Sunday, September 13, 2009

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?

நான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?


இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.


கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

29 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவு டொக்டர் ஐயா.

வேண்டிய கர்ப்பமோ வேண்டாத கர்ப்பமோ எதுவா இருந்தாலும் பெண்கள் கவனமா இருந்துக்கணுமுன்னு சொன்னதுக்கே ....கலாச்சாரக் காவலர்கள் துடைப்பக் கட்டையோடு கருத்துச் சொன்னவர் வீட்டை முற்றுகையிட்டாங்க(-:

குழந்தை வேணுமா வேண்டாமா என்பதைச் சம்பந்தப்பட்டப் பெண்கள் தீர்மானிக்கணும்.

பாலுணர்வு என்பது ஆண்களுக்கானது மட்டுமேன்னு.............

நம்ம சமூகமுன்னு ஒன்னு இருக்கு பாருங்க........... இதோடு போராடி செயிப்பது ரொம்பக் கஷ்டம்(-:

நிகழ்காலத்தில்... said...

\\கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.\\

பெண்ணின் விருப்பத்தின்பேரிலும், உடல்தகுதியின் பேரிலும் செய்துகொள்ள வழி வேண்டும்

பாலுறவின் விளைவு பெண்ணுக்கே.,

இது குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் பரவ வேண்டும்,

சட்டமாக்காவிடில் சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு நடந்தே வருகிறது.

இதில் பெண்களின் நலனாவது மிஞ்சும்.

நல்ல சமுதாய நோக்கோடு கட்டுரை எழுதிய தங்களை மனதார பாராட்டுகிறேன்.

வாழ்த்துக்கள்

கவிக்கிழவன் said...

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

முக்கியமான விஷயம்

வேந்தன் said...

:(((((
!!!!!???

வந்தியத்தேவன் said...

அன்பின் டொக்டர் என்னுடைய பின்னூட்டப் பிரச்சனை சில நாட்களில் சரி செய்யப்பட்டபின்னர் உங்களுக்கு அறியத்தருகின்றேன்.

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி துளசி கோபால்.மிகவும் துணிவாக உங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கறீர்கள்.

"...கலாச்சாரக் காவலர்களின் துடைப்பக் கட்டைகளை..." உடைத்தெறிவதற்கு நாம் எல்லோரும் தயாராக வேண்டும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பெண்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு நீங்கள் எழுதிய பதில் உற்சாகம் உட்டுகிறது.

துபாய் ராஜா said...

நல்லதொரு கருத்தை தூண்டும் பதிவு.

கபிலன் said...

"கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும். "

மேட்டர் புரிஞ்சது...ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்....சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பூனைக்கு யாரு மணி கட்டுறது?

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு டாக்டர்.

பிரபா said...

mika mukkiyamaana vidayam sir.....
rompa nandri.

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

பனையூரான் said...

கலாச்சார சீர்கேடு என்ற விடயத்திற்கு அப்பால் கருக்கலைப்பு செய்ய வேண்டிய கட்டாயங்கள் உண்டு என்பது உண்மை. மேலும் கருக்கலைப்பு சட்டவிரோதமாய் உள்ளதால் வைத்தியர் ஒருவர் செய்யாத சத்திரசிகிச்சைகள் நீங்கள் கூறியது போல ஆபத்தில் முடிவதற்கு சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
{ஒவ்வொரு தீமைக்குள்ளும் ஒவ்வொரு நன்மைகளும்,, ஒவ்வொரு தீமைக்குள்ளும் ஒவ்வொரு நன்மைகளும் என்ன செய்வது ???}

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி கவிக்கிழவன்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மிக்க நன்றி வேந்தன்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

துபாய் ராஜா நன்றி.
உங்கள் மகளுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பிரபா

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி வந்தியத்தேவன்

கோவி.கண்ணன் said...

உங்கள் பதிவு உண்மைகளை கூறி வழியுறுத்துகிறது. மிகவும் தேவையான சிந்தனை

Dr.எம்.கே.முருகானந்தன் said...

மிகவும் உண்மை பனையூரான். ஆனால் கருக்கலைப்பை கலாச்சார சீர்கேட்டுடன் இணைத்து பார்க்கக் கூடாது என நினைக்கிறேன். அதனை தனிநபரின் பாதிப்பாக அணுகி, மருத்துவ ரீதியாக முடிவெடுக்க வேண்டியதாகவும் மாற்ற வேண்டும்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி கபிலன். சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். ஆனால் துஸ்பிரயோகங்களுக்கு இடமில்லாமல் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

இளங்கோ said...

வேண்டிய கர்ப்பமோ வேண்டாத கர்ப்பமோ என்பது சம்பந்தப்பட்டப் பெண்ணின் முடிவு அதில் சமூகத்திற்கும்,சட்டத்திற்கும் என்ன வேலை?

கண்டிப்பாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துரைக்க நன்றி மங்களூர் சிவா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி முயல்கிறேன் Ram.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி இளங்கோ.
"கண்டிப்பாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்." என உங்களைப் போல பலரும் உறுதியாக நின்றால் நிச்சயம் நிறைவேறும்.

Anonymous said...

http://inioru.com/?p=5506

Dr.எம்.கே.முருகானந்தன் said...

'இனியொரு.. ' இணைய தளத்தில் எனது 'கருக்கலைப்பை சட்ட பூர்வமானதாக்க வேண்டும்' என்ற கட்டுரையை மறுபிரசுரம் செய்ததற்கு மிக்க நன்றி

மு.மயூரன் said...

மிக முற்போக்கான, அவசியமான, அருமையான பதிவு டொக்டர்.

சட்டவிரோதக் கருக்கலைப்பின் பயங்கரத்தை நான் பார்த்திருக்கிறேன். என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் அது.

அன்றைக்குத்தான் இந்தச்சட்டமும் கலாசாரமும் எவ்வளவு போலியான மாயத்தோற்றம் என்பதும், மனிதரின் அடிப்படைப்பிரச்சினைகள் பற்றி அக்கறைப்பட யாருமில்லை என்பதும் திடீரென யதார்த்தத்தில் உறைத்தது.

கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதும், கருவுறுதலையும் கருக்கலைத்தலையும் பெண் மட்டுமே தன் விருப்பப்படி தீர்மானிக்கும்படியான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இது பெண் விடுதலைக்கான அத்திவாரம்.

கருப்பை பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதும், அது தொடர்பான முடிவுகளை பெண்கள் மட்டுமே எடுக்கக்கூடியதாய் இருப்பதும் இந்த உலகின் பல அநீதிகளை தடுத்து நிறுத்தும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி மு.மயூரன்.

"கருக்கலைப்பை சட்டரீதியாக்குவதும், கருவுறுதலையும் கருக்கலைத்தலையும் பெண் மட்டுமே தன் விருப்பப்படி தீர்மானிக்கும்படியான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்."என ஆணித்தரமாக கருத்துரைத்மைக்கு.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்