Wednesday, January 18, 2012

இளைஞர் யுவதிகளே மாரடைப்பு வருவதற்கான அடித்தளம் உங்களுக்கும் ....


இளைஞர் யுவதிகளே மாரடைப்பு வருவதற்கான அடித்தளம் உங்களுக்கும் ....


'எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.
'பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்' எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.

மாறாக 'அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்' என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். 'இவர் சும்மா வெருட்டுகிறார்' எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.

ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.

மாரடைப்பு எவ்வாறு?

மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.
  • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்), 
  • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம். 
காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாய்ச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.


அத்திவாரம் இளவயதிலேயே

இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.

முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர் காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.

அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.
  • நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • புகைத்தல் பழக்கம்
  • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
  • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது

நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?

காரணம் என்ன?

காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?

  • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும். 
  • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.

இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.

யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் தடிப்பு atherosclerosis இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது.

எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரமாக நாடித் தடிப்பு இருந்தமை உறுதியாகியது.

ஆபத்தைக் கணிப்பது எப்படி?

ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது வழமையாக இருந்தது.

ஆனால் அது போதுமானதல்ல என்பது மேற்கூறிய வயிற்றைக் கொழுப்பிற்கும்  நாடித் தடிப்பிற்கும் atherosclerosis இடையேயான தொடர்பு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எனவே வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.
  • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும், 
  • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.

வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.
  • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும், 
  • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
இதற்கு அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபடுவது அவசியம்.

செய்ய வேண்டியது என்ன?

எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?

'எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்' என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.

எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.

ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.


ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள்.

இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

ஆதாரம்:- Heart and Stroke Foundation of Canada, news release, Oct. 25, 2011

வீரகேசரி ஞாயிறு பத்திரிகையில் 01.01.2012. ல் நான் எழுதிய கட்டுரை

0.0.0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, January 7, 2012

பெண்களின் மார்பக வலிகள்


தமது மார்பகங்களில் வலி ஏற்படாத பெண்களே இருக்க முடியாது. சிறிதோ பெரிதோ அவர்கள் வாழ்நாளில் எப்பொழுதாவது மார்பகங்களில் வலி வந்தே இருக்கும்.

மாதவிடாய் கால வலி

மாதவிடாய் வருவதை அண்டிய தினங்களில் பல பெண்களுக்கு
  • மார்புகள் கனதியாக, பொருமலாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதுண்டு. 
  • சாதாரணமான பொறுக்கத்தக்க வலியாக இருக்கலாம். 
  • ஒரு சிலருக்கே தாங்க முடியாத வலியாகத் தொல்லை கொடுத்து மருத்துவரை நாட வைக்கும். 'இது எமக்கு விதிச்ச விதி' எனச் சொல்லி தாங்கிக் கொள்ளும் பொறுமைசாலிப் பெண்களே அதிகம்.
  • மார்பக வலியானது இவ்வாறு மாதா மாதம் சுழற்ச்சி முறையில் வரும்

இதைத் தவிர வேறு பல காரணங்களாலும் ஏற்படக் கூடும்.

மாதவிடாயுடன் தொடர்புடைய மார்பு வலிகள் பொதுவாக இளம் பெண்களிலேயே தோன்றும். 

ஏனைய மார்பக வலிகள்


ஆனால் ஏனையவை பொதுவாக 40 வயதைத் தாண்டிய பெண்களிலேயே அதிகம் காணப்படுகின்றன.
  • பெரும்பாலும் இத்தகையவை ஒரு மார்பில் மட்டும் ஏற்படலாம். 
  • அதிலும் குறிப்பான ஓர் இடத்தில் மட்டும் வரலாம். 
  • அவை திடீரெனத் தோன்றும். 
  • சில வேளைகளில் அவ்வாறே வந்த சுவடின்றி மாறவும் கூடும். 
  • சில தருணங்களில் மார்பகத்தில் முழுமையாகவோ அன்றி 
  • இரு மார்பகங்களிலும் தோன்றவும் கூடும்.

மாரடைப்பு வலி
 
  • மாரடைப்பு வலி முற்றிலும் மாறுபட்டது. 
  • அது திடீரென வரும். 
  • பெரும்பாலும் நடு மார்பில், இறுக்குவது போன்று கடுமையாக வரும். 
  • வியர்வை, களைப்பு, தலைச்சுற்று, மரணம் நெருங்குவது போன்ற பயமும் அதில் ஏற்பலாம். 
  • மருத்துவர்களுக்கு அதை வேறுபடுத்தியறிவது இலகுவாகும். 
 
