Friday, May 15, 2009

டெங்கு காய்ச்சலா? எப்படி அறிவது?

அன்றுதான் ஆரம்பித்த காய்ச்சல் 103- 104 எனக் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது. பத்து வயது மதிக்கத்தக்க அந்தப் பையனின் கண்கள் சற்று சிவந்திருந்தன. கடுமையான உடல் உழைவினால் அமைதியாக இருக்க முடியாது அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான். சற்றுத் தொண்டை நோவும் இருந்தது. ஆயினும் தடிமன், மூக்கடைப்பு இருமல் போன்ற அறிகுறிகள் எதுவுமே இல்லை. இத்தகைய காய்ச்சல் இப்பொழுது பரவலாகக் காணப்படுகிறது.

'இது டெங்கு காய்ச்சலாக இருக்குமோ' என கூட்டி வந்த தாய் கேட்டாள். எந்த வைத்தியனாலும் நூறு சதவிகிதம் நிச்சமாகச் சொல்ல முடியாது. காரணம் ஏனைய வைரஸ் காய்ச்சல்கள் போலவே இதுவும் ஆரம்பத்தில் இருக்கும். இது டெங்குதான் என உறுதியாகச் சொல்லக் கூடிய அறிகுறிகள் ஏதும் முதல் மூன்று நாட்களிலும் இருக்காது.

'இரத்தம் சோதித்துப் பார்ப்பமோ' என்று தாய் கேட்டாள். முதல் நாளிலிலேயே இரத்தம் சோதித்துப் பார்ப்பதிலும் எந்தவித பலனும் இருக்கப் போவதில்லை.

டெங்கு என்பதை நிச்சயமாகக் காட்டும் Dengue antibody டெஸ்ட் செய்வதற்கு காய்ச்சல் தொடங்கி ஒரு வாரம் வரை செல்ல வேண்டும். பெரும்பாலும் அதற்கிடையில் காய்ச்சல் குணமாகிவிடும்.

டெங்குவாக இருக்குமோ என ஐமிச்சம் என்றால், காய்ச்சல் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பின்னர் FBC என்று சொல்லப்படும் Full blood Count செய்து பார்க்கலாம். அதில் முக்கியமாக Platelet count மற்றும் PCV ஆகியவற்றையே மருத்துவர்கள் கவனத்தில் எடுத்துப் பார்ப்பார்கள். இந்தப் பரிசோதனைகளில் மாற்றம் இருந்தால் அடுத்து வரும் ஒரு சில நாட்களுக்கு இப்பரிசோதனையை மீண்டும் மீண்டும் செய்து நோயின் நிலையைத் தொடர்ந்து கணிக்க நேரிடும்.

ஆனால் அதுவரை ஏனைய கடும் காய்ச்சல்காரர்களைப் பராமரிப்பது போல பாராமரித்தால் போதுமானது. காய்ச்சலுக்கு பரசிற்றமோல் கொடுக்க வேண்டும். ஆறு மணிநேரத்திற்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். வளர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு தடவையும் இரண்டு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் அவர்களது எடைக்கு ஏற்ப அல்லது வயதிற்கு ஏற்ப மாத்திரையின் அளவு மாறுபடும்.

புரூபன், பொன்ஸ்டன், டைகுளோபெனிக் போன்ற வலிநிவாரணி மருந்துகளை டெங்கு என்ற சந்தேகம் இருந்தால் காய்சலுக்கோ உடல்வலிக்கோ கொடுக்கக் கூடாது. போதிய நீராகாரம் கொடுக்க வேண்டும். உண்ண முடிந்தால் வழமைபோலச் சாப்பிடலாம். ஆயினும் கோக், நெக்ரோ போன்ற செந்நிறப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல சிவப்பு நிறமுடைய ஏனைய உணவுகளையும், பீற்ரூட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

சாதாரண டெங்கு காய்ச்சல் ஆபத்தானது அல்ல. சிலநாட்களில் எந்தவித பின்வளைவுகளும் இன்றி தானாகவே குணமாகிவிடும்.
ஆயினும் டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் (Dengue Haemorrhagic Fever- DHF) மிகவும் ஆபத்தானது. இதன்போதும் கடுமையான காய்ச்சல் இருக்கும். முகம் சிவத்தல், கடுமையான தலையிடி, கண்வலி, தசைவலி, மூட்டுவலி ஆகியன சேர்ந்திருக்கும். இவை 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கலாம்.

அத்துடன் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள் ஏதும் தோன்றலாம். உதாரணமாக மூக்கால் இரத்தம் வடிதல், முரசிலிருந்து இரத்தம் கசிதல், தோலில் ஆங்காங்கே சிவப்பான புள்ளிகள் தோன்றல், ஊசி ஏற்றிய இடத்தில் அல்லது குளுக்கோஸ் ஏற்றிய இடத்தில் இரத்தம் கசிந்து கண்டல் போலத் தோன்றுதல், வாந்தியோடு இரத்தம் வருதல், மலம் கருமையாக வெளியேறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.

அத்துடன் இந்நோயின் போது ஈரல் வீக்கமடைவதால் பசியின்மை, வயிற்றுநோ, வாந்தி, போன்றவை தோன்றும். சிலருக்கு வயிற்றோட்டமும் ஏற்படுவதுண்டு. அத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் எந்த வயதினரையும் பாதிக்கலாம் ஆயினும் குழந்தைகளைப் பாதிப்பது அதிகமாகும். அதிலும் ஒரு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளைத் தாக்கும் போது ஆபத்து அதிகமாகும். நோஞ்சான் பிள்ளைகளைவிட ஆரோக்கியமான பிள்ளைகளையே அதிகம் பாதிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதற்கான காரணம் தெளிவாகவில்லை.

டெங்கு கிருமியில் பல உபபிரிவுகள் இருப்பதால் ஒரு முறை டெங்கு வந்தால் மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. திரும்ப வரக் கூடிய சாத்தியம் உண்டு. உண்மையில் முதல் தடவை வரும்போது பெரிய பாதிப்புகள் இருப்பதில்லை. சாதாரண காய்ச்சல் போல குணமாகிவிடும். ஆயினும் அடுத்த முறை வரும்போதே கடுமையாக இருக்கும். டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் போன்றவை அப்பொழுதே வருகின்றன.

பலருக்கு காய்ச்சல் விட்ட பின்னரும் கடுமையான களைப்பு, தலைச்சுற்று, கிறுதி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இவை உடலின் உள்ளே குருதிக் கசிவு ஏற்பட்டதால் அல்லது நீர்இழப்பு ஏற்பட்டதால் தோன்றியிருக்கலாம். எனவே அலட்சியப்படுத்தக் கூடாததாகும்.

டெங்கு காய்ச்சல் உலகளாவிய ரீதியில் பரவியுள்ளது. சிகப்பாக காட்டிய பகுதியில் கடுமையான பரிப்புகளை ஏற்படுத்துகிறது.

இது எயிடிஸ் எஜிப்பாய் (Aedes aegypti) என்ற வகை நுளம்பினால் பரவுகிறது. நோயாளியின் இரத்தம் குடித்து வயிறு பருத்திருக்கும் நுளம்பனைப் படத்தில் காணுங்கள்.









டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

Saturday, May 9, 2009

நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்

நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.

இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.

தரையிலிருந்து ஏதாவது பொருளை எடுக்க வேண்டுமாயின் அதனைக் குனிந்து எடுக்க வேண்டாம். பாரமான பொருட்களை என்றல்ல, பாரமற்ற பென்சில் போன்ற சிறிய பொருட்களாக இருந்தாலும் கூட முதலாவது படத்தில் காட்டியவாறு முதுகை வளைத்துக் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.

மாறாக இரண்டாவது படத்தில் காட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்து, பாதங்கள் தரையில் பொறுத்திருக்குமாறு நின்ற பின், முதுகு வளையாதவாறு, முழங்கால்களை மடித்து உட்கார்ந்து எடுங்கள்.

அவ்வாறு எடுக்கும்போது அல்லது தூக்கும்போது முதுகை வளைக்காது இருப்பதுடன் பொருளை நெஞ்சுக்கு அருகே வைத்துத் தூக்குங்கள். இவ்வாறு தூக்கும்போது முதுகை பக்கவாட்டிற்கு ஆட்டி அசைந்து திருப்பாமல் இருப்பதும் முக்கியமாகும்.

ஒரு பாரமான பொருளை, உதாரணத்திற்கு அலுமாரியை நகர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்தால் அதனை கைகளால் இழுப்பதைத் தவிர்த்து முதுகுப் புறத்தால் தள்ளி நகர்த்த முயற்சியுங்கள்.



இருப்பதுவும் …

உட்காரும்போது உயரம் குறைந்த கதிரைகளில் உட்காருவதைத் தவிருங்கள். சாப்பாட்டு மேசைக் கதிரைகள் போன்றவை பொதுவாக சரியான உயரம் கொண்டவையாகும். உட்காரும்போது உங்கள் முதுகு எவ்வாறு இருக்க வேண்டும். ‘வளைந்து உட்காராதே முதுகை செங்குத்தாக நிமிர்த்தியபடி உட்காரு’ என்றே பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை ஆலோசனை கூறுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது அபர்டீனிலுள்ள வூட்என்ட் வைத்தியசாலையில் (Woodend Hospital in Aberdeen) எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அதனை மறுதலிக்கிறது. மேசையை நோக்கி முன்பக்கமாக வளைந்து உட்கார்வதானது முள்ளந்தண்டின் கீழ்ப்புறத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தும். ஆனால் நடுவில் உள்ள படத்தைப்போல நிமிர்ந்து உட்காருவது முள்ளெலும்புகளில் கூடிய அழுத்தத்தை கொடுத்து அவற்றின் நேர் ஒழுங்கையே குறைத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

மாறாக மூன்றாவது படத்தில் காட்டியவாறு இடைப்பட்ட நிலையில் உட்காருவதே முள்ளெலும்புகளுக்கு குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனித உடலானது நீண்டநேரம் நிமிர்ந்து உட்காருவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை அதையே செய்ய வைக்கிறது. எனவே நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முள்ளெலும்புகளுகான பதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் அதாவது 135 பாகை பின்புறம் சாய்ந்து உட்காருவதே சிறந்தது.

வேலை செய்யும்போதோ அல்லது பிரயாணம் பண்ணும்போதோ நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்வது முதுகெலும்பிற்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கும். அந்நேரங்களில் மணித்தியாலயத்திற்கு ஒரு முறையாவது சற்று எழுந்து நின்று தசைகளை நீட்டி நிமிர்த்தி அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள்.

அதேபோல கார் ஓட்டும்போது உங்கள் ஓட்டுனர் ஆசனத்தின் முதுகு சாய்க்கும் பகுதியானது பதினைந்து பாகையளவு பிற்புறம் சாய்ந்திருக்கும் படி ஒழுங்கு படுத்த வேண்டும். கைகள் தளர்வாக இருப்பதுடன் ஸ்டியரிங்கை இறுகப் பற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் டிரைவிங் சீட்டை சற்று முன்னுக்கு நகர்தினால் இது சாத்தியமாகும்.

முதுகை முற்புறம் வளைந்து, ஸ்டியரிங்கை நோக்கிக கூனிக் கொண்டிருப்பது போல அமர்ந்து கார் ஓட்டுவதைத் தவிருங்கள்.












மேசையருகே உட்கார்ந்து எழுதும்போது முதுகை முன்பக்கமாக வளைந்து சரிந்திருப்பது கூடாது. கதிரையை மேசைக்கு அருகில் நகர்த்தி வைத்தால் முதுகு வளையாது. உட்காருவது பற்றிக் கூறியதற்கு இணங்க நிமிர்ந்திருந்து அல்லது சற்று பின்புறம் சாய்ந்திருந்து எழுதுங்கள்.

பொதுவாக குதி உயர்ந்த காலணிகளை அணிவதைத் தவிருங்கள். ஒரு அங்குலத்திற்கு குறைவான உயரமுள்ள குதிப்பகுதியுள்ள காலணிகள் நாரிப்பிடிப்பைத் தடுப்பதற்கு நல்லதென கூறுகிறார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும், எடையை அதிகரிக்காது பேணுவதும் நாரி வலி ஏற்படாது தடுப்பதில் பங்களிக்கும்.

நீங்கள் மரக்கறி வெட்டும்போது, தேங்காய் துருவும்போது அல்லது உடைகளை அழுத்தும்போது (Ironing) ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க நேரிடும். இது முள்ளதண்டிற்கு கூடிய வேலைப்பளுவைக் கொடுக்கும். இதைத் தடுப்பதற்கு ஒரு காலை அரை அடியுள்ள பலகையில் உயர்த்தி வையுங்கள். ஒரே காலை தொடர்ந்து உயர்த்தி வைக்க வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி உயர்த்தி வைக்கவும். இதனால் முள்ளதண்டிற்கான கூடிய வேலைப்பளு குறையும்.

சாதாரண நேரங்களில் நிற்கும் போது உங்கள் உடலானது நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது காது, தோள் மூட்டு, இடுப்பு மூட்டு ஆகியன ஒரு நேர்கோட்டில் அமைய வேண்டும். தொந்தியை முற்புறம் தொங்கவிட்டு, முதுகை வளைக்காது வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால் முதுகும் நிமிர்ந்து சரியான தோற்றத்தில் நிற்க உதவும்.

படுப்பதுவும் …

நாம் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே நிலையில் தொடர்ந்திருப்பது தூங்கும் போதுதான். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் படுக்கையில் செலவழிக்கிறோம். எனவே அந்தளவு நேரமும் எமது முள்ளந்தண்டானது அழுத்தம் இன்றி தளர்ச்சியாக இருப்பது அவசியம். அதாவது பகல் வேளையில் நிமிர்ந்து நிற்கும்போது எவ்வாறு முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகள் பேணப்படுகின்றனவோ அவ்வாறே படுக்கையிலும் பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் படுக்கையும் தலையணையும் அமைய வேண்டும்.

சரியான படுக்கையானது வெறும் தரையோ, வெறும் பலகையோ அல்ல. அதே போல தளர்ச்சியான ஸ்பிரிங் உள்ள கட்டில்களோ சாக்குக் கட்டில்கள் போன்றவையும் அல்ல. எமது உடலின் இயற்கையான வளைவுகளை பேணத்தக்களவு மிருதுவான படுக்கையே ஏற்றது. உதாரணமாக பலகை மேல் சற்று இறுக்கமான மெத்தை போட்ட படுக்கை பொருத்தமாக இருக்கும்

தலையானது உங்கள் தலைக்கும் படுக்கைக்கும் இடையிலான இடத்தை சரியான அளவில் நிரப்புதற்கு ஏற்ற பருமனுடையதாக இருக்க வேண்டும். முதற் படத்தில் முள்ளந் தண்டானது இடுப்பு முதல் தலை வரை ஒரே நேராக இருக்கின்றன. மெத்தையும் தலையணையும் அதற்கேற்ற பருமனும் அடர்த்தியும் கொண்டிருக்கின்றன. இரண்டாவது படத்திலுள்ள கட்டில் மிகவும் தளர்ச்சியானதாக இருப்பதால் உங்கள் உடற்பாரத்தால் முள்ளந்தண்டு வளைந்து கோணும்படி செய்துவிடுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல

மூன்றாவது படத்தில் உள்ளது போன்ற கடுமையான சற்றும் இசைந்து கொடுக்காத தரை அல்லது பலகை வாங்கு போன்ற படுக்கை ஏற்றதல்ல என்பது புரிந்திருக்கும். காரணம் இதுவும் உங்கள் முள்ளந்தண்டின் இயல்பான வளைவுகளை பேணுவதில்லை.

ஒரு பக்கம் சரிந்து, முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதுதான் தூங்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிலையாகும். முழங்கால்களுக்கு இடையே ஒரு சிறிய தலையணையை வைப்பது மேலும் சொகுசாக அமையும். குப்புற முகம் புதைத்து வயிற்றில் அழுத்துமாறு ஒருபோதும் படுக்க வேண்டாம். மாறாக நிமிர்ந்து படுப்பதாயின் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணை வையுங்கள். இவ்வாறு தூங்கும்போது அடிநாரிக்கு கீழே ஒரு சிறிய தலையணை வைப்பதும் நல்லது.

பயிற்சிப்பதுவும் …

முள்ளத் தண்டை அண்டியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதனால் வலி குறைவதுடன் மீண்டும் மீண்டும் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இரண்டு முழங்கால்களையும் குத்தென மடித்துப் படுங்கள். இப்பொழுது உங்கள் இடது முழங்காலை மெதுவாக நெஞ்சைத் தொடுவது போல உயர்த்துங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் நாரியின் அடிப்புறம் அடியிலுள்ள கட்டிலோடு அல்லது தரையோடு நன்கு அழுத்துப்பட வேண்டும். இவ்வாறு 5 செகண்ட் செய்த பின்னர் கால்களைப் பழைய நிலைக்கு கொண்டு சென்று தளரவிடுங்கள். இனி வலது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யுங்கள். மாறி மாறி ஒவ்வொரு காலுக்கும் பத்துத் தடவை மீளச் செய்யுங்கள்.

மேற் கூறியது முதுகுப்புற தசைகளுக்கான பயிற்சி. இதைத் தவிர நீந்துவது, விரைவு நடை போன்ற ஏனைய பயிற்சிகளையும் செய்து வாருங்கள். இவை நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை பெற மட்டுமின்றி, உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தையும் பேண உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்

Post Comment

Friday, May 1, 2009

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

'அம்மா நீங்கள் நாளந்தம் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்' என்றேன்.

'இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?'

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

ஆனால் மூட்டுகள் சிவந்து, வீங்கி வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நடக்க வேண்டும் என்ற எண்ணமே உங்கள் வலியை மேலும் அதிகரிப்பது போலத் தோன்றுகிறது அல்லவா? அந்த எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. ஆனால் இவற்றோடு நீங்கள் பந்தயத்தில் ஓடப் போவதோ, விளையாட்டு வீரர்கள் போல பயிற்சி செய்யப் போவதோ இல்லையே. சிறிய சிறிய பயிற்சிகளே போதுமானது.

அவை வலியைத் தணிக்கவும், மூட்டுகளை இலகுவாக இயக்குவதற்கும் நிச்சயம் உதவும். மூட்டு வலிகள் ஒருவரைப் பாதித்து நடக்கவோ, இயங்கவோ முடியாது தடுத்து, படுக்கையில் கிடத்த முனையும் போது, பயிற்சிகள் மட்டுமே ஒருவரை இயங்க வைக்கும்.

உடற் பயிற்சிகள் ஏன் அவசியம்

பயிற்சிகள் ஒருவரது மூட்டுகளைப் பாதிக்காத அதே நேரம், பொதுவான உடல் நலத்தை மேம்படுத்துவதுடன் செயலாற்றல் திறனையும் அதிகரிக்கும். மூட்டு நோய்களுக்கான மருத்துவத்தைத் தொடர்வதுடன் பயிற்சிகளைச் செய்வதன மூலம் நீங்கள் கீழ்காணும் நன்மைகளையும் பெறுவீர்கள்.

1. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தும்.
2. எலும்புகளின் உறுதி கெடாமல் பாதுகாக்கும்.
3. நாளாந்த வேலைகளுக்கான பலத்தையும் சக்தியையும் கொடுக்கும்

4. இரவில் உடல் உழைவற்ற நிம்மிதியான தூக்கம் கிடைக்க உதவும்.

5. உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

6. உங்கள் உடல் நலம் பற்றிய நம்பிக்கையூட்டும் உணர்வை வளர்க்க உதவும்.


பயிற்சி செய்வது மூட்டு வலியை அதிகரித்து, மூட்டுகளை மேலும் இறுக்கமடையச் செய்து இயங்கவிடாமல் தடுக்கும் எனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பயிற்சிகள் செய்யாது மூட்டுகளை ஆட அசையாது வைத்திருப்பதுதான் உண்மையில் மூட்டுகளின் வலியை அதிகரித்து இறுக்கமடைய வைக்கின்றன.

இதற்குக் காரணம் என்னவென்றால் மூட்டுகளும் எலும்புகளும் திடமாக இருப்பதற்கு சுற்றியுள்ள தசைகள் பலமாக இருப்பது அவசியம். அவை திடமாக இருந்து போதிய ஆதரவையும் பக்கபலத்தையும் கொடுக்கவில்லை எனில் மூட்டுகள் சிதைவடைவதற்கும் எலும்புகள் உடைவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்

உங்களது மூட்டு வருத்தம் எத்தகையது, அதற்கான சிகிச்சை என்ன, அதற்கு எத்தகைய பயிற்சிகள் சிறந்தவை என்பதை உங்கள் மருத்துரின் ஆலோசனையுடனே ஆரம்பிக்க வேண்டும். அல்லது அதற்கென பயிற்சி பெற்ற பயிற்சியாளர் (Physiotherapist) ஆலோசனையுடன் தொடங்கலாம். உங்களது மூட்டுவலி எத்தகையது, அது எந்தெந்த மூட்டுகளைப் பாதித்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அதிக பலனைக் கொடுக்கும் அதே நேரம் வலியை அதிகரிக்காத பயிற்ச்சி எது என்பதைத் தீர்மானிப்பார்.

பயிற்சி வகைகள்

மூட்டுகளின் செயற்பாட்டு எல்லைகளை அதிகரிப்பதற்கான பயிற்சி

ஓவ்வொரு மூட்டிற்கும் அதன் செயற்பாட்டிற்கான பரப்பு (Range) இருக்கிறது. மூட்டு நோய்கள் ஏற்படும்போது அது பொதுவாக குறைந்துவிடும். உதாரணத்திற்கு வழமையாக உங்கள் கைகளை நேராக தலைக்கு மேல் உயர்த்த முடியும். ஆனால் இறுகிய தோள் மூட்டு (Frozen Shoulder) போன்ற நோய்களின் போது அவ்வாறு முழுமையாக உயர்த்த முடியாதிருக்கும்.

இந் நிலையில் உங்கள் உள்ளங்கைகளை சுவரில் வைத்து அழுத்தியவாறு, படிப்படியாக உயர்த்திக் கொண்டு செல்லுங்கள். இதனை தினமும் பயிற்சியாகச் செய்து வரலாம். இதே போல உங்கள் கைகளை முன்பக்கம், பக்கவாடு, பிற்பக்கம் என திருப்பி உயர்த்தலாம்.

மணிக்கட்டு வலிக்கு படத்தில் காட்டியபடி செய்யலாம்.

இதே போல நோயுள்ள எல்லா மூட்டுகளினதும் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்க பயிற்சிகள் செய்வது அவசியம்.

தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகள்

இந்தப் பயிற்சிகள் நோயுற்ற மூட்டைச் சுற்றியுள்ள தசைகளைப் பலப்படுத்தி அதன் மூலம் அவற்றிக்கு பாதுகாப்பளிக்கும். ஒவ்வொரு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளுக்கும் இவ்வாறு செய்யலாம். உதாரணமாக உங்கள் முழங்காலுக்கு பலம் கொடுக்க வேண்டுமாயின் அதன் கீழ் ஒரு டவலை சுருட்டி வைத்து அதனை முழங்காலால் அழுத்துங்கள். 5 செகண்ட் ரிலக்ஸ் பண்ணிவிட்டு மீண்டும் செய்யுங்கள் இவ்வாறு தினமும் 50 தடவைகள் ஒவ்வொரு முழங்காலுக்கும் செய்யவேண்டும். வலி கடுமையாக இருந்தால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துச் செய்யுங்கள்.

மற்றொரு பயிற்சி. கதிரை அல்லது கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களது குதிக்கால் நிலத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, இடது காலை நீட்டுங்கள். நிமிர்ந்து உட்காரந்திருந்த நீங்கள் இப்பொழுது சற்று முற்புறமாகக் குனியுங்கள். ஆதன்போது உங்கள் காலின் பின்பறம் இறுகுவதை உணரலாம். 20-30 செகண்டுகள் அவ்வாறு இறுகப் பிடித்தபின் சற்று ஆறிய, வலது காலுக்கும் அவ்வாறு செய்யுங்கள்.

பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சிகள்

மேலே கூறியவை குறிப்பிட்ட மூட்டுகளுக்கான பயிற்சிகள். ஆயினும் உங்கள் முழு உடலும் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியமாகும். இதற்கு தினசரி பயிற்சிகள் செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகள் உங்கள் இருதயத்தை திடமாக்கும், சுவாசத்தை இலகுவாக்கும், எடையைப் பேண உதவும். உடலுக்கு மேலதிக சக்தியைக் கொடுக்கும்.

விரைவு நடை, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவை அத்தகையவையாகும். 20முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

வாரத்தில் 3-4 நாட்களுக்காவது செய்வது அவசியமாகும். ஒரே தடவையில் செய்ய முடியவில்லை எனில், 2 அல்லது 3 தடவைகளாகப் பிரித்துச் செய்யுங்கள்.


மூட்டு வலிக்கு உதவக்கூடிய ஏனைய முயற்சிகள்


மூட்டு வலிகள் இருந்தால் அவற்றின் வலியைத் தணிக்கவும், செயற்பாட்டு எல்லைகளை அதிகரிக்கவும் செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் செய்ய வேண்டிய ஏனைய முயற்சிகள் இதோ.
ஏனைய முயற்சிகள்

இவற்றைத் தவிர உங்கள் உடலுக்கு அசைவியகத்தை கொடுக்கக் கூடிய எந்த வேலையையும் செய்யத் தயங்காதீர்கள். அது சிறிய பணியாக இருந்தால் கூட நிச்சயம் உதவும். யோகா போன்ற பயிற்சிகள் கூட நல்லதுதான். சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் ஆரம்பியுங்கள்.

ஏனைய உதவிக் குறிப்புகள்

பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது படிப்படியாக ஆரம்பியுங்கள். அதிலும் முக்கியமாக சிலகாலம் பயிற்சிகள் இல்லாதிருந்துவிட்டு ஆரம்பிக்கும் போது திடீரென முழு வீச்சில் செய்யக் கூடாது. திடீரென கடுமையாகச் செய்தால் வலி குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கக் கூடும். எனவே Slow and Steady யாகச் செய்யுங்கள்.

பயிற்சிக்கு முன்னர் நீங்கள் பயிற்சி கொடுக்க இருக்கும் மூட்டுகளுக்கு சற்று வெப்பம் கொடுப்பது நல்லது. சுடுநீரில் நனைத்த துணியால் ஒத்தணம் கொடுங்கள், அல்லது Hot water bag னால் சூடு காட்டுங்கள்


அல்லது Infra Red Light பிடியுங்கள். அவ்வாறு 15-20 நிமிடங்களுக்குச் செய்ய வேண்டும். சூடு மூட்டுகளையும் தசைகளையும் சற்றுத் தளரச் செய்து நீங்கள் பயிற்சியை ஆரம்பிக்க முன்னரே வலியைச் சற்றுத் தணிக்கும்.

வெப்பமான நீரில் குளிப்பதும் உதவக் கூடும். மிதமான வெப்பமாக இருக்க வேண்டுமே ஒழிய கடும் சூடாக இருக்கக் கூடாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தினமும் பயிற்சிகளை ஆரம்பிக்கும்போது உங்கள் மூட்டுகளை மெதுவாக அசைத்து, அவற்றிற்கான எளிய சுலபமான இதமான பயிற்சிகளை முதலில் செய்யுங்கள்.

இவ்வாறு 10 நிமிடங்கள் செய்த பின் தசைகளைப் பலப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

அதன்பின்தான் வேகநடை, நீச்சல் போன்ற கடுமையான பயிற்சிகளுக்குப் போக வேண்டும்.

பயிற்சிகளைச் செய்யும்போது வலி எடுத்தால் சற்று ஓய்வு கொடுங்கள்.

சுருக்கென தாக்கும் கடும் வலி எடுத்தால் பயிற்சியை நிறுத்தி அடுத்த நாளுக்கு ஒத்தி வையுங்கள். பயிற்சியின் போது மூட்டுக்கள் சிவந்து வீங்கினாலும் அவ்வாறே நிறுத்துங்கள்.

பயிற்சியின் போது வீங்கி வலித்த மூட்டுகளுக்கு பயிற்சி முடிந்தபின் ஐஸ் வைப்பது உதவும். 10-15 நிமிடங்களுக்கு வையுங்கள்.

பயிற்சிகளின் போது உங்கள் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். உங்கள் மூட்டுகளால் தாங்க முடியாத கடும் பயிற்சிகளை அதற்குக் கொடுக்காதீர்கள். ஆரம்பத்தில் சொன்னதுபோல படிப்படியாக பயிற்சியை அதிகரியுங்கள், அதன் வேகத்தையும், செய்யும் நேரத்தையும்.

சற்றுக் காலம் நீங்கள் இயங்காதிருந்தால், அல்லது பயிற்சிகளை நிறுத்தியிருந்தால், மீண்டும் ஆரம்பிக்கும் போது மூட்டுகளில் சற்று வலி எடுக்கலாம்.

ஆயினும் அவ்வலி ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும் நீடித்தால் பயிற்சி சற்று அதிகமாகிவிட்டதாகக் கொள்ளலாம். எதற்கும் உங்கள் மருத்துவருடன் அவ்வலி இயல்பானதுதானா அல்லது நோயின் காரணமாகவா எனக் கலந்தாலோசிக்கலாம்.

எதற்கும் பயிற்சிகளை முற்றாக நிறுத்திவிடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்


Post Comment