நீரிழிவு நோயாளர்கள் சீனியும் எடுக்கலாம் என்று சொன்னால் சுவீப் விழுந்ததுபோல இருக்கும்.
சீனி மற்றும் ஏனைய இனிப்புகளை எடுக்கக் கூடாது என்றே இதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்படுகிறது.
ஆனால் அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் நீரிழிவாளர்களின் உணவு முறையில் இனிப்பிற்கும் நிச்சயம் ஓரளவு இடம் உண்டு.
புதிய கோட்பாடு
இப்பொழுது நீரிழிவாளர்களின் உணவு என்பது ஒரு சில உணவுகளை முற்றாகத் தவிர்ப்பதும் வேறு சிலவற்றை அதிகம் உண்பதும் என்ற பழைய கோட்பாட்டில் இல்லை. அதே போல உணவு அட்டவணையை கையில் வைத்து அதன்படி அளந்து சாப்பிடுவதும் தினசரி வாழ்வில் சாத்தியமில்லை.
நீரிழிவின் கட்டுப்பாட்டிற்கு முழுமையான ஆரோக்கிய உணவுத் திட்டம் தேவை.
அதன் முக்கிய அம்சம் எந்த உணவானாலும் கட்டுப்பாடு மீறாமல் அளவோடு உண்பதுதான்.
மாப்பொருளின் அளவு
நீரிழிவாளர்களின் உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, இனிப்பு, பால், பழம், காய்கறிகள், மது முதலியன எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பதை நீரிழிவாளர்களின் உணவு பிரமிட் (Diabetic Food Pyramid) விளக்கப் படம் தெளிவாகக் காட்டுகிறது.
உணவில் மாப்பொருளின் carbohydrateஅளவு மிக முக்கியமானதாகும். இதனை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் உட்கொள்ளும் கலோரி சத்து அதிகமாகும். இது நீரிழிவை அதிகரிக்கும்.
மாப்பொருள் என்பது நீங்கள் உட்கொள்ளும் சோறு, இடியப்பம், நூடில்ஸ் போன்றவற்றில் மாத்திரமின்றி உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளிலும் உண்டு.
சீனி, சர்க்கரை போன்றவற்றிலும் உண்டு. எனவே இத்தகைய மாப்பொருள் உணவுகளை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.
ஆயினும் பழவகைகள் மரக்கறிகள் மற்றும் தவிடு நீக்காத தானிய வகைகளை விட, சொக்கிளட், சீனி, தேன், மற்றும் இனிப்புப் பண்டங்கள் அனைத்துமே இரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாகவும் விரைவாகவும் , அதிகரிக்கின்றன என நம்பப்பட்டது.
அதில் உண்மை இல்லாமலும் இல்லை.
ஆனால் அவற்றைத் தனியே உட்கொள்ளும் போதுதான் பாதிப்பு அதிகம்.
இனிப்பைத் தனியே உண்ண வேண்டாம்.
எனவே நீரிழிவு நோயாளர்கள் செய்ய வேண்டியது என்ன?
விரைவாக உறிஞ்சப்படும் இனிப்புப் பண்டங்களை உண்ணும் போது அவற்றைத் தனியாக உண்ணக் கூடாது. ஆறுதலாக உறிஞ்சப்படும் உணவுவகைகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
பொதுவாக நார்ப்பொருள் அதிகமுள்ளவையே படிப்படியாகச் (ஆறுதலாக) சமிபாடு அடைபவை ஆகும். காய்கறிகள், பழவகைகள், தவிடு நீக்காத தானிய (அரிசி, கோதுமை, குரக்கன்,) வகைகளும் அவற்றில் தயாரிக்கும் உணவுவகைளும், பழவகைகளும் இவற்றில் அடங்கும்.
சோயா, பயறு, பருப்பு, கௌபீ, போஞ்சி, பயிற்றை போன்ற அவரையின உணவுகள் ஆறுதலாகச் சமிபாடடைவதால் அவ்வாறு இனிப்பு சாப்பிடும்போது கலந்து உண்ண ஏற்றவையாகும்.
இனிப்பின் அளவும் முக்கியம்
இனிப்பும் சாப்பிடலாம் என்று சொன்னவுடன், ஒரு பெரிய பார் சொக்கிளற், குக்கீஸ், பல லட்டுகள் என ஒரேயடியாக அமுக்கலாம் என நினைக்க வேண்டாம்.
ஏனெனில் முன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இவை வெறும் கலோரிக் குண்டுகள். இவற்றில் அதிகளவு கொழுப்பும் மாப் பொருளும் மட்டுமே இருக்கின்றன. விற்றமின், தாதுப்பொருள், நார்ப்பொருள் போன்றவை மிகக் குறைவே. எனவே இனிப்பு என்பது நீரிழிவாளர்களின் உணவில் ஒரு சிறு பகுதியாகவே இருக்க வேண்டும்.
இனிப்பும் ஒருவகை மாப்பொருளே. அதே போல சோறு, பாண், இடியப்பம், போன்ற ஏனையவும் மாப்பொருள் என்பதை மேலே கண்டோம். எனவே அத்தகைய மாப்பொருள் உணவுகளை வழமையான அளவில் உட்கொள்வதுடன், இனிப்பையும் மேலதிகமாக உண்டால் நீங்கள் உட்கொள்ளும் மாப்பொருளின் அளவு அதிகரித்துவிடும்.
எனவே இனிப்பு எடுக்கும்போது நீங்கள் உட்கொள்ளும் கலோரிப் பெறுமானம் அதிகரிக்காது இருப்பதை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்
1. நீங்கள் உட்கொள்ளும் இனிப்பிற்கு ஏற்ப ஏனைய மாப்பொருள் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
2. மாப்பொருள் உணவை ஒரு நேரத்தில் முற்றாகத் தவிர்த்து, அதற்கேற்ற அளவில் இனிப்பை தனியாக சேர்க்கலாம்.
ஆயினும் சேர்த்து உண்ணும்போது சமிபாடு விரைவாக நடக்காது என்பதால் முதலாவது முறையே சிறந்தது என்பேன்.
கலோரிச் சத்தற்ற இனிப்புகள்
நிரிழிவு நோயாளர் பாதிப்பின்றி இனிப்பு வகைகளை உண்பதற்கு மற்றொரு வழியும் காத்திருக்கிறது.
சீனி, சர்க்கரை போலவே இனிப்புச் சுவை உள்ள ஆனால் கலோரிச் சத்தற்ற செயற்கை இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம்.Aspartame, Saccharin. Sucralose போன்றவை அத்தகைய மாற்று இனிப்புகளாகும்.
இவற்றை உங்கள் தேநீர், கோப்பி போன்ற பானங்களுக்கு சேர்த்து இனிப்புச் சுவையைப் பெறலாம்.
அப்பம், புட்டு, கேக் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் போதும் வழமையான சீனி சர்க்கரைக்குப் பதிலாக அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
இனிப்பு மதுவங்கள்
நீரிழிவாளருக்கான உணவுகள் என்ற லேபலுடன் டொபி, சூயிங் கம், டெஸேர்ட் போன்ற பலவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் சீனி அல்லது செயற்கை இனிப்பிற்குப் பதிலாக இனிப்பு மதுவங்கள் சேர்ந்திருக்கும். 'Isomalt', "Maltitol," "Mannitol," "Sorbitol" and "Xylitol."போன்றவையே அத்தகைய இனிப்பு மதுவங்கள். இவற்றில் ஒரளவு கலோரிப் பெறுமானம் உண்டு. எனவே அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். அத்துடன் இவை சிலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.
நீரிழிவாளருக்கான உணவுகளை வாங்கும் போது அதில் என்ன இனிப்புக் கலந்திருக்கிறது என்பதை லேபலைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.
எது எவ்வளவு எதனுடன் ?
இறுதியாகச் சொல்வதானால் நீரிழிவாளர்களின் உணவுத் திட்டத்தில் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பது அவ்வளவு முக்கியமானது அல்ல. அதைவிட எவ்வளவு உண்கிறீர்கள், எதனுடன் சேர்த்து உண்கிறீர்கள் என்பவையே முக்கியமானது.
சற்று அறிவு பூர்வமாகச் சிந்தித்து உண்டால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்ட உணவுகளையும் உண்ண முடியும்.
நீரிழிவாளர்களின் உணவு பற்றிய மற்றொரு கட்டுரையான "நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு"
படிப்தற்கு கிளிக் பண்ணவும்
"அவர்கள் இருவரும் திருமணம் முடித்து அதன் பின் என்றென்றும் மகிழ்ச்சியோடு நீடுழி வாழ்ந்தார்கள்."
இவ்வாறு நிறைவாக முடிவடையும் சிறுவர் கதைகளை வாசிக்காதவர் எவரும் இருக்க முடியாது.
கதைகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும், காதல் அதன் பின் திருமணம். அதைத் தொடரும் மகிழ்ச்சியான வாழ்க்கை. எத்துணை நிறைவான வாழ்வு!
