Saturday, July 18, 2009

முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

'சரியான நாரி வலி (கீழ் முதுகு வலி). திரும்பிப் பார்க்க, சரிஞ்சு படுக்க ஒண்டுமே முடியுதில்லை' என்று வேதனையுடன் சொன்னவர் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

அவருடைய பிரச்சனையை விபரமாகக் கேட்டு அறிந்ததிலும், முழுமையாகப் பரிசோதித்துப் பார்த்ததிலும் அவரது வலிக்கு அடிப்படைக் காரணம் கடுமையான நோய் அல்ல எனத் தெளிவாகத் தெரிந்தது. வெறும் தசைப் பிடிப்புத்தான்.

எனவே சில இலகுவான பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்து, மருந்துகளும் எழுதிக் கொடுத்தேன்.

இருந்தபோதும் அவர் கதிரையிலிருந்து எழவில்லை. முகத்தைப் பார்த்தால் அதில் திருப்தியைக் காணவில்லை.

'வேறையும் ஏதாவது பிரச்சனையும் இருக்கோ' எனக் கேட்டேன்.
பரிசோதனைப் பயிற்சி படங்கள் நன்றி:- www.netterimages.com/image/1705.htm

'இல்லை ....' என்றவர், தயக்கத்துடன் '..ஒரு எக்ஸ் ரே எடுத்துப் பார்த்தால் நல்லதுதானே' எனக் கேள்வியாக தனது விருப்பை மறைமுகமாகத் தெரிவித்தார்.


நாரிப்பிடிப்பிற்கு (Low Backache)பல காரணங்கள் இருக்கின்றன. சாதாரண தசைப்படிப்பு (Muscular Pain), எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலி(Arthritis), முள்ளத்தண்டு இடைத்தட்டம் விலகல் (Prolapsed Disc), அதனால் நரம்புகள் அழுத்தப்பட்டு வலி (Sciatica) மோசமாகி கால்களுக்கு பரவுதல் எனப் பல.

நோயின் அறிகுறிகளை தெளிவாகக் கேட்டு அறிவதாலும், உடலைப் பரிசோதித்துப் பார்ப்பதாலும் வலிக்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவர்கள் உணர்ந்து கொள்வார்கள். அதற்கு ஏற்பவே சிகிச்சைகளையும் வழங்குவார்கள். இது போதுமானது.

தேவை ஏற்பட்டால் மட்டுமே இரத்த, சிறுநீர்ப் பரிசோதனைகளையும், எக்ஸ் ரேயையும் நாடுவார்கள்.

இப்பொழுது மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. சாதாரண எக்ஸ் ரே, சிடி ஸ்கான் (CT) , எம்ஆர்.ஐ (MRI)போன்ற பரிசோதனைகள் இலகுவாகச் கிடைக்கின்றன.

இப் பரிசோதனைகள் பற்றி நோயாளர்களும் நிறையவே அறிந்துள்ளார்கள். பண வசதி இருந்தால் உடனடியாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது. அதனால் நோயளர்களதும் உறவினர்களதும் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. இவற்றைச் செய்துவிட்டால் உடனடியாக நோயைத்தெளிவாகக் கண்டுபிடித்து விடலாம், விரைவில் குணமாக்கி விடும் என நம்புகிறார்கள். எனவே இவற்றைச் செய்யும்படி மருத்துவர்களையும் நெருக்குகிறார்கள்.


ஒரு ஒரு ஆய்வின் முடிவு இதனைத் உறுதியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, எக்ஸ் ரே பரிசோதனையால் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக அறிந்த போதும் 80 சதவிகிதமான நோயாளிகள் அதனைச் செய்ய வேண்டும் என்றே விரும்பியதாக தெரிய வந்தது.

இதன் மூலம் நோயாளிகளின் விருப்பத்திற்கும் மருத்துவ ரீதியான உண்மைகளுக்கும் இடையே பாரிய இடைவெளி இருப்பது தெளிவாகிறது.

