Sunday, February 15, 2009

கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்

'இவள் எந்த நேரமும் ரீவீக்கு முன்னாலைதான். கண்கெடப் போகுது எண்டு சொன்னாலும் கேக்கிறாளில்லை.'


'மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.'

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்புலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடனேயே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும்.

வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன. கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.

உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.

முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மையே.

வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால் (Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.

வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.

கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும்.

கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன்; ஒட்சினெதிரிகள் (Antioxidents) என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு (cataract and age-related macular degeneration) ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொப்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணனித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.

உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.

இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, மூட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே.

ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.

ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும்.

சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழவகைகள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப மருத்துவர்

Post Comment

Sunday, February 1, 2009

பெண்ணே உன்கதி இதுதானா? மாதவிடாய் நிற்றலை முன்நிறுத்தி

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமாக நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூறமுடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகிவிட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோhயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.
'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.





தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment