Friday, March 20, 2009

தொட்டில் மரணம்

அந்தக் குழந்தையின் மரணம் பெற்றோர்க ளுக்கும் உறவினர்களுக்கும் எதிர்பாராத அதிர்ச்சியையும் ஆறாத் துயரையும் ஏற்படுத்தியது. அதற்கு மேலாக அது ஏன் இறந்தது என்பது விளக்க முடியாத புதிராகவும் அமைந்தது.

குழந்தைக்கு ஐந்து மாதமளவில் இருக்கும். மிகுந்த செல்லக் குழந்தை. அந்தக் குடும்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பின் கிடைத்த பெரும் பொக்கிஷம். வயதுக்கு மீறிய துடிதுடிப்பும் உற்சாகமும் கொண்டது. எல்லோருடனும் தயக்கமின்றி சேர்ந்து சிரித்து மகிழும் பண்பு கொண்டதால் அனைவரது பிரியத்திற்கும் ஆளானது. வீட்டில் உள்ளவர்களுக்கு மாத்திரமின்றி அந்தத் தெருவில், அக்கம் பக்கம் இருந்த அனைவருக்குமே அதனோடு ஒட்டுதல்.

அன்றும் வழமைபோல உடம்பு திருப்பியது, பால் குடித்தது, விளையாடியது, சிரித்தது, குளித்தது. எதுவுமே மாற்றமில்லை. சிறிய தடிமன் காய்ச்சல் கூட இல்லை. தாயாருக்கு அருகிலேயே இரவு படுத்துத் தூங்கியது. அதிகாலை 5 மணியளவில் தாய் கண்விழித்த போதும் அதேபோலப் படுத்திருந்தது. தாய் தொட்டு அணைக்க முற்பட்டபோது குழந்தை சில்லிட்டுக் கிடந்தது தெரியவந்தது. பேச்சு மூச்சில்லை. டொக்டர் பார்த்தபோது இறந்துவிட்டதாக அறிவித்தார்.

தொட்டில் மரணம் என்றால் என்ன?

நோயெதுவுமின்றி நலமாக இருந்த குழந்தை திடீரெனக் காரணமெதுவுமின்றி இறந்து கிடப்பது எவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கவே செய்யும். ஆயினும் மருத்துவ ரீதியில் இது ஒரு புதினமான விடயமல்ல. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் இவ்வாறு பல குழந்தைகள் இறக்கின்றன. தொட்டில் இறப்பென (Cot Death) இதனைக் கூறுவர்.

மருத்துவதில் Sudden infant death syndrome என்பர். இத்தகைய மரணங்கள் பொதுவாக குழந்தையின் முதல் மாதத்திலேயே மிக அதிகமாக இடம்பெறுகிறது. 2ஆம், 3ஆம் மாதங்களிலும் ஓரளவு உண்டு. ஆயினும் 6 மாதங்களுக்குப் பிறகு மிகக் குறைவே.

ஏன் ஏற்படுகிறது

இது ஏன் ஏற்படுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆயினும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணங்கள் சேரந்திருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

தூக்கத்தையும், விழித்தெழுதலையும் கட்டுப்படுத்தும் மூளையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏதாவது ஒரு பிரச்சனை காரணமாயிருக்கலாம். உதாரணமாக தூக்கத்தில் இருக்கும் குழந்தையின் முகத்தின் மேல் (அதாவது மூக்கு வாய் இரண்டும் மூடும்படியாக) துணி விழுந்தால், அதனால் ஏற்படக் கூடிய சுவாசத்தடையை சமாளிக்கு முகமாக திணறி விழித்தெழுதலை மூளையால் ஏற்படுத்த முடியாதது காரணமாகலாம் என்கிறார்கள்.

ஆயினும் தொட்டில் மரணம் எப்பொழுதுமே ஆழ்ந்த தூக்கத்தில்தான் நடக்கும் என்றில்லை. தாயின் மடியிலோ அல்லது பிறாமிலோ (Pram)குட்டித் தூக்கம் செய்யும்போது கூட நிகழலாம்.

யாருக்கு ஏற்படலாம்

வசதி குறைந்த குடும்பங்களில் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

ஆசியச் சமூகத்தில் குறைவு என்று சொல்லப்படுகிறது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிலும், முக்கியமாக 37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகளிடையே கூடுதலாக ஏற்படலாம்.

பிறக்கும்போது வழமையை விட எடை குறைந்த பிள்ளைகளிலும் அதிகம்.

இரட்டைக் குழந்தைகளிடையேயும் அதிகம் காணப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்கனவே வேறு குழந்தைகள் அவ்வாறு இறந்திருந்தாலும் சாத்தியம் அதிகம்.

அதிலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இறப்பது அதிகமாம்.

வருடாந்தம் ஒரு வயதிற்குள், 300 குழந்தைகள் இவ்வாறு இறப்பதாக மருத்துவப் பதிவுகள் கூறுகின்றன. இது இலங்கைக்கானது அல்ல, இங்கிலாந்து நாட்டின் முடிவு.

எந் நேரத்தில், காலத்தில்?

இவ்வாறு இறப்பது பொதுவாக குளிர்காலத்தில் அதிகமாகும்.

அதிலும் முக்கியமாக நடுநிசிக்கும் காலை 9 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே நடக்கிறது. இவ்வாறு இறப்பதற்கான காரணத்தை பத்தில் ஒரு பிள்ளைக்கே கண்டறிய முடிகிறதாம்.

பெற்றோரின் மனப் பாதிப்பு

மிக முக்கியமான பிரச்சினை பெற்றோர்களுக்கு ஏற்படக் கூடிய மனப்பாதிப்பு ஆகும். இது தாங்கள் விட்ட தவறினால் அல்லது கவனிப்பின்மையால் ஏற்பட்டது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மன ஆறுதலுக்காக மருத்துவருடன் தொட்டில் மரணம் பற்றிப் பேசி விரிவாக அறிந்து கொள்வது நல்லது.

புதினம் பிடுங்குபவர்களைத் தவிர்த்து ஆதரவோடும், புரிந்துணர்வோடும் நடப்பவர்களுடன் பேசி மனம் ஆறுவது புத்திசாலித்தனமானது.

தடுக்கும் வழிகள்

* குழந்தை இருக்கும் அறையில் புகைப்பது தவிர்க்கப்பட வேண்டும். கர்ப்பமாயிருக்கும் போது தாய் ஒருபோதும் புகைக்கக் கூடாது.

* குழந்தையை எப்பொழுதும் முதுகு கீழிருக்குமாறே படுக்க விட வேண்டும். ஒரு போதும் குப்புற படுக்க அனுமதிக்கக் கூடாது.

* போர்வையால் போர்த்தக் கூடாது. படுக்கையில் வேறு துணிகள் இருக்கக் கூடாது.

* இறுக்கமான தட்டையான மெத்தைகளையே உபயோகிக்க வேண்டும். தொட்டிலுக்குள் நீக்கல் இடைவெளி ஏதும் இன்றி முழுமையாக தொட்டிலை நிரப்பும்படியான மெத்தைகளே நல்லது. மெத்தையின் வெளிப்புறம் தண்ணீர் தேங்காததாக (waterproof ) இருக்கவேண்டும். தடித்த ஒற்றைத் துணியால் மடிப்புகள் விழாமலும், நழுவாதபடியும் மூடியிருக்க வேண்டும்.

* படுக்கையறை கடும் குளிராகவோ, கடும் வெக்கையாகவோ இருக்கக் கூடாது.

* பெற்றோர் படுக்கும் அறையிலேயே குழந்தையின் தொட்டில், கொட் இருப்பது நல்லது.

* புகைக்கும், மது அருந்தும் அல்லது மருந்துகள் உபயோகிக்கும் பெற்றோர் தமது கட்டிலிலேயே ஒருபோதும் குழந்தையைக் கூட வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.

* அதேபோல கடும் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு தூங்க வேண்டாம்.

* சோபா, செற்றி, கதிரை போன்றவற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு தூங்கவே கூடாது.

* குழந்தைக்கு சிறு வருத்தம் என்றாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

* பல குழந்தைகள் உள்ள வீடாயின் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தையின் பராமரிப்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

சூப்பி கொடுப்பது

சில ஆய்வுகள் சூப்பி கொடுப்பதால் தொட்டில் மரணம் ஏற்படக் கூடிய சாத்தியத்தைக் குறைக்கலாம் என்கின்றன. முக்கியமாக தூக்கம், குட்டித் தூக்கம் ஆகியவற்றின் போது சூப்பி கொடுப்பது இதனைத் தடுக்க உதவலாம்.

ஆயினும் இதனைக் கொடுப்பதால் தாய்ப்பால் ஊட்டலுக்கு தடங்கல் ஏற்படலாம் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள். தாயப்பால் ஊட்டுபவரகள் பாலூட்டல் செயற்பாடானது சிறப்பாக செயற்பட ஆரம்பிக்கும் வரை அதனை ஆரம்பிக்கக் கூடாது. முக்கியமாக முதல் மாதம் சூப்பியைக் கொடுக்காது விட்டால் குழுந்தை தாய்ப்பாலை நன்கு குடிக்கக் கற்றுக் கொண்டுவிடும். அதன் பின் தேவையானால் கொடுக்கலாம்.

மின்காற்றாடி

குழந்தை தூங்கும் அறையில் மின்காற்றாடி(Fan) போடுவதால் தொட்டில் மரணத்தைத் தடுக்கலாம் என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஏற்கனவே இப்பிரச்சனையால் இறந்த 185 பிள்ளைகளின் தாய்மாரை செவ்வி கண்ட ஆய்வு இது. குறைந்தளவு எண்ணிக்கையினரை கொண்டு செய்யப்பட்ட ஆய்வு என்பதால் இதன் முடிவு சர்ச்சைக்குரியது.

இது பற்றி மேலும் வாசிக்க :- http://www.healthjockey.com/2008/10/07 யைச் சொடுக்குங்கள்.

நினைவுப் பொருட்கள்

குழந்தையின் போட்டோ, அது உபயோகித்த பொருட்கள் போன்றவற்றை ஞாபகார்த்தமாக வைத்திருக்கலாம்.

பாலூட்டும் தாயாயின் மேலும் பால் சுரப்பதைத் தவிர்பதற்காக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

- டொக்டர் எம்.கே. முருகானந்தன்-

Post Comment

Sunday, March 1, 2009

முழங்கை வலி

'சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியுதில்லை. முழங்கையிலை ஒரே வலி' என்றாள் வேதனையுடன் ஒரு பெண்மணி.

'பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டினாள்.

உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது ஒன்றைப் பற்றிப் பிடிக்கும்போது (உதாரணமாக கைலாகு கொடுப்பது, கதவின் கைபிடியைப் பிடித்து இழுப்பது) வலி ஏற்படுவதுண்டு. கைவலியைத் தவிர இவ்விடத்தில் வீக்கமோ, சினப்போ அல்லது விறைப்புத்தன்மையோ சேர்ந்திருப்பதில்லை என்பதை நோயுள்ளவர்கள் பலரும் அவதானித்திருப்பார்கள்.

முழங்கையின் வெளிப் புறத்தில் எற்படும் வலி பெரும்பாலும் கடுமையாக இருக்கும். ஆரம்பத்தில் பொறுக்கக் கூடியதாக இருக்கும் இவ்வலி காலகதியில் (ஒரு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை)கடுமையாக மாறும். நோய் கடுமையான நிலையில் முழங்கையின் சிறு அசைவு கூட வலியைக் கடுமையாக்கும்.

முழங்கையின்; வெளிப்புற மொளி அருகே ஏற்படும் இந்த வலியை ஆங்கிலத்தில் tennis elbow என்பார்கள். காரணம் டெனிஸ் விளையாடுபவர்களிடம் அதிகம் ஏற்படுவதால்தான். ஆனால் டெனிஸ் விளையாடுவது மட்டுமே இந்நோய் வருவதற்குக் காரணமல்ல.

முன்னங்கைகளை அதிகம் உபயோகிக்க வேண்டிய தொழில் செய்பவர்களிலும் இது ஏற்படும். வர்ணம் பூசுவது, இறைச்சி வெட்டுவது, சுட்டியலால் தொடர்ந்து அடிப்பது, நெசவு போன்றவை சில உதாரணங்களாகும்.

கொல்வ் விளையாடுவது போன்று முன்கையை ஒரே விதமாக உபயோகித்து தொடர்ந்து விளையாடுவதாலும், வேலை செய்வதாலும் முழங்கையில் இத்தகைய வலி ஏற்படுவதுண்டு.

உங்கள் முழங்கையின் வெளிப்புறம் திட்டாக தெரியும் மொளியில் இருக்கும் தசைநாண்(Tendon) உட்காயம் ஏற்படுவதாலேயே இந் நோய் ஏற்படுகிறது. இந்த தசைநாண்தான் உங்கள் கைவிரல்கள் மற்றும் மணிக்கட்டு ஆகியவை சரியான முறையில் இயங்குவதற்கு காரணமாயுள்ளன.

வலியைக் கவனத்தில் எடுக்காது அத்தகைய வேலைகளைச் தொடர்ந்தும் செய்தால் சவ்வு அறுந்துவிடவும் கூடும் என்பது எப்பொழுதாவது ஏற்படக் கூடிய ஆபத்தாகும்.

அவரது மணிக்கட்டு, முழங்கை, தோள் மூட்டு யாவற்றையும் நன்கு பரிசோதித்துப் பார்த்த போது அவருக்கு வேறு நோய்கள் அதாவது மூட்டு வாதமோ அல்லது நரப்புகளில் பாதிப்புக்களோ இல்லை என்பது தெளிவாகியது. இது டெனிஸ் எல்போ என்பதுதான் என்பது நிச்சயமாயிற்று. 'படம் எடுக்க வேண்டுமா' என்று அவள் கேட்டாள். எக்ஸ் ரே எடுக்க வேண்டியது அவசியமில்லை என்று விளக்கினேன்.

பலருக்கு இந்நோய் எந்தவித சிகிச்சையும் இல்லாது தானாகவே காலகதியில் குணமாகிவிடும். ஆரம்ப நிலையில் அவ்விடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது வலியைத் தணிக்க உதவும். வலிநிவாரணி மாத்திரைகள், மணிக்கட்டிற்கான பட்டி (Elbow Brace) ஆகியவையும் உதவக் கூடும்.

உங்கள் விரல்களுக்கும் மணிக்கட்டுக்குமான சில எளிமையான பயிற்சிகள் உங்கள் வலியைத் தணிக்க நிச்சயம் உதவும்.

விரல்களை விரிக்கும் பயிற்சி

மிகவும் சுலபமான ஒரு பயிற்சியானது ரப்பர் பான்ட் உதவியுடன் உங்கள் விரல்களை விரிக்கும் பயிற்சியாகும். ஒரு ரப்பர் பான்ட்டை உங்கள் நோயுற்ற கையின் விரல்கழளச் சுற்றி அணியுங்கள். இப்பொழுது உங்கள் கை கோலியது போல தோற்றமளிக்கிறது அல்லவா? இனி விரல்களை அகட்டி மெதுவாகக் கையை விரியுங்கள்.

இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். சில நிமிட ஓய்வுக்குப் பின் மீண்டும் பத்துத் தடவைகள் செய்யுங்கள். மூன்றாவது தடவையும் அவ்வாறு செய்யுங்கள். இவ்வாறு காலை மாலை இரு தடவைகள் செய்ய வேண்டும்.

இறுகப் பிடிக்கும் பயிற்சி

இரண்டாவதாக விரல்களை இறுகப் பிடிக்கும் பயிற்சி செய்யுங்கள். சிறிய உருளை அல்லது பந்து ஒன்றை எடுத்து உள்ளங்கையில் வைத்து அழுத்திப் பிழிவதுபோல இறுகப் பிடியுங்கள். தொடர்ந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். காலை மாலையாக தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகள் செய்ய வேண்டும்.

மணிக்கட்டை கீழ்நோக்கி இழுக்கும் பயிற்சி

உள்ளங்கை கீழே பார்க்குமாறு உங்கள் ஒரு கையை முன்புறமாக நீட்டிப் பிடியுங்கள். இப்பொழுது மறு உள்ளங்கையால் அதைத் தாங்குவது போலப் பிடியுங்கள். இனி மேலுள்ள கையை மணிக்கட்டருகில் கீழ்ப்புறமாக அழுத்தி மடியுங்கள். 15 முதல் 30 செகண்டுகளுக்கு அவ்வாறே பி;டித்த பின் தளர்த்துங்கள். மூன்று தடவை திரும்பச் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

மணிக்கட்டுப் பயிற்சி

உங்களது உள்ளங்கை மேலே பார்க்குமாறு ஒரு முன்னங்கையை மேசை மீது வையுங்கள். பயிற்சி பாண்ட் ஒன்றை கைகளால் பற்றிக் கொண்டு மறுகையால் பாண்டடைப் பற்றிய கையின் மணிக்கட்டுப் பகுதியை உங்கள் உடலை நோக்கி இழுங்கள். பின் கையை மெதுவாக பழைய நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். இவ்வாறு பத்துத் தடவைகள் செய்யுங்கள். தினமும் மூன்று தடவைகள் அவ்வாறு திரும்பச் செய்ய வேண்டும்.

முழங்கை பயிற்சி

படத்தில் காட்டியபடி ஒரு காலுக்கு முன் மற்றக் காலை வையுங்கள். பயிற்சி பாண்ட்டின் ஒரு முனையை பின்னுள்ள காலுக்குக் கீழே வையுங்கள். மறு முனையைக் உள்ளங்கை மேலே பார்க்குமாறு கையால் பற்றி இழுங்கள். படத்தில் உள்ளபடி உள்ளங்கை தோள்மூட்டு வரை உயருமாறு இழுங்கள். மெதுவாக கையைப் பழைய நிலைக்கு செல்லவிடுங்கள். உள்ளங்கை கீழே பார்க்குமாறு இப் பயிற்சியை மீண்டும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும் பத்து தடவை வீதம் தினமும் மூன்று தடவைகள் செய்யுங்கள்.

முன்கையை முறுக்கும் பயிற்சி

படத்தில் காட்டியவாறு உங்கள் முன்னங்கையை மேசையில்
உள்ளகை கீழே பாரக்குமாறு வைத்தபடி ஒரு சுட்டியலைப் பிடியுங்கள். இப்பொழுது மேற்புறமாகவும் கீழ்ப்புறமாகவும் மாறிமாறி மெதுவாகச் சுற்றுங்கள். வலி தோன்றும் வரை மட்டும் சுற்றுங்கள். வலி தோன்றினால் நிறுத்துங்கள். ஓவ்வொரு தடவையும் பத்துத் தரங்களாக மூன்று தடவைகள் செய்யுங்கள். சுட்டியலின் பாரம் அதிகமாகிச் சுற்றுவது கடினமாக இருந்தால் சுட்டியலின் தலைப்பக்கமாக கையை நெருக்கிப் பிடியுங்கள்.

ஊசி மருந்து

பயிற்சிகளைச் செய்து, வலிநிவாரணி மருந்துகளையும் உபயோகித்தபோதும் வலி தணியவில்லை எனில் உங்கள் வைத்தியர் முழங்கையின் வலியுள்ள பகுதியில் ஊசி மருந்தை ஏற்றக்கூடும். ஊசி மருந்தானது வலியுள்ள பகுதியில் அழற்சியைத் தணித்து நோயைக் குணமாக்கும்.

ஊசி போட்டு வலி தணிந்த பின்னர் குணமாகிவிட்டது எனக் கை விட்டுவிடாதீர்கள்.

தசைகளை நீட்டி விரிக்கும் பயிற்சிகளும், முழங்கையின் செயற்பாட்டு எல்லையை அதிகரிக்கும் பயிற்சிகளும், தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

படத்தில் முழுங்கையை நீட்டியபடி மணிக்கட்டை மடிக்கும் பயிற்சி காட்ப்பட்டுள்ளது.

90 முதல் 95 சதவிகிதமானவர்களுக்கு முன் கூறிய சிகிச்சைகளுடன் நோய் குணமாகிவிடும். மேற் கூறிய வழிகளைப் குறைந்தது 6 மாதங்கள் கடைப்பிடித்தும் வலி தணியவில்லையெனில் மிகுதி 5 சதவிகிதமானவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படலாம். இதன் போது நோயுற்ற தசைநார்த் துண்டை அகற்றி நல்லநிலையிலுள்ளதை எலும்பில் பதிய வைப்பார்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்


ஆதாரம்:- American Academy of Family Physicians

Post Comment