Monday, July 9, 2007

பசுப்பால் சளியை தடுக்கும்

பசுப்பால் சளியை தடுக்கும்

"இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை" என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.

"நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?" எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.


அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.


பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.


பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.



தினக்குரல் தினசரியின் ஹாய் நலமா பத்தியில் நான்  எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

Post Comment

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா!
ஆய்வைப் பற்றித் தெரியாது,ஆனால் நான் இதுபற்றி சிலருடன் கருத்துவேறு பட்டுள்ளேன். என் இளமையில் இருமலுக்கு என் பேத்தியார் சுண்டக்காச்சிய பாலுக்கு பனங்கட்டியும் மிளகும் போட்டுத் தருவார். மாறிவிடும்.

துளசி கோபால் said...

நம்ம தாய்மார்களுக்கு எங்கிருந்துதான் இப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் கிடைக்குதோ:(

என் பெண்ணுக்குப் பசும்பால்தான் ஆரம்பம் முதல் கொடுத்தோம்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நீங்கள் கொடுத்து வைத்தவர் யோகன் பாரிஸ். உங்கள் போத்தியார் அனுபவத்தில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

துளசி கோபால் நீங்கள் விசயம் அறிந்தவர்.
உங்கள் பெண்ணுக்கு சரியாக இளமையில் வழிகாட்டியிருக்கிறீர்கள்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

மிகவும் பயனுள்ள பதிவு டொக்டர்.
பசுப்பால் குளுமைத் தன்மை கொண்டது. அதனால் சளி பிடிக்கும் என்ற எண்ணம் இன்னும் பல இடங்களில் நீடித்து வருகிறது.
உங்கள் பதிவு அந்த ஐயத்தை நீக்கியது.
தொடருங்கள் !

prabhadamu said...

ஜயா உண்மையில் நல்ல தகவல் நன்றி ஜயா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எம்.ரிஷான் ஷெரீப் மற்றும் prabhadamu உங்கள் கருத்துரைகளுக்கு நன்றி

Post a Comment

ஊட்டமிக்க உங்கள் கருத்துக்கள்