Wednesday, February 20, 2008

கொப்பளிப்பானா? (Chickenpox) தினசரி குளியுங்கள், மருந்தும் சாப்பிடுங்கள்

அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்!.

அதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல! அருவருப்பினால்! பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.

அவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தது. மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது.

கட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.

“ ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.

“பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”

“ஏனாம்?;”

“அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”

‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.

கொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல!. தெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன.

சூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.

கொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.

கிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.

அந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது.

கொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.

18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும்.

இரண்டாவது தவறு குளிக்காதது ஆகும். கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.

“குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா? மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.

இந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.

12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.

தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

எம்.கே.முருகானந்தன்.

குடும்ப வைத்திய நிபுணர்

Post Comment

12 comments:

பத்மா அர்விந்த் said...

இது எந்த வகை கொப்பளிப்பான்? எள்மையாக இருக்கிறது. இன்னும் சிரிலங்காவில் சின்ன அம்மை வருகிறதா/ இல்லை இது chicken pos or measles வகையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

சிறிலங்காவில் Chickenpox யைதான் கொப்பளிப்பான் என்போம். Smallpox எனப்படும் பெரியஅம்மை உலகிலிருந்து மறைந்து 20 வருடங்களுக்கு மேலாகிறது. measles யை இங்கு சின்னமுத்து என்போம். தவற்றை ஆங்கிலப் பதத்தை இணைத்து நிவர்த்திக்க முயல்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//
கொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல!.
//

இன்னும் இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தெய்வக்குற்றம் என மாதக்கணக்கில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாதவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஏற்புடைய பதிவு.

கருப்பன்/Karuppan said...

கடந்த ஒரு வருடமாக எங்கள் கிராமத்தில் அம்மைக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போக்கு அதிகரித்துள்ளது... மக்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாதே என்ன பெற்றோரின் ஆதங்கமே இதற்க்கு முக்கிய காரணம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
நல்ல விடயம்.இது தெய்வசாபம் என
இன்னும் சுகம் வந்ததும் கண்ணகை அம்மனுக்குப் பொங்கலிடுவது நடக்கத்தான் செய்கிறது.
எனினும் எவ்வளவோ முன்னேற்றம்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் Dr.முருகானந்தன்,

உங்களுடைய இப்பதிவும் மிகப்பயனுள்ள பதிவு.
எனது ஊரிலும் நிறையப் பேரைப் பார்த்திருக்கிறேன்.
அம்மை போட்டுவிட்டால் வைத்தியரிடம் செல்லமாட்டார்கள்.
வீட்டினொரு அறையில் வேப்பிலைகளின் மேல் படுக்கவைப்பதோடு தலை வாயிலில் வேப்பிலை தொங்கும்.

முன்பு பாடசாலைகளில் சிறுவர்களுக்கு அம்மை பாலூசி குத்துவது என்று ஒரு செயன்முறை வழக்கத்திலிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது.
அவ்வாறெனில் அது அம்மைக்கான தடுப்பூசியா?

அல்லது அது chickenPox தவிர்ந்த வேறேதும் ஒரு அம்மை நோயா?

இந்நோயானது மனிதனுடைய வாழ்நாளில்ல் ஒருமுறையாவது வந்தே தீரும் என்ற கருத்து நிலவிவருகிறது.
இது உண்மையா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

முற்காலங்களில் செய்யப்பட்ட அம்மைப் பால் குத்தல் பெரிய அம்மைக்காகும் (Small Pox). இந் நோய் உலகிலிருந்தே ஒழிக்கப்பட்டுவிட்டதால் இப்பொழுது அதற்கான தடுப்பூசி போடப்படுவதில்லை. இப்பொழுது கிட்டத்தட்ட 10 வருடங்களாளக Chicken Pox தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் கட்டாயத் தடுப்பூசி அல்ல. இது போட்டால் Chicken Pox வராது.

வெயிலான் said...

அம்மை நோயைப் பற்றிய பயனுள்ள பதிவு ஐயா.

அம்மைக்கட்டு (கன்னம் வீங்கியிருப்பது போல இருக்கும்) என தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிற நோய் எதனால் வருகிறது? பெரிய பின் விளைவுகள் உண்டா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

அம்மைக்கட்டு என நீங்கள் குறிப்பிடுவது (Mumps).இங்கு கூகைக்கட்டு, பொன்னுக்குவீங்கி என்றெல்லாம் அழைப்பார்கள். இதுவும் ஒரு வைரஸ் தொற்று நோய்தான். பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை. சிலவேளைகளில் ஆணின் விதைகளைப் (testis)பாதித்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் டொக்டர்,

எனக்குத் தெரிந்த 9 வயதுச் சிறுமி ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அம்மை (chickenpox) வந்தது.நோய்க்காலத்தில் எந்த மருந்தும் சாப்பிடவில்லை. தற்பொழுது அவரது ஒரு காது முழுவதுமாகக் கேட்பதில்லை.அத்தோடு பார்வையிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. கண்ணைப் பரிசோதித்த வைத்தியர் கண்ணாடி அணியக் கொடுத்துள்ளார். காதைப் பரிசோதித்த வைத்தியர் தானாகக் குணமானால்தான் உண்டு எனச் சொல்லிவிட்டார்.

இது அம்மை நோயால் ஏற்பட்டதா? இவற்றைக் குணமாக்க முடியுமா?

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

ரிஷான் ஷெரீப்,
அந்தப் பெண் குழந்தையின் காது மந்தமானதற்கு சிக்கன்பொக்ஸ் காரணமாக இருக்கலாம். இது மிக அரிதாகவே ஏற்படும் பின்விளைவு. இதற்கு சிகிச்சையாக உடனடியாகச் செய்யக் கூடியது ஏதும் இல்லை. நீண்ட காலத்தில் தானகவே குணமாகக் கூடும்.

பெண்கள் கர்பமாயிருக்கும் போது இந்நோய் வந்தால் குழந்தைக்கு பலவிதமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதில் காது கேட்காமல் விடுவதும் ஒன்று.

அவற்றைத் தடுக்கவே இப்பொழுது அந்நோய் வராமல் தடுப்பூசி போடப்படுகிறது. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஊசி போதுமானது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 6-10 வாரங்களுக்குள் இரண்டாவது ஊசியும் போடப்பட வேண்டும். சற்று விலை அதிகமானது. இலங்கை விலையில் சுமார் 3000 ரூபா வரும் என நினைக்கிறேன்.

கண்பார்வை மங்கியதற்கு இந்நோய் காரணம் அல்ல என நினைக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

விளக்கமான பதிலுக்கு நன்றி டொக்டர் !

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்