மருத்துவர் கடுமையான நோய் இருக்கிறது என உணர்ந்து அதைக் கண்டுபிடிக்க, அல்லது உறுதிப்படுத்த மேற்கூறிய பரிசோதனைகள் தேவை எனக் கருதினால் ஒழிய இப் பரிசோதனைகளால் நோயாளர்களால் எதிர்பார்க்கப்படும் பலன் கிட்டப் போவதில்லை. இதனை 1800 நோயாளிகளைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு 6 ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரபல மருத்துவ சஞ்சிகையான The Lancet அண்மையில் (February 7, 2009) ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்தது.

ஆயினும் நோயாளர்களின் தேர்வுகளினதும் விருப்பங்களினதும் அடிப்படையில் தேவையற்ற பல எக்ஸ் ரே பரிசேதனைகள் செய்யப்படுவதை மறுக்க முடியாது. இதனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தேசியரீதியான மருத்துவச் செலவில் வீண்விரயத்தை குறைக்க முடியும்.

நோயாளிகளைப் பொறுத்தவரையில் அதற்கு மேலாக மற்றொரு முக்கிய காரணம் உண்டு. அவசியமற்ற ரேடியம் கதர்வீச்சிற்கு ஆளாவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்தான பின்வளைவுகளைத் தடுப்பதற்காக அவியமற்ற எக்ஸ் ரேகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே அது. இது மிக முக்கியமானதல்லவா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:-
ஹாய் நலமா? தினக்குரல்
Reblog this post [with Zemanta]

Post Comment

Saturday, July 11, 2009

குழந்தை விடாது அழுகிறதா?

உங்கள் குழந்தை அழுகிறது.
வீறிட்டுக் கத்துகிறது!
ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல்லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரியவில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் கண்ணீர் துயரளிக்கிறது.

ஏதாவது செய்ய வேண்டும் என மனம் துருதுருக்கிறது. உங்களால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டீர்களே என மூளை அறிவுறுத்துகிறது.

இன்னமும் குழந்தை அழுது கொண்டே இருக்கிறது. எதையாவது தப்பவிட்டுவிட்டேனா என்ற குற்ற உணர்வு மேலெழுகிறது.

பதற்றப்படாதீர்கள்.

சற்று நிதானமாக யோசியுங்கள்.

அடிப்படை விடயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

*குழந்தைக்கு பசி எடுத்திருக்கக் கூடும்.
*அல்லது பாலுடன் புகுந்த காற்று ஏப்பமாக வெளியேறாது வயிற்றில் மந்தமாக இருக்கக் கூடும்.
*நப்பி நனைந்து அசௌகர்யமாக உணரக் கூடும்.
*சற்று அசதியாக இருந்து தூக்கத்தை நாடுவதாகவும் இருக்கலாம்.
*நீண்ட நேரம் படுத்திருந்ததால் அலுத்த குழந்தை மாறுதலுக்காக உங்கள் மடியை அல்லது தள்ளு வண்டியை நாடுவதாக இருக்கலாம்.

*இவை எதுவுமின்றி உங்கள் அன்பை, அருகாமையை, அரவணைப்பை நாடுவதாக உங்கள் கவனத்தை தன் மீது ஈர்ப்பதற்காகவும் இருக்கலாம்.

ஏனெனில் அழுகை அதன் மொழி. இப்பொழுது அது மட்டுமே தொடர்பாடல் ஊடகமாகிறது. அதன் மூலம் உங்களுக்கு தனது விருப்பத்தை உணர்த்த முயல்கிறது.

மேற் கூறிய எதுவுமே இல்லாவிட்டால், உடல் ரீதியான பிரச்சனை ஏதும் இருக்கறதா எனப் பாருங்கள். குழந்தைக்கு சற்றுக் காய்ச்சல், வயிற்றோட்டம், சளி, இருமல் போன்ற ஏதாவது சிறு வருத்தங்கள் இருப்பதாலும் அழக் கூடும் அல்லவா?