ஆனால் இவை எல்லோருக்கும் வாய்த்து விடுகிறதா?. பலரின் வாழ்க்கை திருமணத்தின் பின் கருகிவிடுகிறது.
சட்டரீதியான விவாகரத்து என்பது எமது சமூகத்தில் இன்னும் பரவலாகாத போதும் மணமுறிவுகளுக்குக் குறைவில்லை என்பதும் உண்மையே.
திருமணத்தின் பின்னான வாழ்வு நீடித்து நிலைக்குமா அல்லது முறிந்து போகுமா என்பதற்குக் காரணங்கள் என்ன?
திருமண வாழ்வை நீடிக்க அன்பும் காதலும் மட்டும் போதுமா? இவை பற்றி அறிய அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2001 முதல் 2007 வரை 2500 தம்பதிகளைக் கொண்டு செய்த இந்த ஆய்வானது பல காரணங்களை வெளிப்படுத்துகிறது.
ஆண்களின் வயதும் வயது வித்தியாசமும்
ஆண்களின் வயதும், தம்பதிகளுக்கு இடையேயான வயது வித்தியாசமும் ஒரு முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.
25 வயதிற்கு முன்னர் திருமணம் செய்த ஆணின் குடும்ப வாழ்வு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடுகிறதாம்.
மனைவியை விட கணவனுக்கு 9 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இடைவெளியும் திருமண முறிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
குழந்தைகள்
திருமணத்திற்கு முன்பே இதே துணை அல்லது வேறு துணை மூலம் குழந்தைகள் இருந்தால் மணமுறிவிற்கான வாய்ப்பு மிக அதிகமாகும்.
கணவனை விட அதிகமாகக் குழந்தை வேண்டும் என மனைவி ஆசைப்பட்டாலும் பிரிவு ஏற்பட வாய்ப்பு அதிகம் என இவ் ஆய்வு கூறுகிறது.
தம்பதிகளின் பெற்றோர்
தம்பதிகளின் பெற்றோரின் வாழ்க்கை முறையும் திருமண வாழ்வைப் பாதிக்கிறது. தம்பதிகளில் எவர் ஒருவரின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் அல்லது விவாகரத்துப் பெற்றிருந்தாலும் மணமுறிவிற்கு வாய்ப்பு அதிகமாகிறதாம்.
ஏற்கனவே வேறு திருமணம்
முதல் திருமணத்தை விட இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாகத் திருமணம் செய்தவர்களின் மணவாழ்க்கை முறிவதற்கான வாய்ப்பு 90 சதவிகிதம் அதிகம் எனச் சொல்கிறது ஆய்வு.
குடும்ப வருமானமும் வசதியும்
பணத்திற்கும் திருமண உறவு நீடிப்பதற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. வறுமையில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியாக பலமான நிலையில் இருப்பவர்களை விட அதிகமாகப் பிரிய நேர்கிறதாம்.
அதே போல கணவன் வேலைவாய்ப்பு இன்றி இருந்தாலும் மணமுறிவு அதிகம். ஆனால் மனைவி வேலைவாய்ப்பு இன்றி இருந்தால் அவ்வாறு பிரிவு ஏற்படுவதில்லை என்பது கவனிப்புக்கு உரியதாகும்.
புகைத்தல் தம்பதிகளில் ஒருவர் புகைப்பராக இருந்தாலும் குடும்பம் பிரிவதற்கான சாத்தியம் அதிகமாம். ஆனால் இருவருமே புகைப்பவராக இருந்தால் அவ்வாறு இல்லை என்கிறது இவ் ஆய்வு.
நீங்கள் புகைப்பவராக இருந்து அதனால் உங்களுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படுகிறதா? அவ்வாறாயின் மணமுறிவைத் தடுக்க என்ன செய்யலாம்.
சுகமான வழி மனைவிக்கும் புகைக்கப் பழக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என எண்ணுகிறீர்களா?
உண்மைதான்!
இருவருமே புகைப்பதனால் பிரிவதற்கான வாய்ப்புக் குறைந்துவிடும். அத்துடன் 'இருவருக்குமே இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் விரைவிலேயே தீர்ந்து இறைவனடி சேர்ந்துவிடலாம்!'.
மதுப் பாவனை
அதீத மதுப் பாவனையும் அத்தகைய நிலையை ஏற்படுத்துமா என்பதையிட்டு ஆய்வு எதனையும் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவும் மணமுறிவிற்கு காரணமாவதை எமது சூழலில் காணக் கூடியதாக இருக்கிறது.
