இருபது வயதில் ஒருவர் அணியும் மார்புக் கச்சையின் அளவை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் (Type 2 diabetes) வருமா என எதிர்வு கூற முடியும் என கனடாவில் செய்யப்பட்டு CMAJ மருத்துவ இதழில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய மார்புக் கச்சையை இளவயதில் உபயோகிக்க நேர்ந்தவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என அக்கட்டுரை தெரிவிக்கிறது.
A அல்லது அதற்குக் குறைந்த ( A cup size) அளவான மார்புக் கச்சையை சாதாரண அளவாக ஆய்வாளர்கள் கொண்டார்கள். B,C,D யும் அதற்கு மேலானவையும் சாதாரணத்திற்கு மேலான அளவுகளாகக் கொள்ளப்பட்டன. A அளவிற்கு மேல் தேவைப்பட்டவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான சாத்தியம் அதிகமாம். மார்புக் கச்சையின் அளவென்பது உண்மையில் அதன் கனபரிமாணத்தை (Volume) குறிப்பதாகவே கொள்ளப்படுகிறது. இதை அளவிடுவதற்கு ஸ்கான் முதலான பல வழிகள் இருந்தாலும் அவை காலத்தையும் பணத்தையும் அதிகம் வேண்டுவன.
மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் அதன் கனபரிமாணத்தில் 15 சதவிகித மாற்றங்கள் இயல்பாகவே ஏற்படுகின்றன. அதாவது அதன் பருமனில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே அளவிடும் முறையில் ஏற்படக் கூடிய சிறிய வேறுபாடுகள் பற்றிக் கவனம் கொள்ள வேண்டியதில்லை.
ஆய்வுக்கு உட்பட்டவர்களின் பரம்பரையில் நீரிழிவு இருத்தல், தவறான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி வாழ்க்கை முறை ஆகியற்றைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்தபோதும் மார்புக் கச்சையின் அளவிற்கும் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியத்திற்கும் ஆன தொடர்பு தெளிவாகத் தெரிந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
குசானோ குழுவினர் (Kusano and colleagues) செய்த மற்றொரு ஆய்வானது மார்புக் கச்சையின் அளவிற்கும் மார்புப் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பிருப்பதை எடுத்துக் காட்டியது.
அளந்து பார்ப்பதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கையில் வெட்கம் டாக்டர்கள் மார்புக் கச்சையின் அளவைக் கேட்கிறார்களே என எரிச்சல் வருகிறதா? `ஈர்க்கிடை போகா இளமுலை மாதர் தம், என்று பாடினார் மாணிக்கவாசகர். சிவபெருமானின் குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் மனக்கண்ணில் தோன்றி ஞானம் அளித்த அளவிற்கு பெண்களின் மார்பினது பருமனும் அழகும் ஞானிகளுக்கும் கண்ணில் பட்டு கவிபாடும் அளவிற்கு கவர்ச்சியாக இருந்திருக்கின்றது. இதனால் போலும் பெண்களின் அக்கறைக்குரிய அங்கமாகவும் இருக்கிறது.
ஆய்வு மார்பின் கவர்ச்சி காரணமாகவல்ல. அதன் பருமனைப் பற்றியது. அதன் பருமனானது உடற் திணிவு (Body mass Index-BMI) க்கு ஓரளவு ஒத்ததாக இருக்கிறது. உடற் திணிவைக் கணிப்பதற்கு ஒருவரின் உயரம், எடை ஆகியன அளக்கப்பட்டு பின் கணிக்கப்பட வேண்டும்.
அதேபோல வயிற்றின் சுற்றளவிற்கும் உடற் திணிவிற்கும் இடையேயும் தொடர்பு இருக்கிறது. அதையும் ஆடை நீக்கி அளந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் தனது மார்புக் கச்சையின் அளவு தெரியாத பெண்களே இருக்க மாட்டார்கள்.
எனவே, நீரிழிவு வருமா என எதிர்வு கூறுவதற்கு சிகிச்சை நிலையத்தில் எடை பார்க்கும் மெசினைத் தேடவேண்டியதோ சட்டையைக் கழற்றி அளவுகள் எடுக்க வேண்டிய சங்கடமோ இல்லை. சுலபமாக அளவு பற்றிய சுயதகவலுடனேயே முடிவு எடுக்கலாம். நீரிழிவு வருமா என மதிப்பீடு செய்வதற்கு இவ் அளவு மட்டும் போதுமானதல்ல. ஏனைய பல தரவுகளுடன் இதையும் இணைத்துப் பார்த்து வைத்தியர்கள் முடிவுக்கு வரலாம்.
சரி ஆய்வின் முடிவுக்கு வருவோம்.
இளம் பெண்களே! மார்பின் அளவு அல்லது திணிவு மிக அதிகமாக அதிகரிக்க இடமளிக்க வேண்டாம். ஏனெனில் அது பின்பு மார்புப் புற்றுநோய் மற்றும் நீரிழிவு ஏற்பட வழிவகுக்கும். மார்பின் அளவை சரியான அளவில் வைத்திருப்பதற்கு ஒரே வழி உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவதுதான்?
6 comments:
இளம் பெண்களே! மார்பின் அளவு அல்லது திணிவு மிக அதிகமாக அதிகரிக்க இடமளிக்க வேண்டாம்.
இங்கு தான் குழப்புது!!!இது என்ன அவர்கள் கையிலா இருக்கு??
விளக்குங்களேன்.
நீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருந்தாலும், மார்பின் திணிவானது உடற் கொழுப்போடு தொடர்புடையது. உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது மார்பிலும் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்து அதன் அளவை அதிகரிக்கும். எனவேதான் கட்டுரையின் இறுதியில் "மார்பின் அளவை சரியான அளவில் வைத்திருப்பதற்கு ஒரே வழி உங்கள் எடையைச் சரியான அளவில் பேணுவதுதான்" என்றேன்.
அன்பின் டொக்டர்
சில ஆண்களுக்கும் பெண்கள் போல் மார்பகம் இருப்பதன் காரணம் என்ன? அண்மையில் எனக்கு தெரிந்த ஒருவர் ஒப்ரேசன் செய்து அதன் அளவைக் குறைத்துக்கொண்டார் ஆனால் அதன் பின்னர் அவரின் மார்பில் அந்த வடு நீங்காமல் இருக்கின்றது. என்னுடன் வேலை செய்யும் இன்னொரு இளைஞன் ஒருவருக்கும் இந்தப் பிரச்சனை. அவருக்கு சோதனைச் சாவடிகளில் சோதனை செய்யும் போது பல கேள்விகள் கேட்கின்றனர் என்கிறார். இதனை ஏதாவது உடற்பயிற்சிமூலம் குறைக்கலாமா?
ஹோர்மோன் செயற்பாடுகளின் சீரின்மையால்தான் சில ஆண்களின் மார்பு பெரிதடைகிறது. இது ஆபத்தல்ல. அப்படியே விடலாம். ஆயினும் அழகியல் பிரச்சனைகளுக்காக ஒப்ரேசன் செய்துகொள்ளலாம். வடு வாளடைவில் மறையக் கூடும். இல்லையேல் மறுவிற்குள் ஊசி போட்டு அதன் அளவைக் குறைக்க அல்லது நீக்க முடியும்.
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் ஏற்படவதற்கும் மார்பு கச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறதா?
மேலும் பத்திரிகைகளிலும் இணையத்திலும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் எனக் குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் இருப்பதாக உணர்பவர்கள் செய்ய வேண்டியவை எவை?
வீட்டில் கூறி வீட்டிலிருப்பவர்கள் பதற்றப்படுவதை தடுக்க விரும்புவதால் கொழும்பில் நாடவேண்டிய பெண் வைத்தியர் மற்றும் வைத்தியசாலை பற்றி கூற முடியுமா?
நன்றி டொக்டர்.
Sharmi
sharmee.angel@gmail.com
மார்புக் கச்சை அணிவதால் மார்பு புற்றுநோய் ஏற்படுவதில்லை. கட்டுரை கச்சையின் அளவு பற்றியது. அதாவது எடை அதிகரித்து கொழுப்பும் அதிகரித்து அதனால் ஏற்படக் கூடிய சாத்தியம் பற்றியது.
மார்பு சுய பரிசோதனை பற்றி அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பல தளங்களில் இருக்கும். Self examination of breast என தேடவும். ஆயினும் அது அத்துணை சிறப்பானதாக கூறமுடியாது.
எந்த வைத்தியரும் இதனை பரிசோதித்து வேண்டிய ஆலோசனை கூறுவார். விரும்பினால் சத்திரசிகிச்சை நிபுணரை நாடலாம். இதற்கென பெண் வைத்தியர்கள் இருப்பதாக தெரியவில்லை.
Post a Comment
ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்