இங்கே கிளிக் பண்ணுங்கள். மேலும் படிக்க முன்னைய பதிவை

பெரும்பாலன மார்பக வலிகளுக்கு அடிப்படையான நோய் என எதுவும் இருப்பதில்லை. கட்டி, சீழ் கட்டி, கிருமித்தொற்று எத்தகைய காரணங்கள் இன்றியே தோன்றலாம்.

  • பல மார்பக வலிகளுக்கான அடிப்படைக் காரணம் மார்பகத்தில் அல்லாது அருகில் உள்ள ஏனைய உறுப்புகளான தசைகள், மூட்டுகள், எலும்புக் கூடு போன்றவற்றில் இருக்கலாம். தோள்மூட்டு கழுத்து போன்றவற்றில் தோன்றும் நோய்களாலான வலி மார்பகத்தில் பிரதிபலக்கவும் கூடும். வேறு இடத்தில் உள்ள நோய்க்கு மற்றொரு இடத்தில் வலிப்பதை தொலைவிட வலி (Radiating Pain or Refered Pain) என மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.

  • ஒரு சிலரில் சீழ்கட்டி, தோல்களில் ஏற்டும் கிருமித்தொற்றுகள் காரணமாகலாம்.

  • நரம்புக் கொப்பளிப்பான் ஒரு முக்கிய காரணியாகும். உடல் முழவதையும் பாதிக்காது ஒரு நரம்பு செல்லும் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றுவது இந் நோயின் முக்கிய அம்சமாகும். கொப்பளங்கள் தோன்றுவதற்கு ஒரிரு நாட்கள் முன்னதாகவே வலி தோனற்லாம். வலிக்குக் காரணம் தெரியாது மருத்துவர்களையும் ஆரம்ப நிலையில் திகைக்க வைக்கலாம்.

  • கட்டிகள், கழலைகள், நீர்க்கட்டிகள் போன்றவையும் மார்பகங்களில் வருவதுண்டு. இவற்றில் சில வலியை ஏற்படுத்தலாம். 
    நரம்புக் கொப்பளிப்பான்
  •  புற்று நோய்கள் ஆரம்ப நிலையில் வலி அற்றவை எனப் பொதுப்படையாகப் பேசப்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு இல்லாமலும் ஏற்படலாம். 
 எனவே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மார்பகப் புற்று நோய் வர வாய்ப்புள்ள பெண்கள் மார்பக வலியை அலட்சியப்படுத்துவது நல்லதல்ல.


மார்பகப் புற்று நோய் வர வாய்ப்புள்ளவர்கள் யார்?

  • மார்பக வலியுடன் மார்ப்பகத்தில் அல்லது அப் பக்க அக்குளில் கட்டி ஏதாவது தென்படுதல்.
  • முலைக் காம்பிலிருந்து அல்லது அக் கட்டியிலிருந்து ஏதாவது கசிவு இருத்தல்.
  • வழமைக்கு மார்பு வீக்கமடைதல் அல்லது சிவந்திருந்தால்.
  • பரம்பரையில் மார்பகப் புற்று நோயிருந்தால்

இவை எதுவுமின்றி மாதவிடாய் தாமதமாகுவதுடன் மார்பக வலி சேர்ந்திருந்தால் அது கருத் தங்கியதன் அறிகுறியாக இருக்கலாம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

தினக்குரலின் ஹாய் நலமா? கீற்றில் நான் எழுதியது

0.0.0.0.0.0.0.0

Post Comment

Wednesday, December 28, 2011

காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை


காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை

குட்டிப் பையனின் காது மடலின் பிற்புறத்தில் சில நாட்களாக ஒரு கட்டி தெரிந்தது. சீழ்க் கட்டி போல நீர்ப்பிடிப்புடன் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே இது காதுக் குருத்தெலும்புடன் (Cartilage) தொடர்புடைய கட்டி எனப் புரிந்தது.

மருத்துவத்தில் பெரிகொன்ரைடிஸ் (Perichondritis) என்பார்கள். தமிழில் எவ்வாறு சொல்வது என்பது தெரியவில்லை.


எமது காது, மூக்கு போன்றவை யாவும் எலும்பு இல்லாத  உறுப்புகள். ஆனால் அவை மடிந்து தளர்ந்து விடாமல் இருப்பதற்கும், அவற்றிற்கான உருவத்தைக் கொடுப்பதும் அவற்றினுள் இருக்கும் குருத்தெலும்பு ஆகும்.

குருத்தெலும்பு என்பது எலும்புகளை விட மென்மையானவை ஆனால் தசை சவ்வு போன்றவற்றை விடக் கடினமானவை.

குருத்தெலும்புகளை மென்மையான சவ்வு மூடியிருக்கும். அதனை பெரிகொன்ரியம் - perichondrium - என்பார்கள் இதன் ஊடாகத்தான் குருத்தெலும்புக்கான போசனைப் பொருட்கள் குருதியிலிருந்து கடத்தப்படுகின்றன.

பெரிகொன்ரியத்தில் கிருமி தொற்றினால் ஏற்படுகின்ற நோய்தான் பெரிகொன்ரைடிஸ்.

ஏன் ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஏதாவது காயங்கள் எற்படும்போதே தோன்ற வாய்ப்பிருக்கிறது. பெரிய காயங்கள் அல்ல. காது குத்துவது போன்ற சிறிய காயங்கள் போதுமானவை. விளையாட்டுகளின் போது எற்படும் காயங்கள், அக்யூபங்சர், சத்திரசிச்சை போன்றவற்றைத் தொடர்ந்தும் வரலாம்.

காது குத்துவதால் எனக் கூறியதால் கலங்க வேண்டாம். சாதாரணமான காது குத்தல் அபாயமானதல்ல. காது மடலின் அடிப்பாகத்திலேயே இது குத்தப்படுகிறது. இது வெறும் தசையுள்ள பகுதியே. இங்கு குருத்தெலும்பு கிடையாது.

ஆனால் இப்போதைய நாகரீகத்தில் காதுமடலின் மேற்புறங்களிலும் குத்தப்படுகிறது. அங்கு குருத்தெலும்பு உள்ளது. அங்கு காது குத்தும்போது குருத்தெலும்பில் காயம் பட்டு, அதில் கிருமித் தொற்றும் ஏற்பட்டால் மேற் கூறிய பிரச்சனை ஏற்படும்.

அக்யூபங்சர் சிகிச்சையின் போது ஊசி குத்துவதும் மற்றொரு காரணமாகும், சில சத்திரசிகிச்சைகள், நெருப்பு சுட்ட காயங்கள் போன்றவையும் காரணமாகலாம்.

இது ஒரு பையனின் காது மடலில் தோன்றியது. எனவே காது குத்தியதால் அல்ல என்பது தெளிவு. வேறு ஏதோ காயத்தைத் தொடர்ந்து  வலியுடன் வீங்கிச் சீழ் கட்டியிருந்தது. இதுவம் அத்தகைய பெரிகொன்ரைடிஸ் தான்.



அறிகுறிகள்

  • காது மடலில் திடீரென ஏற்படும் வலிதான் பெரும்பாலும் முதல் அறிகுறியாகும். தொட்டுப் பார்த்தால் வலி அதிகமாகும்.
  • காது வீங்கவும் கூடும்.
  • அவ்விடம் சற்று சினத்து செம்மை படர்ந்திருக்கும்.
  • தொட்டால் சற்று சூடாகவும் இருக்கலாம்.
  • காய்சலும் ஏற்படலாம்.
  • முதலில் ஏற்பட்ட காயம்  தென்படலாம்.
  • அதிலிருந்து நீர் அல்லது சீழ் கசியவும் கூடும்.

மருத்துவம்

வீங்கி சினத்திருப்பது கிருமித்தொற்றைக் குறிக்கிறது. எனவே குணமாக்குவதற்கு நுண்ணுயிர் மருந்துகள் அவசியம்.
  • பொதுவாக மாத்திரைகளாகக் கொடுக்கக் குணமாகும். 
  • கடுமையான கிருமித்தொற்றாக இருந்தால் நாளங்கள் ஊடாகச் செலுத்தவும் நேரும்.
மேலே படத்தில் காட்டியது சற்று நாள்பட்டது. உள்ளே நீரும் சீழும் இருந்தது.
  • மரக்க வைத்துச் சீழை அகற்றியதன் சிகிச்சை மூலம் வீக்கமும் வலியும் குணமாகின. நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கக் குணமாகியது.
கடுமையான கிருமித் தொற்றிருந்தால் வாயினால் உட்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் போதுமானவையாக இருக்காது. நாளங்கள் ஊடாக ஊசி மருந்துகளாக அவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும்.

வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை

காதைப் பாதுகாப்பது பற்றிய எனது பதிவு
காதை குடையிறதுதான் வேலை



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0

Post Comment