Sunday, October 26, 2008

நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு

அண்மையில் நீரிழிவு தொடர்பான மருத்துவர்களுக்கான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.


நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.

கிளைசீமிக் குறியீட்டு அளவில் நோக்கும்போது நாம் உட்கொள்ளும் அரிசிகள் பற்றிக் குறிப்பாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது. நீங்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உட்கொண்டாலும் அவை ஒரே மாதிரியான மாற்றத்தையே குருதி சீனியின் அளவில் ஏற்படுத்துகின்றன. எனவே எந்த அரிசிச் சோறை உட்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் சாப்படும் சோற்றின் அளவை அதிகரிக்கக் கூடாது, அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமாகும்.

அதே போல “சாதாரண பாண் கூடாது. தவிட்டுப் பாண்தான் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது” என்ற கருத்தும் தவறானது. ஏனெனில் இரண்டினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் ஏறத்தாளச் சமமானதே.

தவிட்டுப் பாண் சாதாரண பாணிலும் பாதகமானது என்ற கருத்தும் கருத்தரங்கில் சிலரால் முன்வைக்கப்படடது. தவிட்டுப் பாண் சுலபமாக செமிபாடு அடைவதற்காக சில நொதியங்களை பாண் தயாரிப்பின் பொது பேக்கரிகளில் சேர்க்கிறார்கள். இதனால் அது எளிதாக சமிபாடு அடைகிறது. ஆனால் அதே நேரத்தில் விரைவாக குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு கிளைசீமிக் இன்டெக்ஸ்சை உயர்த்துகிறது.

எனவே நீரிழிவு நோயாளர்கள் தவிட்டுப் பாணைத் தேடி ஓடுவது தவறானது. அவசியமற்றது.

ஆட்டாமா, குரக்கன் மா, அரிசிமா, ஓடியல் போன்ற எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் நீரிழிவுள்ளவர்கள் உண்ணலாம், எந்த அரிசிச் சோறானாலும் சாப்பிடலாம். ஆயினும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது.


அத்துடன் எதனுடன் உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நார்ப்பொருள் செறிந்துள்ள காய்கறிவகைகளை சேர்த்து உண்டால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibres) சேர்த்து உண்பது நல்லது. கடலை, பயறு, பருப்பு, சோயா, போஞ்சி போன்ற அவரை இன உணவுகளில் இது அதிகம் உண்டு. எனவே சொதி, சம்பல், பட்டர், மார்ஜரின் போன்றவற்றுடன் உண்பதைத் தவிர்த்து மேற் கூறியவாறு உண்பது உசிதமானது.

இனிப்பில்லாத கிறக்கர் பிஸ்கட் நல்லது என்பதும் தவறான கருத்தாகும். அதிலுள்ள மாப்பொருள் குருதியில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும்.

எனவே நீரிழிவு நோயாளர்கள் “பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் குறும் உணவாக எதைச் சாப்பிடுவது” எனக் கேட்பார்கள். நியாயமான கேள்வி. சிறிய வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழ வகைகளையோ, வெள்ளரி, கரட் போன்ற காய்கறிகளையோ சப்பிச் சாப்பிடலாம். களைப்பும் பசியும் நீங்கும். அதனால் சீனியின் அளவு அதிகரிக்காது.


பழங்களில், வாழைப்பழம் பற்றிப் பேசும் போது “கதலி நல்லது, கப்பல், ஆனைமாலு கூடாது” என்றே பலரும் கூறுவார்கள். இதுவும் மற்றொரு தவறான கருத்தே. கதலி, கப்பல், இரதை, ஆனைமாலு போன்ற எல்லாமே நல்லவைதான். ஏனெனில் இவை யாவற்றினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 10 லும் குறைவாகவே இருக்கின்றன. எனவே எல்லாமே பாதிப்பற்றவைதான். எந்த வாழைப் பழமானாலும் ஒவ்வொரு உணவுடனும் பாதியளவு சாப்பிடலாம்.


அன்னாசி, மாம்பழம் ஆகியவற்றைக் கூட உண்ணலாம். ஆனால் எவ்வளவு உண்பது என்பதே முக்கியமானது.

“மண்ணுக்கு கீழ் விளையும் எந்தக் கிழங்கு வகைகளையும் நான் தொடுவதே இல்லை” என பல நீரிழிவு நோயாளர்கள் சத்தியம் செய்வார்கள். இதுவும் தவறான கருத்தே. கிழங்கு வகைகள் அனைத்திலும் உள்ளது மாப்பொருள்தான். அரிசி, பாண், நூடில்ஸ் போன்றவற்றிலும் உள்ளது அதே மாப்பொருள்தான். எனவே அளவோடு உண்ணலாம்.

“வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. அது சாப்பிடக் கூடாதுதானே” எனக் கேட்டால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றைய கிழங்குகளிலும் கூடியதல்ல. எனவே நிச்சயம் சாப்பிடலாம். அத்துடன் வத்தாளையில் கரட்டீன் சத்தும் இருப்பதால் மற்றக் கிழங்குகளை விடச் சிறந்தது. மரவள்ளியும் சாப்பிடலாம் ஆனால் அதில் மாப்பொருளைவிட வேறு விட்டமின், கனிமங்கள் இல்லை என்பதால் சிறப்பான உணவாகக் கொள்ள முடியாது. ஆயினும் அளவோடு உண்பதில் தவறில்லை.

இதைப் படித்துவிட்டு குத்தரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை பிரயோசனமற்ற உணவுகள் எனக் கருதுவது தவறு. அவற்றில் விட்மின், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை சற்று அதிகமாக இருப்பதால் அவை போஷாக்குள்ள உணவு வகைகளே.

ஆயினும் நீரிழிவு நோயாளர்கள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நிர்ப்பந்திப்பது தவறானது. அதற்கான எந்த வித விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் இல்லை. மாப்பொருள் உணவின் அளவும், எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்தியர்

நன்றி:- வீரகேசரி 26.10.2008

Post Comment

10 comments:

Anonymous said...

ஒவ்வொரு மருத்துவரும் வெவ்வேறு கருத்துக்களை எழுகின்றீர்கள்.
எதை நம்புவது எனத் தெரியவில்லை.

அளவோடு என்பது சரிதான்.

எதற்கும் மருத்துவர்கள் அனவரும் கூடி ஒரு முடிவுக்கு வாருங்கள்.


புள்ளிராஜா

வடுவூர் குமார் said...

மிக்க நன்றி.
சில வார்த்தைகள் புரியவில்லை(உங்கள் வழக்கில் உள்ளவை)

ramachandranusha(உஷா) said...

உபயோகமான பல செய்திகள் நன்றி.
ஐயா, உங்களிடம் ஒரு சந்தேகம். எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றுக் கண்டுப்பிடித்தவுடன், தினமும் மதிய சாப்பாட்டுக்கு முன்பு மட்டும்,glycomet என்ற மாத்திரை எடுத்துக் கொள்கிறேன். அதாவது தினம் ஒரு மாத்திரை மட்டும்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு டெஸ்ட் செய்துப் பார்த்தால் சர்க்கரை அளவு 135 mg வாக்கில் எப்பொழுதும் இருக்கிறது. காலை வெறும் வயிற்றில் டெஸ்ட் செய்தால் 120 க்கும் கீழ்தான். அதே சமயம் மாத்திரை மதியம் மட்டும் தான் என்பதால்,
ஒரு முறை காலை பலகாரத்துக்கு பிற்கு இரண்டு தோசை சாப்பிட்ட பிறகு சர்க்கரை 210 அருகில் இருந்தது. ஒன்றும் பிரச்சனையில்லை ஒரு மாத்திரை போதும் என்கிறார் என் மருத்துவர்.உங்கள் கருத்து என்ன?
உணவு கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் விடாமல் செய்கீறேன். அதனால் வேறு எந்த தொந்தரவும் இல்லை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

கருத்துகளுக்கு நன்றி புள்ளிராஜா. அளவோடும் என்பதையும் எதனோடு உண்பது என்பதையும் அழுத்தமாகச் சொல்லியிருந்தேன் என நம்புகிறேன்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

ராமச்சந்திரன் உஷா. அவ்வாறு சீனியின் அளவு அதிகரிப்பது நல்லதல்ல என எண்ணுகிறேன். நீங்கள் உபயோகிப்பது Glycomet 500 எனில் அதில் நீண்ட நேரம் நின்று செயற்படக் கூடிய Glycomet SR 500 (Slow Release)வகை இருக்கிறது அதனை உபயோகித்துப் பாருங்கள். அல்லது நீங்கள் உபயோகிக்கும் அதே மாத்திரையை காலையிலும் மாலையிலும் பிரித்து உபயோகித்துப் பாருங்கள் பலன் கிடைக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மன்னிக்கவும் வடுவூர் குமார். புரியும்படி எழுத முயல்கிறேன். புரியாத சொற்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். திருத்துகிறேன். பாண் என்பது பிரட்

Anonymous said...

நான் டாக்டர் அல்ல, எனக்கு 30 வயதில் நீரிழிவு நேய் வந்து , இன்றுவரை 8 வருடமாக , உணவுக்கட்டுப்பாட்டில் இருந்து வருகிறேன், எனது குடும்ப வைத்தியர் ஆச்சரியப்படும் வகையில் ,நான் உணவுக்கட்டுப்பாட்டில் இருகிறேன். இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது , தவறு. நான் சம்பா அல்லது பாஸ்மதி அரிசி சாப்பிட்டுவிட்டு 2மணிநேரம் களித்து எனது இரத்ததை சோதித்துப்பார்த்தால் இரத்தத்தில் 9.5 தொடக்கம் 10.00 புள்ளிவரை சக்கரை இருக்கும். அது வே குத்தரிசி அல்லது மோட்டைகறுப்பன் என்று அழைக்கப்படும் தவிட்டரிசி சாப்பிட்டுவிட்டு, 2மணிநேரம் களித்து எனது இரத்ததை சோதித்துப்பார்த்தால் 6.2 ஆக இருக்கும். நார் சத்து அடங்கிய பெருட்களே நல்லது.எமது இரத்தத்தில் சீனியின் அழவு சேர்வதை எது தாமதமாக்குகிறதொ அதுவே நல்லது, அது யாதெனில் நார்ச்ச்த்து. அதுவே முக்கியம் .

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

'நார் சத்து அடங்கிய பெருட்களே நல்லது.எமது இரத்தத்தில் சீனியின் அழவு சேர்வதை எது தாமதமாக்குகிறதொ அதுவே நல்லது, அது யாதெனில் நார்ச்ச்த்து. அதுவே முக்கியம்"
உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
ஆயினும் நாரப்பொருளில் இரண்டு வகை இருப்பதை அறிந்திருப்பீர்கள்.'கரையக்க கூடியது','கரையாதது'

தீட்டாத அரிசி, கோதுமை போன்றவற்றில் உள்ளது 'கரையாதது'
இவற்றில் பல சத்துக்கள் உள்ளன. ஆயினும் அதன் முக்கியத்துவம் மலத்தை இறுகாமல் கழியச் செய்வதே என ஆய்வுகள் கூறுகின்றன.
கரையக் கூடிய நாரப்பொருள் கொலஸ்டரோல், நீரிழிவு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் எனவே தெரிகிறது. அதையே அண்மையில் ருகுணு பல்கலைக்கழகத்தில் செய்த ஆய்வு உறுதிப்படுத்தியது. அதையே எழுதினேன். ஆயினும் விஞ்ஞானத்தில் எதுவும் முற்றும் உண்மை அல்ல. உங்கள் கருத்து எதிர்கால ஆய்வுகளில் சரியென வரலாம். நன்றி, வாழ்த்துக்கள்.

விபரம்
There are two types of fibre: insoluble and soluble.

Insoluble fibre

Insoluble fibre contains cellulose, hemicellulose and lignin. It helps your bowel to pass food by making stools soft and bulky. This type of fibre helps prevent constipation.

Insoluble fibre is found in the following foods:
beans
brown rice
fruits with edible seeds
lentils
maize
oats
pulses
wheat bran
wholegrain breads
wholegrain cereals
wholemeal breads
wholemeal cereals
wholemeal pasta
wholewheat flour.

Soluble fibre
Soluble fibre contains gums and pectin. This type of fibre lowers cholesterol levels and controls blood sugar. It can be found in all fruit and vegetables, but the following are rich sources:

apples
barley
citrus
guar gum
legumes
oats
pears
strawberries.

மங்களூர் சிவா said...

மிக்க பயனுள்ள பதிவு.
நன்றி டாக்டர்.

Valaipookkal said...

Hi,

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here

Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Thanks

Valaipookkal Team

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்