Sunday, September 27, 2009

மிகவும் துன்புறுத்தும், தற்கொலைக்கும் இட்டுச் செல்லும்

மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்று கேட்டால் உங்கள் விடை எதுவாக இருக்கும். இவர்கள் கதைகளைக் கேளுங்களேன்.

பணத்தையும், நேரத்தையும் வீணாக்க வைக்கும் நோய்

"இது தான் நான் பாவிக்கிற மருந்துகள். மருந்தைப் போடுறதுதான் மிச்சம். ஒரு சுகமும் இல்லை".

அவள் நீட்டிய மருந்துச் சிட்டையில் பத்து மருந்துகளுக்குக் குறையாமல் இருந்தன. பெரும்பாலானவை விட்டமின் மருந்துகள், மற்றும் கல்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள், வலி நிவாரணிகள்.

எல்லாமே விலை உயர்ந்த மருந்துகள்.

காசையும் காலத்தையும் செலவழித்ததுதான் மிச்சம். நோய் தீர்ந்தபாடாக இல்லை.

தெளிவற்ற பற்பல அறிகுறிகள்

என்ன வருத்தம் எனக் கேட்டபோது மருந்துச் சிட்டையில் உள்ள லிஸ்டை விட நீண்ட பட்டியல் போன்று அறிகுறிகளைச் சொல்லத் தொடங்கினார்.

கை கால் உழைவு, கழுத்து நோ, நாரிப்பிடிப்பு, சோம்பல், அலுப்பு, வேலை செய்ய முடியாத களை என ஆதியும் அந்தமுமில்லாப் பரம் பொருள் போலப் பட்டியல் தொடர்ந்தது.

"ஆறு மாசமா வருத்தம். தொடர்ந்து மருந்துதான். ஆனால் நோய் தீர்ந்த பாடாகக் காணவில்லை" எனக் கூட வந்த கணவன் சலித்துக் கொண்டார்.

"இவவின்ரை வருத்தத்தாலை பிள்ளையளின்ரை படிப்பு குழம்புது. நானும் ஒழுங்காக வேலைக்குப் போக முடியவில்லை".

நோயாளியை மட்டுமின்றி உறவினரையும் குடும்பத்தினரையும் பாதிக்கும்

இன்னொரு பெண். வழமையாக கலகலத்துப் பேசி உற்சாகமாக உரையாடுபவள், அன்று வந்த பொழுது, "இவருக்கு எந்த நாளும் வருத்தம். கொண்டு திரிஞ்சு திரிஞ்சு எனக்கு வாழ்க்கையே சலிச்சுப் போட்டுது" என்றாள் மிகுந்த சோர்வுடன்.

இவர்களுக்கு எல்லாம் என்ன வருத்தம்?

ஏன் வைத்திய
ம் செய்தும் மாறவில்லை?


மிகப் பரவலாகக் காணப்படும் நோய்


மிகவும் பரவலாகக் காணப்படுகின்ற நோய், ஆனால் நோயை நிர்ணயிப்பதற்கும் (Diagnosis) சரியான சிகிச்சையை ஆரம்பிப்பதற்கும் பொதுவாகக் காலதாமதமாகின்றது.

அதே நேரம் நோயாளியையும் உறவினர்களையும் கடுவலாகப் பாதிக்கிற போதும் கவனத்திற்கு ஆளாகாத நோய் இது.

மனச் சோர்வு (Depression)


மனச் சோர்வு (Depression) கறையான் புற்றுப் போல வெளியே தெரியாமல் உள் நின்று அரித்து உடலையையும் மனத்தையும் வெற்றுக் கோதாக்கி விடும் நோய்.

அது மட்டுமல்ல சுற்றி இருக்கும் உறவினர்களையும் சோர்வடையச் செய்து விடும்.

கவனிக்காது விட்டால் தற்கொலைக்கும் இட்டுச் செல்லும் அளவிற்கு ஆபத்தானது.

நல்ல சிகிச்சை முறைகள்

"ஏன் மனச் சோர்வைக் குணப்படுத்த நல்ல மருந்துகள் கிடையாதா?" எனக் கேட்பீர்கள்.

நல்ல மருந்துகள் இருக்கத்தான் செய்கின்றன.

அத்துடன் உளவளத் துணை வழங்கலும் நல்ல பலனைத் தருகிறது.

ஆனால் இதற்கு முதற் படியாக நோயைக் கண்டு பிடிக்க வேண்டுமே!.

ஆய்வு கூட பரிசோதனைகள் மூலம் கண்டு பிடிக்கக் கூடிய நோய்கள் எனில் பட்டென உடனடியாகவே கண்டுபிடித்து விடுவார்கள் வைத்தியர்கள்.

பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய்

ஆனால் ஆற அமர இருந்து பேசிக் கண்டு பிடிக்க வேண்டிய நோய் இது.

நோயாளி சொல்லும் அறிகுறிகளுக்கிடையே சொல்லாமல் மறைந்து நிற்கும் செய்திகளை இனங் காணும் அனுபவம் தேவை.

