Saturday, October 24, 2009

மணிக்கட்டில் கட்டி

அவளுக்குப் பயம் பீடித்திருந்தது.

'இது கான்சராக இருக்குமோ?'

அண்மையில்தான் அவளது நெருங்கிய உறவினர் ஒருவர் மார்புப் புற்றுநோய் எனக் கண்டிறியப்பட்டு சிகிச்சைகளுக்காக அலைந்து கொண்டிருந்தார்.

ஆனால் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்ல என்பதும் கட்டிகள் இல்லாமலும் புற்றுநோய்கள் வராலாம் என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

இவளுக்கு வலது மணிக்கட்டை அண்டிய இடத்தில் ஒரு கட்டி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. வலிக்காததாலும், வேறு எந்தத் தொல்லை இல்லாததாலும் அலட்சியம் பண்ணிவிட்டாள். இப்பொழுது உறவினருக்கு புற்றுநோய் என்றதும் கிலி பிடித்து ஓடி வந்திருந்தாள்.

எத்தகைய கட்டி

இத்தகைய கட்டிகளை Ganglion என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பெரும்பாலும் மணிக்கட்டின் பின்புறத்தில் தோன்றுவதுண்டு. சிலவேளைகளில் முன்புறத்திலும் வரலாம்.


சிலருக்கு கால்களின் மேற்புறத்திலும் உண்டாவதுண்டு. மிக அரிதாக முழங்காலுக்கு அருகிலும், கணுக்காலடியிலும் தோன்றலாம்.

இது எவ்வகையிலும் ஆபத்தான கட்டியல்ல. தோலுக்கு கீழே இருக்கும். தோலுடன் ஒட்டிக் கொண்டிராது வழுகிக் கொண்டிருக்கும். நீர்க்கட்டி (Cyst) போன்றது. அதற்குள்ளே நீரைவிட சற்றுத் தடிப்பான ஜெலி போன்ற திரவம் இருக்கும்.

எப்படி ஏற்படுகிறது?

இத்தகைய திரவம்தான் எமது மூட்டுகளையும், தசைநார்களையும் வரட்சியடையாது வழுவழுப்புடன் வைத்திருந்து சுலபமாக இயங்க வைக்கின்றன. எப்பொழுதாவது அடிபடும் போது மூட்டு அல்லது தசைநாரைச் சுற்றியிருக்கும் இத் திரவம் வெளியேறி ஏதாவது காரணத்தால் ஓரிடத்தில் தடைப்பட்டு கட்டிபோலச் சேருவதாலேயே இது ஏற்படுகிறது.


கீழே உள்ள தசைநாருடன் அல்லது எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இது வேறு இடங்களுக்குப் புற்றுநோய் போலப் பரவாது.

1-2 செ.மி வரை வளரக் கூடும். புற்றுநோய் போன்ற ஆபத்து எதுவும் ஏற்படாது எனச் சொன்ன போதும் சிலர் அதை அகற்ற வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. அது அசிங்கமாக தோன்றுவதே காரணம். பொதுவாக வலிப்பதில்லை. ஆயினும் சில தருணங்களில் நரப்புகளுக்கு அருகில் இருந்தால், அது அழுத்தப்பட்டு சிறிது வலி ஏற்படலாம். சிலருக்கு விறைப்பு ஏற்படுவதும் உண்டு.

சிகிச்சை

பொதுவாகச் சிகிச்சை எதுவும் தேவைப்படாது. சிலகாலம் செல்ல எப்படி மறைந்தது என்று தெரியாமலே பலருக்கும் தானாக மறைந்து விடுவதுண்டு.

மருத்துவர்கள் அகன்ற துவாரம் கொண்ட ஊசி மூலம் அத் திரவத்தை அகற்றுவார்கள். ஆயினும் மிகத் தடிப்பான திரவமாதலால் அவ்வாறு ஊசியால் பெரும்பாலும் அகற்ற முடிவதில்லை.

பொதுவாக அவ்வாறு அகற்றிவிட்டு அதனுள் ஸ்டீரொயிட் ஊசி மருந்தை ஏற்றுவார்கள். உடனடியாக மறைந்தாலும் இச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் மீண்டும் வளர்வதுண்டு.

பைபிள் சிகிச்சை

ஆனால் அதற்கு மேலாக ஒரு பாரம்பரிய சிகிச்சை முறை உண்டு. பேசிக் கொண்டிருக்கும் போதே நோயாளி எதிர்பாராத விதத்தில் மருத்துவர்கள் அருகில் உள்ள தடித்த கனமான புத்தகத்தால் கட்டி மீது ஓங்கி அடிப்பார்களாம். உடனடியாகவே உள்ளே உள்ள கூடு வெடித்து நீர் பரவியதும் கட்டி மறைந்துவிடும்.

அதிர்ச்சி வைத்தியமான போதும் இம்முறையில் ஆபத்து எதுவும் கிடையாது. முன்பு அதற்காக குடும்ப பைபிளைப் பயன்படுத்துவார்களாம். புனிதம் என்பதால் அல்ல. பாரம் கூடியது என்பதால். ஆயினும் வெடித்த மறைந்த கூட்டின் சுவர் சிலவேளைகளில் மீண்டும் வளர்ந்தால் கட்டி மறுபடி தோன்றலாம்.

மேற் கூறியவற்றால் குணமடையாவிட்டால், அல்லது நோயாளிக்கு தொல்லை கொடுத்தால் சிறிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவதும் உண்டு. சத்திரசிகிச்சையானது மேற் கூறியவற்றை விட நல்ல பலனைக் கொடுக்கும். இருந்தாலும் மீண்டும் வராது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.



நோயாளிக்கு வலி, விறைப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் கிடையாது எனில் அவதானித்து வந்தால் போதுமானது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

18 comments:

யோ வாய்ஸ் (யோகா) said...

எனது நண்பனொருவனின் மணிக்கட்டில் இந்த கட்டியிருக்கிறது. அவனுக்கு உங்கள் கட்டுரையை வாசிக்க சொல்கிறேன்.

பயனுள்ள கட்டுரை.

மங்களூர் சிவா said...

புதியதாக ஒரு விஷயம் தெரிந்து கொண்டோம். மிக்க நன்றி டாக்டர்.

malar said...

உங்கள் தளம் என்னை ஒரு மணி நேரம் கட்டி போட்டுவிட்டது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் யோகா, மங்களுர் சிவா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

malar said..." உங்கள் தளம் என்னை ஒரு மணி நேரம் கட்டி போட்டுவிட்டது."
உங்கள் கருத்துரை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

malar said...

குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் தவிர்கமுடயுமா ? சளி பிடித்தால் அண்டிபயாடிக் போன்ற மருந்துகளை கொடுக்காமல் தவிப்பது எப்படி ? சளி பிடித்த சமயத்தில் உணவு உண்ணமுடியாமல் அவதி படுகிறார் கள் எந்த மாதிரி உணவு கொடுத்த பிறகு மருந்து கொடுக்கலாம் ?காய்ச்சல் அதிகபடியாக இருக்கும் பொது கை மருந்து வாத்தியம் என்ன ?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கு நன்றி மலர். குழந்தைகளின் ஒவ்வாமை மூக்கால் வடிதல், மற்றும் பதிவுகளின் பகுப்புக்கு சென்று ஆஸ்த்மா சம்பந்தமான 4 பதிவுகள் உள்ளன. பாருங்கள் விபரம் புரியும்.

அன்ரிபயோரிக்ஸ் சாதாரண சளிகளுக்குத் தேவையில்லை. ஆயினும் பக்ரீயா தொற்று இருந்தால் தேவைப்படலாம். ஆயினும் இது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே கொடுக்கப்பட வேண்டியது.

நோயினால்தான் பசி கெடுகிறது. எனவே சளி நோயைக் கட்டுப்படுத்துவதே முதல் முக்கியமானது. ஆனால் குழந்தை களைப்படையாது இருப்பதற்காக அதற்கு விருப்பமான உணவுகளாக அந் நேரத்தில் கொடுக்க வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் கூடாது.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த பரசிட்டமோல் கொடுங்கள். இளம் சூட்டு நீரில் ஸ்பொன்ச் செய்வது உதவும்.

malar said...

நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
இப்படியான கட்டி உள்ளோரைக் கண்டுள்ளேன் ; ஆனால் இது எப்படி ஏற்படுகிறது. அதன் தீர்வு போன்ற
விளக்கங்களை இப்போதே அறிந்தேன்.தெரிந்து கொள்ள வேண்டியவை.
நன்றி!

தேவன் மாயம் said...

மிக நல்ல கட்டுரை!

தேவன் மாயம் said...

எல்லோருக்கும் பயனான கட்டுரை!

T.V.Radhakrishnan said...

பயனுள்ள கட்டுரை

thagavalkaran said...

எனக்கும் இந்த கட்டி இருந்ந்தது தங்கள் தகவல் மூலம் நன் தெளிவடைந்து விட்டேன்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி யோகன் பரிஸ், தேவன் மாயம், T.V.Radhakrishnan மற்றும் thagavalkaran.

ராஜவம்சம் said...

உங்கள் பதிவுகள் அனைதும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.

சிலருக்கு உடல் முழுவதும் கொழுப்பு கட்டிகள் சிறிதும் பெரிதுமாக தோன்ருகின்ரான இதை அறுவைசிகிச்சை இல்லாமல் வேரு வழியில் அகற்றமுடியுமா இவை எதனால் தோன்றுகின்ரன?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

ராஜவம்சம். நீங்கள் கூறியது போல சிலருக்கு கொழுப்பு கட்டிகள் (Lipoma) உடலில் தோன்றுகின்றன. அவை ஒன்றாகவோ மிகப் பலவாகவோ இருந்த போதும் புற்று நோயோ அல்லது அதன் ஆரம்பமோ அல்ல.

எனவே எதுவும் செய்யாமல் அப்படியே விடுவதுதான் நல்லது.

சாதாரண சத்திரசிகிச்சை மூலம் மாத்திரமின்றி, சிறு துவாரமிட்டு அதன் ஊடாக பிசுக்கி வெளியேற்றலாம். அல்லது Lipo Suction மூலம் அகற்றலாம்.

ஆனால் மருந்து மாத்திரைகளால் மறையச் செய்ய முடியாது

Anonymous said...

i got a lump on my elbow. is it the same type what you told doctor. that's exactly between the wrist and elbow. is it harmless.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

Thanks Anonymous.
Lump on Your elbow may be Lipoma or may a bursa from the joint. But Cancerous lumps Usualy do not develop there. Anyway Better to consult Your doctor

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்