எமது சூழலுக்கு ஏற்ற ஆய்வு தேவை
இந்த ஆய்வின் முடிவுகள் அவுஸ்திரேலிய சூழலைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டுள்ளன. எமது சூழலுக்கு இவற்றில் சில பொருத்தம் அற்றவையாகும்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,
மாமியார் மருமகள் பிணக்குகள்,
புலம் பெயர்ந்த வாழ்வு,
கணவன் அல்லது சில வேளைகளில் மனைவி வெளிநாடு சென்றுவிட மற்றவரின் தனிமை வாழ்வு ஏற்படுத்தும் தாக்கம்,
திருமணத்திற்கு அப்பாலான தகாத உறவுகள்
போன்றவை எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு ஆய்வு செய்வது அவசியம் என எண்ணுகிறேன்.
வறுமையும், பொருளாதாரத்தில் குறைந்த நிலையும் மணமுறிவுகளுக்குக் காரணம் என மேற்கத்தைய ஆய்வு சொல்கிறது.
ஆனால் எமது சூழலில், மிகவும் வறிய சூழலிலும் மிகவும் இனிமையான, அன்னியோன்யமான கணவன் மனைவி உறவைக் காண்பது சகசம். ஆயினும் இங்கு பணம் நிறைந்த, செல்வச் செருக்கு மிக்கவர் மத்தியில் அதிக மணமுறிவுகள் ஏற்படுவதாக எனக்குப் படுகிறது.
பதினாறு பெற்ற குசேலர் வறுமையின் எல்லையிலும் மகிழ்வாக வாழ்ந்ததாகவே கதைகள் கூறுகின்றன.
ஜாதகப் பொருத்தம்
இவை எதுவும் காரணங்கள் அல்ல.
சரியான ஜாதகப் பொருத்தம் பார்க்காததே காரணம் என்று சொல்லும் அதி மேதாவிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
'என்ன டொக்டர் நீங்கள் மாஸ்க் போடாமல் கிளினிக்கிலை வருத்தக்காரரைப் பார்க்கிறியள்?
டிவீ, பேப்பர் எதைப் பார்த்தாலும் முகமூடி போட்ட முகங்களைப் பார்த்துப் பயமாக இருக்கு' என்றார் என்னைச் சந்திக்க வந்த மருத்துவ பிரதிநிதி.
பாடசாலை மாணவர்களிடையே தொற்றத் தொடங்கியதிலிருந்து பன்றிக் காய்ச்சல் பீதி இலங்கையில் அனைவரையும் பீதிக்கு ஆளாக்கியுள்ளது.
'எப்படி எங்களைப் பாதுகாத்துக் கொள்வது' என்ற சிந்தனை ஒவ்வொருவர் மனத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
'பஸ்சில் போகும்போது மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டுமா' என்று கேட்டார் தினமும் பஸ்சில் பிரயாணம் செய்யும் ஒருவர்.
உண்மையில் மாஸ்க் அணிவதால் தடிமன் காய்ச்சல், இன்புளுவன்ஸா மற்றும் H1N1 காய்ச்சல் தொற்றுவதைத் தடுக்க முடியுமா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.
அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு மையமானது வீடுகளிலோ சமூக நிகழ்வுகளின் போதோ நோய்த் தடுப்பு முகமூடி அணிய வேண்டும் எனச் சிபார்சு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முகமூடிகள் பலவகை
தடுப்பு முகமூடிகளில் பலவகைகள் உண்டு.
சத்திர சிகிச்சைக்கானது,
பற் சிகிச்சைக்கானது,
தனிமைப்படுத்தலுக்கானது,
லேசர் வகை போன்றவை சில. சாதாரண முகமூடிகள் முற்று முழுதாக முகத்தை மூடிப் பாதுகாப்பவை அல்ல.
ஆயினும் Respirators என்று அழைக்கப்படுபவை மிக நுண்ணியளவு வைரசையும் தடுக்கக் கூடியவையாகும். (N95 or higher filtering face pieces)இவை முகத்தோடு இறுகப் பற்றிக் கொள்பவை. சரியான முறையில் அணிந்தால் வைரஸ் தொற்றுவதைத் தடுக்கக் கூடியவையாகும்.
ஆனால் இத்தகைள முகமூடிகள் ஊடாகச் சுவாசிப்பது கஸ்டமாகும்.
எனவே நீண்ட நேரம் தொடர்ந்து அணியக் கூடியதல்ல.
அத்துடன் குழந்தைகளும் இதை அணிய முடியாது.
முகத்தில் முடியுள்ளவர்களும் அணிய முடியாதாம்.
புளுக் காச்சல் உள்ளவர்கள் அவதானிக்க வேண்டியவை
புளுக் காய்ச்சல் அறிகுறியுள்ளவர்கள்
(தடிமன், காய்ச்சல், தும்மல், இருமல்,)
சமூக அக்கறையோடு செயற்படுவது அவசியம்.
தங்கள் நோய் மற்றவர்களுக்கு பரவாது தடுப்பது அவர்கள் பொறுப்பாகும். அவர்கள் வீசி எறியக் கூடிய ரிஸ்யூ கையோடு வைத்திருப்பது மிக அவசியமாகும்.
தும்மும்போதும் இருமும் போதும்
அவற்றை உபயோகித்துவிட்டு
உடனடியாகவே
பாதுகாப்பான குப்பை வாளிகளில்
போட்டுவிட வேண்டும்.
குடும்பத்தவர்களோடு ஒரே அறையில் இருக்கும் போது மட்டுமல்லாது
தனியாக இருக்கும் போதும் இவ்வாறு செய்ய வேண்டும்.
தும்மல் இருமல் வந்தால் உடனே மூக்கு, வாயைத் தொட்ட கைகளை சோப் போட்டுச் சுத்தம் செய்யுங்கள்.
அத்தகைய நோயுள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது நோய்த் தடுப்பு முகமூடி அணிவது நல்லது.
அவை கிடைப்பதையும், கிடைத்தாலும் அதனோடு இயங்க முடிகிறதா என்பதையும் பொறுத்தது.
ஆயினும் அவர்கள் அறிகுறிகள் தொடங்கிய நாள் முதல் ஏழு நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது.
வலிவு குறைந்தவர்கள்
ஆயினும் H1N1தொற்றினால் ஆபத்தான விளைவுகள் எற்படக் கூடியவர்கள்
பஸ், மார்க்கட்,
போன்ற எந்தப் பொது இடங்களுக்குப்
போகும் போதும்
நோய்த் தடுப்பு முகமூடி அணிவதன் மூலம்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
யாருக்கு இந்நோயினால் ஆபத்துகள் அதிகம்?
கர்ப்பணிப் பெண்கள்,
குழந்தைகள் அதிலும் முக்கியமாக 12 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகள், இருதய நோயாளர்கள்,
HIV தொற்று உள்ளவர்கள்,
நீரிழிவு போன்ற நீண்ட கால நோயுள்ளவர்கள்,
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஆளானவர்கள்
மேலதிக அவதானம் எடுப்பது அவசியம்.
உங்களைப் பாதுகாத்துக் கொள்ள
ஆரோக்கியமான மனிதர்களைப் பொறுத்த வரையில், புளு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களிலிருந்து குறைந்தது ஆறு அடி தூரமாவது விலகி இருப்பதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
இதன் மூலம் அவரது சுவாசம், தும்மல். இருமல் ஆகியவற்றால் பரவும் கிருமிகளிலிருந்து நீங்கள் தப்பிவிடலாம்.
அத்துடன் அடிக்கடி கை கழுவுவதும் அவசியமாகும். நோயுற்றவர் இருமும் போது அல்லது தும்மும்போது பரவிய கிருமிகள் மேசை, கதிரை, கதவு கைப்பிடி, போன்றவற்றில் பட்டிருக்கும்.
அவர்கள் மூக்குச் சீறிய கை பட்டாலும் அவ்வாறு நேரும்.
உங்கள் கைகள் அதில் பட்டால்,
அதிலுள்ள கிருமி உங்கள் கைகளுக்குப் பரவும்.
பின் நீங்கள் உங்கள் கண், மூக்கு வாய் போன்றவற்றை
யதேட்சையாகத் தொடும்போது
அதனூடாக உங்களுக்கும் பரவும்.
இதை கை கழுவுவதன் மூலம் தடுக்கலாம்.
இந்த வைரஸ் கிருமியானது
உருக்குக் கைபிடி போன்ற கடினமான பொருட்களில் 24 மணிநேரம் வரையும்,
துணி உடைகள் போன்றவற்றில் 12 மணிநேரம் வரையும்
உயிர்வாழக் கூடியவை என்பதால் அடிக்கடி கை கழுவுவதும்,
ஏனைய சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பதும் உங்களைக் காப்பாற்றும்.
முகமூடி அணிவது போலியான பாதுகாப்பு உணர்வு தருவதால் பலரும் மேற் கூறிய சுகாதாரப் பழக்கங்களை அம்போ எனக் கை வி்ட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
முகமூடி அணிவது அவசியமா என்பதையிட்டு CDC (Centres forDisese Control and Prevention) உத்தியோக பூர்வ அறிக்கை படிக்க
இங்கே சொடுக்கவும்