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் மகளும், ஏ எல் படித்துக் கொண்டிருக்கும் மகனும் கதறி அழுத காட்சி மனதை உருக்கியது.

அறுபது வயதையும் எட்டாத அவன் விபத்தில் சாகவில்லை. திடீர் நோய் தாக்கவில்லை.

தானே தேடிக் கொண்ட வினை. புகைப்பவர்களின் இருமல் (Smokers Cough) என அலட்சியம் பண்ணிய அவனது எடையும் குறைய ஆரம்பித்த போதுதான் சுவாசப்பை புற்றுநோய் எனத் தெரியவந்தது.

மரணத்துடனான ஓட்டப் போட்டியில் அவனால் முந்த முடியவில்லை.

புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள் இன்று இருக்க முடியாது.
அச்சு, இலத்திரனியல் ஊடகம் என எல்லாமே தாராளமாகப் பேசிவிட்டன.

சொல்வதற்கு நிறைய உண்டு.
கேட்பவர் அதிகமில்லை.

அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.


எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.

புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.

நாளாந்தம் ஏற்படக் கூடிய சில பாதிப்புகள் இவை.

• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.

ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.

• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய்
(cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.

• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.


• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.

• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.


30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.



• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.

• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.

• ஒருவர் நாளாந்தம் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Post Comment