அவர்கள் பேச்சுக்களிடையே அகப்படும் 'சிறு முடிச்சுகளை'ச் சிக்கெனப் பிடித்து அவர்கள் ஆழ் மனத்தில் ஒளிந்திருக்கும் சோகங்களை வெளிக் கொணரும் ஆற்றல் தேவை.

இவை முடியாததால் மனச் சோர்வு நோய் பல வைத்தியர்களுக்குப் பிடிபடாமல் போவதுண்டு.

நோய் பிடிபடாமல் ஒளிந்து நிற்பதற்கு வைத்தியர்கள் மட்டும்தான் காரணம் அல்ல.

வெளிப்படையாகச் சொல்லத் தயங்கல்

மிக முக்கிய காரணம் நோயாளிகள்தான். தங்கள் மன உணர்வுகளை வைத்தியர்களிடம் சொல்லாமல் இருப்பதே அடிப்படையாகும்.

வெளிப்படையாகச் சொல்லாமல் விடுவது மட்டுமல்ல கோடி காட்டவும் தயங்குகிறார்கள்.

நேரடியாகக் கேள்வி கேட்டு அறிய முயன்றால் கூட மறைப்பவர்கள் பலர்.

நோய் என்றால் எங்கள் சமூகத்தினருக்கு உடல் நோய் மட்டும்தான் என்பதே எண்ணம்.

மனதில் ஏற்படுகிற கவலை, துன்பம், ஏக்கம் போன்ற உணர்வுகளை வைத்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவற்றிற்கும் சிகிச்சை பெறலாம் என நினைப்பதே இல்லை.

ஊழ்வினைப் பயன், முந்திச் செய்த பாவத்திற்கு கடவுள் தண்டிக்கிறார் போன்ற நம்பிக்கைகள் காரணமா?

மனச்சோர்வு என்றால் 'பித்து', 'கேவலமான நோய்', வெளியே அறிந்தால் வெட்கம்' போன்ற சமூகம் சார்ந்த தவறான கருத்துக்களும் காரணமாகிறது.

ஆனால் மனச்சோர்வு என்பது சாதாரண வியாதி அல்ல.

மிக அதிகமானவர்களைப் பாதிக்கும் நோய்

உலகளாவிய ரீதியில் 30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கிறது.
நோயாளியை மாத்திரமின்றி முழுக் குடும்பததையுமே பாதிக்கும் ஒரு நோயாகும்.
நோயாளிக்கும் கூட மிகுந்த துன்பத்தையும் இயலாமையையும் தரும் நோயாகும்.

மனிதர்களை மிகவும் துன்புறுத்துகிற நோய் எது என்றால் பலரும் ஆஸ்த்மா, மூட்டு வாதங்கள், இருதய நோய், அல்லது நீரிழிவு என்று கூறக் கூடும்.

ஆனால் இந்த நான்கு நோய்களையும் விட மோசமாக நோயாளர்களைத் தாக்குவது மனச்சோர்வு தான் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவில் 60 நாடுகளில் எல்லா மதத்தினரையும் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட 245,404 பேரை உள்ளடக்கி உலகளாவிய ரீதியில் செய்யப்பட்ட பாரிய ஆய்வு கூறுகிறது.

அதனால் வெளிக்காட்டாத அபகீர்த்தி நோய் ''Silent Scandal' எனப் பலரும் குறிப்படுவதுண்டு.

போதிய சிகிச்சை கிட்டுவதில்லை

30 சதவிகிதமானவர்களைப் பாதிக்கின்ற போதும் அவர்களில் 30 சதவிகிதமானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதனால் மிகுதி 60-70 சதவிகிதமானவர்கள் போதிய சிகிச்சை இன்றித் துன்பப்படுகிறார்கள்.

ஆனால் ஆஸ்த்மா நோயினர் 90 சதவிகிதமும், மூட்டு வலி நோயினர் 80 சதவிகிதமும் திருப்பதிகரமான சிகிச்சைளைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரிழிவு நோயைப் பொறுத்த வரையில் 8 சதவிகிதமானவர்கள் மட்டுமே ஒழுங்கான சிகிச்சை இல்லாதிருக்கிறார்கள.

வைத்திய வசதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மட்டுப்படுத்தப்பட்ட வளர் முக நாடுகளில் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கான சிகிச்சை போதுமானதாக இல்லை.

இலங்கையில் தமிழர்

போரின் பாதிப்பினால் பரவலாக மனோரீதியான நோய்களுக்கு ஆளாகியிருக்கும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் ஒரு கையின் விரல்களின் எண்ணிக்கை அளவு கூட மனநோய் வைத்திய நிபுணர்கள் இல்லை என்பது கவலைக்குரியதே.

ஆயினும் அதை ஒரு தடையாக எடுத்துக் கொள்ள முடியாது. வைத்தியப் பட்டம் பெற்ற எல்லா வைத்தியர்களுக்கும் இத்துறையில் சிகிச்யையளிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

எம்.கே.முருகானந்தன்

Post Comment

Sunday, September 13, 2009

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?

நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?


இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.


கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment