காரணம் வேறொன்றும் இல்லை நான் அதற்குக் கொடுத்த விளக்க வாசகம்தான். அது பலரையும் யோசிக்க வைத்துவிட்டது.
எதிர்மாறாக மற்றொரு மரியாதைக்குரிய மனிதர் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
அவரது கையில் ஒரு மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை
ரிப்போட் இருந்தது.
நல்ல காலம் இது நெகட்டிவ் ஆக இருந்தது.
இரண்டுமே எயிட்ஸ் பற்றியவைதான்.
அவருக்கு மணஉறவுக்கு அப்பால் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கணவன் ஊரோடு இல்லாதது இவருக்கு வாசியாகிவிட்டது.
இடையிடையே தாகம் தணித்துக் கொள்வார்.
ஆயினும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஆணுறை உபயோகிக்கத் தவறுவதேயில்லை.
நண்பர் ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். முத்தமிடும் போதும் தொற்றுமென!
"நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டுமின்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடுவதால் தொற்றும்" என இணையப் படத்தில் வாசகம் எழுதியதற்காகவே என்னிடம் சந்தேகம் தீர்க்கப் பலர் தொடர்பு கொண்டார்கள்.
அக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்
உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி (HIV) தொற்றமா?
அதற்கு விடை கூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக முன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும்.
• HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.
• அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
• வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும்.
மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.
H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.
ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வாழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையால் நோயைத் தேட முன்னிற்கிறான்.
HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன.
1. நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
2. நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவுவதற்குக் காரணமாகிறது.
3. தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும் பின் பாலூட்டுவதாலும்.
4. இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா
இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.
ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.
இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.
எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.
ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?
எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.
இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
நோயுள்ளவர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல்லது தனது வாய் நாற்றத்தை மறைப்பதற்காக,
உறவுக்கு முன் குளித்து தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறார்.
அத்துடன் வாயையும் பிரஸ் பண்ணிக் கொள்கிறார்.
ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது.
அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது.
உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.
அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது. அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும்.
உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.
HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய இங்கே கிளிக்குங்கள்
உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.
HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய இங்கே கிளிக்குங்கள்
மற்றொரு சாத்தியத்தையும் கவனியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத்தில் மற்றவரது உதட்டைக் கடித்துவிடுகிறார்.
நுண்ணிய சிறுகாயம்தான்,
ஆனால் அதன் ஊடாக கிருமி பரவிவிடலாம் அல்லவா?
இவ்வாறு உறவின் போதல்ல, ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.
மற்றொருவர் வந்தார்.
அவர் அடிக்கடி மேயப் போவார்.
ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவதேயில்லை.
ஆனால் அவருக்கு மற்றொரு பழக்கம் இருந்தது.
அதுதான் வாய்ப் புணர்ச்சி. மிக ஆபத்தானது.
நல்ல காலம்! இரத்தப் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றியிருக்கவில்லை.
விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என நம்பலாம்.
பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு தெரியாது பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடுவதுண்டு.
இருந்தபோதும், பலரும் பயப்படுவதுபோல
தொட்டுப் பேசுவதாலோ,
அருகில் இருப்பதாலோ,
உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொளவதாலோ HIV தொற்றுவதில்லை.
காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.
இவ்வாறேல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாமலிருக்க இயற்கை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத இச்சையால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல்கிறோம்.
முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள்விக்கு வருவோம்.
"உலகில் ஒரே ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல" என்று நீங்கள் கருதினால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
சந்தோசமாக, ஆசைப்பட்டவருக்கு,
விரும்பியவருக்கு எல்லாம்
வாயால் ஆழ்
முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.
அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.
இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.
மேற் கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட செல்லலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- இருக்கிறம் - 01-15 ஏப்ரல் 2010.
0.0.0.0.0.0



4 comments:
தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் இந்த
கொடிய நோயினை விரட்டி விடலாம்,
நன்றி மருத்துவர் ஐயா.
ஒழுக்கத்தை அறிவுறுத்தும் நல்ல விளக்கவுரை
ஆம் சைவகொத்துப்பரோட்டா. மருந்துகளால் முடியாததை தூய மனத்தினால் செய்துவிடலாம்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்