அவை யாவுமே சரியாக இருந்தால் அடுத்து என்ன செய்வது என்ற கவலை உங்களை ஆட்கொள்ளும். எதைச் செய்தாவது உங்கள் செல்லத்தின் கண்ணீரை நிறுத்த வேண்டும் என்ற ஆவேசம் எழும்

முக்கியமானது உங்களை நீங்களே நிதானப்படுத்த வேண்டியதுதான்.

*நிதானமாக ஆழ மூச்சு எடுங்கள்.
*ஒன்று இரண்டு எனப் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள்.
*'ஒன்றுமில்லை கண்ணா' என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளை குழந்தைக்கு சொல்லுங்கள்.
*மீண்டும் மீண்டும் தடவிக்கொண்டே சொல்லுங்கள்.






*என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே, அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் ஆற்றல் எனக்கில்லையே எனக் குற்ற உணர்வற்கு ஆட்படுவதைத் தவிருங்கள்.

சில தருணங்களில் காரணம் ஏதும் இன்றிக் கூட குழந்தைகள் அழுவதுண்டு என்பதை மனதில் புரிந்து கொண்டால் மனம் ஆறும்.

அந்தச் சூழலிலிருந்து உங்கள் மனத்தை பிரித்து எடுங்கள்.

மென்மையான இசை பின்னணியில் ஒலித்தால் உங்கள் மனத்தில் உள்ள நிராசை விலகி நம்பிக்கை பிறக்கும். குழந்தையும் இசையில் இணங்கக் கூடும்.

கணவர், அம்மா, அப்பா, சகோதரம், பாட்டி போன்ற ஒருவரின் பாதுகாப்பில் உங்கள் குழந்தையை சற்று நேரம் விட்டுவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

எந்த உதவியும் கிட்டாவிட்டால் குழந்தையை பிராமில் அல்லது தொட்டிலில் பாதுகாப்பாக விட்டுவிட்டு மற்றொரு அறைக்குச் சென்று சற்று ஆறுதல் எடுங்கள். குழந்தை சற்று அழுவதை கவனத்தில் எடுக்காது உங்கள் மனத்தை நிதானப்படுத்துங்கள்.


இவை எதுவும் சரிவராவிட்டால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, அல்லது தள்ளு வண்டியில் ஏற்றிக் கொண்டு வீட்டு முற்றத்தில் உலாவுங்கள். வெளியே காற்றாற உலாவப் போவதும் உதவக் கூடும்.


ஷொப்பிங் கொம்பிளக்ஸ் அருகில் இருந்தால் குழந்தையுடன் ஒரு நடை போய் வாருங்கள். புதிய சூழல் உங்கள் இருவருக்குமே புத்துணர்ச்சி அளிக்கும்.

சிறுகுழந்தை உள்ளவர்களுக்கு போதிய தூக்கமின்மை பெரும் பிரச்சனையாகும். குறைந்த தூக்கம் உடலையும் மனத்தையும் அலுப்படையச் செய்துவிடும். குழந்தை அழுவது போன்ற சாதாரண பிரச்சனைகளைக் கூட சமாளிக்க முடியாமல் செய்துவிடலாம். எனவே போதிய தூக்கம் உங்களுக்கு முக்கியம்.


குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வு எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.


நீங்கள் செய்யக் கூடாதது ஒன்று உண்டு!

குழந்தையை அமைதிப்படுத்துவதாக அல்லது அதற்கு விளையாட்டுக் காட்டுவதாக எண்ணிக் கொண்டு வேகமாக ஆட்டவோ, உலுப்பவோ, தூக்கிப் போடவோ முயல வேண்டாம்.

குழந்தைகளின் கழுத்துத் தசைகள் பெலவீனமானவை. தமது தலையை தாம் தூக்கி நிறுத்தவே சிரமப்படுபவை. கடுமையாக தூக்கிப் போட்டு ஆட்டினால் கழுத்து எலும்புகள் விலகலாம். அதனால் வலிப்பு, பார்வையிழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்ற பாரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே குழந்தையை மெதுமையாக பூப்போலக் கையாளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment