Wednesday, September 3, 2008

சளித்தொல்லையா ஒழியுங்கள் கரப்பொத்தான் பூச்சியை


நீண்ட நாட்களுக்கு பின்னர் அந்தப் பையன் வைத்தியசாலைக்கு வந்திருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீண்டும் என்னிடம் வைத்தியத்திற்கு வந்துள்ளான் என்பதால் அல்ல. கடந்த ஆறு மாதங்களாக அவன் என்னைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்படாதிருந்ததே என்ற மன ஆறுதல்.

ஆறு மாதங்களாகத் தான் அவன் வருத்தம் என்று என்னிடம் வரவில்லை. ஆனால், அதற்கு முந்தைய பத்து மாதங்களில் முப்பது தடவைகள் பார்க்க நேர்ந்தது. கணினியில் உள்ள அவனது கோப்பைப் பார்த்தபோது இது தெரிய வந்தது. எவ்வளவு துன்பம் அவனுக்கு அந்த வேளைகளில்.

ஒரே சளி வருத்தம் ! தும்மல், மூக்கடைப்பு, அரிப்பு, மூக்கால் ஓடுதல், கண்கடி, தலையிடி, தலைப்பாரம், சோம்பல், தூக்கக் குணம், இருமல், இளைப்பு, ஆஸ்மா சொல்லி மாளாது. பாடசாலை செல்லத் தொடங்கி சில மாதங்கள்தான். ஆனால், ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாது, படிக்க முடியாது. இதனால் பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் தூற்றலுக்கு ஆளாக நேர்ந்தது.

அத்தோடு குளிக்காதே, தண்ணி அளையாதே, குளிர்பானம் அருந்தாதே, பழங்கள் சாப்பிடாதே என்ற பெற்றோர்களின் கட்டுப்பாடுகள். மருந்துக்கு மேல் மருந்துகளும் சேர்ந்து கொள்ளவே மகிழ்ச்சியைத் தொலைத்து மந்தமானவனாக மாறியிருந்தான்.

விழுந்ததால் காலில் ஏற்பட்ட உரசல் காயத்திற்காக வந்திருந்தான். சளித்தொல்லைக்காக அல்ல. காயம் பட்டபோதும் இளமையின் உற்சாகம் முகத்தில் பளிச்சிட்டது.

"எப்படி மறைந்தது சளித் தொல்லை' பெற்றோர்களிடம் வினவினேன்.

"வீடு மாறினோம்.அதிலிருந்து இவனுக்கு சளிபிடிப்பதில்லை' என்றார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா? வீடு மாறினால் சளி பிடிக்காதா!

காரணம் இதுதான். முன்பு அவர்கள் குடியிருந்த வீட்டிற்குப் பின் புறமாக தெருவோரக் கழிவுக் கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. இரவானதும் இவர்கள் வீடெங்கும் அங்கிருந்து படையெடுந்து வரும் கரப்பொத்தான் பூச்சியின் இராச்சியம் தான். இப்பொழுது குடியிருப்பது தொடர்மாடி வீட்டில். அதுவும் 5 ஆம் மாடியில் அங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு கரப்பொத்தான் அதிகமில்லை. அதனால் இங்கு அப் பூச்சியின் எச்சங்கள் இருப்பதில்லை. எனவே சளித்தொல்லை நீங்கிவிட்டது.

சரி! சளிக்கும் கரப்பொத்தானுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

சளி, ஆஸ்மா ஆகியவற்றைத் தூண்டுபவையாக பல பொருட்கள் ஆய்வு ரீதியாக இனங்காணப்பட்டுள்ளன. பூக்களின் மகரந்தம், நாய், பூனை போன்ற வளர்புப் பிராணிகளின் ரோமம், தூசி, தூசிப்பூச்சி, கரப்பொத்தான் எச்சம் எனப் பலவாகும்.

இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கையைப் பொறுத்தவரையில் வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியத் தூசிப்பூச்சி, கரப்பொத்தன் ஆகிய மூன்றுமே ஆஸ்மாவைத் தூண்டுவதற்கு முக்கிய காரணமாகும். இதனை பேராசிரியர் அனுரா வீரசிங்க (Prof.Anura Weerasinghe)தலைமையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு தெளிவாகக் குறிப்பிடுகிறது. எமது சூழலில் ஆஸ்மாவுக்கு பூக்களின் மகரதம், வளர்ப்புப் பிராணிகளின் ரோமம் ஆகியவை முக்கியமான காரணிகள் அல்லவாம்.

எமது படுக்கை விரிப்பு, தலையணை,மெத்தை போன்றவற்றில் மிக நுண்ணிய கிருமி (Dust mite) சேர்ந்து விடுவதுண்டு. அவற்றை நீரில் துவைத்து சுத்தப்படுத்துவதால் அக்கிருமியை ஒழித்து விடமுடியாது. அவற்றை வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது இஸ்திரிக்கை போட வேண்டும்.


