
"எனக்கு அடிக்கடி கண்ணிலை மெல்லிய அராத்தல் இருக்குது.அதோடை சில நேரம் கண்ணால் பூளையும் வருவதுண்டு'என்றார் அந்த மத்திய வயது மனிதர்.
இது கண்நோயா?
இருக்காது கண்நோய் (Conjuntivitis) என்பது தொற்றுநோய்.ஆனால் அடிக்கடி வருவதில்லை.அத்துடன் இவரது கண்ணானது,கண்நோயில் இருப்பது போல அதிக சிவப்பாகவும் இருக்கவில்லை.
ஒவ்வாமையால் வரும் (Allergic Conjuntivitis) நோய் எனில் கண்ணில் அரிப்பு இருக்கும். தூசி போன்ற அந்நியப் பொருட்கள் விழுவதாலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்தது.
"வேறை கண் வருத்தம் ஏதாவது இருக்கோ? அதற்கு கண் மருந்து வழமையாக விடுகிறீர்களா' என விசாரித்தேன்.
"குளுக்கோமா இருக்கு. தினமும் துளி மருந்து விடுகிறேன்' என்றார்.
கண்ணுக்கு மருந்து விடும் செயலானது சரியான முறையில் செய்யப்பட வேண்டும்.இல்லையேல் அந்த மருந்தின் பலன் முழுமையாகக் கிட்டாது என்பதுடன் வேறு நோய்களுக்கும் கராணமாகிவிடும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
எனவே சரியான முறையில் கண் மருந்து விடும் முறையை அறிந்திருப்பது அவசியம்.
முதலில் கண் மருந்துள்ள குப்பியின் மூடியைக் கழற்றுவீர்கள் அல்லவா? அழுக்குகள் பட்டு மாசடையும் வண்ணம் அந்த மூடியின் வாய் புறத்தை மேசையிலோ தரையிலோ வைக்க வேண்டாம். மூடி மாசடைந்தால் குப்பியை மூடும்போது அதிலுள்ள மருந்திலும் கிருமி பரவி அடுத்த முறை உபயோகிக்கும்போது கண்ணுக்கு பரவலாம்.எனவே மூடியை மறுகையில் வைத்திருங்கள். அல்லது அதன் வாய்ப்புறம் கீழே படாதவாறு வையுங்கள்.
மிக முக்கியமாக, கண்ணுள் மருந்துத் துளியை விடும்போது குப்பியின் முனை கண்ணில் தொடாதவாறு கவனம் எடுக்க வேண்டும். கண்ணில் முட்டினால் இரண்டு வெவ்வேறு பாதிப்புகள் ஏற்படலாம்.
அவ்வாறு முட்டும்போது அதன் முனை கண்ணினுடைய மென்மையான திசுகளில் பட்டு நுண்ணிய உராசல் காயங்களை ஏற்படுத்திவிடும். மீண்டும் மீண்டும் இவ்வாறு நடந்தால் கண் புண்படும் அபாயம் உண்டு.
இராண்டாவது ஆபத்து என்னவென்றால் குப்பியின் முனை கண்ணில் தொட்டால் ஏற்கனவே கண்ணில் இருக்கக்கூடிய மாசுகள் அல்லது கிருமிகள் முனைவழியாக உட்சென்று கண்மருந்தையே மாசடையச் செய்துவிடும். அங்கு அவை பெருகி மீண்டும் இடும்போது ஊறுவிளைக்கும்.
துளி மருந்தை கண்ணில் இடுவது எப்படி?
மூடியைக் கழற்றிய பின் மருந்துக் குப்பியை வலது கையின் பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றி எடுத்து கண்ணருகே கொண்டு சென்று குப்புற பிடியுங்கள். மறுகையால் கண்ணின் கீழ் மடலை சற்று இழுங்கள்.
அப்போது இங்கு சிறு குழிபோல் தோன்றிய இடத்தில் துளி மருந்தை இடுங்கள். முன்பு கூறியதுபோல குப்பியின் முனை கண்ணில் படாதிருக்கவேண்டும் என்பது முக்கியமாகும்.ஒரே கையால் மருந்து விடக் கூடிய முறையும் உள்ளது. முன்பு கூறியதுபோல வலது கையால் குப்பியை எடுத்து பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் பற்றியபடி சின்ன விரலால் கண்ணின் கீழ் மடலை இழுத்தபடியே குப்பியைக் சரித்து கண்ணில் துளி மருந்தை விட வேண்டும். மேற்கூறிய இரண்டு முறைகளிலும் மருந்து விடும்போது குப்பியின் நுனியானது கண்ணிலிருந்து இரண்டு அல்லது மூன்று சென்ரிமீற்றர் மட்டும் மேலே நிற்பதால் மருந்து குறி தவறி வெளியே விழுந்து கன்னம் வழியே வழிந்தோடி வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.
கண் மருந்து விடுவதற்கு முன் உங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்வது முக்கியமானதாகும். அத்துடன் ஒட்டுக் கண்வில்லை (Contact Lens) அணிந்திருந்தால் அதை எடுத்துவிடவும் மறக்கவேண்டாம்.
கண் மருந்து விட்டவுடன் கண்களை மூடுவது அவசியம். உங்கள் சுட்டுவிரலால் கீழ் கண் மடலின் உட்புற மூலையை மூக்கோடு சேர்த்து சிறிதுநேரம் அழுத்திப் பிடிப்பது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் கண்ணுள் விழும் மருந்தின் பெரும் பகுதியானது கண்ணுக்கும் மூக்கிற்கும் இடையேயுள்ள சிறு குழாய் (Nasolacrimal duct) வழியாக தொண்டைக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கண்மருந்து வீணாகாமல் இருப்பதுடன், அது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்பட்டு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமலும் தடுக்கிறது. இரண்டு வெவ்வேறு வகையான மருந்துகளை கண்ணுக்கு இடவேண்டியிருந்தால் குறைந்தது ஜந்து நிமிட இடைவெளியாவது இருப்பது அவசியம்.
முன்பு குறிப்பிட்டவர் மருந்து விடும்போது அடிக்கடி குப்பியின் முனை கண்ணில் முட்டியதாலேயே கண்ணில் வேதனை ஏற்பட்டது. சரியான முறையில் மருந்து இடுவது பற்றி அறிந்ததும் அப் பிரச்சினை தீர்ந்தது.
ஆதாரம்-: Australian Prescriber February 2008
நன்றி
தினக்குரல்:- 30.06.2008
0 comments:
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்