எமது உடைகள் மற்றும் புத்தகங்கள் போன்றவற்றைக் களஞ்சியப்படுத்தும் இடத்தில் களஞ்சியப்பூச்சி (Storage Mite)உற்பத்தியாகும். இவை இரண்டுமே ஆஸ்மாவைத் தூண்டும் ஏனைய காரணிகளாகும். நீங்கள் சளி, ஆஸ்மா போன்றவை உள்ளவராயின், வீட்டுத் தூசிப்பூச்சி, களஞ்சியதூசிப்பூச்சி, கரப்பொத்தான் ஆகியவற்றோடு தொடர்புறுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆயினும் கரப்பொத்தான் பூச்சியிலிருந்து தப்புவது சற்று சிரமமான காரியம்தான். இறைவனைப் போல எங்கும் நிறைந்தவனாக எல்லாம் வல்லவராக இருக்கிறார். டைனோசியர் போன்ற பாரிய உயிரினங்கள் பலவும் சூழல் மாற்றங்களுக்கு இசைவடைய முடியாது மறைதொழிந்து போக கரப்பொத்தான் பூச்சியோ இன்றும் தாக்குப் பிடித்து நிற்கிறது.

உலகத்திலிருந்து ஒழிக்க முடியாவிட்டால் போகிறது. உங்கள் வீட்டிலிருந்தாவது ஒழியுங்களேன். வீடு மாறினாலும் நீங்கள் கவலையீனமாக இருந்தால் புதிய இடத்திலும் வந்து சேரக் கூடிய தீரன் அது.

டாக்டர் எம்.கே.முருகானந்தன்

Post Comment

12 comments:

வடுவூர் குமார் said...

சில பகுதிகள் 2 முறை பேஸ்ட்டாகி இருக்கு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி வடுவூர் குமார். இப்பொழுது திருத்திவிட்டேன்.

Dr.த.ஜீவராஜ் said...

வணக்கம் நலமா?
உங்களுடைய பல ஆக்கங்களை பத்திரிகைவாயிலாக வாசித்துப் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்.
மருத்துவத்தை இலகு தமிழில் தரும் உங்கள் பணிதொடர எனது நல்வாழ்த்துக்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி டொக்டர்.ஜீவராஜ். உங்கள் வருகையும், கருத்துக்களும் மகிழ்ச்சியளிக்கின்றன.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
மிகப் பயனுள்ள தகவல்...இங்கும் கரப்பான் பூச்சிக்குக் குறைவில்லை. எனினும் மாநகரசபையால் மருந்து வைத்துக் கட்டுக்குள் உள்ளது.இருந்தும் சில வீடுகளை ஒழுங்காக துப்பரவாகப் பராமரிக்காததால்; இப்பூச்சியின் ஆதிக்கம் அதிகமே....
சில வீடுகளுக்குள் செல்ல பயமாகவே இருக்கும்.அந்த வீட்டில் பிள்ளைகள் சளித் தொல்லையுடன் இருப்பதை அவதானித்தேன்.அங்கே ஆஸ்மாவில் அவதியுற்ற பிள்ளையையும் கண்டேன்.
மேலும் இந்த கரப்பான் பூச்சியை தாய்லாந்து மக்கள் பொரித்துச் சாப்பிடுவதாக தொலைக் காட்சியில் பார்த்தேன். அவர்களுக்கு இந்த நோய்கள் வராதா?
இங்கும் பிரான்சியர் ஒருவர் இதை வறுத்துச் சாப்பிட்டு இதனால் பாதிப்பில்லை.என தொலைக்காட்சியில்
கூறினார்.(இங்கே பலர் நத்தை;தவளை உண்பவர்கள்)
இவை பற்றி மருத்துவ உலகின் அபிப்பிராயம் என்ன???

செந்தழல் ரவி said...

ஒழியுங்கள் என்று சுலபமாக சொல்லிவிட்டீர்கள் டாக்டர்.

ஆனால் ஒழிப்பது பெரும்பாடாக உள்ளது.

என்ன மருந்து போட்டாலும் இரண்டு வாரத்தில் பெருகிவிடுகிறது...

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி யோகன் பாரீஸ். கரப்பான் பூச்சியை பொரித்துச் சாப்பிடுவதால் நோய் ஏற்படாது. அதன் எச்சமே முக்கியமான ஒவ்வாப் பொருள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

இங்கும் ஒரு பெண்மணி mortein Spray தான் ஒழிகிறதே அல்லாமல் கரப்பொத்தான் ஒழிவதில்லை என சொல்லிக் கொண்டாள். உண்மைதான் அழிப்பதற்கு மிகவும் கடினமான உயிர் அது.

மங்களூர் சிவா said...

மிக நல்ல தகவல்.

நன்றி டாக்டர்.

Jaleela said...

இந்த தகவல் அனைத்தும் படித்து புரிந்து கொன்டேன்.

நன்றி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி ஜலீலா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

யோகன் பாரிஸ் Said

"இங்கும் பிரான்சியர் ஒருவர் இதை வறுத்துச் சாப்பிட்டு இதனால் பாதிப்பில்லை.என தொலைக்காட்சியில்
கூறினார்.(இங்கே பலர் நத்தை;தவளை உண்பவர்கள்)
இவை பற்றி மருத்துவ உலகின் அபிப்பிராயம் என்ன???"

அது உண்மைதான் கரப்பொத்தான் பூச்சியின் எச்சம்தான் ஒவ்வாமையை எற்படுத்துகிறது. பூச்சி அல்ல.

பூச்சிகளை வறுக்கும் போதும் பொரிக்கும் போதும் அதிலுள்ள கிருமிகள் அழிந்து விடுவதால் வேறு தொற்று நோய்கள் தாக்கும் அபாயம் நீங்கிவிடுகிறது.

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்